அக்டோபர்
புதன், அக்டோபர் 1
‘பரலோகத்திலிருந்து வருகிற ஞானமோ கீழ்ப்படியத் தயாரானதாக இருக்கிறது.’—யாக். 3:17.
கீழ்ப்படிவது ரொம்பக் கஷ்டமாக இருக்கிறதென்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? தாவீது ராஜாவும் அப்படி யோசித்திருக்கிறார். அதனால்தான், “உங்களுக்குக் கீழ்ப்படியும் ஆசையை எனக்குள் தூண்டுங்கள்” என்று ஜெபம் செய்தார். (சங். 51:12) தாவீதுக்கு யெகோவாவை ரொம்பப் பிடிக்கும். இருந்தாலும், யெகோவாவுக்குக் கீழ்ப்படிவது சிலசமயம் அவருக்கு ஒரு போராட்டமாக இருந்தது. நமக்கும் அப்படி இருக்கலாம். அதற்கு ஒரு காரணம், கீழ்ப்படியாமல் இருக்கும் சுபாவம் நம் ஒவ்வொருவருக்கும் பிறவியிலேயே வந்துவிட்டது. இரண்டாவது காரணம், கலகம் செய்ய சாத்தான் நம்மைத் தூண்டிக்கொண்டே இருக்கிறான்; அவனைப் போலவே நாம் நடந்துகொள்ள வேண்டுமென்று நினைக்கிறான். (2 கொ. 11:3) மூன்றாவது காரணம், நம்மைச் சுற்றியிருக்கும் மக்களும் கலகம் செய்ய வேண்டும்... எதிர்த்துப் போராட வேண்டும்... என்ற சிந்தையோடு இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சிந்தைதான் ‘கீழ்ப்படியாதவர்களிடம் இப்போது செயல்பட்டு’ வருவதாக பைபிள் சொல்கிறது. (எபே. 2:2) அப்படியென்றால், நமக்குள் இருக்கும் தவறு செய்வதற்கான இயல்பையும் கீழ்ப்படியக் கூடாதென்று இந்த உலகமும் சாத்தானும் கொடுக்கும் தூண்டுதலையும் எதிர்த்துப் போராட வேண்டும். யெகோவாவுக்குக் கீழ்ப்படிவதற்கும்... அவர் யாருக்கெல்லாம் அதிகாரம் கொடுத்திருக்கிறாரோ அவர்களுக்கெல்லாம் கீழ்ப்படிவதற்கும்... நாம் நிறைய முயற்சி எடுக்க வேண்டும். w23.10 6 ¶1
வியாழன், அக்டோபர் 2
நீங்கள் தரமான திராட்சமதுவை இதுவரை வைத்திருக்கிறீர்களே.—யோவா. 2:10.
இயேசு செய்த அற்புதத்திலிருந்து, மனத்தாழ்மை காட்டுவது அவசியம் என்ற பாடத்தை நாம் கற்றுக்கொள்ளலாம். ஒரு பெரிய அற்புதத்தைச் செய்ததாக இயேசு பெருமையடிக்கவில்லை. அவர் எந்தச் சமயத்திலுமே, ‘நான் இதைச் செய்தேன்.. அதைச் செய்தேன்..’ என்றெல்லாம் தம்பட்டம் அடிக்கவில்லை. அதற்குப் பதிலாக, மனத்தாழ்மையோடு எல்லா புகழையும் மகிமையையும் யெகோவாவுக்கே கொடுத்தார். (யோவா. 5:19, 30; 8:28) இயேசு மாதிரியே நாமும் மனத்தாழ்மையோடு நடந்துகொண்டால், நாம் செய்த எதைப் பற்றியும் பெருமையடிக்க மாட்டோம். நாம் எதையோ சாதித்ததுபோல் பெருமையடிக்காமல், யெகோவாவைப் பற்றிப் பெருமையாகப் பேசுவோம். அவருக்குச் சேவை செய்ய நமக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பு ஒரு பெரிய பாக்கியம்! (எரே. 9:23, 24) அவருடைய உதவி இல்லாமல் நம்மால் எதையுமே சாதிக்கமுடியாது! அதனால், யெகோவாவுக்குச் சேர வேண்டிய புகழை நாம் அவருக்குத்தான் கொடுக்க வேண்டும். (1 கொ. 1:26-31) நாம் மனத்தாழ்மையாக இருந்தால், மற்றவர்களுக்குச் செய்யும் உதவியைச் சொல்லிக்காட்டி நல்ல பெயர் எடுக்க வேண்டுமென்று நினைக்க மாட்டோம். ‘நான் செய்ததையெல்லாம் யெகோவா பார்க்கிறார், அவர் சந்தோஷப்படுவார், அதுவே எனக்குப் போதும்’ என்று நினைத்துத் திருப்தியோடு இருப்போம். (மத்தேயு 6:2-4-ஐ ஒப்பிட்டுப் பாருங்கள்; எபி. 13:16) இயேசு மாதிரியே மனத்தாழ்மையாக நடந்துகொள்ளும்போது யெகோவாவின் மனதைச் சந்தோஷப்படுத்துகிறோம் என்பதில் சந்தேகமே இல்லை.—1 பே. 5:6. w23.04 4 ¶9; 5 ¶11-12
வெள்ளி, அக்டோபர் 3
உங்களுடைய நலனில் மட்டுமே அக்கறை காட்டாமல், மற்றவர்களுடைய நலனிலும் அக்கறை காட்டுங்கள்.—பிலி. 2:4.
மற்றவர்களுடைய நலனில் அக்கறை காட்ட வேண்டுமென்று கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் பவுல் சொன்னார். கூட்டங்களில் கலந்துகொள்ளும்போது நாம் எப்படி இந்த ஆலோசனையின்படி நடக்கலாம்? பதில் சொல்ல நம்மைப் போலவே மற்றவர்களும் ஆசைப்படுவார்கள் என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். இப்படி யோசித்துப் பாருங்கள்: உங்கள் நண்பர்களோடு நீங்கள் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். அவர்களைப் பேசவிடாமல் நீங்களே பேசிக்கொண்டு இருப்பீர்களா? நிச்சயம் அப்படிச் செய்ய மாட்டீர்கள்! பேச அவர்களுக்கும் வாய்ப்புக் கொடுப்பீர்கள். கூட்டங்களிலும், தங்கள் விசுவாசத்தைப் பற்றிச் சொல்ல எவ்வளவு பேருக்கு முடியுமோ அவ்வளவு பேருக்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டும். சொல்லப்போனால், சகோதர சகோதரிகளை உற்சாகப்படுத்த ஒரு சிறந்த வழி அதுதான். (1 கொ. 10:24) அதற்கு சுருக்கமாக நாம் பதில் சொல்ல வேண்டும். அப்படிச் செய்யும்போது, நிறைய பேர் பதில் சொல்ல நேரம் இருக்கும். சுருக்கமாகப் பதில் சொல்லும்போதுகூட நிறைய குறிப்புகளைச் சொல்லக் கூடாது. பாராவில் இருக்கும் எல்லாவற்றையுமே நீங்கள் சொல்லிவிட்டால், மற்றவர்கள் சொல்வதற்குக் குறிப்புகளே இருக்காது. w23.04 22-23 ¶11-13
சனி, அக்டோபர் 4
நல்ல செய்தியை மற்றவர்களுக்கு அறிவிப்பதற்காக எல்லாவற்றையும் நல்ல செய்திக்காகவே செய்கிறேன்.—1 கொ. 9:23.
நம்முடைய சூழ்நிலைகள் மாறும்போது மற்றவர்களுக்கு தொடர்ந்து உதவி செய்வது எவ்வளவு முக்கியம் என்பதை மறந்துவிடக் கூடாது. ஊழியம் செய்வதன் மூலம் மற்றவர்களுக்கு உதவ வேண்டும். ஊழியத்தில் வளைந்துகொடுக்கிறவர்களாக இருக்க வேண்டும். வேறு வேறு இடங்களையும், கலாச்சாரங்களையும் சேர்ந்த வித்தியாசப்பட்ட மக்களை நாம் ஊழியத்தில் பார்க்கிறோம். ஒவ்வொருவருக்கும் கடவுளை பற்றி ஒவ்வொரு விதமான கருத்து இருக்கிறது. அப்படிப்பட்டவர்களிடம் பேசும் விஷயத்தில், பவுலிடமிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ளலாம். அவர் வளைந்துகொடுக்கிறவராக இருந்தார். இயேசு அவரை “மற்ற தேசத்து மக்களுக்கு . . . அப்போஸ்தலனாக” நியமித்தார். (ரோ. 11:13) அதனால், யூதர்களுக்கும் கிரேக்கர்களுக்கும் படித்தவர்களுக்கும் கிராமத்து மக்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் ராஜாக்களுக்கும் பவுல் பிரசங்கித்தார். இப்படிப்பட்ட வித்தியாசமான மக்களின் மனதை தொடுவதற்காக, அவர் “எல்லா விதமான ஆட்களுக்கும் எல்லா விதமாகவும்” ஆனார். (1 கொ. 9:19-22) அந்த மக்களுடைய கலாச்சாரம், பின்னணி, நம்பிக்கைளைப் பற்றியெல்லாம் பவுல் யோசித்துப் பார்த்தார். அதனால் அவரவருக்கு ஏற்ற மாதிரி அவரால் பேச முடிந்தது. நாமும் வளைந்துகொடுக்கிறவர்களாக இருந்து ஒவ்வொருவருக்கும் ஏற்ற மாதிரி பேச முயற்சி செய்தால், ஊழியத்தில் முன்னேற முடியும். w23.07 23 ¶11-12
ஞாயிறு, அக்டோபர் 5
‘நம் எஜமானின் ஊழியன் சண்டைபோடக் கூடாது; அதற்குப் பதிலாக, எல்லாரிடமும் மென்மையாக நடந்துகொள்ள வேண்டும்.’—2 தீ. 2:24.
