உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w25 ஆகஸ்ட் பக். 2-7
  • சகித்திருக்க யெகோவா உதவுகிறார்​—எப்படி?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • சகித்திருக்க யெகோவா உதவுகிறார்​—எப்படி?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ஜெபம்
  • கடவுளுடைய வார்த்தை
  • சகோதர சகோதரிகள்
  • நம் எதிர்கால நம்பிக்கை
  • யெகோவா “உயிருள்ள கடவுள்” என்பதை மறந்துவிடாதீர்கள்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2024
  • அடக்கத்தைக் காட்டுங்கள்​—நமக்கு எல்லாம் தெரியாது!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
  • முடிவுவரை சகித்திருக்க உதவும் ஒரு கடிதம்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2024
  • ‘உள்ளம் உடைந்தவர்களை யெகோவா குணமாக்குகிறார்’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2024
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
w25 ஆகஸ்ட் பக். 2-7

படிப்புக் கட்டுரை 32

பாட்டு 38 அவர் உன்னைப் பலப்படுத்துவார்

சகித்திருக்க யெகோவா உதவுகிறார்—எப்படி?

“அளவற்ற கருணை நிறைந்த கடவுள் . . . உங்களை உறுதிப்படுத்துவார், உங்களைப் பலப்படுத்துவார், உங்களை உறுதியான அஸ்திவாரத்தின் மேல் நிற்க வைப்பார்.”—1 பே. 5:10.

என்ன கற்றுக்கொள்வோம்?

நாம் சகித்திருக்க யெகோவா என்னென்ன ஏற்பாடுகள் செய்திருக்கிறார் என்பதையும், அதிலிருந்து நன்மையடைய நாம் என்ன செய்யலாம் என்பதையும் கற்றுக்கொள்வோம்.

1. நமக்கு ஏன் சகிப்புத்தன்மை தேவை, யார் நமக்கு உதவி செய்வார்? (1 பேதுரு 5:10)

இந்தக் கஷ்டமான கடைசி நாட்களில், கடவுளுடைய மக்களாக நம் எல்லாருக்குமே சகிப்புத்தன்மை தேவைப்படுகிறது. நம்மில் சிலர் தீராத வியாதியால் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கலாம். அன்பானவர்களைப் பறிகொடுத்த துக்கத்தில் தவிக்கலாம். அல்லது, குடும்பத்தில் இருந்தோ அரசாங்க அதிகாரிகளிடம் இருந்தோ எதிர்ப்புகளைச் சந்தித்துக்கொண்டு இருக்கலாம். (மத். 10:18, 36, 37) என்ன மாதிரியான கஷ்டத்தை நீங்கள் சமாளித்துக்கொண்டு இருந்தாலும் சரி, ஒரு விஷயத்தில் நம்பிக்கையோடு இருக்கலாம்: சகித்திருப்பதற்கு யெகோவாவால் நிச்சயம் உங்களுக்கு உதவ முடியும்!—1 பேதுரு 5:10-ஐ வாசியுங்கள்.

2. நம்மால் எப்படிச் சகித்திருக்க முடிகிறது?

2 தடைகள், துன்புறுத்தல்கள், சோதனைகள் என எது வந்தாலும் தொடர்ந்து யெகோவாவுக்கு உண்மையாக இருப்பதும், ‘ஒருநாள் எல்லாமே சரியாகும்’ என்ற நம்பிக்கையோடு இருப்பதும்தான் சகிப்புத்தன்மை. நம்முடைய சொந்த சக்தியால் சகித்திருக்க முடியாது; ‘இயல்புக்கு மிஞ்சிய சக்தியை’ யெகோவா கொடுப்பதால்தான் நம்மால் சகித்திருக்க முடிகிறது. (2 கொ. 4:7) இந்தக் கட்டுரையில், நாம் சகித்திருப்பதற்கு யெகோவா உதவி செய்கிற நான்கு வழிகளைப் பார்ப்போம். அதிலிருந்து நன்மையடைய என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் பார்ப்போம்.

