படிப்புக் கட்டுரை 18
பாட்டு 1 யெகோவாவின் குணங்கள்
“முழு உலகத்துக்கே நீதிபதியாக” இருப்பவரை நம்புங்கள்!
“இந்த முழு உலகத்துக்கே நீதிபதியாக இருப்பவர் நியாயமாக நடக்காமல் இருப்பாரா?”—ஆதி. 18:25.
என்ன கற்றுக்கொள்வோம்?
அநீதிமான்களை உயிர்த்தெழுப்பும்போது யெகோவா எப்படி இரக்கத்தோடும் நியாயத்தோடும் நடந்துகொள்கிறார் என்பதை நன்றாகப் புரிந்துகொள்ள இந்தக் கட்டுரை உதவும்.
1. யெகோவா ஆபிரகாமுக்கு என்ன ஆறுதலான விஷயத்தை சொல்லிக்கொடுத்தார்?
ஆபிரகாமுடைய வாழ்க்கையில் அது ஒரு மறக்க முடியாத நாள். சோதோம் கொமோரா நகரங்களை அழிக்கப் போவதாக கடவுள் ஒரு தேவதூதர் மூலம் ஆபிரகாமிடம் சொன்னார். இதைக் கேட்டபோது அவருக்கு ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது. அதனால், “பொல்லாதவர்களோடு சேர்த்து நீதிமான்களையும் நீங்கள் அழித்துவிடுவீர்களா? . . . இந்த முழு உலகத்துக்கே நீதிபதியாக இருப்பவர் நியாயமாக நடக்காமல் இருப்பாரா?” என்று அவர் கேட்டார்.யெகோவா தன்னுடைய நண்பருக்கு ஒரு முக்கியமான பாடத்தை அப்போது சொல்லிக்கொடுத்தார். அதைத் தெரிந்துகொள்வது நமக்கும் ரொம்ப ஆறுதலாக இருக்கும். அந்தப் பாடம் இதுதான்: நீதிமான்களை கடவுள் கண்டிப்பாக அழிக்க மாட்டார்.—ஆதி. 18:23-33.
2. ஒரு நீதிபதியாக, யெகோவா நியாயமாகவும் இரக்கமாகவும் நடந்துகொள்வார் என்று நாம் ஏன் உறுதியாக நம்பலாம்?
2 ஒரு நீதிபதியாக, யெகோவா நியாயமாகவும் இரக்கமாகவும் நடந்துகொள்வார் என்று நாம் உறுதியாக நம்பலாம். ஏனென்றால், யெகோவா ‘இதயத்தைப் பார்க்கிற’ கடவுள். (1 சா. 16:7) சொல்லப்போனால், “ஒவ்வொரு மனிதனுடைய இதயத்தில்” இருப்பதும் அவருக்கு நன்றாகத் தெரியும். (1 ரா. 8:39; 1 நா. 28:9) இது எவ்வளவு பெரிய விஷயம்! யெகோவா ஏன் சில முடிவுகளை எடுக்கிறார் என்று நம்மால் முழுமையாகப் புரிந்துகொள்ளவே முடியாது. அதனால்தான், அப்போஸ்தலன் பவுல் யெகோவாவைப் பற்றி சொல்லும்போது, “அவருடைய நீதித்தீர்ப்புகள் ஆராய முடியாதவை!” என்று சொன்னார்.—ரோ. 11:33.
3-4. என்ன கேள்விகள் நம்முடைய மனதுக்கு வரலாம்? இந்தக் கட்டுரையில் எதைப் பற்றி பார்க்கப் போகிறோம்? (யோவான் 5:28, 29)
3 ஆனாலும், ஆபிரகாமுக்கு வந்த மாதிரி நமக்கும் சில கேள்விகள் வரலாம். நாம் இப்படி யோசிக்கலாம்: “யெகோவா அழித்த சில ஆட்கள், உதாரணத்துக்கு சோதோம் கொமோராவில் வாழ்ந்தவர்களைப் போன்ற ஆட்கள், மறுபடியும் வாழ்வதற்கு வாய்ப்பு இருக்கிறதா? ‘உயிரோடு எழுப்பப்படுகிற’ ‘அநீதிமான்களில்’ அவர்களில் யாராவது இருப்பார்களா?”—அப். 24:15.