சாந்தகுணம் பலவீனமல்ல, பலம்! ஏனென்றால், ஒரு கஷ்டமான சூழ்நிலையில் அமைதியாக நடந்துகொள்வதற்கு மனபலம் தேவை. சாந்தம், ‘கடவுளுடைய சக்தியால் உண்டாகிற குணங்களில்’ ஒன்று. (கலா. 5:22, 23) சாந்தம் என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் கிரேக்க வார்த்தையை, பழக்கப்படுத்திய ஒரு காட்டுக் குதிரையைப் பற்றி சொல்வதற்காக சிலசமயங்களில் பயன்படுத்தினார்கள். சீறிப்பாயும் ஒரு குதிரை சாந்தமாக அமைதியாக மாறுவதை கொஞ்சம் கற்பனை செய்துபாருங்கள். அது அமைதியாக மாறினாலும், அதனுடைய பலம் கொஞ்சம்கூட குறைவதில்லை. நாம் எப்படி சாந்தத்தையும் வளர்த்துக்கொண்டு அதேசமயத்தில் பலமுள்ளவர்களாகவும் இருக்கலாம்? நம் சொந்த சக்தியால் இதை கண்டிப்பாக செய்ய முடியாது. இந்த அருமையான குணத்தை வளர்த்துக்கொள்ள உதவி கேட்டு, கடவுளுடைய சக்திக்காக ஜெபம் செய்ய வேண்டும். இதை கண்டிப்பாக வளர்த்துக்கொள்ள முடியும் என்பதை நிறையப் பேருடைய அனுபவங்கள் காட்டுகின்றன. நிறைய யெகோவாவின் சாட்சிகள், அவர்களை எதிர்ப்பவர்களிடம் ரொம்ப சாந்தமாக பேசியிருக்கிறார்கள். அதைப் பார்த்தவர்களுக்கு, நம்மேல் நல்ல அபிப்பிராயம் வந்திருக்கிறது.—2 தீமோ. 2:24, 25. w23.09 15 ¶3
திங்கள், அக்டோபர் 6
நான் ஜெபம் செய்தேன். யெகோவா நான் கேட்டதைக் கொடுத்துவிட்டார்.—1 சா. 1:27.
24 மூப்பர்கள் பரலோகத்தில் யெகோவாவை வணங்குவதை ரொம்ப பிரமிப்பான ஒரு தரிசனத்தில் யோவான் பார்த்தார். அவர்கள் யெகோவாவைப் புகழ்ந்து, அவர் “மகிமையும் மாண்பும் வல்லமையும் பெற்றுக்கொள்ளத் தகுதியானவர்” என்று சொன்னார்கள். (வெளி. 4:10, 11) உண்மையுள்ள தேவதூதர்களுக்குக்கூட யெகோவாவைப் புகழ்வதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. அவர்கள் பரலோகத்தில் அவர்கூடவே இருக்கிறார்கள், அவரைப் பற்றி நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அவர் செய்வதையெல்லாம் பார்த்து அவருடைய குணங்களை புரிந்துகொள்கிறார்கள். யெகோவா எப்படி நடந்துகொள்கிறார் என்பதைப் பார்க்கப் பார்க்க அவரைப் புகழ வேண்டுமென்ற ஆசை அவர்களுக்கு அதிகமாகிறது. (யோபு 38:4-7) நாமும் ஜெபத்தில் யெகோவாவைப் புகழ வேண்டும். அவரிடம் எதுவெல்லாம் நமக்குப் பிடித்திருக்கிறது, எதையெல்லாம் ரசிக்கிறோம் என்று சொல்லலாம். நீங்கள் பைபிளைப் படிக்கும்போது, யெகோவா காட்டும் நிறைய குணங்களைப் பற்றித் தெரிந்துகொள்வீர்கள். அதில் உங்கள் மனதைத் தொட்ட குணங்களைப் பற்றி யோசித்துப் பாருங்கள். (யோபு 37:23; ரோ. 11:33) அந்தக் குணங்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று யெகோவாவிடம் சொல்லுங்கள். நமக்கும் நம் சகோதர சகோதரிகளுக்கும் யெகோவா உதவி செய்வதற்காகக்கூட நாம் அவரைப் புகழலாம்.—1 சா. 2:1, 2. w23.05 3-4 ¶6-7
செவ்வாய், அக்டோபர் 7
‘யெகோவாவுக்கு ஏற்ற விதத்தில் நடங்கள்.’ —கொலோ. 1:10.
1919-ல் கடவுளுடைய மக்கள் மகா பாபிலோனின் பிடியிலிருந்து விடுதலையானார்கள். அதே வருஷத்தில்தான், “உண்மையும் விவேகமும் உள்ள அடிமை” நியமிக்கப்பட்டார்கள். (மத். 24:45-47; ஏசா. 35:8) அதுமுதல் அவர்கள், ‘பரிசுத்தமான வழியை’ கண்டுபிடிக்கவும் அதில் நடக்கவும் நல்ல ஜனங்களுக்கு உதவி செய்ய ஆரம்பித்தார்கள். முன்பு இருந்த உண்மையுள்ள ஆட்கள் ‘பரிசுத்தமான வழியை’ தயார்படுத்தி வைத்திருந்ததால், புதிதாக வந்தவர்களால் யெகோவாவைப் பற்றியும் அவருடைய விருப்பத்தைப் பற்றியும் நிறைய தெரிந்துகொள்ள முடிந்தது. (நீதி. 4:18) யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி வாழ ஆரம்பிக்கவும் முடிந்தது. தன்னுடைய மக்கள் எல்லா மாற்றத்தையும் ஒரேயடியாக செய்ய வேண்டுமென்று யெகோவா எதிர்பார்க்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக அதைச் செய்ய உதவியிருக்கிறார். நாம் யெகோவாவை முழுமையாகப் பிரியப்படுத்தும் காலம் வரும்போது நமக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்! சாலை என்றாலே அதைக் கண்டிப்பாகப் பராமரிக்க வேண்டும். அதேபோல், 1919-லிருந்து ‘பரிசுத்தமான வழியிலும்’ பராமரிப்பு வேலை தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. மகா பாபிலோனைவிட்டு இன்னும் நிறைய பேர் வெளியே வருவதற்குத் தேவையான உதவிகளெல்லாம் செய்யப்பட்டிருக்கிறது. w23.05 17 ¶15; 19 ¶16
புதன், அக்டோபர் 8
நான் ஒருபோதும் உன்னைவிட்டு விலக மாட்டேன். —எபி. 13:5.
ஆளும் குழுவின் கீழ் இருக்கிற வெவ்வேறு குழுக்களில் சேவை செய்கிற உதவியாளர்களுக்கு, ஆளும் குழுவில் இருக்கும் சகோதரர்கள் பயிற்சிக் கொடுக்கிறார்கள். உதவியாளர்கள் இப்போதே பெரிய பெரிய பொறுப்புகளை செய்கிறார்கள். கிறிஸ்துவின் ஆடுகளைத் தொடர்ந்து பார்த்துக்கொள்வதற்கு இப்போதே தயாராக இருக்கிறார்கள். மிகுந்த உபத்திரவத்தின் கடைசியில், பரலோக நம்பிக்கையுள்ள எல்லாரும் பரலோகத்துக்குப் போன பிறகு, தூய வணக்கம் ஒழிந்துபோகாது. யெகோவாவுடைய மக்கள் தொடர்ந்து அவரை வணங்குவார்கள். இயேசு நம்முடைய தலைவராக இருப்பதால், நமக்கு ஒரு குறையும் இருக்காது. அந்த சமயத்தில், மாகோகு தேசத்தின் கோகு, அதாவது உலக நாடுகளின் கூட்டணி, நம்மைத் தாக்கும் என்பது உண்மைதான். (எசே. 38:18-20) ஆனால், அந்தத் தாக்குதல் தோல்வியில்தான் போய் முடியும். நாம் யெகோவாவை வணங்குவதை அவர்களால் தடுக்கவே முடியாது. யெகோவா கண்டிப்பாக தன்னுடைய மக்களைக் காப்பாற்றுவார். அதைத்தான் யோவான் ஒரு தரிசனத்தில் பார்த்தார். “மிகுந்த உபத்திரவத்திலிருந்து,” வேறே ஆடுகளைச் சேர்ந்த “திரள் கூட்டமான மக்கள்” தப்பித்து வருவதை அவர் பார்த்தார். (வெளி. 7:9, 14) அப்படியென்றால், யெகோவா அவர்களைக் கண்டிப்பாக காப்பாற்றுவார் என்று தெரிகிறது. w24.02 5-6 ¶13-14
வியாழன், அக்டோபர் 9
கடவுளுடைய சக்தி உங்களுக்குள் பற்றவைக்கிற ஆர்வத் தீயை அணைத்துவிடாதீர்கள்.—1 தெ. 5:19.