ஜெபம்

3. ஜெபம் ஒரு அற்புதம் என்று ஏன் சொல்லலாம்?

3 நாம் சகித்திருப்பதற்கு உதவ, அற்புதமான ஒரு ஏற்பாட்டை யெகோவா செய்திருக்கிறார். அதுதான் ஜெபம். நாம் பாவிகளாக இருந்தபோதிலும் அவரிடம் பேசுவதற்கு அவர் வழிசெய்திருக்கிறார். (எபி. 4:16) கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்: எந்த நேரத்திலும்... எந்த மொழியிலும்... எதைப் பற்றி வேண்டுமானாலும் நம்மால் யெகோவாவிடம் பேச முடியும்; அவராலும் அதைக் கேட்க முடியும். நாம் எந்த இடத்தில் இருந்தாலும்—சிறையில் இருந்தாலும் சரி, தனிமைப்படுத்தப்பட்டிருந்தாலும் சரி—அவரிடம் பேச முடியும். (யோனா 2:1, 2; அப். 16:25, 26) கவலைகள் நம்மைத் திணறடிக்கும்போது மனதில் ஓடும் எண்ணங்களை வார்த்தைகளாக வடிக்க முடியால் போகலாம். அப்படிப்பட்ட சமயங்களில்கூட, நாம் சொல்ல வருவதை யெகோவாவால் புரிந்துகொள்ள முடியும். (ரோ. 8:26, 27) ஜெபம் உண்மையிலேயே ஒரு அற்புதம்தான்!

4. சகித்திருப்பதற்கு உதவி கேட்டு யெகோவாவிடம் ஜெபம் செய்யலாமா, ஏன்?

4 ‘தன்னுடைய விருப்பத்துக்கு ஏற்றபடி நாம் எதைக் கேட்டாலும், யெகோவா காதுகொடுத்துக் கேட்பதாக’ வாக்குக் கொடுத்திருக்கிறார். (1 யோ. 5:14) அப்படியென்றால், சகித்திருப்பதற்கு உதவி கேட்டு யெகோவாவிடம் ஜெபம் செய்யலாமா? கண்டிப்பாக! ஏனென்றால், நாம் தொடர்ந்து சகித்திருக்க வேண்டும் என்பதுதான் அவருடைய விருப்பம். எப்படிச் சொல்கிறோம்? ‘நீங்கள் சோதனைகளைச் சகித்திருந்தால், என்னால் சாத்தானுக்கு பதிலடி கொடுக்க முடியும்’ என்று யெகோவா சொல்லி இருக்கிறார். (நீதி. 27:11) அதுமட்டுமல்ல, “தன்னை முழு இதயத்தோடு நம்புகிறவர்களுக்குத் தன்னுடைய பலத்தைக் காட்டுவதற்காக” அவர் ஆர்வமாக இருக்கிறார் என்றும் பைபிள் சொல்கிறது. (2 நா. 16:9) அப்படியென்றால், நாம் சகித்திருப்பதற்கு உதவ யெகோவாவுக்குப் பலமும் இருக்கிறது, ஆசையும் இருக்கிறது.—ஏசா. 30:18; 41:10; லூக். 11:13.

5. ஜெபம் எப்படி மனசமாதானத்தைக் கொடுக்கும்? (ஏசாயா 26:3)

