ஆளும் குழுவின் இரண்டு புதிய அங்கத்தினர்கள்
அக்டோபர் 5, 2024 அன்று நடந்த வருடாந்தரக் கூட்டத்தில் ஒரு விசேஷ அறிவிப்பு செய்யப்பட்டது. சகோதரர் ஜோடி ஜெட்லியும் சகோதரர் ஜேக்கப் ரம்ஃபும் யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழுவின் அங்கத்தினர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இந்த இரண்டு சகோதரர்களும் பல வருஷங்களாக யெகோவாவுக்கு உண்மையாகச் சேவை செய்திருக்கிறார்கள்.
சகோதரர் ஜோடி ஜெட்லி மற்றும் அவருடைய மனைவி, டமாரிஸ்
சகோதரர் ஜெட்லி அமெரிக்காவில் இருக்கிற மிஸ்சௌரியில் பிறந்தார். அவருடைய அப்பா-அம்மா ஏற்கனவே யெகோவாவின் சாட்சிகளாக இருந்தார்கள். அவர்கள் வாழ்ந்த இடம், அதிகமாக ஊழியம் செய்யப்படாத பகுதியாக இருந்தது. அதனால், நிறைய இடங்களிலிருந்து வித்தியாசமான சகோதரர்கள் அங்கே பிரசங்கிப்பதற்காக வந்தார்கள். அவர்களோடு பழகும் வாய்ப்பு சகோதரர் ஜெட்லிக்கு கிடைத்தது. அந்தச் சகோதரர்கள் மத்தியில் இருந்த ஒற்றுமையும் அவர்கள் காட்டிய அன்பும் சகோதரர் ஜெட்லியின் மனதைத் தொட்டது. அக்டோபர் 15, 1983-ல் அவர் ஞானஸ்நானம் எடுத்தார். அப்போது அவர் டீனேஜ் வயதில் இருந்தார். ஊழியம் செய்வது அவருக்கு ரொம்ப பிடித்திருந்தது. அதனால், பள்ளிப் படிப்பை முடித்ததும், செப்டம்பர் 1989-ல், ஒழுங்கான பயனியராகச் சேவை செய்ய ஆரம்பித்தார்.
சகோதரர் ஜெட்லி இளம் வயதில் இருந்தபோது, அவருடைய அப்பா-அம்மா அவரையும் அவருடைய தங்கச்சியையும் அவ்வப்போது பெத்தேலுக்குக் கூட்டிக்கொண்டு போவார்கள். அப்படிப் போனதால், பெத்தேலில் சேவை செய்ய வேண்டும் என்ற குறிக்கோளை அவர்கள் வைத்தார்கள். அந்தக் குறிக்கோளை அவர்கள் இரண்டு பேருமே அடைந்தார்கள்! செப்டம்பர் 1990-ல், வால்கில் பெத்தேலில் சகோதரர் ஜெட்லி சேவை செய்ய ஆரம்பித்தார். ஆரம்பத்தில் அவர் சுத்தம் செய்யும் இலாகாவிலும், பிறகு மருத்துவ சேவை இலாகாவிலும் சேவை செய்தார்.
அந்தச் சமயத்தில், பக்கத்தில் இருந்த ஸ்பானிஷ் மொழி பேசும் சபைகளில் நல்ல வளர்ச்சி இருந்தது. அங்கே சேவை செய்ய நிறைய சகோதரர்களும் தேவைப்பட்டார்கள். அதனால், சகோதரர் ஜெட்லி அங்கிருந்த ஒரு சபைக்குப் போனார்; ஸ்பானிஷ் மொழியையும் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். கொஞ்ச நாட்களுக்குப் பிறகு, அதே வட்டாரத்தில் பயனியராக இருந்த டமாரிஸ் என்ற சகோதரியைச் சந்தித்தார். பிறகு, அவர்கள் கல்யாணம் செய்துகொண்டார்கள். இரண்டு பேரும் சேர்ந்து பெத்தேலில் சேவை செய்ய ஆரம்பித்தார்கள்.
சாட்சிகளாக இருந்த தங்கள் அப்பா-அம்மாவைக் கவனித்துக்கொள்வதற்காக, 2005-ல் அவர்கள் பெத்தேலை விட்டுப் போனார்கள். அந்தச் சமயத்தில், அவர்கள் ஒழுங்கான பயனியர்களாகச் சேவை செய்தார்கள். சகோதரர் ஜெட்லி அவ்வப்போது பயனியர் ஊழியப் பள்ளியில் போதகராக இருந்தார். அதோடு, மருத்துவமனை தொடர்பு ஆலோசனை குழுவிலும், மண்டல கட்டுமானக் குழுவிலும் சேவை செய்தார்.
2013-ல், சகோதரர் ஜெட்லியையும் அவருடைய மனைவியையும் பெத்தேலுக்குக் கூப்பிட்டார்கள். வார்விக் கட்டுமான பிராஜக்ட்டில் சேவை செய்வதற்காக அழைக்கப்பட்டார்கள். அப்போது முதல், பேட்டர்சன் பெத்தேலிலும் வால்கில் பெத்தேலிலும் சேவை செய்திருக்கிறார்கள். சகோதரர் ஜெட்லி, உள்ளூர் வடிவமைப்பு/கட்டுமான இலாகாவிலும், மருத்துவமனை தகவல் சேவைகளிலும் வேலை செய்திருக்கிறார். மார்ச் 2023-ல், ஊழியக் குழுவுக்கு உதவியாளராக நியமிக்கப்பட்டார். அவருக்குக் கிடைத்த நியமிப்புகளைப் பற்றி யோசிக்கும்போது இப்படிச் சொல்கிறார்: “புது நியமிப்புகள் கிடைக்கும்போது நமக்குச் சில சமயங்களில் பயமாக இருக்கலாம். ஆனால் அப்போதுதான் நாம் யெகோவாவை நம்பியிருக்க வேண்டும். ஏனென்றால், தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு நம்மை எப்படி வேண்டுமானாலும் அவரால் மாற்ற முடியும்.”