கடவுளுடைய சக்தி நமக்கு வேண்டுமென்றால் அதற்காக நாம் ஜெபம் செய்ய வேண்டும், கடவுளுடைய சக்தியால் கொடுக்கப்பட்ட பைபிளைப் படிக்க வேண்டும், கடவுளுடைய சக்தி வழிநடத்தும் அமைப்போடு சேர்ந்திருக்க வேண்டும். அப்படிச் செய்தால், ‘கடவுளுடைய சக்தியால் உண்டாகிற குணங்களை’ நம்மால் வளர்த்துக்கொள்ள முடியும். (கலா. 5:22, 23) நம் யோசனைகளும் நடத்தையும் எப்போதுமே சுத்தமாக இருந்தால்தான் கடவுள் தன் சக்தியை நமக்குக் கொடுப்பார். நாம் தொடர்ந்து அசிங்கமான விஷயங்களைப் பற்றி யோசித்துக்கொண்டும், அந்த மாதிரி விஷயங்களையே செய்துகொண்டும் இருந்தால் கடவுள் தன் சக்தியைக் கொடுப்பதை நிறுத்திவிடுவார். (1 தெ. 4:7, 8) அதோடு, கடவுளுடைய சக்தி நமக்குத் தொடர்ந்து கிடைக்க வேண்டுமென்றால் ‘தீர்க்கதரிசனங்களை அவமதிக்காமல்’ இருக்க வேண்டும். (1 தெ. 5:20) இங்கே ‘தீர்க்கதரிசனங்கள்’ என்பது, கடவுளுடைய சக்தி மூலமாகக் கிடைக்கிற எல்லா செய்திகளையும் குறிக்கிறது. யெகோவாவின் நாள் வரப்போகிறது... நாம் ஒரு அவசரக் காலகட்டத்தில் வாழ்கிறோம்... என்ற செய்திகளும் அதில் அடங்கும். நம் காலத்திலெல்லாம் அர்மகெதோன் வராது என்று யோசிக்காதீர்கள். அந்த நாளை எப்போதுமே மனதில் வைத்திருங்கள். அதற்கு என்ன செய்யலாம்? சரியானதைத் தொடர்ந்து செய்யுங்கள். “கடவுள்பக்திக்குரிய செயல்களை” சுறுசுறுப்பாகச் செய்துகொண்டே இருங்கள்.—2 பே. 3:11, 12. w23.06 12 ¶13-14
வெள்ளி, அக்டோபர் 10
யெகோவாவுக்குப் பயப்படுவதுதான் ஞானத்தைப் பெறுவதற்கு முதல் படி.—நீதி. 9:10.
எலெக்ட்ரானிக் சாதனத்தில் திடீரென்று ஒரு ஆபாசப் படம் நம் கண்முன் வந்தால் அதைப் பார்க்காமல் உடனடியாக மாற்றிவிட வேண்டும்! யெகோவாவோடு நமக்கு இருக்கும் நட்புதான் ரொம்ப ரொம்ப முக்கியம். சில படங்களை ஆபாசப் படங்கள் என்று ஒருவேளை முத்திரை குத்த முடியாது. ஆனால், அப்படிப்பட்ட படங்கள்கூட பாலியல் ஆசைகளைத் தூண்டலாம். அவற்றைக்கூட நாம் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், ‘இதயத்தில் முறைகேடான உறவுகொள்ள’ தூண்டுகிற ஒரு சின்னப் படியைக்கூட எடுத்துவைக்க நாம் விரும்புவதில்லை. (மத். 5:28, 29) தாய்லாந்தில் இருக்கும் டேவிட் என்ற மூப்பர் இப்படிச் சொல்கிறார்: “சில படங்களை ஆபாசப் படங்களின் லிஸ்டில் சேர்க்க முடியாதுதான். ஆனால் அதையெல்லாம் நான் பார்த்துக்கொண்டே இருந்தால் யெகோவாவுக்கு என்னைப் பிடிக்குமா என்று என்னையே கேட்டுக்கொள்வேன். அதனால் என்னால் ஞானமாக நடந்துகொள்ள முடிகிறது.” யெகோவாவின் மனதைக் காயப்படுத்திவிடுவோமோ என்ற பயம், ஞானமாக நடந்துகொள்ள நமக்கு உதவும். கடவுள்பயம்தான் “ஞானத்தைப் பெறுவதற்கு முதல் படி.” w23.06 23 ¶12-13
சனி, அக்டோபர் 11
என் ஜனங்களே, உங்களுடைய உள்ளறைகளுக்குப் போங்கள்.—ஏசா. 26:20.
‘உள்ளறைகள்’ என்று இங்கே சொல்லியிருப்பது சபைகளைக் குறிக்கலாம். மிகுந்த உபத்திரவம் சமயத்தில் சகோதர சகோதரிகளோடு ஒன்றுசேர்ந்து இருந்தால், நம்மை பாதுகாப்பதாக யெகோவா வாக்கு தந்திருக்கிறார். அதனால், நம் சகோதர சகோதரிகளைப் பொறுத்துக்கொள்வது மட்டுமல்ல, அவர்கள்மேல் ஆழமான அன்பை காட்டுவதற்கும் இப்போதே கடினமாக உழைக்க வேண்டும். நாம் உயிர் தப்பிப்பதே இதைப் பொறுத்து இருக்கலாம்! “யெகோவாவின் மகா நாள்” மனிதர்கள் சமாளிக்க முடியாதளவுக்கு பிரச்சினைகள் நிறைந்த கஷ்டமான காலமாக இருக்கும். (செப். 1:14, 15) யெகோவாவுடைய மக்களுக்கும் கஷ்டங்கள் வரும். ஆனால், இப்போதே நாம் தயாராக இருந்தால் அந்தச் சமயத்தில் பதட்டம் அடையாமல் இருக்க முடியும். மற்றவர்களுக்கும் உதவி செய்ய முடியும். என்ன பிரச்சினைகள் வந்தாலும் அதையெல்லாம் சகித்திருப்போம். நம் சகோதர சகோதரிகள் கஷ்டப்படுகிற சமயத்தில் அவர்கள்மேல் கரிசனை காட்டுவதற்கும் அவர்களுடைய அடிப்படைத் தேவைகளைக் கவனித்துக் கொள்வதற்கும் நம்மால் முடிந்ததை செய்வோம். நம் சகோதர சகோதரிகள்மேல் இப்போதே அன்பு காட்ட கற்றுக்கொண்டதால், எதிர்காலத்திலும் அவர்கள்மேல் அன்பு காட்டுவோம். இப்படியெல்லாம் செய்தால், புதிய உலகத்தில் என்றென்றும் வாழும் வாழ்க்கையை யெகோவா நமக்குப் பரிசாகக் கொடுப்பார். பேரழிவுகளும் கஷ்டங்களும் நம் ஞாபகத்திலிருந்து மறைந்தே போய்விடும்.—ஏசா. 65:17. w23.07 7 ¶16-17
ஞாயிறு, அக்டோபர் 12
[யெகோவா] உங்களை உறுதிப்படுத்துவார், உங்களைப் பலப்படுத்துவார், உங்களை உறுதியான அஸ்திவாரத்தின் மேல் நிற்க வைப்பார். —1 பே. 5:10.
