படிப்புக் கட்டுரை 27
நாம் ஏன் யெகோவாவுக்குப் பயப்பட வேண்டும்?
“தனக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு யெகோவா நெருங்கிய நண்பராக இருக்கிறார்.”—சங். 25:14.
பாட்டு 8 யெகோவா நம் தஞ்சம்!
இந்தக் கட்டுரையில்...a
1-2. சங்கீதம் 25:14 சொல்வதுபோல், யெகோவாவுடைய நெருங்கிய நண்பராக இருக்க நாம் ஆசைப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் ஒருவருடைய நெருங்கிய நண்பராக இருக்க ஆசைப்பட்டால் என்னென்ன குணங்களைக் காட்ட வேண்டுமென்று நினைக்கிறீர்கள்? நல்ல நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் அன்பாகவும் ஆதரவாகவும் இருக்க வேண்டுமென்று நீங்கள் ஒருவேளை சொல்லலாம். ஆனால், ஒருவரைப் பார்த்து ஒருவர் பயப்படுவது முக்கியம் என்று நீங்கள் கண்டிப்பாக நினைக்க மாட்டீர்கள். இருந்தாலும், இந்தக் கட்டுரையின் முக்கிய வசனம் சொல்வதுபோல், யெகோவாவுடைய நெருங்கிய நண்பராக இருக்க ஆசைப்படுகிறவர்கள் அவருக்கு ‘பயந்து நடக்க’ வேண்டும்.—சங்கீதம் 25:14-ஐ வாசியுங்கள்.
2 நாம் எவ்வளவு காலம் யெகோவாவுக்குச் சேவை செய்துவந்திருந்தாலும் சரி, நாம் எல்லாருமே தொடர்ந்து அவருக்குப் பயந்து நடக்க வேண்டும். ஆனால், யெகோவாவுக்குப் பயந்து நடப்பது என்றால் என்ன? அவருக்குப் பயந்து நடக்க நாம் எப்படிக் கற்றுக்கொள்ளலாம்? யெகோவாவுக்குப் பயந்து நடப்பதைப் பற்றி அரண்மனை அதிகாரி ஒபதியா, தலைமைக் குரு யோய்தா, யோவாஸ் ராஜா ஆகியோரிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
யெகோவாவுக்குப் பயந்து நடப்பது என்றால் என்ன?
3. என்னென்ன காரணங்களுக்காக நமக்குப் பயம் வரலாம், அப்படிப்பட்ட பயம் ஏன் நல்லது? விளக்குங்கள்.
3 நமக்கு ஏதோவொரு ஆபத்து வந்துவிடலாம் என்று நினைத்தால் நமக்குப் பயம் வரும். இப்படிப்பட்ட பயம் நல்லதுதான். ஏனென்றால், சரியான முடிவுகளை எடுக்க அது நமக்கு உதவி செய்யும். உதாரணத்துக்கு, கீழே விழுந்துவிடுவோம் என்று நாம் பயப்பட்டால் ஒரு மலை உச்சியின் ஓரத்தில் நடந்துபோக மாட்டோம். நமக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று பயந்தால், ஆபத்தான சூழ்நிலையைவிட்டு ஓடிப்போய்விடுவோம். அதேபோல், ஒருவரோடு இருக்கும் நட்பைக் கெடுத்துவிடுவோமோ என்ற பயம் நமக்கு இருந்தால், அவருடைய மனதைக் காயப்படுத்தும் விதத்தில் எதையும் சொல்லவோ செய்யவோ மாட்டோம்.
4. யெகோவாமேல் எப்படிப்பட்ட பயம் நமக்கு இருக்க வேண்டுமென்று சாத்தான் நினைக்கிறான்?
4 நாம் யெகோவாவைப் பார்த்துப் பயந்து நடுங்க வேண்டுமென்று சாத்தான் நினைக்கிறான். யெகோவா கோபக்கார கடவுள்... பழிவாங்கும் கடவுள்... அவரைப் பிரியப்படுத்தவே முடியாது... என்றெல்லாம் நம்மை நினைக்க வைக்க அவன் முயற்சி செய்கிறான். இதையெல்லாம்தான் எலிப்பாசும் சொன்னான். (யோபு 4:18, 19) நாம் யெகோவாவுக்குச் சேவை செய்வதையே விட்டுவிடும் அளவுக்கு அவரைப் பார்த்துப் பயந்து நடுங்க வேண்டுமென்று சாத்தான் நினைக்கிறான். அவனுடைய வலையில் விழாமல் இருப்பதற்கு, கடவுள்மேல் ஒரு நல்ல விதமான பயத்தை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
5. யெகோவாவுக்குப் பயந்து நடப்பது என்றால் என்ன?