5 நம்முடைய கவலைகளைப் பற்றி நாம் யெகோவாவிடம் உருக்கமாக ஜெபம் செய்யும்போது ‘எல்லா சிந்தனைக்கும் மேலான தேவசமாதானம் நம் இதயத்தையும் மனதையும் . . . பாதுகாக்கும்’ என்று பைபிள் சொல்கிறது. (பிலி. 4:7) இது எவ்வளவு பெரிய விஷயம் என்று யோசித்துப் பாருங்கள். ஏனென்றால், இன்று மக்கள் கஷ்டங்கள் வரும்போது மனசமாதானத்தைத் தேடி அலைகிறார்கள்; அதற்காக என்னவெல்லாமோ செய்கிறார்கள். சிலர், ஒரு வகையான தியானத்தைச் செய்கிறார்கள். கவலைகள் உட்பட எல்லா எண்ணங்களையும் மறந்து, மனதை வெறுமையாக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால், அப்படி மனதை வெறுமையாக்குவது ஆபத்தானது. ஏனென்றால், பேய்கள் நம்மேல் செல்வாக்குச் செலுத்த வாய்ப்பு இருக்கிறது. (மத்தேயு 12:43-45-ஐ ஒப்பிட்டுப் பாருங்கள்.) யெகோவா தருகிற மனஅமைதியோடு ஒப்பிடும்போது, இதுபோன்ற தியானங்களால் வரும் மனஅமைதியெல்லாம் ஒன்றுமே கிடையாது. யெகோவாவை நம்பி அவரிடம் ஜெபம் செய்கிறவர்களுக்கு, அவர் “எப்போதும்” சமாதானத்தைத் தருவதாக வாக்குக் கொடுத்திருக்கிறார்; எப்படிப்பட்ட கஷ்டங்களை அனுபவித்துக்கொண்டிருந்தாலும் அவர் அதைத் தருவார். (ஏசாயா 26:3-ஐ வாசியுங்கள்.) அந்தச் சமாதானத்தை அவர் எப்படித் தருகிறார்? ஒரு வழி: நாம் ஏற்கனவே கற்றுக்கொண்ட ஆறுதலான வசனங்களை அவர் ஞாபகப்படுத்துகிறார். அந்த வசனங்கள், அவர் நம்மேல் அக்கறை வைத்திருப்பதையும், நாம் நன்றாக வாழ வேண்டும் என்று அவர் ஆசைப்படுவதையும் ஞாபகப்படுத்துகின்றன. இந்த உண்மைகள் நம் மனதை சமாதானத்தால் நிரப்புகின்றன.—சங். 62:1, 2.

6. ஜெபம் என்ற ஏற்பாட்டிலிருந்து நன்மையடைவதற்கு, ஜெபத்தில் எதைப் பற்றியெல்லாம் பேசலாம்? (படத்தையும் பாருங்கள்.)

6 நீங்கள் என்ன செய்யலாம்? பிரச்சினை வரும்போது ஜெபம் செய்வது மூலமாக யெகோவாமேல் உங்கள் ‘பாரத்தையெல்லாம் போட்டுவிடுங்கள்.’ (சங். 55:22) சமாதானத்தைக் கொடுக்கச் சொல்லி அவரிடம் கேளுங்கள். பிரச்சினைகளைச் சமாளிப்பதற்குத் தேவையான ஞானத்துக்காக ஜெபம் செய்யுங்கள். (நீதி. 2:10, 11) ஆனால், அதேசமயத்தில் அவருக்கு நன்றி சொல்லவும் மறந்துவிடாதீர்கள். (பிலி. 4:6) யெகோவா உங்களுக்கு எப்படியெல்லாம் உதவி செய்திருக்கிறார் என்பதைக் கவனித்து அவருக்கு நன்றி சொல்லுங்கள். யெகோவா கொடுக்கிற ஆசீர்வாதங்களைப் பார்க்க முடியாதபடி பிரச்சினைகள் உங்கள் கண்ணை மறைக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.—சங். 16:5, 6.

குளிர் காலத்தில், வயதான ஒரு சகோதரர் வீட்டில் உட்கார்ந்து ஜெபம் செய்துகொண்டிருக்கிறார். மடியில் பைபிளை திறந்துவைத்திருக்கிறார், பக்கத்தில் இருக்கும் டேபிளில் ஒரு மருந்து பாட்டில் இருக்கிறது.

ஜெபம் செய்யும்போது நாம் யெகோவாவிடம் பேசுகிறோம், பைபிளைப் படிக்கும்போது அவர் நம்மிடம் பேசுகிறார் (பாரா 6)b


கடவுளுடைய வார்த்தை

7. சகித்திருப்பதற்கு பைபிள் எப்படி உதவும்?