4 இப்போது, உயிர்த்தெழுதலைப் பற்றி என்ன தெரிந்து வைத்திருக்கிறோம் என்று பார்க்கலாம். ‘வாழ்வு பெறும்படி உயிர்த்தெழுப்பப்படுகிறவர்களை’ பற்றியும் ‘நியாயத்தீர்ப்பு பெறும்படி உயிர்த்தெழுப்பப்படுகிறவர்களை’ பற்றியும் நாம் புரிந்து வைத்திருக்கிற விஷயத்தில் சமீபத்தில் ஒரு மாற்றம் வந்தது.a (யோவான் 5:28, 29-ஐ வாசியுங்கள்.) இந்த மாற்றத்தால், வேறு சில விஷயங்களைப் புரிந்துகொண்ட விதத்திலும் மாற்றம் வந்திருக்கிறது. அதைப் பற்றித்தான் இந்தக் கட்டுரையிலும் அடுத்த கட்டுரையிலும் பார்ப்போம். முதலில், யெகோவாவுடைய நீதியான நியாயத்தீர்ப்புகளைப் பற்றி நமக்கு என்ன தெரியும், என்ன தெரியாது என்று பார்க்கலாம். முதலில், நமக்கு என்ன தெரியாது என்று பார்க்கலாம்.
நமக்கு என்ன தெரியாது
5. சோதோம் கொமோராவில் அழிக்கப்பட்டவர்களைப் பற்றி முன்பு நம்முடைய பிரசுரங்களில் என்ன சொல்லியிருந்தது?
5 அநீதிமான்கள் என்று யெகோவா நியாயந்தீர்க்கிறவர்களுக்கு என்ன நடக்கும் என்று நம்முடைய பிரசுரங்களில் விளக்கப்பட்டிருந்தது. சோதோம் கொமோராவில் வாழ்ந்தவர்களைப் போன்ற ஆட்களுக்கு எதிர்காலத்தில் உயிர்த்தெழுதல் இல்லை என்று அதில் சொல்லியிருந்தது. ஆனால், இதைப் பற்றி ஜெபம் செய்து ஆழமாக ஆராய்ந்த பிறகு, அப்படி நாம் உறுதியாக சொல்ல முடியாது என்று புரிந்துகொள்ள முடிகிறது. ஏன்?
6. அநீதிமான்களை யெகோவா நியாயந்தீர்த்ததைப் பற்றிய சில உதாரணங்கள் என்ன, பைபிள் நமக்கு எதைப் பற்றி சொல்வதில்லை?
6 அநீதிமான்களை யெகோவா நியாயந்தீர்த்ததைப் பற்றி பைபிளில் நிறைய பதிவுகள் இருக்கின்றன. உதாரணத்துக்கு, பெருவெள்ளம் வந்த சமயத்தில் நோவாவையும் அவருடைய குடும்பத்தையும் தவிர மற்ற எல்லாரையும் யெகோவா அழித்தார். வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்தில் வாழ்ந்த ஏழு தேசத்து மக்களை இஸ்ரவேலர்களைப் பயன்படுத்தி யெகோவா அழித்தார். ஒரே ராத்திரியில் 1,85,000 அசீரிய படைவீரர்களை ஒரு தேவதூதரைப் பயன்படுத்தி அவர் அழித்தார். (ஆதி. 7:23; உபா. 7:1-3; ஏசா. 37:36, 37) இந்த சந்தர்ப்பங்களில் கொல்லப்பட்ட ஒவ்வொருவரையும், யெகோவா நிரந்தரமாக அழிக்க முடிவு செய்திருப்பாரா? அதாவது, அவர்களுக்கு உயிர்த்தெழுதல் நம்பிக்கையே இல்லாத மாதிரி செய்திருப்பாரா? யெகோவா அப்படி ஒரு முடிவு செய்திருப்பார் என்று சொல்வதற்கு போதுமான தகவலை பைபிள் கொடுப்பதில்லை. எப்படி சொல்கிறோம்?
7. பெருவெள்ளம் வந்த சமயத்திலும் கானான் தேசம் அழிக்கப்பட்ட சமயத்திலும் இறந்துபோனவர்களைப் பற்றி நமக்கு என்னவெல்லாம் தெரியாது? (படத்தைப் பாருங்கள்.)
