கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
மருத்துவ அவசரநிலைக்காக இப்போதே தயாராகுங்கள்!
ஏன் தயாராக வேண்டும்? எப்போது வேண்டுமானாலும் திடீரென்று நமக்கு உடம்பு சரியில்லாமல் போகலாம், ஆஸ்பத்திரியில் சேர வேண்டியிருக்கலாம். அந்தச் சூழ்நிலையில் உங்களுக்குச் சிறந்த சிகிச்சை கிடைக்க வேண்டுமா? அப்படியென்றால், அவசரநிலை ஏற்படுவதற்கு முன்பே அது சம்பந்தப்பட்ட ஏற்பாடுகளை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்வது முக்கியம். அப்போதுதான், உயிருக்கும் சரி, இரத்தம் சம்பந்தமாக யெகோவா கொடுத்திருக்கும் சட்டத்துக்கும் சரி, மதிப்பு காட்ட முடியும்.—அப் 15:28, 29.
தயாராவதற்கு நீங்கள் என்ன செய்யலாம்?
நன்றாக ஜெபம் செய்துவிட்டு மருத்துவ முன்கோரிக்கை (DPA) அட்டையைக் கவனமாக நிரப்புங்கள்.a ஞானஸ்நானம் எடுத்த பிரஸ்தாபிகள் பிரசுர ஊழியரிடமிருந்து DPA அட்டையை வாங்கிக்கொள்ளலாம். அவர்களுக்குச் சின்னப் பிள்ளைகள் இருந்தால் அவர்களுக்கான அடையாள அட்டையையும் (ic) வாங்கிக்கொள்ளலாம்
நீங்கள் கர்ப்பமாக இருந்தால், கர்ப்பிணி தாய்மார்களுக்கான தகவல்கள் (S-401) என்ற டாக்யூமென்டின் ஒரு பிரதியை மூப்பர்களிடமிருந்து வாங்கிக்கொள்ளுங்கள். கர்ப்பமாக இருக்கும் காலப்பகுதியிலும் பிரசவத்தின்போதும் ஏற்படும் மருத்துவப் பிரச்சினைகள் சம்பந்தமாக நல்ல தீர்மானங்கள் எடுக்க இந்த டாக்யூமென்ட் உங்களுக்கு உதவும்
உங்களுக்கு அறுவை சிகிச்சை தேவைப்பட்டால் அல்லது நீங்கள் ஆஸ்பத்திரியில் தங்கி மருத்துவ சிகிச்சை பெற வேண்டியிருந்தால், அதை முன்கூட்டியே உங்கள் சபை மூப்பர்களிடம் சொல்லுங்கள்.
மூப்பர்கள் எப்படி உதவலாம்? DPA அட்டையைப் பூர்த்தி செய்ய அவர்கள் உதவி செய்யலாம். ஆனால், மருத்துவ சிகிச்சை சம்பந்தப்பட்ட முடிவுகளை அவர்கள் உங்களுக்காக எடுக்க மாட்டார்கள். அல்லது, நீங்கள் முடிவெடுக்க வேண்டிய விஷயங்களைப் பற்றி தங்களுடைய சொந்தக் கருத்துகளைச் சொல்ல மாட்டார்கள். (ரோ 14:12; கலா 6:5) உங்களுக்குத் தேவைப்படும் மருத்துவ சிகிச்சையில் இரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்பிருந்தால் உங்கள் மூப்பர்களிடம் சொல்லுங்கள். உங்கள் சார்பாக அவர்கள் “மருத்துவமனை தொடர்பு ஆலோசனைக் குழுவை” (HLC) உடனடியாகத் தொடர்புகொள்வார்கள்.
HLC எப்படி உதவும்? HLC சகோதரர்கள் இரத்தம் சம்பந்தப்பட்ட நம் மத நம்பிக்கையைப் பற்றி மருத்துவத் துறையிலும் சட்டத் துறையிலும் இருக்கிறவர்களுக்கு நன்றாகப் புரிய வைக்க விசேஷப் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். இரத்தம் ஏற்றுவதற்குப் பதிலாக மாற்று மருத்துவ சிகிச்சைகளைக் கொடுப்பது பற்றி உங்கள் டாக்டரிடம் அவர்கள் பேசுவார்கள். தேவைப்பட்டால், ஒத்துழைப்பு கொடுக்கும் டாக்டர்களைக் கண்டுபிடிக்க அவர்கள் உதவி செய்வார்கள்.
இரத்தம் சம்பந்தப்பட்ட சிகிச்சைமுறைகள்—முடிவு எடுப்பது எப்படி? என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்:
வீடியோவில் பார்த்ததுபோல், இரத்தம் சம்பந்தமான ஒரு அவசரநிலைக்காக இப்போதே நீங்கள் எப்படித் தயாராகலாம்?
a இரத்தம் சம்பந்தப்பட்ட சிகிச்சைமுறைகள் விஷயத்தில் சரியான முடிவுகள் எடுக்க இன்றும் என்றும் சந்தோஷம்! புத்தகத்தின் 39-வது பாடம் உங்களுக்கு உதவி செய்யும்.