5 ஒருவருக்குக் கடவுள்மேல் நல்ல விதமான பயம் இருந்தால் அவர் கடவுளை நேசிப்பார். கடவுளோடு இருக்கும் நட்பைக் கெடுக்கும் விதத்தில் எதையுமே செய்ய மாட்டார். இயேசுவுக்கு அப்படிப்பட்ட “பயபக்தி” இருந்தது. (எபி. 5:7) அவர் யெகோவாவைப் பார்த்துப் பயந்து நடுங்கவில்லை. (ஏசா. 11:2, 3) அதற்குப் பதிலாக, யெகோவாவை உயிருக்கு உயிராக நேசித்தார், அவருக்குக் கீழ்ப்படிய ஆசைப்பட்டார். (யோவா. 14:21, 31) இயேசுவைப் போலவே நாமும் யெகோவாமேல் பயபக்தியையும் மதிப்பு மரியாதையையும் காட்டுகிறோம். ஏனென்றால், யெகோவா அன்பும் ஞானமும் நீதியும் வல்லமையும் உள்ள கடவுள். அவர் நம்மை ரொம்ப நேசிப்பதால் நாம் நடந்துகொள்ளும் விதம் அவருடைய மனதைப் பாதிக்கும் என்று நமக்குத் தெரியும். அவர் சொல்வதுபோல் நடந்தால் அவருடைய மனதை நாம் சந்தோஷப்படுத்துவோம், அப்படி நடக்காவிட்டால் அவருடைய மனதை வேதனைப்படுத்திவிடுவோம்.—சங். 78:41; நீதி. 27:11.
கடவுளுக்குப் பயந்து நடக்க நாம் எப்படிக் கற்றுக்கொள்ளலாம்?
6. கடவுள்பயத்தை வளர்த்துக்கொள்வதற்கான ஒரு வழி என்ன? (சங்கீதம் 34:11)
6 நாம் பிறக்கும்போதே கடவுள்பயத்தோடு பிறப்பதில்லை. அதனால், அந்தக் குணத்தை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். (சங்கீதம் 34:11-ஐ வாசியுங்கள்.) அதைச் செய்வதற்கு ஒரு வழி, படைப்புகளைக் கவனிப்பதுதான். ‘படைப்புகளில்’ யெகோவாவின் ஞானமும், வல்லமையும், நம்மேல் அவர் வைத்திருக்கும் அளவுகடந்த அன்பும் தெளிவாகத் தெரிகிறது. (ரோ. 1:20) அதையெல்லாம் பார்க்கப் பார்க்க, அவர்மேல் நமக்கு இருக்கும் மதிப்பு மரியாதையும் அன்பும் ரொம்ப அதிகமாகும். ஏட்ரியன் என்ற சகோதரி இப்படிச் சொல்கிறார்: “யெகோவா எப்படி எல்லாவற்றையும் ஞானமாகப் படைத்திருக்கிறார் என்பதைப் பார்க்கப் பார்க்க எனக்கு ரொம்பப் பிரமிப்பாக இருக்கிறது. எனக்கு எது நல்லது என்று இவ்வளவு ஞானமுள்ள கடவுளுக்கு எப்படித் தெரியாமல் இருக்கும்!” இதை அவர் அடிக்கடி யோசித்துப் பார்த்தார். அதனால், “எனக்கு உயிர் கொடுத்த யெகோவாவோடு இருக்கும் நட்பைக் கெடுக்கும் விதத்தில் நான் எதையுமே செய்ய மாட்டேன்” என்ற முடிவுக்கு வந்தார். யெகோவாவின் படைப்புகளில் ஏதாவது ஒன்றைப் பற்றி யோசித்துப் பார்க்க இந்த வாரம் உங்களால் நேரம் செலவு செய்ய முடியுமா? அப்படிச் செய்தால், யெகோவாமேல் உங்களுக்கு இருக்கும் மதிப்பு மரியாதையும் அன்பும் ரொம்ப அதிகமாகும்.—சங். 111:2, 3.