7 இவர்கள் ஒவ்வொருவரையும் யெகோவா எப்படி நியாயந்தீர்த்தார் என்று நமக்குத் தெரியாது; கொல்லப்பட்டவர்களுக்கு யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கும் மனம் திருந்துவதற்கும் வாய்ப்பு கிடைத்திருக்குமா என்றும் நமக்குத் தெரியாது. பெருவெள்ளம் வந்த சமயத்தில், நோவா ‘நீதியைப் பிரசங்கித்தார்’ என்று பைபிள் சொல்வது உண்மைதான். (2 பே. 2:5) ஆனால், அந்தப் பிரமாண்டமான பேழையைக் கட்டிக்கொண்டிருந்த அதேசமயத்தில் பூமியில் இருந்த ஒவ்வொருவரிடமும் பிரசங்கிக்க அவர் முயற்சி எடுத்தார் என்று பைபிள் சொல்வதில்லை. அதேமாதிரி, கானான் தேசத்தில் வாழ்ந்த எல்லா கெட்டவர்களுக்கும் யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொண்டு மனம் திருந்த வாய்ப்பு கிடைத்திருக்குமா என்று நமக்குத் தெரியாது.
நோவாவும் அவருடைய குடும்பமும் ஒரு பிரமாண்டமான பேழையைக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். பெருவெள்ளம் வருவதற்கு முன்பு, பூமியிலிருந்த எல்லாருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட விதத்தில் அவர்கள் பிரசங்கித்தார்களா என்று நமக்குத் தெரியாது (பாரா 7)
8. சோதோம் கொமோராவில் இருந்த மக்களைப் பற்றி நமக்கு என்னவெல்லாம் தெரியாது?
8 சோதோம் கொமோராவில் இருந்த மக்களைப் பற்றி என்ன சொல்லலாம்? லோத்து என்ற நீதிமான் அவர்கள் நடுவில் வாழ்ந்தார். ஆனால், அந்த நகரத்தில் இருந்த எல்லாருக்கும் லோத்து பிரசங்கித்திருப்பாரா? நமக்குத் தெரியாது. அவர்கள் எல்லாருமே ரொம்ப மோசமானவர்கள்தான். ஆனால் அவர்களுக்கு எது சரி எது தவறு என்று தெரிந்துகொள்ள வாய்ப்பு கிடைத்திருக்குமா? லோத்துவின் விருந்தாளிகளைக் கற்பழிக்க முயற்சி செய்த கும்பலைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று யோசியுங்கள். அந்தக் கும்பலில், “சிறுவன்முதல் கிழவன்வரை” இருந்ததாக அது சொல்கிறது. (ஆதி. 19:4; 2 பே. 2:7) இவர்கள் யாரையுமே உயிர்த்தெழுப்பக் கூடாது என்று இரக்கமுள்ள நம் கடவுள் முடிவு செய்திருப்பாரா? நம்மால் உறுதியாக சொல்ல முடியாது. அந்த நகரத்தில் பத்து நீதிமான்கள்கூட இல்லை என்று யெகோவா ஆபிரகாமிடம் சொன்னார். (ஆதி. 18:32) அப்படிப் பார்த்தால், அவர்கள் அநீதிமான்கள்தான், அவர்களை அழிக்க வேண்டும் என்று யெகோவா முடிவு செய்ததும் நியாயம்தான். ஆனால், ‘அநீதிமான்கள் உயிரோடு எழுப்பப்படும்போது’ அவர்கள் யாருமே உயிரோடு வரமாட்டார்கள் என்று நம்மால் உறுதியாக சொல்ல முடியுமா? அப்படி சொல்ல முடியாது!
9. சாலொமோனைப் பற்றி நமக்கு என்ன தெரியாது?