7 நாம் சகித்திருப்பதற்கு உதவ, யெகோவா அவருடைய வார்த்தையான பைபிளைக் கொடுத்திருக்கிறார். யெகோவா நமக்குக் கண்டிப்பாக உதவி செய்வார் என்பதைக் காட்டும் நிறைய வசனங்கள் அதில் இருக்கின்றன. உதாரணத்துக்கு, மத்தேயு 6:8-ஐ எடுத்துக்கொள்ளுங்கள். அது இப்படிச் சொல்கிறது: “நீங்கள் கேட்பதற்கு முன்பே உங்களுக்கு என்னென்ன தேவை என்பது உங்கள் பரலோகத் தகப்பனுக்குத் தெரியும்.” இந்த வார்த்தைகளைச் சொன்னது இயேசுதான். வேறு யாரையும்விட அவருக்குத்தான் யெகோவாவைப் பற்றி ரொம்ப நன்றாகத் தெரியும். அப்படியென்றால், இயேசுவின் இந்த வார்த்தைகளில் இருந்து என்ன தெரிந்துகொள்கிறோம்? நாம் கஷ்டங்களை அனுபவிக்கும்போது நமக்கு என்ன தேவை என்பது யெகோவாவுக்குத் தெரியும், அவர் நிச்சயம் நமக்கு உதவி செய்வார் என்பதைத் தெரிந்துகொள்கிறோம். இதுபோன்ற நிறைய வசனங்கள் பைபிளில் இருக்கின்றன. தொடர்ந்து சகித்திருப்பதற்கு அந்த மாதிரி வசனங்கள் நமக்கு உதவி செய்யும்.—சங். 94:19.

8. (அ) சகித்திருப்பதற்கு உதவுகிற ஒரு பைபிள் ஆலோசனையைச் சொல்லுங்கள். (ஆ) தேவைப்படும் சமயங்களில் பைபிள் நியமங்கள் நமக்கு ஞாபகம் வருவதற்கு என்ன செய்ய வேண்டும்?

8 சகித்திருப்பதற்கு பைபிள் ஆலோசனைகள் நமக்கு உதவி செய்யும். நல்ல முடிவுகள் எடுக்க தேவையான ஞானத்தை அவை நமக்குக் கொடுக்கும். (நீதி. 2:6, 7) உதாரணத்துக்கு, நாளைக்கு என்ன நடக்கும் என்று அநாவசியமாகக் கவலைப்படாமல், அந்தந்த நாளில் என்ன செய்ய வேண்டுமோ அதைப் பற்றி மட்டுமே யோசியுங்கள் என்று ஒரு வசனம் சொல்கிறது. (மத். 6:34) தினமும் பைபிளைப் படித்து, அதை ஆழமாக யோசிக்கிற பழக்கம் இருந்தால், நமக்குத் தேவையான நேரத்தில் தேவையான பைபிள் ஆலோசனைகள் நம் ஞாபகத்துக்கு வரும்.

9. பைபிளில் இருக்கிற பதிவுகள், யெகோவா கண்டிப்பாக உதவி செய்வார் என்ற நம்பிக்கையை எப்படிப் பலப்படுத்தும்?

9 நம்மைப் போல சாதாரண ஆட்களைப் பற்றிய கதைகளும் பைபிளில் இருக்கின்றன. அவர்கள் எப்படி யெகோவாமேல் நம்பிக்கை வைத்தார்கள்... யெகோவா அவர்களுக்கு எப்படி உதவினார்... என்பதைப் பற்றியெல்லாம் அது சொல்கிறது. (எபி. 11:32-34; யாக். 5:17) அந்தப் பதிவுகளைப் படிக்கும்போது, “கடவுள்தான் நம் அடைக்கலம், நம் பலம். இக்கட்டான காலங்களில் நமக்கு உடனடியாகக் கைகொடுப்பவர் அவர்தான்” என்பதைப் புரிந்துகொள்வோம், அவர்மேல் இருக்கிற நம்பிக்கையும் வளரும். (சங். 46:1) இப்படிப்பட்ட உண்மையுள்ள ஆட்களின் கதைகளைப் படிக்கப் படிக்க அவர்களைப் போலவே விசுவாசத்தைக் காட்ட வேண்டும்... சகித்திருக்க வேண்டும்... என்று நமக்கும் தோன்றும்.—யாக். 5:10, 11.