7. ஜெபம் செய்வது யெகோவாமேல் பயத்தை வளர்த்துக்கொள்ள நமக்கு எப்படி உதவி செய்யும்?
7 கடவுள்பயத்தை வளர்த்துக்கொள்வதற்கான இன்னொரு வழி, தவறாமல் ஜெபம் செய்வதுதான். நாம் ஜெபம் செய்யச் செய்ய, யெகோவா நமக்கு இன்னும் நிஜமானவராகத் தெரிவார். ஒரு சோதனையைச் சகித்துக்கொள்ள அவரிடம் பலம் கேட்கும் ஒவ்வொரு தடவையும், அவருக்கு எவ்வளவு சக்தி இருக்கிறது என்பது நம் ஞாபகத்துக்கு வரும். அவருடைய மகனையே நமக்குக் கொடுத்ததற்காக அவருக்கு நன்றி சொல்லும்போது, அவர் நம்மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பது நம் ஞாபகத்துக்கு வரும். ஒரு பிரச்சினையைச் சமாளிக்க யெகோவாவிடம் நாம் உதவி கேட்கும்போது, அவருக்கு எவ்வளவு ஞானம் இருக்கிறது என்பது நம் ஞாபகத்துக்கு வரும். இதுபோல் ஜெபம் செய்யச் செய்ய, யெகோவாமேல் நமக்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும் அதிகமாகும். அதுமட்டுமல்ல, யெகோவாவோடு இருக்கும் நட்பைக் கெடுக்கும் விதத்தில் எதையுமே செய்யக் கூடாது என்பதில் நாம் இன்னும் தீர்மானமாக இருப்போம்.
8. கடவுள்பயத்தைத் தொடர்ந்து வளர்த்துக்கொள்ள நாம் என்ன செய்யலாம்?
8 கடவுள்பயத்தைத் தொடர்ந்து வளர்த்துக்கொள்ள பைபிளைப் படிப்பதும் ரொம்ப உதவியாக இருக்கும். அப்படிப் படிக்கும்போது, அதில் இருக்கும் நல்ல உதாரணங்களிலிருந்தும் சரி, கெட்ட உதாரணங்களிலிருந்தும் சரி, நாம் பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். யெகோவாவுக்கு உண்மையாகச் சேவை செய்த இரண்டு பேரைப் பற்றி நாம் இப்போது பார்க்கலாம். அவர்களில் ஒருவர், ஆகாபின் அரண்மனை அதிகாரி ஒபதியா. இன்னொருவர், தலைமைக் குரு யோய்தா. ஆரம்பத்தில் யெகோவாவுக்கு உண்மையாகச் சேவை செய்துவிட்டு, அதன் பிறகு அவரைவிட்டு விலகிப்போன யூதாவின் ராஜா யோவாசைப் பற்றியும் இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
கடவுளுக்குப் பயந்து நடந்த ஒபதியாவைப் போலவே தைரியமாக இருங்கள்
9. கடவுள்மேல் இருந்த பயபக்தி ஒபதியாவுக்கு எப்படி உதவியாக இருந்தது? (1 ராஜாக்கள் 18:3, 12)
9 “யெகோவாமீது ஒபதியா அதிக பயபக்தி வைத்திருந்தார்”—ஒபதியாவைb பைபிள் இப்படித்தான் அறிமுகப்படுத்துகிறது. (1 ராஜாக்கள் 18:3, 12-ஐ வாசியுங்கள்.) அப்படிப்பட்ட பயபக்தி ஒபதியாவுக்கு எப்படி உதவியாக இருந்தது? அந்தப் பயபக்தி இருந்ததால்தான் அவர் நேர்மையாகவும் நம்பகமாகவும் நடந்துகொண்டார். அதனால்தான், அரண்மனையைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை ராஜா அவருக்குக் கொடுத்தார். (நெகேமியா 7:2-ஐ ஒப்பிடுங்கள்.) ஒபதியாவுக்குக் கடவுள்பயம் இருந்ததால் அவர் ரொம்பத் தைரியமாகவும் நடந்துகொண்டார். அப்படிப்பட்ட தைரியம் கண்டிப்பாக அவருக்குத் தேவைப்பட்டிருக்கும். ஏனென்றால், பொல்லாத ராஜா ஆகாபின் ஆட்சியில் அவர் வாழ்ந்துகொண்டிருந்தார். ஆகாப் “அவருக்கு முன்பிருந்த ராஜாக்கள் எல்லாரையும்விட படுமோசமானவராக இருந்தார்.” (1 ரா. 16:30) அதோடு, பாகாலை வணங்கிவந்த ஆகாபின் மனைவி யேசபேல் யெகோவாவை அடியோடு வெறுத்தாள். அதனால், பத்துக் கோத்திர ராஜ்யத்திலிருந்து உண்மை வணக்கத்தைத் துடைத்தழிக்க வேண்டும் என்பதில் அவள் குறியாக இருந்தாள். யெகோவாவின் தீர்க்கதரிசிகள் நிறைய பேரைக் கொலையும் செய்தாள். (1 ரா. 18:4) இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, ரொம்பக் கஷ்டமான ஒரு காலப்பகுதியில்தான் ஒபதியா யெகோவாவை வணங்கிவந்திருக்கிறார் என்பது தெரிகிறது.