சகோதரர் ஜேக்கப் ரம்ஃப் மற்றும் அவருடைய மனைவி, இங்கா
சகோதரர் ரம்ஃப் அமெரிக்காவில் இருக்கிற கலிபோர்னியாவில் பிறந்தார். அவர் சின்ன வயதில் இருந்தபோது, அவருடைய அம்மா செயலற்ற பிரஸ்தாபியாக இருந்தார். ஆனாலும் சகோதரர் ரம்ஃபுக்கு பைபிளைப் பற்றிச் சொல்லிக்கொடுப்பதற்கு முயற்சி எடுத்தார். அதோடு, ஒவ்வொரு வருஷமும் ரம்ஃப் தன்னுடைய பாட்டியைப் பார்ப்பதற்குப் போனார்; அவர் யெகோவாவுக்கு உண்மையாக சேவை செய்துகொண்டிருந்தார். சத்தியத்தின் மேல் ஆர்வம் வருவதற்கு பாட்டி உதவினார். அதனால், 13 வயதில் தனக்கு பைபிள் படிப்பை நடத்த சொல்லிக் கேட்டார். செப்டம்பர் 27, 1992-ல், டீனேஜ் வயதில் ஞானஸ்நானம் எடுத்தார். சந்தோஷமான விஷயம் என்னவென்றால், அவருடைய அம்மா மறுபடியும் யெகோவாவுக்குச் சேவை செய்ய ஆரம்பித்தார். குடும்பத்தில் இருந்த மற்றவர்களும் நல்ல முன்னேற்றம் செய்தார்கள், ஞானஸ்நானம் எடுத்தார்கள்.
பயனியர்கள் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார்கள் என்பதை இளம் வயதில் சகோதரர் ரம்ஃப் பார்த்தார். அதனால், பள்ளிப் படிப்பை முடித்தவுடனே, செப்டம்பர் 1995-ல் பயனியர் சேவையை ஆரம்பித்தார். 2000-ல், தேவை அதிகம் இருந்த ஈக்வடாருக்குக் குடிமாறிப் போனார். அங்கே, கனடாவிலிருந்து வந்திருந்த இங்கா என்ற பயனியர் சகோதரியைச் சந்தித்தார். கொஞ்சக் காலத்தில், அவர்கள் கல்யாணம் செய்துகொண்டார்கள். பிறகு, ஈக்வடாரில் இருந்த ஒரு ஊரில் தங்கள் கல்யாண வாழ்க்கையை ஆரம்பித்தார்கள். அங்கே கொஞ்சம் பிரஸ்தாபிகள்தான் இருந்தார்கள். ஆனால், இப்போது அங்கே ஒரு பெரிய சபை இருக்கிறது.
கொஞ்சக் காலத்தில், சகோதரர் ரம்ஃபும் அவருடைய மனைவியும் விசேஷ பயனியர்களாக நியமிக்கப்பட்டார்கள். பிறகு, வட்டார சேவை செய்தார்கள். 2011-ல், 132-வது கிலியட் பள்ளியில் கலந்துகொள்ள அவர்களுக்கு அழைப்பு வந்தது. பட்டம் பெற்ற பிறகு உலகின் வெவ்வேறு பகுதிகளில், பெத்தேல் சேவை, மிஷனரி சேவை, வட்டார சேவை போன்ற வித்தியாசமான சேவைகளைச் செய்தார்கள். சகோதரர் ரம்ஃப், ராஜ்ய நற்செய்தியாளர்களுக்கான பள்ளியில் போதகராகவும் இருந்திருக்கிறார்.
கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக, சகோதரர் ரம்ஃபும் அவருடைய மனைவியும் அமெரிக்காவுக்கே திரும்ப வந்தார்கள். அப்போது, வால்கில் பெத்தேலில் சேவை செய்ய அழைக்கப்பட்டார்கள். அங்கே, சகோதரர் ரம்ஃபுக்கு ஊழிய இலாகாவில் பயிற்சி கிடைத்தது. கொஞ்சக் காலத்தில், அவர்கள் இரண்டு பேரும் ஈக்வடார் கிளை அலுவலகத்துக்கு மறுபடியும் நியமிக்கப்பட்டார்கள். அங்கே, சகோதரர் ரம்ஃப் கிளை அலுவலகக் குழுவில் சேவை செய்தார். 2023-ல், அவர்கள் வார்விக்குக்கு நியமிக்கப்பட்டார்கள். ஜனவரி 2024-ல், சகோதரர் ரம்ஃப் ஊழியக் குழுவுக்கு உதவியாளராக நியமிக்கப்பட்டார். தன்னுடைய பல வருஷ சேவையைப் பற்றி யோசிக்கும்போது அவர் இப்படிச் சொல்கிறார்: “ஒரு நியமிப்பை விசேஷமானதாக ஆக்குவது நாம் சேவை செய்யும் இடம் கிடையாது, நம்மோடு சேவை செய்யும் சகோதர சகோதரிகள்தான்.”
இந்தச் சகோதரர்களுடைய கடின உழைப்புக்கு நாம் ரொம்ப நன்றியோடு இருக்கிறோம். ‘இவர்களைப் போன்ற சகோதரர்களை உயர்வாக மதிக்கிறோம்.’—பிலி. 2:29.