யெகோவாவுக்கு உண்மையாக இருந்தவர்கள் பலமுள்ளவர்களாக இருந்தார்கள் என்று பைபிள் சொல்கிறது. ஆனால், எப்போதுமே அவர்கள் அப்படி உணரவில்லை. சிலசமயம் அவர்கள் பலவீனமாகவும் உணர்ந்திருக்கிறார்கள். உதாரணத்துக்கு, தாவீது ராஜா சில சூழ்நிலைகளில் தான் “மலைபோல் உறுதியாக” இருப்பதாக உணர்ந்தார். ஆனால், மற்ற சமயங்களில் “கதிகலங்கிப்போனேன்” என்று சொன்னார். (சங். 30:7) சிம்சோனுக்குக் கடவுளுடைய சக்தி கிடைத்தபோது அவர் பயங்கரமான ஒரு பலசாலியாக ஆனார். ஆனால், யெகோவாவின் சக்தி கிடைக்காவிட்டால், “நான் பலம் இழந்து மற்ற மனுஷர்களைப் போலாகிவிடுவேன்” என்று அவரே சொன்னார். (நியா. 14:5, 6; 16:17) கடவுள்பக்தியுள்ள இந்த ஆட்கள், யெகோவாவின் சக்தி கிடைத்ததால்தான் பலசாலிகளாக ஆனார்கள். பவுலும்கூட, யெகோவாதான் தனக்குப் பலம் கொடுக்க வேண்டும் என்பதைப் புரிந்து வைத்திருந்தார். (2 கொ. 12:9, 10) பவுலுக்கு சில உடல்நலப் பிரச்சினைகள் இருந்தன. (கலா. 4:13, 14) சிலசமயங்களில், சரியானதைச் செய்வதற்கு போராடினார். (ரோ. 7:18, 19) மற்ற சமயங்களில், பதட்டத்தோடும் தனக்கு என்ன ஆகுமோ என்ற பயத்தோடும் இருந்தார். (2 கொ. 1:8, 9) இருந்தாலும், பவுல் பலவீனமாக இருந்தபோது பலமுள்ளவராக ஆனார். பவுலிடம் இல்லாத பலத்தை யெகோவா கொடுத்தார். யெகோவா பவுலைப் பலசாலியாக்கினார். w23.10 12 ¶1-2
திங்கள், அக்டோபர் 13
யெகோவாவாகிய நான் இதயத்தைப் பார்க்கிறேன். —1 சா. 16:7.
‘எதற்குமே நான் லாயக்கில்லை’ என்ற எண்ணம் வந்தால், ஒரு விஷயத்தை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்: யெகோவாவே நம்மை அவர் பக்கமாக இழுத்திருக்கிறார். (யோவா. 6:44) நம்மிடம் இருக்கும் ஏதோவொரு நல்லதை அவர் பார்த்திருக்கிறார். ஒருவேளை, அதை நாம்கூட கவனித்திருக்க மாட்டோம்; ஆனால் அவர் கவனித்திருக்கிறார். நாம் உண்மையிலேயே எப்படிப்பட்டவர்கள் என்பது அவருக்குத் தெரியும். (2 நா. 6:30) அவர் உங்களைப் பொக்கிஷமாக பார்ப்பதாக பைபிள் சொல்கிறது; இதை நீங்கள் தாராளமாக நம்பலாம். (1 யோ. 3:19, 20) சத்தியத்தைத் தெரிந்துகொள்வதற்கு முன்பு செய்த சில விஷயங்கள் நம்மைப் போட்டு வாட்டி எடுக்கலாம்; குற்ற உணர்வால் நாம் தவிக்கலாம். (1 பே. 4:3) யெகோவாவுக்கு உண்மையாக சேவை செய்கிற கிறிஸ்தவர்களும் பாவ இயல்பால் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். உங்களுக்கும் அப்படித்தான் இருக்கிறதா? யெகோவா உங்களை மன்னிக்கவே மாட்டார் என்று தோன்றுகிறதா? உங்களுக்கு மட்டுமல்ல, யெகோவாவுக்கு உண்மையாக சேவை செய்த நிறைய பேருக்கு இந்த மாதிரி எண்ணங்கள் இருந்திருக்கிறது. பவுலும்கூட தன்னிடம் இருந்த பாவ இயல்பை நினைத்து வேதனைப்பட்டார். (ரோ. 7:24) அவர் மனம் திருந்தி ஞானஸ்நானம் எடுத்திருந்தார்; இருந்தாலும், “அப்போஸ்தலர்கள் எல்லாரிலும் நான் அற்பமானவன்” என்றும் “பாவிகளில் பெரும் பாவி நான்தான்” என்றும் சொன்னார்.—1 கொ. 15:9; 1 தீ. 1:15. w24.03 27 ¶5-6
செவ்வாய், அக்டோபர் 14
‘மக்கள் யெகோவாவின் ஆலயத்தை அலட்சியம் செய்தார்கள்.’ —2 நா. 24:18.
யோவாஸ் ராஜா எடுத்த தப்பான முடிவிலிருந்து நாம் கற்றுக்கொள்கிற பாடம் என்ன? யெகோவாமேல் பாசம் வைத்திருக்கிறவர்களை, அவருக்கு பிடித்ததை செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்களை நண்பர்களாக தேர்ந்தெடுக்க வேண்டும். சரியானதை செய்வதற்கு அவர்கள் நமக்கு உதவி செய்வார்கள். நம் வயதில் இருப்பவர்களோடு மட்டும்தான் பழக வேண்டும் என்று அவசியம் கிடையாது. யோவாஸ், தன்னைவிட வயதில் பெரியவராக இருந்த யோய்தாவோடும் நண்பராக இருந்தார். நண்பர்களை தேர்ந்தெடுக்கும்போது உங்களையே இப்படி கேட்டுக்கொள்ளுங்கள்: ‘யெகோவாமேல் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள அவர்கள் எனக்கு உதவி செய்கிறார்களா? யெகோவா எதிர்பார்ப்பது போல் வாழ்வதற்கு அவர்கள் எனக்கு உதவி செய்கிறார்களா? யெகோவாவைப் பற்றியும் அவர் சொல்லி தந்திருக்கிற அருமையான உண்மைகளை பற்றியும் அவர்கள் என்னிடம் பேசுகிறார்களா? கடவுள் கொடுத்திருக்கிற நெறிமுறைகளை மதிக்கிறார்களா? நான் ஏதாவது தப்பு செய்தால் அதை மூடிமறைக்காமல் என்னிடம் நேராக சொல்கிறார்களா? இல்லையென்றால் எனக்கு பிடித்ததை மட்டும்தான் சொல்கிறார்களா?’ (நீதி. 27:5, 6, 17) உங்களுடைய நண்பர்களுக்கு யெகோவாமேல் பாசம் இல்லையென்றால் அவர்கள் உங்களுக்கு தேவையே இல்லை. அதேசமயத்தில், யெகோவாவை நேசிக்கிற நண்பர்கள் உங்களுக்கு இருந்தால் அவர்களை விட்டுவிடாதீர்கள்; அவர்கள்தான் உங்களுக்கு நல்ல நண்பராக இருப்பார்கள்!—நீதி. 13:20. w23.09 9-10 ¶6-7
புதன், அக்டோபர் 15
ஆல்பாவும் ஒமேகாவும் நானே.—வெளி. 1:8.
ஆல்பா என்பது கிரேக்க மொழியில் முதலாவது எழுத்து. ஒமேகா என்பது கடைசி எழுத்து. “ஆல்பாவும் ஒமேகாவும் நானே” என்று சொல்வதன் மூலம், ஒரு விஷயத்தை ஆரம்பித்தால் கண்டிப்பாக அதை நல்லபடியாக செய்து முடிப்பார் என்பதை யெகோவா காட்டுகிறார். யெகோவா ஆதாமையும் ஏவாளையும் படைத்த பிறகு அவர்களிடம், “‘நீங்கள் பிள்ளைகளைப் பெற்று, ஏராளமாகப் பெருகி, பூமியை நிரப்புங்கள்; அதைப் பண்படுத்துங்கள்’ . . . என்று சொல்லி ஆசீர்வதித்தார்.” (ஆதி. 1:28) இது ஒருவிதத்தில் அவர் “ஆல்பா” என்று சொன்னதுபோல் இருந்தது. சீக்கிரத்தில், ஆதாம் ஏவாளின் சந்ததியில் வரும் கீழ்ப்படிதலுள்ள மக்கள் இந்தப் பூமி முழுவதையும் நிரப்பி, அதைப் பூஞ்சோலையாக மாற்றுவார்கள். அந்தச் சமயத்தில் யெகோவா “ஒமேகா” என்று சொல்வதுபோல் இருக்கும். தன் நோக்கத்தை நிறைவேற்ற யெகோவா ஏழாவது நாளை ஒதுக்கி வைத்திருக்கிறார். அந்த நாளின் முடிவில் அவருடைய நோக்கம் கண்டிப்பாக நிறைவேறிவிடும்.—ஆதி. 2:1-3. w23.11 5 ¶13-14
வியாழன், அக்டோபர் 16
யெகோவாவுக்கு வழியைத் தயார்படுத்துங்கள்! நம் கடவுளுக்காக பாலைவனத்தில் ஒரு சமமான நெடுஞ்சாலையை அமையுங்கள்.—ஏசா. 40:3.