10. ஒபதியா எப்படி ரொம்பத் தைரியமாக நடந்துகொண்டார்?
10 ஒபதியா எப்படி ரொம்பத் தைரியமாக நடந்துகொண்டார்? கடவுளுடைய தீர்க்கதரிசிகளைத் தீர்த்துக்கட்டுவதற்காக அவர்களை யேசபேல் வலைவீசித் தேடிக்கொண்டிருந்தாள். அப்போது ஒபதியா, அந்தத் தீர்க்கதரிசிகளில் 100 பேரைக் கூட்டிக்கொண்டு போய், அவர்களை ‘ஐம்பது ஐம்பது பேராகக் குகைகளில் ஒளித்து வைத்து அவர்களுக்கு ரொட்டியும் தண்ணீரும் தந்து’ காப்பாற்றினார். (1 ரா. 18:13, 14) யேசபேலுக்கு மட்டும் இது தெரிந்திருந்தால் தைரியசாலியான ஒபதியாவின் கதை அன்றே முடிந்திருக்கும். ஒபதியாவுக்குக் கண்டிப்பாகப் பயமாகத்தான் இருந்திருக்கும். சாக வேண்டுமென்று அவர் நிச்சயம் ஆசைப்பட்டிருக்க மாட்டார். அவரும் ஒரு சாதாரண மனுஷன்தானே! அப்படியிருந்தும் ஒபதியா, யெகோவாவையும் அவருக்குச் சேவை செய்தவர்களையும் தன்னுடைய உயிரைவிட அதிகமாக நேசித்தார்.
நம் வேலை தடை செய்யப்பட்டிருந்தாலும், ஒரு சகோதரர் மற்ற சாட்சிகளுக்குத் தைரியமாக பைபிள் பிரசுரங்களைக் கொண்டுபோய்க் கொடுக்கிறார் (பாரா 11)c
11. இன்று யெகோவாவின் ஊழியர்கள் எப்படி ஒபதியாவைப் போலவே நடந்துகொள்கிறார்கள்? (படத்தையும் பாருங்கள்.)
11 இன்று யெகோவாவின் ஊழியர்களில் நிறைய பேர், நம் வேலை தடை செய்யப்பட்டிருக்கும் நாடுகளில் வாழ்கிறார்கள். அரசாங்க அதிகாரிகளுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையை அவர்கள் கொடுக்கிறார்கள். ஆனால் ஒபதியாவைப் போலவே, யெகோவாவுக்குக் காட்ட வேண்டிய முழு பக்தியை எல்லா சமயத்திலும் காட்டுகிறார்கள். (மத். 22:21) மனுஷர்களுக்குக் கீழ்ப்படிவதைவிட கடவுளுக்குக் கீழ்ப்படிவதன் மூலம், இந்த அருமையான சகோதர சகோதரிகள் கடவுள்பயத்தைக் காட்டுகிறார்கள். (அப். 5:29) முக்கியமாக, நல்ல செய்தியைப் பிரசங்கிப்பதன் மூலமாகவும் ரகசியமாக ஒன்றுகூடி வருவதன் மூலமாகவும் அதைச் செய்கிறார்கள். (மத். 10:16, 28) மற்ற சாட்சிகளுக்குத் தேவைப்படும் ஆன்மீக உணவை எப்படியாவது அவர்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்க அவர்கள் பாடுபடுகிறார்கள். ஆப்பிரிக்காவில் வாழ்கிற ஹென்றி என்ற சகோதரரின் உதாரணத்தைப் பார்க்கலாம். அவர் வாழும் பகுதியில் நம் வேலை கொஞ்சக் காலத்துக்குத் தடை செய்யப்பட்டிருந்தது. அந்தச் சமயத்தில், சகோதர சகோதரிகளுக்கு பைபிள் பிரசுரங்களைக் கொண்டுபோய்க் கொடுக்க ஹென்றி முன்வந்தார். அதைப் பற்றி அவர் இப்படி எழுதினார்: “நான் இயல்பாகவே கூச்ச சுபாவம் உள்ளவன். நான் அவ்வளவு தைரியமாக நடந்திருக்கிறேன் என்றால் அதற்கு முக்கியமான காரணம் யெகோவாமேல் நான் வைத்திருந்த மதிப்பும் மரியாதையும்தான். அதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.” நீங்களும் ஹென்றியைப் போலவே தைரியமாக நடந்துகொள்வீர்களா? கடவுள்பயத்தை வளர்த்துக்கொண்டால் கண்டிப்பாக உங்களாலும் அவரைப் போலவே தைரியமாக நடந்துகொள்ள முடியும்.