9 நீதிமான்களாக இருந்து பிற்பாடு அநீதிமான்களாக ஆனவர்களைப் பற்றியும் பைபிள் சொல்கிறது. அதற்கு சாலொமோன் ராஜா ஒரு உதாரணம். அவருக்கு கடவுளைப் பற்றியும் அவரை எப்படி வணங்க வேண்டும் என்பதைப் பற்றியும் நன்றாக சொல்லித்தரப்பட்டது. யெகோவாவும் அவரை நன்றாக ஆசீர்வதித்திருந்தார். ஆனாலும், அவர் பொய்க் கடவுள்களை வணங்க ஆரம்பித்தார். அவர் அவ்வளவு பாவங்களை செய்ததால், யெகோவா அவர்மேல் ரொம்ப கோபப்பட்டார். சாலொமோன் செய்த பாவங்களுக்கான விளைவுகளை முழு இஸ்ரவேல் தேசமும் பல நூற்றாண்டுகளாக அனுபவித்தது. சாலொமோன் “தன் முன்னோர்களோடு” “அடக்கம் செய்யப்பட்டார்,” அதாவது, தாவீதைப் போன்ற உண்மையுள்ள ஆட்களோடு அடக்கம் செய்யப்பட்டார் என்பது உண்மைதான்! (1 ரா. 11:5-9, 43, அடிக்குறிப்பு; 2 ரா. 23:13) ஆனால், அவர் அடக்கம் செய்யப்பட்ட விதம், அவர் கண்டிப்பாக உயிர்த்தெழுப்பப்படுவார் என்ற உத்தரவாதத்தைக் கொடுக்கிறதா? பைபிள் அதைப் பற்றி எதுவும் சொல்வதில்லை. “இறந்தவன் தன்னுடைய பாவத்திலிருந்து முழுமையாக விடுதலை செய்யப்பட்டிருக்கிறான்” என்று சொல்லப்பட்டிருக்கிறதே என்று சிலர் யோசிக்கலாம். (ரோ. 6:7) அது உண்மைதான்! ஆனால், இறந்துபோன எல்லாருமே உயிரோடு வருவார்கள் என்று அர்த்தம் கிடையாது. ஒருவர் இறந்துவிட்டதால், மறுபடியும் உயிரோடு வாழ்வதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது என்றும் அர்த்தம் கிடையாது. உயிர்த்தெழுதல் என்பது நம் கடவுளிடமிருந்து கிடைக்கிற பரிசு. தன்னை என்றென்றும் வணங்க யாருக்கெல்லாம் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறாரோ, அவர்களுக்கு அந்தப் பரிசை அவர் கொடுக்கிறார். (யோபு 14:13, 14; யோவா. 6:44) சாலொமோனுக்கு அந்தப் பரிசு கிடைக்குமா? இந்தக் கேள்விக்கான பதில் யெகோவாவுக்குத்தான் தெரியும், நமக்குத் தெரியாது. ஆனால் நமக்கு ஒரு விஷயம் நன்றாகத் தெரியும்: யெகோவா எப்போதுமே சரியானதைத்தான் செய்வார்!
நமக்கு என்ன தெரியும்
10. மனிதர்களை அழிப்பதைப் பற்றி யெகோவா என்ன நினைக்கிறார்? (எசேக்கியேல் 33:11) (படத்தையும் பாருங்கள்.)
10 எசேக்கியேல் 33:11-ஐ வாசியுங்கள். மனிதர்களை நியாயந்தீர்ப்பதைப் பற்றி, தான் எப்படி உணருகிறார் என்று யெகோவா வெளிப்படையாக சொல்கிறார். அதைப் பற்றி எசேக்கியேல் தீர்க்கதரிசி என்ன எழுதினாரோ, அதேமாதிரி ஒரு விஷயத்தைத்தான் அப்போஸ்தலன் பேதுருவும் சொன்னார். ‘ஒருவரும் அழிந்துபோகக் கூடாது என்று அவர் விரும்புகிறார்’ என்று சொன்னார். (2 பேதுரு 3:9) இந்த வார்த்தைகள் நமக்கு எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது, இல்லையா! நல்ல காரணம் இல்லாமல் யெகோவா யாரையும் நிரந்தரமாக அழிக்க மாட்டார் என்று நமக்குத் தெரியும். அவர் ரொம்ப இரக்கமுள்ளவர். அதனால், எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் இரக்கத்தைக் காட்டுகிறார்.
அநீதிமான்கள் உயிர்த்தெழுந்து வரும்போது, யெகோவாவைப் பற்றி கற்றுக்கொள்வதற்கு வித்தியாசப்பட்ட மக்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் (பாரா 10)
11. யாரெல்லாம் உயிர்த்தெழுப்பப்பட மாட்டார்கள், நமக்கு எப்படி அது தெரியும்?