10. கடவுளுடைய வார்த்தையிலிருந்து நன்மையடைய நீங்கள் என்ன செய்யலாம்?

10 நீங்கள் என்ன செய்யலாம்? தினமும் பைபிள் வாசியுங்கள். உங்களுக்கு உதவி செய்கிற வசனங்களை ஒரு பட்டியல் போட்டு வைத்துக்கொள்ளுங்கள். நிறைய பேருக்கு, காலையில் தினவசனத்தைப் படித்து அந்த நாளை ஆரம்பிப்பது ரொம்ப பிரயோஜனமாக இருக்கிறது; நாள் முழுவதும் பைபிளில் இருக்கும் ஒரு விஷயத்தை யோசித்துப் பார்ப்பது அவர்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கிறது. மேரிa என்ற சகோதரியின் அனுபவத்தைப் பாருங்கள். அவருடைய அப்பா அம்மா இரண்டு பேருக்குமே புற்றுநோய் வந்துவிட்டது. இரண்டு பேருமே ஒருசில மாதங்களில் இறந்துவிடும் நிலைமையில் இருந்தார்கள். மேரிதான் அவர்களைக் கவனித்துக்கொண்டிருந்தார். இந்தக் காலகட்டத்தில் தொடர்ந்து சகித்திருக்க மேரிக்கு எது உதவியது? அவர் சொல்கிறார்: “தினமும் காலையில் நான் தினவசனத்தைப் படித்து அதைப் பற்றி ஆழமாக யோசித்துப் பார்ப்பேன். இந்த மாதிரி தினம் தினம் செய்ததால் என்னைப் பற்றியே... என்னுடைய பிரச்சினைகளைப் பற்றியே... யோசிப்பதற்குப் பதிலாக முக்கியமான விஷயங்கள்மேல் கவனம் செலுத்த உதவியது.”—சங். 61:2.

சகோதர சகோதரிகள்

11. நம் சகோதர சகோதரிகளும் கஷ்டங்களைச் சகித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வது நமக்கு எப்படி உதவியாக இருக்கிறது?

11 சகித்திருப்பதற்கு உதவியாக யெகோவா நமக்குச் சகோதர சகோதரிகளைக் கொடுத்திருக்கிறார். நாம் மட்டும் தனியாகக் கஷ்டப்படுகிறோம் என்று நினைக்க வேண்டியதில்லை. “உலகத்தில் இருக்கிற [நம்] சகோதரர்கள் எல்லாரும் [நாம்] அனுபவிப்பது போன்ற துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள்.” (1 பே. 5:9) அதனால், நமக்கு ஏதாவது ஒரு பிரச்சினை வரும்போது, இதே மாதிரி ஒரு சூழ்நிலையை நம் சகோதர சகோதரிகளும் சந்தித்திருக்கிறார்கள்... தொடர்ந்து சகிப்புத்தன்மையைக் காட்டியிருக்கிறார்கள்... என்பதை யோசித்துப் பார்க்கலாம். அவர்களால் சகித்திருக்க முடிந்தது என்றால், நம்மாலும் சகித்திருக்க முடியும்!—அப். 14:22.