கடவுளுக்குப் பயந்து நடந்த யோய்தாவைப் போலவே உண்மையோடு நடந்துகொள்ளுங்கள்
12. தலைமைக் குரு யோய்தாவும் அவருடைய மனைவியும் எப்படி யெகோவாவுக்கு உண்மையோடு நடந்துகொண்டார்கள்?
12 தலைமைக் குரு யோய்தாவுக்குக் கடவுள்பயம் இருந்தது. அதனால்தான், அவர் யெகோவாவுக்கு உண்மையாக நடந்துகொண்டார், யெகோவாவை வணங்க மற்றவர்களுக்கும் உதவி செய்தார். இது எவ்வளவு உண்மை என்பது, யேசபேலின் மகள் அத்தாலியாள் யூதாவில் தன்னைத்தானே ராணியாக்கிக்கொண்ட சமயத்தில் தெளிவாகத் தெரிந்தது. அத்தாலியாளைப் பார்த்து மக்கள் எல்லாரும் பயந்து நடுங்கினார்கள். ஏனென்றால், அவள் கொஞ்சம்கூட ஈவிரக்கம் இல்லாமல் பதவி வெறிபிடித்து அலைந்துகொண்டிருந்தாள். தன்னுடைய சொந்த பேரன்கள் என்றுகூடப் பார்க்காமல், ராஜ வம்சத்தைச் சேர்ந்த எல்லா வாரிசுகளையும் தீர்த்துக்கட்டும் அளவுக்குப் போய்விட்டாள்! (2 நா. 22:10, 11) அந்த வாரிசுகளில் யோவாஸ் மட்டும் உயிர்தப்பினார். ஏனென்றால், குழந்தையாக இருந்த யோவாசை யோய்தாவின் மனைவி யோசேபியாத் யாருக்கும் தெரியாமல் தூக்கிக்கொண்டு வந்துவிட்டாள். அவளும் யோய்தாவும் அந்தக் குழந்தையை மறைத்து வைத்து, பத்திரமாகப் பார்த்துக்கொண்டார்கள். இந்த விதத்தில், தாவீதின் ராஜ வம்சம் அழியாதபடி பார்த்துக்கொண்டார்கள். யோய்தா, அத்தாலியாளை நினைத்துப் பயந்து நடுங்காமல் யெகோவாவுக்கு உண்மையோடு நடந்துகொண்டார்.—நீதி. 29:25.
13. யோவாசுக்கு ஏழு வயதாக இருந்தபோது, யெகோவாவுக்கு உண்மையாக இருந்ததை யோய்தா எப்படி மறுபடியும் நிரூபித்துக் காட்டினார்?
