கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
திருமணம்—வாழ்நாளெல்லாம் நீடிக்கும் ஒரு பந்தம்
வெற்றிகரமான திருமண வாழ்க்கை யெகோவாவுக்குப் புகழ் சேர்க்கும். கணவன்-மனைவி இரண்டு பேருக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கும். (மாற் 10:9) பைபிள் கொடுக்கிற ஆலோசனையை மனதில் வைத்து வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்தால்தான் உங்கள் திருமண பந்தம் என்றென்றும் நீடித்திருக்கும். அது சந்தோஷமாகவும் இருக்கும்.
நீங்கள் ஒருவரைக் காதலிப்பதாக இருந்தால், ‘இளமை மலரும் பருவத்தை . . . கடக்கும்வரை’ காத்திருங்கள். (1கொ 7:36) ஏனென்றால், அந்தச் சமயத்தில் பாலியல் உணர்ச்சிகள் அதிகமாக இருப்பதால், சரியாக யோசித்து முடிவெடுப்பது கஷ்டம். திருமணம் ஆவதற்கு முன்பு இருக்கும் காலப்பகுதியில் யெகோவாவோடு இருக்கும் நட்பைப் பலப்படுத்திக்கொள்ளுங்கள். நல்ல நல்ல கிறிஸ்தவ குணங்களை வளர்த்துக்கொள்ளுங்கள். உங்களுடைய திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருப்பதற்கு இவையெல்லாம் கைகொடுக்கும்.
ஒருவரை திருமணம் செய்ய முடிவெடுப்பதற்கு முன்பு அவருடைய ‘இதயத்தில் மறைந்திருக்கிற . . . குணங்களை’ பற்றித் தெரிந்துகொள்ள நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். (1பே 3:4) ஏதாவது ஒரு விஷயத்தில் அவரைப் பற்றிச் சரியாகப் புரிந்துகொள்வது உங்களுக்குக் கஷ்டமாக இருந்தால் அவரிடம் அதைப் பற்றி வெளிப்படையாகப் பேசுங்கள். திருமண உறவும் மற்ற உறவுகளைப் போன்றதுதான். அதனால், உங்கள் துணை உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசிப்பதற்குப் பதிலாக, உங்கள் துணைக்கு நீங்கள் என்ன செய்யலாம் என்று யோசியுங்கள். (பிலி 2:3, 4) திருமணத்துக்கு முன்பே பைபிள் கொடுக்கும் ஆலோசனைகளின்படி நீங்கள் நடந்தால், திருமணத்துக்குப் பிறகும் அப்படி நடப்பது உங்களுக்குச் சுலபமாக இருக்கும். உங்கள் திருமண வாழ்க்கையும் தேனாய் இனிக்கும்.
கல்யாணத்திற்கு தயாராகுதல்—பகுதி 3: “செலவைக் கணக்கு பார்” என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
ஆரம்பத்தில் ஷேனோடு பழகுவது அந்தச் சகோதரிக்கு எப்படி இருந்தது?
அவரோடு பழக பழக என்ன விஷயத்தை அந்தச் சகோதரி தெரிந்துகொண்டார்?
அந்தச் சகோதரிக்கு அவருடைய அப்பா-அம்மா எப்படி உதவி செய்தார்கள்? அதனால் அவர் என்ன ஞானமான தீர்மானத்தை எடுத்தார்?