பாபிலோனிலிருந்து இஸ்ரவேலுக்குப் போக கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் ஆகும். அந்தப் பயணம் ரொம்ப கஷ்டமாகவும் இருக்கும். ஆனால், இடையில் வரும் எல்லா தடைகளையும் நீக்கப்போவதாக யெகோவா வாக்குக் கொடுத்தார். உண்மையுள்ள யூதர்களுக்கு ஒரு விஷயம் நன்றாகத் தெரிந்திருந்தது. இஸ்ரவேலுக்குத் திரும்பிப் போவதற்காக அவர்கள் செய்யும் தியாகங்களைவிட அவர்களுக்குக் கிடைக்கும் ஆசீர்வாதங்கள்தான் அதிகம்! அதில் ஒரு ஆசீர்வாதம்: அவர்களால் மறுபடியும் யெகோவாவைச் சுதந்திரமாக வணங்க முடியும்! யெகோவாவை வணங்குவதற்கு பாபிலோனில் ஆலயமே இல்லை. திருச்சட்டத்தில் சொன்னதுபோல் யெகோவாவுக்குப் பலிகளைச் செலுத்த இடமும் இல்லை, குருமார் ஏற்பாடும் இல்லை. அந்த ஊரில் யெகோவாவையும் அவருடைய சட்டங்களையும் மதித்து நடந்தவர்களைவிட பொய் தெய்வங்களை வணங்கியவர்கள்தான் நிறைய பேர் இருந்தார்கள். அதனால், யெகோவாவுக்கு உண்மையாக இருந்த ஆயிரக்கணக்கான யூதர்கள், அவர்களுடைய தாய்நாட்டுக்குத் திரும்பிப் போய் உண்மை வணக்கத்தைத் திரும்பவும் ஆரம்பிப்பதற்கு ஆசையாகக் காத்திருந்தார்கள். w23.05 14-15 ¶3-4
வெள்ளி, அக்டோபர் 17
தொடர்ந்து ஒளியின் பிள்ளைகளாக நடந்துகொள்ளுங்கள். —எபே. 5:8.
தொடர்ந்து “ஒளியின் பிள்ளைகளாக” நடப்பதற்குக் கடவுளுடைய சக்தியின் உதவி நமக்குத் தேவை. இந்த ஒழுக்கங்கெட்ட உலகத்தில் சுத்தமாக இருப்பது சுலபம் இல்லைதான். (1 தெ. 4:3-5, 7, 8) இந்த உலகத்தின் யோசனைகளையும் தத்துவங்களையும் எதிர்த்து போராட கடவுளுடைய சக்தி உதவி செய்யும். அதுமட்டுமல்ல, ‘எல்லா விதமான நல்ல குணத்தையும் நீதியையும்’ வளர்த்துக்கொள்ளவும் அது உதவும். (எபே. 5:9) கடவுளுடைய சக்தி வேண்டுமென்றால் அதற்காக ஜெபம் செய்ய வேண்டும். யெகோவா, “தன்னிடம் கேட்கிறவர்களுக்குத் தன்னுடைய சக்தியை . . . கொடுப்பார்” என்று இயேசுவும் சொன்னார். (லூக். 11:13) சபையில் யெகோவாவைப் புகழும்போதும் அந்த சக்தி நமக்குக் கிடைக்கும். (எபே. 5:19, 20) கடவுளுடைய சக்தி நம்மேல் செயல்படும்போது, யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி நம்மால் வாழ முடியும். w24.03 23-24 ¶13-15
சனி, அக்டோபர் 18
கேட்டுக்கொண்டே இருங்கள், அப்போது உங்களுக்குக் கொடுக்கப்படும். தேடிக்கொண்டே இருங்கள், அப்போது கண்டுபிடிப்பீர்கள். தட்டிக்கொண்டே இருங்கள், அப்போது உங்களுக்குத் திறக்கப்படும்.—லூக். 11:9.
உங்களுக்கு இன்னும் அதிக பொறுமை தேவையா? ஜெபம் செய்யுங்கள். பொறுமை என்பது கடவுளுடைய சக்தியால் உண்டாகிற குணங்களில் ஒன்று. (கலா. 5:22, 23) அதனால், யெகோவாவின் சக்தியைக் கேட்டு ஜெபம் செய்யலாம். அந்தச் சக்தியால் உண்டாகிற இந்தக் குணத்தை வளர்த்துக்கொள்ள உதவி கேட்டும் ஜெபம் செய்யலாம். நம் பொறுமையைச் சோதிக்கும் ஒரு சூழ்நிலை வந்தால், கடவுளுடைய சக்திக்காக நாம் “கேட்டுக்கொண்டே” இருக்க வேண்டும். (லூக். 11:13) ஒரு விஷயத்தை யெகோவா பார்க்கும் விதத்தில் பார்க்க உதவி செய்யும்படியும் அவரிடம் கேட்கலாம். ஒவ்வொரு நாளும் பொறுமையாக இருப்பதற்கு நம் பங்கில் செய்ய வேண்டியதையும் செய்ய வேண்டும். பொறுமைக்காக எந்தளவுக்கு ஜெபம் செய்கிறோமோ, எந்தளவுக்கு அதைக் காட்ட முயற்சி செய்கிறோமோ அந்தளவுக்கு இந்தக் குணம் நம் மனதில் ஆழமாகப் பதிந்துவிடும், நம் சுபாவத்தோடும் கலந்துவிடும். பைபிள் உதாரணங்களை ஆழமாக யோசித்துப் பார்க்கவும் உதவும். பொறுமையாக இருந்த நிறைய பேருடைய உதாரணம் பைபிளில் இருக்கிறது. அவர்களைப் பற்றி யோசித்துப் பார்க்கும்போது, எப்படியெல்லாம் பொறுமை காட்டலாம் என்று கற்றுக்கொள்வோம். w23.08 22 ¶10-11
ஞாயிறு, அக்டோபர் 19
உங்கள் வலைகளைப் போட்டு மீன்பிடியுங்கள்.—லூக். 5:4.
யெகோவா உதவி செய்வார் என்று பேதுருவுக்கு இயேசு நம்பிக்கை கொடுத்தார். இயேசு உயிர்த்தெழுந்து வந்த பிறகு, பேதுருவுக்கும் அவரோடு இருந்த மற்ற அப்போஸ்தலர்களுக்கும் மீன்பிடிப்பதில் இன்னொரு அற்புதத்தை செய்து காட்டினார். (யோவா. 21:4-6) இந்த அற்புதத்தை பார்த்தபோது யெகோவா அவருடைய பொருள் தேவைகளை கவனித்துக்கொள்வார் என்று பேதுருவுக்கு நம்பிக்கை கிடைத்திருக்கும். ‘கடவுளுடைய அரசாங்கத்துக்கு . . . முதலிடம் கொடுப்பவர்களை’ யெகோவா கவனித்துக்கொள்வார் என்று இயேசு சொன்ன வார்த்தைகளும் அப்போது அவருடைய ஞாபகத்துக்கு வந்திருக்கும். (மத். 6:33) அதனால், மீன்பிடிக்கும் தொழிலை விட ஊழிய வேலைக்கு பேதுரு முதலிடம் கொடுத்தார். கி.பி. 33 பெந்தெகொஸ்தே நாள் அன்று, அவர் தைரியமாகச் சாட்சி கொடுத்தார். அதைக் கேட்ட ஆயிரக்கணக்கான மக்கள் நல்ல செய்தியை ஏற்றுக்கொண்டார்கள். (அப். 2:14, 37-41) அதற்குப்பின், சமாரியர்களும் மற்ற தேசத்தை சேர்ந்தவர்களும் இயேசுவை ஏற்றுக்கொள்ள அவர் உதவி செய்தார். (அப். 8:14-17; 10:44-48) எல்லா விதமான மக்களையும் அவருடைய சபைக்குள் கொண்டுவருவதற்கு யெகோவா பேதுருவை பெரிய அளவில் பயன்படுத்தினார். w23.09 20 ¶1; 23 ¶11
திங்கள், அக்டோபர் 20
நான் பார்த்த கனவையும் அதன் அர்த்தத்தையும் நீங்கள்தான் சொல்ல வேண்டும்; இல்லாவிட்டால், உங்களைக் கண்டந்துண்டமாக வெட்டிவிடுவேன்.—தானி. 2:5.