13 யோவாசுக்கு ஏழு வயதாக இருந்தபோது, யெகோவாவுக்கு உண்மையாக இருந்ததை யோய்தா மறுபடியும் நிரூபித்துக் காட்டினார். அவர் ஒரு திட்டம் போட்டார். அந்தத் திட்டம் நிறைவேறினால், தாவீதின் சிம்மாசனத்தில் உட்காரும் உரிமையுள்ள யோவாஸ் ராஜாவாகிவிடுவார். ஆனால் அந்தத் திட்டம் நிறைவேறாவிட்டால், யோய்தாவின் கதையே முடிந்துவிடும். நல்லவேளையாக, யெகோவாவின் ஆசீர்வாதத்தோடு அவருடைய திட்டம் பலித்தது. தலைவர்கள் மற்றும் லேவியர்களின் உதவியோடு அவர் யோவாசை ராஜாவாக்கினார், அத்தாலியாளையும் ஒழித்துக்கட்டினார். (2 நா. 23:1-5, 11, 12, 15; 24:1) அதன் பிறகு, “யெகோவாவுக்கும் ராஜாவுக்கும் மக்களுக்கும் இடையே யோய்தா ஓர் ஒப்பந்தம் செய்தார். அவர்கள் என்றென்றும் யெகோவாவின் மக்களாக இருக்க வேண்டும் என்பதற்காக இப்படிச் செய்தார்.” (2 ரா. 11:17) அதுமட்டுமல்ல, “எந்த விதத்திலாவது தீட்டுப்பட்ட ஆட்கள் உள்ளே நுழைந்துவிடக் கூடாது என்பதற்காக யெகோவாவின் ஆலயக் கதவுகளுக்குப் பக்கத்தில் வாயிற்காவலர்களை நிறுத்தினார்.”—2 நா. 23:19.
14. யோய்தா யெகோவாவுக்கு மதிப்புக் காட்டியதால் என்னென்ன விதங்களில் அவருக்கு யெகோவா மதிப்புக் காட்டினார்?
14 “என்னை மதிக்கிறவர்களை நான் மதிப்பேன்” என்று யெகோவா ஏற்கெனவே சொல்லியிருந்தார். (1 சா. 2:30) அதன்படியே, அவர் யோய்தாவுக்கு மதிப்புக் காட்டினார். உதாரணத்துக்கு, நமக்கு அறிவுரை கொடுப்பதற்காக, யோய்தா செய்த நல்ல விஷயங்களைப் பற்றியெல்லாம் அவர் பைபிளில் பதிவு செய்தார். (ரோ. 15:4) அதுமட்டுமல்ல, யோய்தா ‘இஸ்ரவேல் மக்களுக்கும் உண்மைக் கடவுளுக்கும் அவருடைய ஆலயத்துக்கும் நிறைய நல்லது செய்திருந்ததால், “தாவீதின் நகரத்தில்,” ராஜாக்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அடக்கம் செய்யப்படும்’ பெரிய கவுரவத்தை யெகோவா அவருக்குக் கொடுத்தார்.—2 நா. 24:15, 16.
தலைமைக் குரு யோய்தாவைப் போலவே நமக்கும் கடவுள்பயம் இருந்தால், மற்ற சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்யத் தயாராக இருப்போம் (பாரா 15)d
15. யோய்தாவைப் பற்றிய பதிவிலிருந்து நாம் என்னென்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்? (படத்தையும் பாருங்கள்.)
15 யோய்தாவைப் பற்றிய பதிவு, கடவுள்பயத்தை வளர்த்துக்கொள்ள நம் எல்லாருக்குமே உதவி செய்யும். கிறிஸ்தவக் கண்காணிகள் எப்படி யோய்தாவைப் போலவே நடந்துகொள்ளலாம்? விழிப்பாக இருந்து, கடவுளுடைய மந்தையைப் பாதுகாப்பதன் மூலம்தான். (அப். 20:28) வயதானவர்கள் யோய்தாவிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்? அவர்கள் யெகோவாவுக்குப் பயந்து நடக்கும்போதும்... அவருக்கு உண்மையாக இருக்கும்போதும்... யெகோவா அவர்களை ஒதுக்கி வைக்காமல் தன் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகப் பயன்படுத்துவார் என்பதைக் கற்றுக்கொள்ளலாம். இளைஞர்கள் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்? யெகோவா எப்படி யோய்தாவை நடத்தினார் என்பதைக் கவனித்து, யெகோவாவைப் போலவே அவர்களும் வயதானவர்களை மதிப்பு மரியாதையோடும் கண்ணியத்தோடும் நடத்தலாம். அதுவும், ரொம்பக் காலமாக யெகோவாவுக்கு உண்மையோடு சேவை செய்துவருகிறவர்களுக்கு அவர்கள் நிறைய மரியாதை காட்டலாம். (நீதி. 16:31) கடைசியாக, யோய்தாவுக்கு உதவி செய்த தலைவர்களிடமிருந்தும் லேவியர்களிடமிருந்தும் நாம் எல்லாருமே பாடம் கற்றுக்கொள்ளலாம். நம்மை ‘வழிநடத்துகிறவர்களுக்கு’ கீழ்ப்படிவதன் மூலமாக நம்முடைய முழு ஆதரவையும் அவர்களுக்குக் காட்டலாம்.—எபி. 13:17.
