படிக்க டிப்ஸ்
பைபிள் என்ற கண்ணாடியை நன்றாகப் பயன்படுத்துங்கள்
சீஷரான யாக்கோபு பைபிளை ஒரு கண்ணாடிக்கு ஒப்பிட்டார். அந்தக் கண்ணாடி, உள்ளுக்குள் நாம் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறோம் என்பதைக் காட்டும். (யாக். 1:22-25) அதை நாம் எப்படி நன்றாகப் பயன்படுத்தலாம்?
அவசர அவசரமாகப் பார்க்காதீர்கள். கண்ணாடியை அவசர அவசரமாகப் பார்த்துவிட்டு போனால், முகத்தில் ஏதாவது ஒட்டியிருந்தால் அதைக் கவனிக்காமல் போய்விடுவோம். அதேமாதிரி, நேரம் எடுத்து பைபிளைப் படிக்கவில்லை என்றால், நம் குணங்களில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டியிருந்தால் அதைக் கவனிக்காமல் போய்விடுவோம்.
மற்றவர்களை அல்ல, உங்களைப் பாருங்கள். கண்ணாடியைக் கொஞ்சம் திருப்பி வைத்தால் மற்றவர்களுடைய முகம் அதில் படலாம்; அவர்களுடைய குறைகள் தெரியலாம். அதேமாதிரி பைபிளைப் படிக்கும்போது மற்றவர்களுடைய குறைகளைப் பற்றி யோசிக்காமல் நம்மைப் பற்றி யோசிக்க வேண்டும்.
நியாயமாக இருங்கள். நம்மிடம் இருக்கும் குறைகளை மட்டுமே கண்ணாடியில் பார்த்துக்கொண்டிருந்தால் சோர்ந்துவிடுவோம். பைபிளைப் படிக்கும்போதும் அப்படித்தான்! யெகோவா நம்மிடம் எதிர்பார்ப்பதைவிட அதிகமாக எதிர்பார்க்கக் கூடாது.—யாக். 3:17.