12. சகோதர சகோதரிகள் நமக்கு எப்படி உதவி செய்வார்கள், நாம் எப்படி அவர்களுக்கு உதவலாம்? (2 கொரிந்தியர் 1:3, 4)

12 சகித்திருப்பதற்கு சகோதர சகோதரிகளால் உங்களுக்கு உதவ முடியும். பவுலுடைய விஷயத்தில் நடந்ததைக் கவனியுங்கள். அவர் வீட்டுக் காவலில் இருந்த சமயத்தில் சகோதர சகோதரிகள் அவருக்கு உதவினார்கள். அவர்கள் பவுலுக்கு ஆறுதலாக இருந்தார்கள், உற்சாகம் கொடுத்தார்கள், தேவையான உதவிகளையும் செய்தார்கள். அதனால், அவர் எழுதிய கடிதங்களில், அவர்கள் ஒவ்வொருவருடைய பெயரையும் சொல்லி நன்றி சொன்னார். (பிலி. 2:25, 29, 30; கொலோ. 4:10, 11) அதேபோல், இன்று நமக்கும் சகோதர சகோதரிகள் உதவி செய்கிறார்கள். சகித்திருக்க உதவி தேவை என்றால், நமக்காக அவர்கள் வந்து நிற்பார்கள்; அவர்களுக்கு ஒரு தேவை என்றால், நாமும் அவர்களுக்காகப் போய் நிற்போம்!—2 கொரிந்தியர் 1:3, 4-ஐ வாசியுங்கள்.

13. சகித்திருக்க மாயா என்ற சகோதரிக்கு எது உதவியது?

13 ரஷ்யாவில் இருக்கிற மாயா என்ற சகோதரிக்கு, சகோதர சகோதரிகள்தான் பக்கபலமாக இருந்தார்கள். 2020-ல், போலீஸ் அதிகாரிகள் சகோதரியின் வீட்டுக்குள் திடீரென்று நுழைந்து, சோதனை செய்தார்கள். நல்ல செய்தியைச் சொன்ன காரணத்துக்காக அவரைக் கூண்டில் ஏற்றினார்கள். “மனதளவில் நான் ரொம்ப உடைந்து போயிருந்தேன். அந்தச் சமயத்தில் சகோதர சகோதரிகள் எனக்கு ஃபோன் பண்ணினார்கள், கடிதம் எழுதினார்கள். என்மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார்கள் என்பதைக் காட்டினார்கள்” என்று மாயா சொல்கிறார். “சகோதர சகோதரிகள் என்ற ஒரு பெரிய, அன்பான குடும்பம் எனக்கு இருக்கிறது என்பது எனக்கு ஏற்கனவே தெரியும். ஆனால், அது எவ்வளவு உண்மை என்பதை 2020-ல் நடந்த இந்தச் சம்பவத்துக்குப் பிறகு இன்னும் நன்றாகப் புரிந்துகொண்டேன்” என்றும் அவர் சொல்கிறார்.

14. சகோதர சகோதரிகளுடைய உதவி நமக்கு வேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்? (படத்தையும் பாருங்கள்.)

14 நீங்கள் என்ன செய்யலாம்? கஷ்டங்களைச் சகித்துக்கொண்டு இருக்கும்போது, சகோதர சகோதரிகளைவிட்டு தூரமாகிவிடாதீர்கள், அவர்களோடு நெருங்கியிருங்கள். மூப்பர்களிடம் உதவி கேட்கத் தயங்காதீர்கள். அவர்கள் உங்களுக்கு “காற்றுக்கு ஒதுங்கும் இடமாக . . . புயலிலிருந்து பாதுகாக்கும் புகலிடமாக” இருப்பார்கள். (ஏசா. 32:2) இதையும் மறந்துவிடாதீர்கள்: மற்ற சகோதர சகோதரிகளும்கூட கஷ்டங்களைச் சகித்துக்கொண்டு இருக்கிறார்கள். அதனால், அவர்களுக்கு ஏதாவது உதவி செய்யுங்கள். மற்றவர்களுக்கு உதவி செய்தால், உங்களால் சந்தோஷமாகவும் இருக்க முடியும், உங்கள் கஷ்டத்தை நல்ல விதத்தில் சமாளிக்கவும் முடியும்.—அப். 20:35.

முன்பு பார்த்த அந்த வயதான சகோதரர் இப்போது இளவேனிற்காலத்தில் வீட்டில் உட்கார்ந்திருக்கிறார். ஒரு தம்பதியோடும் அவர்களுடைய இரண்டு மகள்களோடும் அவர் பேசிக்கொண்டிருக்கிறார். பக்கத்தில் ஒரு தடியும் சில மருந்து பாட்டில்களும் இருக்கின்றன. ஒரு மகள், அவள் வரைந்த பூஞ்சோலை பூமியின் படத்தை அவரிடம் காட்டுகிறாள்.