யோவாஸ் ராஜாவைப் போல் நடந்துகொள்ளாதீர்கள்!
16. யோவாஸ் ராஜா எப்படி யெகோவாவுக்கு உண்மையில்லாமல் நடந்துகொண்டார்?
16 யோவாஸ் ராஜாவுக்கு யோய்தா ஒரு நல்ல முன்மாதிரியாக இருந்தார். (2 ரா. 12:2) அதனால், யோவாஸ் ராஜா இளவயதில் யெகோவாவுக்குப் பிரியமாக நடக்க ஆசைப்பட்டார். ஆனால் யோய்தா இறந்த பிறகு, விசுவாசதுரோகிகளாக இருந்த பிரபுக்களின் பேச்சைக் கேட்டு நடக்க ஆரம்பித்துவிட்டார். அதனால் என்ன நடந்தது? அவரும் அவருடைய மக்களும் “பூஜைக் கம்பங்களையும் சிலைகளையும் வணங்க ஆரம்பித்தார்கள்.” (2 நா. 24:4, 17, 18) அதைப் பார்த்து யெகோவா ரொம்ப வேதனைப்பட்டார். “அவர்கள் தன்னிடம் திரும்பிவருவதற்காக யெகோவா தன்னுடைய தீர்க்கதரிசிகளை மீண்டும் மீண்டும் அனுப்பினார். . . . ஆனால், மக்கள் அதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை.” சொல்லப்போனால், யோய்தாவின் மகன் சகரியாவின் பேச்சைக்கூட அவர்கள் கேட்கவில்லை. சகரியா யெகோவாவின் தீர்க்கதரிசியாகவும் ஆலய குருவாகவும் மட்டுமல்ல, யோவாசின் அத்தை பையனாகவும் இருந்தார். அந்தக் குடும்பத்துக்கு யோவாஸ் ரொம்பக் கடன்பட்டிருந்தார். ஏனென்றால், அவருடைய உயிரையே அவர்கள் காப்பாற்றியிருந்தார்கள். ஆனாலும், கொஞ்சம்கூட நன்றி இல்லாமல் அவர் சகரியாவைக் கொலை செய்துவிட்டார்.—2 நா. 22:11; 24:19-22.
17. யோவாசுக்கு என்ன கதி ஏற்பட்டது?
17 யோவாஸ் யெகோவாவுக்குப் பயந்து நடக்காததால் அவருடைய வாழ்க்கையே நாசமாகிவிட்டது! “என்னை அவமதிக்கிறவர்கள் அவமதிக்கப்படுவார்கள்” என்று யெகோவா ஏற்கெனவே சொல்லியிருந்தார். (1 சா. 2:30) யோவாசின் விஷயத்தில் அது அப்படியே நடந்தது. சீரியர்கள் கொஞ்சம் வீரர்களோடு படையெடுத்து வந்து, யோவாசின் “மிகப் பெரிய படையை” தோற்கடித்தார்கள். யோவாஸ் ‘பயங்கரமாகக் காயமடைந்தார்.’ சீரியர்கள் போன பிறகு, சகரியாவைக் கொலை செய்ததற்காக யோவாசை அவருடைய ஊழியர்களே படுகொலை செய்துவிட்டார்கள். அவர் ஒரு படுபாவி என்று மக்கள் நினைத்ததால், ‘ராஜாக்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில்கூட அவரை அடக்கம் செய்யவில்லை.’—2 நா. 24:23-25; மத்தேயு 23:35-க்கான ஆராய்ச்சிக் குறிப்பில் “பரகியாவின் மகனும்” என்ற தலைப்பைப் பாருங்கள்.
18. நாம் யோவாசைப் போல் நடந்துகொள்ளக் கூடாதென்றால், எரேமியா 17:7, 8 சொல்வதுபோல் என்ன செய்ய வேண்டும்?