11 யாரெல்லாம் உயிர்த்தெழுந்து வர மாட்டார்கள் என்பதைப் பற்றி நமக்கு என்ன தெரியும்? அப்படிப்பட்டவர்களில் சிலரைப் பற்றித்தான் பைபிள் சொல்கிறது.b யூதாஸ் இஸ்காரியோத்து உயிரோடு எழுப்பப்பட மாட்டான் என்று இயேசு சொன்னார். (மாற். 14:21; யோவா. 17:12)c ஏனென்றால், யூதாஸ் தெரிந்தே, வேண்டுமென்றே யெகோவாவுக்கும் இயேசுவுக்கும் எதிராக செயல்பட்டான். (மாற். 3:29)d அதேமாதிரி, தன்னை எதிர்த்த மதத் தலைவர்களில் சிலரும் உயிரோடு எழுப்பப்பட மாட்டார்கள் என்று இயேசு சொன்னார். (மத். 23:33; யோவான் 19:11 மற்றும் “தி மேன்” என்ற ஆராய்ச்சிக் குறிப்பை ஆங்கில ஆராய்ச்சி பைபிளில் பாருங்கள்.) மனம் திருந்தாத விசுவாசதுரோகிகளும் உயிர்த்தெழுப்பப்பட மாட்டார்கள் என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னார்.—எபி. 6:4-8; 10:29.
12. யெகோவாவுடைய இரக்கத்தைப் பற்றி நமக்கு என்ன தெரியும்? சில உதாரணங்களை சொல்லுங்கள்.
12 அதேசமயத்தில், யெகோவாவின் இரக்கத்தைப் பற்றி நமக்கு என்ன தெரியும்? யாரும் ‘அழிந்துபோவதை’ தான் விரும்புவதில்லை என்பதை அவர் எப்படிக் காட்டுகிறார்? பயங்கர மோசமான பாவங்களை செய்த சிலருக்கு அவர் எப்படி இரக்கம் காட்டினார் என்று யோசித்துப் பாருங்கள். தாவீது ராஜா, பாலியல் முறைகேடு, கொலை போன்ற படுமோசமான பாவங்களை செய்தார். ஆனாலும், அவர் மனம் திருந்தினார், அதனால் யெகோவா அவருக்கு இரக்கம் காட்டி அவரை மன்னித்தார். (2 சா. 12:1-13) மனாசே ராஜாவும் தன்னுடைய வாழ்நாளில் நிறைய மோசமான பாவங்களை செய்தார். இவ்வளவு மோசமான பாவங்களை செய்திருந்தாலும், அவர் மனம் திருந்தியதால் யெகோவா அவருக்கு இரக்கம் காட்டி அவரை மன்னித்தார். (2 நா. 33:9-16) இந்த உதாரணங்களிலிருந்து என்ன தெரிந்துகொள்கிறோம்? இரக்கம் காட்டுவதற்கு நியாயமான காரணம் இருக்கும்போதெல்லாம் யெகோவா அதைக் காட்டுகிறார். தாங்கள் செய்த படுமோசமான பாவங்களை உணர்ந்து மனம் திருந்திய, தாவீது மனாசே மாதிரியான ஆட்களை யெகோவா மறுபடியும் உயிரோடு கொண்டுவருவார்.
13. (அ) யெகோவா ஏன் நினிவே மக்களுக்கு இரக்கம் காட்டினார்? (ஆ) நினிவே மக்களைப் பற்றி இயேசு என்ன சொன்னார்?
13 நினிவே மக்களிடம் யெகோவா எப்படி இரக்கத்தோடு நடந்துகொண்டார் என்றும் நமக்குத் தெரியும். அவர்களுடைய அக்கிரமத்தை யெகோவா கவனித்தார். அதனால்தான், “அங்கிருக்கிற ஜனங்கள் செய்கிற அக்கிரமத்துக்கு அளவே இல்லாமல் போய்விட்டது” என்று அவர் யோனாவிடம் சொன்னார். ஆனால் அந்த மக்கள் மனம் திருந்தியபோது யெகோவா அவர்களை மன்னித்தார். அந்த சமயத்தில் யோனா இரக்கம் காட்டவில்லை. ஆனால் யெகோவா ரொம்ப இரக்கத்தோடு நடந்துகொண்டார். கோபமாக இருந்த யோனாவுக்கு, நினிவே மக்கள் ‘நல்லது கெட்டது தெரியாதவர்கள்’ என்று யெகோவா ஞாபகப்படுத்தினார். (யோனா 1:1, 2; 3:10; 4:9-11) பிறகு, இயேசுவும் இந்த உதாரணத்தைப் பயன்படுத்தி யெகோவா எவ்வளவு நியாயமுள்ளவர், இரக்கமுள்ளவர் என்பதை சொல்லிக்கொடுத்தார். மனம் திருந்திய நினிவே மக்கள் ‘நியாயத்தீர்ப்பின்போது . . . எழுந்துவருவார்கள்’ என்று அவர் சொன்னார்.—மத். 12:41.