பாபிலோனின் ராஜா நேபுகாத்நேச்சாருக்கு, பிரமாண்டமான ஒரு சிலையைப் பற்றிய பயங்கரமான ஒரு கனவு வந்தது. இது எருசலேமை பாபிலோனியர்கள் அழித்து கிட்டத்தட்ட இரண்டு வருஷங்களுக்குப் பிறகு நடந்திருக்கலாம். அந்தக் கனவையும் அதன் அர்த்தத்தையும் சொல்லாவிட்டால் எல்லா ஞானிகளையும் கொன்றுவிடுவதாக அவர் மிரட்டினார், தானியேலையும் சேர்த்துதான்! (தானி. 2:3-5) தானியேல் உடனடியாக ஏதாவது செய்யவில்லை என்றால், நிறைய பேருடைய உயிரே போய்விடும் ஆபத்து இருந்தது! “அதனால் தானியேல் ராஜாவிடம் போய், கனவை விளக்குவதற்கு அவகாசம் கேட்டார்.” (தானி. 2:16) அதற்கு நிறைய தைரியமும் விசுவாசமும் அவருக்குத் தேவைப்பட்டது. ஏனென்றால், அதற்கு முன்பு தானியேல் கனவுகளுக்கு அர்த்தம் சொன்னதாக பைபிளில் எந்தவொரு பதிவும் இல்லை. அதனால் தன் நண்பர்களிடம் போய், “பரலோகத்தின் கடவுள் நம்மேல் இரக்கம் காட்டி அந்தக் கனவின் ரகசியத்தை வெளிப்படுத்த வேண்டுமென்று ஜெபம் செய்யுங்கள்” என்று சொன்னார். (தானி. 2:18) யெகோவா அவர்களுடைய ஜெபங்களுக்குப் பதில் கொடுத்தார். யெகோவாவின் உதவியோடு நேபுகாத்நேச்சாரின் கனவுக்கு தானியேல் அர்த்தம் சொன்னார். அதனால், தானியேலும் அவருடைய நண்பர்களும் உயிர்தப்பினார்கள். w23.08 3 ¶4
செவ்வாய், அக்டோபர் 21
முடிவுவரை சகித்திருப்பவர்தான் மீட்புப் பெறுவார். —மத். 24:13.
பொறுமையாக நடந்துகொள்வதால் கிடைக்கும் நன்மைகளை யோசித்துப் பாருங்கள். பொறுமையாக இருந்தால், இன்னும் சந்தோஷமாகவும் மன சமாதானத்தோடும் இருப்போம். அதனால், நம் மனதும் உடம்பும் ஆரோக்கியமாக இருக்கும். மற்றவர்களிடம் பொறுமையாக நடந்துகொண்டால் அவர்களோடு நல்ல பந்தம் இருக்கும். சபையும் இன்னும் ஒற்றுமையாக இருக்கும். யாராவது நம் கோபத்தைத் தூண்டினால்கூட நாம் அமைதியாக இருந்தால், பிரச்சினை பெரிதாகாமல் இருக்கும். (சங். 37:8, அடிக்குறிப்பு; நீதி. 14:29) எல்லாவற்றுக்கும் மேலாக யெகோவா அப்பாவைப் போலவே நடந்துகொள்வோம், அவரிடம் இன்னும் அதிகமாக நெருங்கிப்போவோம். பொறுமை என்பது உண்மையிலேயே ஒரு அழகான குணம். அது எத்தனையோ நன்மைகளைத் தருகிறது. பொறுமையாக நடந்துகொள்வது எப்போதுமே சுலபம் கிடையாதுதான். ஆனால், யெகோவாவின் உதவியோடு தொடர்ந்து அந்தக் குணத்தை வளர்த்துக்கொள்ள முடியும். புதிய உலகத்துக்காக பொறுமையோடு காத்திருக்கும் இந்தச் சமயத்தில், “யெகோவாவின் கண்கள் அவருக்குப் பயந்து நடக்கிறவர்களையும், அவருடைய மாறாத அன்புக்காகக் காத்திருக்கிறவர்களையும் உன்னிப்பாகக் கவனிக்கின்றன” என்பதில் உறுதியாக இருக்கலாம். (சங். 33:18) அதனால், நாம் எல்லாருமே தொடர்ந்து பொறுமையாக இருக்கத் தீர்மானமாக இருக்கலாம். w23.08 22 ¶7; 25 ¶16-17
புதன், அக்டோபர் 22
விசுவாசத்தைச் செயலில் காட்டவில்லை என்றால், அது செத்ததாக இருக்கும்.—யாக். 2:17.
ஒருவர் தனக்கு விசுவாசம் இருப்பதாக சொல்லிக்கொண்டாலும், அதற்கு ஏற்ற செயல்களை செய்கிறாரா என்பதுதான் முக்கியம் என்று யாக்கோபு சுட்டிக்காட்டுகிறார். (யாக். 2:1-5, 9) அதோடு, இன்னொரு நபரைப் பற்றியும் யாக்கோபு சொல்கிறார். ‘உடையோ உணவோ இல்லாமல்’ கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிற ஒரு சகோதரரையோ சகோதரியையோ அந்த நபர் பார்க்கிறார். இருந்தாலும், அவர்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. இப்படிப்பட்ட ஒருவர் தனக்கு விசுவாசம் இருப்பதாக சொல்லிக்கொண்டாலும் அதனால் என்ன பிரயோஜனம்? அதற்கு ஏற்ற செயல்கள் அவரிடம் இல்லையே. (யாக். 2:14-16) விசுவாசத்தை செயலில் காட்டிய நபர்களில் ராகாபும் ஒருவர் என்று யாக்கோபு சொல்கிறார். (யாக். 2:25, 26) அவள் யெகோவாவைப் பற்றி கேள்விப்பட்டாள், இஸ்ரவேலர்களுக்கு யெகோவா உதவி செய்ததையும் புரிந்துகொண்டாள். (யோசு. 2:9-11) அதோடு, அவள் தன் விசுவாசத்தை செயலில் காட்டினாள். இரண்டு இஸ்ரவேல உளவாளிகள் வந்தபோது அவர்களுடைய உயிரைக் காப்பாற்றினாள். இஸ்ரவேலராக இல்லாத, பாவ இயல்புள்ள ஒரு பெண்ணாக இருந்தாலும் யெகோவா அவளை நீதிமான் என்று சொன்னார்; ஆபிரகாமை சொன்னது போலவே! விசுவாசத்தை செயலில் காட்டுவது எந்தளவுக்கு முக்கியம் என்பது அவளுடைய உதாரணத்திலிருந்து புரிகிறது. w23.12 5-6 ¶12-13
வியாழன், அக்டோபர் 23
நீங்கள் வேரூன்றியவர்களாகவும் அஸ்திவாரத்தின்மேல் நிலையாய் நிற்கிறவர்களாகவும் இருக்க வேண்டும்.—எபே. 3:17.
கிறிஸ்தவர்களாக நாம், அடிப்படை பைபிள் சத்தியங்களைத் தெரிந்துகொண்டாலே போதும் என்று நினைப்பதில்லை. கடவுளுடைய சக்தியின் உதவியோடு “கடவுளுடைய ஆழமான காரியங்களையும்கூட” ஆராய்ந்து தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆர்வம் நமக்கு இருக்கிறது. (1 கொ. 2:9, 10) யெகோவாவிடம் இன்னும் நெருங்கிப் போவதற்கு நீங்கள் ஏன் ஒரு படிப்பு புராஜக்ட்டை ஆரம்பிக்கக் கூடாது? உதாரணத்துக்கு, அன்று வாழ்ந்த தன் ஊழியர்கள்மேல் யெகோவா எப்படியெல்லாம் அன்பு காட்டினார்? இன்று நம்மேலும் அவர் அன்பு காட்டுவார் என்பதை அது எப்படிக் காட்டுகிறது? இஸ்ரவேலர்களின் காலத்தில் தன்னை வணங்குவதற்காக யெகோவா என்னென்ன ஏற்பாடுகளைச் செய்திருந்தார்? அந்த ஏற்பாடுகளுக்கும் நம் காலத்தில் யெகோவா செய்திருக்கும் ஏற்பாடுகளுக்கும் என்ன ஒற்றுமை இருக்கிறது? இயேசு பூமியில் வாழ்ந்த சமயத்தில் என்னென்ன தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றினார்? இதுபோன்ற விஷயங்களை உங்களுடைய தனிப்பட்ட படிப்பில் நீங்கள் ஆழமாகப் படித்துப் பார்க்கலாம். அதற்காக, யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேட்டை பயன்படுத்தலாம். பைபிளை இப்படி ஆழமாக ஆராய்ச்சி செய்து படிக்கும்போது உங்கள் விசுவாசம் பலமாகும், ‘கடவுளைப் பற்றிய அறிவையும் கண்டடைவீர்கள்.’—நீதி. 2:4, 5. w23.10 18-19 ¶3-5
வெள்ளி, அக்டோபர் 24
எல்லாவற்றுக்கும் மேலாக, ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்பு காட்டுங்கள்; ஏனென்றால், அன்பு ஏராளமான பாவங்களை மூடும்.—1 பே. 4:8.