18 யோவாசின் உதாரணத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? சரியாக வேர்பிடிக்காமல் ஒரு கம்பத்தின் உதவியோடு நிற்கிற ஒரு மரம்போல் அவர் இருந்தார். யோய்தாதான் அந்தக் கம்பம். அந்தக் கம்பம் இல்லாமல்போன பிறகு, விசுவாசதுரோகம் என்ற காற்று அடித்ததுமே அந்த மரம் ஒரேயடியாகச் சாய்ந்துவிட்டது. இதிலிருந்து நாம் ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொள்கிறோம். நம் குடும்பத்தில் இருப்பவர்களும், சபையில் இருக்கும் மற்றவர்களும் கடவுளுக்குப் பயந்து நடக்கிறார்கள் என்பதற்காக மட்டும் நாம் அப்படி நடக்கக் கூடாது. நாம் விசுவாசத்தில் உறுதியாக இருக்க வேண்டுமென்றால், தனிப்பட்ட விதமாகக் கடவுள்மேல் பயத்தையும் பக்தியையும் தொடர்ந்து வளர்த்துக்கொண்டே இருக்க வேண்டும். அதற்காகத் தவறாமல் பைபிளைப் படிக்க வேண்டும்... படித்ததை ஆழமாக யோசிக்க வேண்டும்... விடாமல் ஜெபம் செய்யவும் வேண்டும்.—எரேமியா 17:7, 8-ஐ வாசியுங்கள்; கொலோ. 2:6, 7.
19. யெகோவா நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார்?
19 நம்மால் செய்ய முடியாததையெல்லாம் யெகோவா நம்மிடம் எதிர்பார்ப்பது கிடையாது. அவர் நம்மிடம் எதிர்பார்ப்பதெல்லாம் இதுதான்: “உண்மைக் கடவுளுக்குப் பயந்து நடந்து, அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். இதைவிட முக்கியமான கடமை மனுஷனுக்கு வேறு இல்லை.” (பிர. 12:13) நாம் யெகோவாவுக்குப் பயந்து நடக்கும்போது, எப்படிப்பட்ட சோதனைகள் வந்தாலும் சரி, ஒபதியாவைப் போலவும் யோய்தாவைப் போலவும் யெகோவாவுக்கு உண்மையாக இருக்க முடியும். அதுமட்டுமல்ல, யெகோவாவோடு நமக்கு இருக்கும் நட்பை யாராலும்... எதுவாலும்... முறிக்க முடியாது!
பாட்டு 3 எம் பலமும் நம்பிக்கையும் நீரே!
a பைபிளில் “பயம்” என்ற வார்த்தைக்கு நிறைய அர்த்தம் இருக்கிறது. ஒவ்வொரு சூழமைவையும் பொறுத்து, திகில், மதிப்பு மரியாதை, பயபக்தி, பிரமிப்பு என அதன் அர்த்தம் மாறும். ஆனால் இந்தக் கட்டுரையில், தைரியமாகவும் உண்மையாகவும் யெகோவாவுக்குச் சேவை செய்ய உதவும் பயத்தைப் பற்றிப் பார்க்கப்போகிறோம். அந்தப் பயத்தை எப்படி வளர்த்துக்கொள்ளலாம் என்றும் தெரிந்துகொள்வோம்.
b இந்த ஒபதியா, இன்னும் நிறைய வருஷங்களுக்குப் பிறகு வாழ்ந்த தீர்க்கதரிசியான ஒபதியா கிடையாது. தீர்க்கதரிசியான ஒபதியாதான் தன்னுடைய பெயரிலேயே ஒரு பைபிள் புத்தகத்தை எழுதினார்.
c படவிளக்கம்: நம் வேலை தடை செய்யப்பட்டிருக்கும் ஒரு நாட்டில் ஒரு சகோதரர் இன்னொரு சகோதரருக்கும் சகோதரிக்கும் பைபிள் பிரசுரங்களைக் கொடுப்பது நடித்துக் காட்டப்பட்டுள்ளது.
d படவிளக்கம்: டெலிபோன் ஊழியத்தை எப்படிச் செய்வதென்று வயதான ஒரு சகோதரியிடமிருந்து ஒரு இளம் சகோதரி கற்றுக்கொள்கிறாள்; வயதான ஒரு சகோதரர் தைரியமாகப் பொது ஊழியம் செய்து, மற்றவர்களுக்கு ஒரு நல்ல முன்மாதிரியாக இருக்கிறார்; அனுபவமுள்ள ஒரு சகோதரர், ராஜ்ய மன்றத்தைப் பராமரிப்பதற்கு மற்ற சகோதரர்களுக்குப் பயிற்சி கொடுக்கிறார்.