சகோதர சகோதரிகளோடு நெருங்கி இருங்கள் (பாரா 14)c


நம் எதிர்கால நம்பிக்கை

15. எதிர்கால நம்பிக்கை இயேசுவுக்கு எப்படிக் கைகொடுத்தது, நமக்கு எப்படிக் கைகொடுக்கும்? (எபிரெயர் 12:2)

15 நாம் சகித்திருப்பதற்கு உதவ, யெகோவா உறுதியான எதிர்கால நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறார். (ரோ. 15:13) இயேசுவைப் பற்றி யோசித்துப் பாருங்கள். பூமியில் வாழ்ந்த கடைசி நாளில், அவர் அனுபவித்த பயங்கரமான கஷ்டங்களைச் சமாளிக்க, எதிர்கால நம்பிக்கைதான் அவருக்குக் கைகொடுத்தது. (எபிரெயர் 12:2-ஐ வாசியுங்கள்.) கடைசிவரைக்கும் யெகோவாவுக்கு உண்மையாக இருந்தால், யெகோவாவைப் பற்றி சாத்தான் சொன்னதெல்லாம் பொய் என்பதைத் தன்னால் நிரூபிக்க முடியும் என்று இயேசுவுக்குத் தெரியும். அதுமட்டுமல்ல, எதிர்காலத்தில் தன்னுடைய அப்பாவோடு ஒன்றுசேரும் காலத்துக்காக இயேசு ஆசையாகக் காத்திருந்தார். பரலோக அரசாங்கத்தில் அவருடைய சகோதரர்களோடு சேர்ந்து ஆட்சி செய்கிற காலத்துக்காகவும் ஆசையாகக் காத்திருந்தார். நமக்கும் புதிய உலகத்தில் என்றென்றும் வாழும் நம்பிக்கை இருக்கிறது. இன்று சாத்தானுடைய உலகத்திலிருந்து வருகிற பிரச்சினைகளைச் சமாளிக்க அந்த நம்பிக்கை கைகொடுக்கும்.

16. சகித்திருக்க எதிர்கால நம்பிக்கை எப்படி ஒரு சகோதரிக்கு உதவியது, அவர் சொன்னதிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?

16 எதிர்கால நம்பிக்கை ரஷ்யாவில் இருக்கிற ஆலா என்ற சகோதரிக்கு எப்படி உதவியது என்று பாருங்கள். அவருடைய கணவரை கைதுசெய்து, ஜெயிலில் அடைத்துவிட்டார்கள். அப்போது ஆலா என்ன செய்தார்? “எதிர்கால நம்பிக்கையைப் பற்றி நான் அடிக்கடி ஜெபத்தில் யெகோவாவிடம் பேசுவேன். அதைப் பற்றி யோசித்துப் பார்ப்பதால் சோர்ந்துவிடாமல் இருக்க முடிகிறது. இந்த எல்லா பிரச்சினைகளும் ஓய்ந்து, விடிவுகாலம் பிறக்கும் என்பது எனக்குத் தெரியும். எதிரிகளை யெகோவா நிச்சயம் தோற்கடிப்பார்; நம்மை நிச்சயம் ஆசீர்வதிப்பார்.”

17. யெகோவா கொடுத்திருக்கிற நம்பிக்கைக்கு நன்றியோடு இருப்பதை நாம் எப்படிக் காட்டலாம்? (படத்தையும் பாருங்கள்.)