14. நினிவே மக்கள் எந்த அர்த்தத்தில் “நியாயத்தீர்ப்பு பெறும்படி உயிர்த்தெழுப்பப்படுவார்கள்”?
14 நினிவே மக்கள் ‘நியாயத்தீர்ப்பின்போது எழுந்துவருவார்கள்’ என்பதன் அர்த்தம் என்ன? எதிர்காலத்தில் சிலர் “நியாயத்தீர்ப்பு பெறும்படி உயிர்த்தெழுப்பப்படுவார்கள்” என்று இயேசு சொன்னார். (யோவா. 5:29) தன்னுடைய ஆயிர வருஷ ஆட்சியை மனதில் வைத்துதான் இயேசு இதை சொன்னார். அந்த சமயத்தில், “நீதிமான்களும் அநீதிமான்களும்” உயிரோடு எழுப்பப்படுவார்கள். (அப். 24:15) அநீதிமான்கள், “நியாயத்தீர்ப்பு பெறும்படி உயிர்த்தெழுப்பப்படுவார்கள்.” அதாவது, உயிர்த்தெழுந்த பிறகு அவர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதையும், கற்றுக்கொள்கிற விஷயங்களை எப்படிக் கடைப்பிடிக்கிறார்கள் என்பதையும் யெகோவாவும் இயேசுவும் கவனிப்பார்கள்; அதை வைத்து அவர்களை நியாயந்தீர்ப்பார்கள். ஒருவேளை, நினிவேயை சேர்ந்த ஒருவர் உயிர்த்தெழுந்து வந்த பிறகு, யெகோவாவை வணங்க விரும்பவில்லை என்றால் அவரால் தொடர்ந்து உயிர் வாழ முடியாது. (ஏசா. 65:20) ஆனால், யெகோவாவை வணங்க ஆசைப்படுகிறவர்கள் இந்த பூமியில் என்றென்றும் வாழ்வார்கள்!—தானி. 12:2.
15. (அ) சோதோம் கொமோராவில் அழிக்கப்பட்டவர்களில் யாருமே உயிரோடு வரமாட்டார்கள் என்று நாம் ஏன் நினைக்கக் கூடாது? (ஆ) யூதா 7-ல் இருக்கும் வார்த்தைகளை நாம் எப்படிப் புரிந்துகொள்ளலாம்? (“யூதா எழுதியதற்கு என்ன அர்த்தம்?” என்ற பெட்டியைப் பாருங்கள்.)
15 சோதோம் கொமோராவில் இருந்த மக்களைப் பற்றி இயேசு என்ன சொன்னார்? தன்னுடைய போதனைகளை ஒதுக்கித்தள்ளிய மக்களுக்கு “நியாயத்தீர்ப்பு நாளில்” கிடைக்கப்போகிற தண்டனையைவிட, சோதோம் கொமோரா மக்களுக்குக் கிடைக்கப்போகிற தண்டனை குறைவாக இருக்கும் என்று அவர் சொன்னார். (மத். 10:14, 15; 11:23, 24; லூக். 10:12) அவர் சொன்னதன் அர்த்தம் என்ன? தன்னுடைய நாளில் இருந்த மக்கள் எவ்வளவு மோசமானவர்கள் என்பதைக் காட்டுவதற்காக இயேசு வெறுமனே மிகைப்படுத்திப் பேசியதாக நாம் நினைக்கலாம். ஆனால் உண்மையில், அவர் அப்படி பேசியதாகத் தெரியவில்லை. ஏனென்றால், நினிவே மக்கள் ‘நியாயத்தீர்ப்பின்போது எழுந்துவருவார்கள்’ என்று இயேசு சொன்னபோது அவர்கள் உண்மையிலேயே உயிர்த்தெழுப்பப்படுவார்கள் என்பதைத்தான் அர்த்தப்படுத்தினார். அதேமாதிரி, சோதோம் கொமோரா மக்களும் “நியாயத்தீர்ப்பு நாளில்” நியாயந்தீர்க்கப்படுவார்கள் என்று இயேசு சொன்னதிலிருந்து, அவர்களில் சிலர் மறுபடியும் உயிர்த்தெழுப்பப்படலாம் என்ற முடிவுக்கு நாம் வரலாம். சோதோம் கொமோரா மக்களைப் பற்றி பேசியபோது இயேசு சொன்ன ‘நியாயத்தீர்ப்பு நாளும்,’ நினிவே மக்களைப் பற்றி பேசியபோது அவர் சொன்ன ‘நியாயத்தீர்ப்பும்’ ஒன்றுதான். நினிவே மக்களைப் போல், சோதோம் கொமோராவில் இருந்த மக்களும் மோசமான விஷயங்களை செய்தார்கள். ஆனால், நினிவே மக்களுக்கு மனம் திருந்த வாய்ப்பு கிடைத்தது; சோதோம் கொமோரா மக்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதுமட்டுமல்ல, சிலர் “நியாயத்தீர்ப்பு பெறும்படி உயிர்த்தெழுப்பப்படுவார்கள்” என்று இயேசு சொன்னதை ஞாபகப்படுத்திப் பாருங்கள். அவர்களில் ‘கெட்டதைச் செய்துவந்தவர்களும்’ உயிரோடு வருவார்கள். (யோவா. 