பேதுரு பயன்படுத்தியிருக்கிற “ஆழ்ந்த” என்ற வார்த்தை, ஏதோவொரு பொருளை “நன்றாக விரிப்பதை” குறிக்கிறது. வசனத்தின் இரண்டாவது பாகத்தில், ஆழமான அன்பு இருந்தால் சகோதரர்களுடைய பாவத்தை மூட முடியும் என்று பேதுரு சொல்கிறார். இதைப் புரிந்துகொள்ள இந்த உதாரணத்தை யோசியுங்கள்: உங்களிடம் ஒரு டேபிள் இருக்கிறது. ஆனால், அதன்மேல் ஏகப்பட்ட கீரல்களும் கறைகளும் இருக்கின்றன. அது பார்ப்பதற்கு அவ்வளவு நன்றாக இல்லை. அதனால், அதன்மேல் ஒரு துணியை விரிக்கிறீர்கள். அந்தத் துணியை நான்கு பக்கமும் நன்றாக இழுத்துவிடுகிறீர்கள். இப்படி, ஓரிரு கறைகளை மட்டுமல்ல, அந்த டேபிள்மேல் இருக்கிற மொத்த கறைகளையும் மூடிவிடுகிறீர்கள். இந்தத் துணி மாதிரிதான் நாம் காட்டுகிற ஆழமான அன்பு! சகோதர சகோதரிகளிடம் இருக்கும் ஓரிரு குறைகளை மட்டுமல்ல, “ஏராளமான பாவங்களை” ஆழமான அன்பினால் மூட முடியும். மற்றவர்கள்மேல் ஆழமான அன்பு இருந்தால்தான் அவர்கள் செய்கிற தவறுகளை நம்மால் மன்னிக்க முடியும்; கஷ்டமாக இருந்தாலும் மன்னிக்க முடியும்! (கொலோ. 3:13) நாம் மற்றவர்களை மன்னித்தால் யெகோவாவுக்கு நம்மை ரொம்பப் பிடிக்கும். w23.11 11-12 ¶13-15
சனி, அக்டோபர் 25
ராஜாவின் முன்னால் சாப்பான் அதிலிருந்து வாசிக்க ஆரம்பித்தார்.—2 நா. 34:18.
26 வயதில், யோசியா ராஜா யெகோவாவுடைய ஆலயத்தை புதுப்பிக்கும் வேலையை ஆரம்பித்தார். அந்த சமயத்தில், ‘மோசே மூலம் கொடுக்கப்பட்ட யெகோவாவின் திருச்சட்ட புத்தகம்’ கிடைத்தது. அது வாசிக்கப்பட்டதைக் கேட்டபோது, அதில் சொல்லியிருப்பதை தீவிரமாக செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார். (2 நா. 34:14, 19-21) நீங்களும் பைபிளை தினமும் வாசிக்க ஆசைப்படுகிறீர்களா? ஏற்கெனவே வாசிக்கிறீர்கள் என்றால், அது உங்களுக்கு பிடித்திருக்கிறதா? பிரயோஜனமாக இருக்கும் என்று நினைக்கும் வசனங்களை தனியாக குறித்து வைக்கிறீர்களா? யோசியாவுக்கு கிட்டத்தட்ட 39 வயது இருக்கும்போது, அவர் ஒரு பெரிய தப்பை செய்தார். அதனால் அவருடைய உயிரே போய்விட்டது. யெகோவாவை நம்பி அவருடைய வழிநடத்துதலை கேட்பதற்கு பதிலாக சொந்த புத்தியை நம்பி அவராகவே ஒரு முடிவை எடுத்துவிட்டார். (2 நா. 35:20-25) பாடம்? நமக்கு எவ்வளவு வயதானாலும் சரி, எவ்வளவு வருஷமாக பைபிளை படித்துக்கொண்டு இருந்தாலும் சரி, நாம் தொடர்ந்து யெகோவாவை தேடிக்கொண்டே இருக்க வேண்டும். வழிநடத்துதலுக்காக யெகோவாவிடம் ஜெபம் செய்வது, அவருடைய வார்த்தையை படிப்பது, முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்களின் அறிவுரையை கேட்டு நடப்பது என எல்லாவற்றையும் தவறாமல் செய்ய வேண்டும். அப்படி செய்தால் வாழ்க்கையில் பெரிய பெரிய தவறுகளை செய்யாமல் இருப்போம், சந்தோஷமாக இருப்போம்.—யாக். 1:25. w23.09 12 ¶15-16
ஞாயிறு, அக்டோபர் 26
தலைக்கனம் உள்ளவர்களைக் கடவுள் எதிர்க்கிறார், தாழ்மை உள்ளவர்களுக்கோ அளவற்ற கருணை காட்டுகிறார்.—யாக். 4:6.
யெகோவாவை நேசித்து, அவருக்கு உண்மையாக சேவை செய்த நிறைய பெண்களைப் பற்றி பைபிள் சொல்கிறது. “பழக்கவழக்கங்களில் அளவுக்குமீறி போகாதவர்களாகவும், எல்லா விஷயங்களிலும் உண்மையுள்ளவர்களாகவும்” அவர்கள் இருந்தார்கள். (1 தீ. 3:11) அவர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ளலாம். உங்கள் சபையிலும் முதிர்ச்சியுள்ள சகோதரிகள் இருப்பார்கள். இளம் சகோதரிகளே, உங்களுக்குத் தெரிந்த முதிர்ச்சியுள்ள சகோதரிகளைப் பற்றி யோசித்துப்பாருங்கள். அவர்களிடம் இருக்கிற நல்ல நல்ல குணங்களைக் கவனியுங்கள். அந்தக் குணங்களை நீங்கள் எப்படிக் காட்டலாம் என்று யோசியுங்கள். ஒரு முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவராக இருப்பதற்கு மனத்தாழ்மை ரொம்ப முக்கியம். ஒரு சகோதரி மனத்தாழ்மையாக இருந்தால், அவருக்கு யெகோவாவோடும் மற்றவர்களோடும் நல்ல பந்தம் இருக்கும். உதாரணத்துக்கு, யெகோவாவை நேசிக்கிற ஒரு சகோதரி, அவர் ஏற்படுத்திய தலைமை ஸ்தானம் என்ற ஏற்பாட்டுக்கு கீழ்ப்படிந்து நடப்பார்—சபையிலும்! குடும்பத்திலும்!—1 கொ. 11:3. w23.12 18-19 ¶3-5
திங்கள், அக்டோபர் 27
‘கணவர்கள் தங்கள் சொந்த உடல்மீது அன்பு காட்டுவதுபோல் தங்கள் மனைவிமீதும் அன்பு காட்ட வேண்டும்.’—எபே. 5:28.
ஒரு கணவர் தன்னுடைய மனைவியை அன்பாகப் பார்த்துக்கொள்ள வேண்டும், அவளுடைய தேவைகளைக் கவனித்துக்கொள்ள வேண்டும், உணர்ச்சிகளைப் புரிந்து நடந்துகொள்ள வேண்டும், கடவுளோடு ஒரு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்ள உதவ வேண்டும். கணவர்கள் இவற்றையெல்லாம் செய்ய வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். யோசிக்கும் திறனை வளர்த்துக்கொள்வது, பெண்களை மதிக்கக் கற்றுக்கொள்வது மற்றும் பொறுப்புள்ளவர்களாக நடந்துகொள்வது ஒரு நல்ல கணவராகவும் குடும்பத் தலைவராகவும் ஆவதற்கு உங்களுக்கு உதவும். எதிர்காலத்தில் நீங்கள் ஒரு அப்பாவாக ஆகலாம். ஒரு நல்ல அப்பாவாக இருப்பது எப்படி என்று யெகோவாவிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள். (எபே. 6:4) யெகோவா தன்னுடைய மகன் இயேசுமேல் அன்பு வைத்திருந்ததையும், அவரை ஏற்றுக்கொண்டதையும் வெளிப்படையாக சொன்னார். (மத். 3:17) நீங்களும் ஒரு அப்பாவாக ஆகும்போது, உங்கள் பிள்ளைகளை நேசிக்கிறீர்கள் என்பதை அடிக்கடி சொல்லுங்கள். அவர்கள் ஏதாவது நல்ல விஷயங்களை செய்யும்போது வாயாரப் பாராட்டுங்கள். யெகோவாவை மாதிரியே நடந்துகொள்ளும் அப்பாக்களால் நல்ல பிள்ளைகளை வளர்க்க முடியும்; அந்த பிள்ளைகள் முதிர்ச்சியுள்ள ஆண்களாகவும் பெண்களாகவும் வளருவார்கள். இதையெல்லாம் செய்வதற்கு இப்போதே நீங்கள் எப்படித் தயாராகலாம்? குடும்பத்திலும் சபையிலும் இருக்கிறவர்கள்மேல் நீங்கள் வைத்திருக்கிற அன்பை செயலில் காட்டுங்கள். அவர்களைத் தாராளமாகப் பாராட்டுங்கள்.—யோவா. 15:9. w23.12 28-29 ¶17-18
செவ்வாய், அக்டோபர் 28
‘யெகோவாதான் உன் காலங்களை நிலைப்படுத்துகிறார்.’ —ஏசா. 33:6.
யெகோவாவின் ஊழியர்களான நமக்கும் கஷ்டங்களும் நோய்களும் வரத்தான் செய்கிறது. நம்மை வெறுக்கிறவர்களிடம் இருந்து எதிர்ப்பும் துன்புறுத்தலும்கூட வருகிறது. இந்த கஷ்டங்களெல்லாம் வராத மாதிரி யெகோவா தடுப்பதில்லை. இருந்தாலும், நமக்கு உதவி செய்வதாக வாக்குக் கொடுத்திருக்கிறார். (ஏசா. 41:10) அவர் தரும் உதவியோடு நம்மால் சந்தோஷத்தை இழக்காமல் இருக்க முடியும், நல்ல தீர்மானங்களை எடுக்க முடியும், எவ்வளவு மோசமான கஷ்டங்கள் வந்தாலும் அவருக்கு உண்மையாக இருக்க முடியும். யெகோவா நமக்கு “தேவசமாதானம்” தருவதாக வாக்குக் கொடுத்திருக்கிறார். (பிலி. 4:6, 7) யெகோவாவோடு நெருக்கமான பந்தம் வைத்திருப்பதால் கிடைக்கும் சமாதானம்தான் தேவசமாதானம்! அது நம் இதயத்தையும் மனதையும் அமைதிப்படுத்தும், சாந்தமாக்கும். அந்த சமாதானம் ‘எல்லா சிந்தனைக்கும் மேலானது’ என்று பைபிள் சொல்கிறது. அது கொடுக்கிற அமைதியை நம்மால் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஏதோவொரு விஷயத்துக்காக உருக்கமாக ஜெபம் செய்த பிறகு, ஒருவிதமான அமைதியை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? அதுதான் “தேவசமாதானம்.” w24.01 20 ¶2; 21 ¶4
புதன், அக்டோபர் 29
என் ஜீவன் யெகோவாவைப் புகழட்டும். எனக்குள் இருக்கும் எல்லாமே அவருடைய பரிசுத்த பெயரைப் புகழட்டும்.—சங். 103:1.
யெகோவாமேல் அன்பு இருந்தால் அவருடைய பெயரை நாம் மனதார புகழுவோம். யெகோவாவுடைய பெயரைப் புகழும்போது அவரையே புகழுகிறோம் என்று தாவீது புரிந்து வைத்திருந்தார். யெகோவாவுடைய பெயர், அவர் எப்படிப்பட்டவர் என்பதைக் காட்டுகிறது; அவருடைய அழகான குணங்களையும் அவர் செய்த நல்ல நல்ல விஷயங்களையும் ஞாபகப்படுத்துகிறது. ‘தனக்குள் இருக்கிற எல்லாவற்றையும்’ வைத்து, அதாவது மனதார, யெகோவாவுடைய பெயரைப் புகழ வேண்டும்... அதைப் பரிசுத்தப்படுத்த வேண்டும்... என்று தாவீது ஆசைப்பட்டார். இந்த விஷயத்தில் லேவியர்களும் நல்ல முன்மாதிரி வைத்திருக்கிறார்கள். யெகோவாவுடைய பரிசுத்தமான பெயரைப் புகழ்வதற்கு வார்த்தைகளே போதாது என்று அவர்கள் மனத்தாழ்மையாக சொன்னார்கள். (நெ. 9:5) இவர்கள் எல்லாரும் மனதார புகழ்ந்ததைக் கேட்டபோது யெகோவாவுடைய மனசு உருகியிருக்கும். w24.02 9 ¶6
வியாழன், அக்டோபர் 30
முன்னேற்றப் பாதையில் நாம் எதுவரை போயிருந்தாலும் சரி, அதே பாதையில் தொடர்ந்து சீராக நடக்க வேண்டும்.—பிலி. 3:16.
உங்களுக்கு ஒத்துவராத ஒரு குறிக்கோளை நீங்கள் அடையவில்லை என்பதற்காக நீங்கள் தோற்றுப்போய்விட்டதாக யெகோவா ஒருநாளும் நினைக்க மாட்டார். (2 கொ. 8:12) தடங்கல்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள். ஏற்கெனவே செய்திருப்பதை யோசித்துப் பாருங்கள். “உங்களுடைய உழைப்பை . . . மறந்துவிடுவதற்குக் கடவுள் அநீதியுள்ளவர் கிடையாது” என்று பைபிள் சொல்கிறது. (எபி. 6:10) உங்களுடைய உழைப்பை நீங்களும் மறந்துவிடாதீர்கள். நீங்கள் ஏற்கெனவே என்னவெல்லாம் செய்து முடித்திருக்கிறீர்கள் என்று யோசித்துப் பாருங்கள். ஒருவேளை, நீங்கள் ஏற்கெனவே யெகோவாவோடு ஒரு நட்பை வளர்த்திருக்கலாம், மற்றவர்களிடம் அவரைப் பற்றிப் பேச ஆரம்பித்திருக்கலாம், ஞானஸ்நானமும் எடுத்திருக்கலாம். இப்படி ஏற்கெனவே நல்ல நல்ல குறிக்கோளை வைத்து அதை அடைந்திருக்கலாம். அதையெல்லாம் உங்களால் அடைய முடிந்திருக்கிறதென்றால், இப்போது வைத்திருக்கிற குறிக்கோளையும் கண்டிப்பாக அடைய முடியும்! உங்களுடைய குறிக்கோளை அடைய தொடர்ந்து உழைக்கும்போது, யெகோவா எப்படியெல்லாம் உங்களுக்கு உதவி செய்கிறார்... எப்படியெல்லாம் உங்களை ஆசீர்வதிக்கிறார்... என்பதைப் பார்த்து சந்தோஷப்பட மறந்துவிடாதீர்கள்! (2 கொ. 4:7) நீங்கள் முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்து உழைத்தால் இன்னும் பெரிய ஆசீர்வாதங்கள் உங்களைத் தேடிவரும்.—கலா. 6:9. w23.05 31 ¶16-18
வெள்ளி, அக்டோபர் 31
தகப்பனே உங்கள்மேல் பாசம் வைத்திருக்கிறார். ஏனென்றால், நீங்கள் என்மேல் பாசம் வைத்து, கடவுளுடைய பிரதிநிதியாக நான் வந்திருப்பதை நம்புகிறீர்கள்.—யோவா. 16:27.
யெகோவா யார்மேல் பாசம் வைத்திருக்கிறாரோ அவர்களை ஏற்றுக்கொள்வதை வெளிப்படையாக காட்டுகிறார். இயேசு பூமியில் இருந்தபோது யெகோவா அவர்மேல் அன்பு வைத்திருந்ததையும் அவரை ஏற்றுக்கொள்வதையும் இரண்டு சந்தர்ப்பங்களில் சொன்னார். (மத். 3:17; 17:5) யெகோவா உங்களைப் பற்றியும் இப்படி சொல்ல வேண்டுமென்று நீங்கள் நினைக்கிறீர்களா? இன்றைக்கு யெகோவா பரலோகத்திலிருந்து பேசுவது இல்லைதான்! ஆனால் தன்னுடைய வார்த்தையான பைபிள் மூலமாக பேசுகிறார். இயேசு தன் சீஷர்களிடம் சொன்ன வார்த்தைகள் சுவிசேஷ புத்தகங்களில் இருக்கின்றன. அதைப் படிக்கும்போது யெகோவாவின் குரலை நம்மால் “கேட்க” முடியும். ஏனென்றால், இயேசு தன் அப்பாவை அப்படியே பின்பற்றினார். பாவ இயல்புள்ள தன் சீஷர்கள் தவறுகள் செய்தபோதுகூட இயேசு அவர்களை ஏற்றுக்கொண்டார். இதைப் பற்றியெல்லாம் படிக்கும்போது யெகோவாவும் நம்மை அப்படித்தான் ஏற்றுக்கொள்வார் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. (யோவா. 15:9, 15) கஷ்டங்கள் வருகின்றன என்பதற்காக யெகோவா நம்மை ஏற்றுக்கொள்வதில்லை என்று அர்த்தம் ஆகிவிடாது. நாம் அவர்மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறோம்... அவரை எவ்வளவு நம்புகிறோம்... என்பதைக் காட்டுவதற்கு அவை வாய்ப்புகளைக் கொடுக்கின்றன.—யாக். 1:12. w24.03 28 ¶10-11