5:29) இதிலிருந்து என்ன தெரிகிறது? சோதோம் கொமோராவில் இருந்த சிலராவது ஒருவேளை உயிரோடு வரலாம்... மனம் திருந்த அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படலாம்... யெகோவாவைப் பற்றியும் இயேசுவைப் பற்றியும் அவர்களுக்கு சொல்லிக்கொடுக்க நமக்குக்கூட வாய்ப்பு கிடைக்கலாம்... என்றெல்லாம் தெரிகிறது!
16. ஒருவரை உயிர்த்தெழுப்ப வேண்டுமா வேண்டாமா என்பதை யெகோவா எதை வைத்து முடிவு செய்கிறார்? (எரேமியா 17:10)
16 எரேமியா 17:10-ஐ வாசியுங்கள். யெகோவாவைப் பற்றி நமக்கு என்ன தெரியும் என்பதை இந்த வசனம் அழகாக சொல்கிறது. யெகோவா எப்போதுமே “இதயத்தை ஆராய்ந்து” பார்க்கிறார், “அடிமனதின் யோசனைகளை பரிசோதித்து” பார்க்கிறார். எதிர்காலத்தில் உயிர்த்தெழுதல் நடக்கும்போதும் யெகோவா எப்போதும்போல் ‘அவரவர் வழிகளுக்கு தகுந்தபடி அவரவருக்குக் கூலி கொடுப்பார்.’ யெகோவா எப்போது உறுதியாக இருக்க வேண்டுமோ அப்போது உறுதியாக இருப்பார். அதேசமயத்தில், எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் இரக்கத்தைக் காட்டுவார். அதனால், நமக்கு உறுதியாகத் தெரிந்தால் தவிர, ஒரு நபர் உயிர்த்தெழுந்து வரமாட்டார் என்று நாமாகவே முடிவுசெய்துவிடக் கூடாது!
“முழு உலகத்துக்கே நீதிபதியாக இருப்பவர்” ‘நியாயமாக நடப்பார்’
17. இறந்துபோன மனிதர்களுக்கு எதிர்காலத்தில் என்ன ஆகும்?
17 “மரணம்” என்ற “எதிரி” கோடிக்கணக்கான மனிதர்களை வாரிக்கொண்டு போயிருக்கிறது! ஆதாம் ஏவாள் சாத்தானோடு சேர்ந்து யெகோவாவுக்கு எதிராக கலகம் செய்ய ஆரம்பித்ததிலிருந்து மனிதர்கள் மரணத்தை சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். (1 கொ. 15:26) இப்படி இறந்துபோனவர்களுக்கு என்ன நடக்கும்? இயேசுவின் சீஷர்களில் கொஞ்சம் பேர், அதாவது 1,44,000 பேர், பரலோகத்துக்கு உயிர்த்தெழுப்பப்படுவார்கள். அங்கே அவர்களுக்கு சாவே இல்லாத வாழ்க்கை கிடைக்கும். (வெளி. 14:1) யெகோவாவுக்கு உண்மையாக இருந்த மற்றவர்களைப் பற்றி என்ன சொல்லலாம்? ‘உயிரோடு எழுப்பப்படுகிற’ ‘நீதிமான்களில்’ இவர்களும் இருப்பார்கள். இயேசுவின் ஆயிர வருஷ ஆட்சியிலும் கடைசி சோதனையிலும் இவர்கள் உண்மையாக இருந்தால், பூமியில் என்றென்றும் வாழ்வார்கள். (தானி. 12:13; எபி. 12:1) ஆயிர வருஷ ஆட்சியில் யெகோவாவை வணங்காத, சொல்லப்போனால் ‘கெட்டதை செய்துவந்த’ “அநீதிமான்களும்” உயிரோடு வருவார்கள். தங்களுடைய வழியை மாற்றிக்கொண்டு யெகோவாவுக்கு உண்மையாக சேவை செய்ய அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். (லூக். 23:42, 43) ஆனாலும், சில மனிதர்கள் பொல்லாதவர்களாக இருந்திருக்கிறார்கள், யெகோவாவுக்கு எதிராக வேண்டுமென்றே கலகம் செய்திருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை உயிரோடு எழுப்ப வேண்டாம் என்று யெகோவா முடிவு செய்திருக்கிறார்.—லூக். 12:4, 5.
18-19. (அ) இறந்துபோனவர்களை யெகோவா சரியாகத்தான் நியாயந்தீர்ப்பார் என்று நாம் ஏன் உறுதியாக நம்பலாம்? (ஏசாயா 55:8, 9) (ஆ) அடுத்த கட்டுரையில் எதைப் பற்றி பார்க்கப் போகிறோம்?
18 மனிதர்களை நியாயந்தீர்க்கும்போது யெகோவா எப்படிப்பட்ட முடிவு எடுத்தாலும் சரி, அவர் எப்போதுமே சரியானதைத்தான் செய்வார் என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம். ஆபிரகாம் மாதிரியே நாமும் யெகோவாவை நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறோம். “இந்த முழு உலகத்துக்கே நீதிபதியாக இருக்கிற” யெகோவா, எந்தக் குறையும் இல்லாதவர், ஞானமுள்ளவர், இரக்கமுள்ளவர். தன்னுடைய மகனுக்கும் அவர் பயிற்சி கொடுத்திருக்கிறார்; மக்களை நியாயந்தீர்ப்பதற்கான அதிகாரத்தை அவருக்குக் கொடுத்திருக்கிறார். (யோவா. 5:22) அப்பாவாலும் மகனாலும் மனிதர்களுடைய இதயத்தில் என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். (மத். 9:4) அதனால் ஒவ்வொரு தனி நபரையும் நியாயந்தீர்க்கும்போது அவர்கள் இரண்டு பேரும் “நியாயமாக” நடப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!
19 யெகோவா எப்போதுமே சரியானதைத்தான் செய்வார் என்று நாம் உறுதியாக நம்பலாம். ஏனென்றால், சரியாக நியாயந்தீர்ப்பதற்கு யெகோவாவுக்குத்தான் தகுதி இருக்கிறது, நமக்கு இல்லை! (ஏசாயா 55:8, 9-ஐ வாசியுங்கள்.) மக்களை நியாயந்தீர்க்கிற பொறுப்பை யெகோவா கையிலும் இயேசு கையிலும் நாம் விட்டுவிடலாம். நம் ராஜா இயேசு, தன்னுடைய அப்பாவைப் போலவே ரொம்ப நியாயமானவர், இரக்கமுள்ளவர் என்று நமக்குத் தெரியும். (ஏசா. 11:3, 4) அப்படியென்றால், மிகுந்த உபத்திரவம் சமயத்தில் யெகோவாவும் இயேசுவும் மக்களை எப்படி நியாயந்தீர்ப்பார்கள்? அதைப் பற்றி நமக்கு என்ன தெரியாது? என்ன தெரியும்? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.
பாட்டு 57 எல்லாவித மக்களுக்கும் பிரசங்கிப்போம்!
a காவற்கோபுரம் செப்டம்பர் 2022-ல் பக்கங்கள் 14-19-ஐப் பாருங்கள்.
b ஆதாம், ஏவாள் மற்றும் காயீனைப் பற்றித் தெரிந்துகொள்ள காவற்கோபுரம் ஜனவரி 1, 2013, பக்கம் 12-ல் இருக்கும் அடிக்குறிப்பைப் பாருங்கள்.
c யோவான் 17:12-ல் பயன்படுத்தப்பட்டிருக்கும் ‘அழிவின் மகன்’ என்ற வார்த்தை, யூதாஸ் இறந்தபோது உயிர்த்தெழுதல் நம்பிக்கையே இல்லாமல் நிரந்தரமாக அழிக்கப்படுவான் என்பதைக் குறிக்கிறது.
d ஜூலை 15, 2007 காவற்கோபுரத்தில் பக்கம் 18-ஐப் பாருங்கள்.