17 நீங்கள் என்ன செய்யலாம்? யெகோவா உங்களுக்காகத் தரப்போகிற அந்த அருமையான எதிர்காலத்தைப் பற்றி யோசித்துப் பார்க்க நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். புதிய உலகத்தில் இருப்பதுபோல் கற்பனை செய்யுங்கள். அங்கே அனுபவிக்கப் போகும் ஆசீர்வாதங்களை மனதில் ஓடவிடுங்கள். அப்படிச் செய்தால், இப்போது நீங்கள் அனுபவிக்கிற எந்தப் பிரச்சினையும் “லேசானது, அது நொடிப்பொழுதுதான் இருக்கும்” என்பதைப் புரிந்துகொள்வீர்கள். (2 கொ. 4:17) அதுமட்டுமல்ல, உங்களுடைய நம்பிக்கையைப் பற்றி மற்றவர்களிடம் பேசுங்கள். ஏனென்றால், இன்று மக்கள் நிறைய கஷ்டங்களோடு அல்லல்படுகிறார்கள். கடவுள் கொடுத்திருக்கிற எதிர்கால நம்பிக்கையைப் பற்றி அவர்களுக்கு எதுவுமே தெரியாது. அதனால் அதைப் பற்றி நாம் சுருக்கமாகப் பேசுவதுகூட, அவர்களுடைய ஆர்வத்தைத் தூண்டலாம்; புதிய உலகத்தைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ள அவர்கள் ஆசைப்படலாம்.

அந்த வயதான சகோதரர் இப்போது இலையுதிர்காலத்தில் வீட்டில் உட்கார்ந்திருக்கிறார். பூஞ்சோலை பூமியின் படம், அவர் கையில் வைத்திருக்கும் டேப்லெட்டில் தெரிகிறது. அதைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறார். பக்கத்தில் ஒரு வாக்கரும் நிறைய மருந்து பாட்டில்களும் இருக்கின்றன.

யெகோவா கொடுக்கப்போகும் எதிர்காலத்தைப் பற்றி யோசிக்க நேரம் ஒதுக்குங்கள் (பாரா 17)d


18. யெகோவா கொடுத்திருக்கிற வாக்குறுதிகள்மேல் ஏன் நம்பிக்கை வைக்கலாம்?

18 பல சோதனைகளை வெற்றிகரமாகச் சமாளித்த பிறகு யெகோவாவிடம் யோபு இப்படிச் சொன்னார்: “உங்களால் செய்ய முடியாதது எதுவுமே இல்லை என்று புரிந்துகொண்டேன். நினைப்பதையெல்லாம் செய்ய உங்களால் முடியும் என்று தெரிந்துகொண்டேன்.” (யோபு 42:2) ஒரு விஷயத்தைச் செய்ய வேண்டும் என்று யெகோவா நினைத்துவிட்டால், யாராலும் அதைத் தடுத்து நிறுத்த முடியாது என்பதை யோபு புரிந்துகொண்டார். இந்த உண்மை, சகித்திருக்க இன்று நமக்கும் உதவும். இந்த உதாரணத்தைக் கவனியுங்கள்: உடம்பு சரியில்லாத ஒரு பெண்மணி இருக்கிறார். எத்தனையோ மருத்துவர்களைப் பார்த்த பிறகும் நோய் சரியான பாடில்லை; அவர் அலுத்துப்போய்விட்டார். ஒருநாள், அனுபவமுள்ள ஒரு மருத்துவரைச் சந்திக்கிறார். அந்தப் பெண்ணின் பிரச்சினையை அந்த மருத்துவர் சரியாகக் கண்டுபிடித்துவிடுகிறார். அதை எப்படிச் சரிசெய்யப் போகிறார் என்பதையும் சொல்கிறார். அது அந்தப் பெண்ணுக்கு எவ்வளவு நிம்மதியாக இருக்கும்! குணமாகக் கொஞ்சம் காலம் எடுக்கும் என்றாலும், ‘குணமாகிவிடுவேன்!’ என்ற நம்பிக்கை இருப்பதால், சகித்திருக்க இப்போது அவருக்குத் தெம்பு கிடைக்கும். அதே மாதிரிதான் நமக்கும். தொட்டுவிடும் தூரத்தில் பூஞ்சோலை இருப்பதால் தொடர்ந்து சகித்திருக்க நம்மாலும் முடியும்.

19. சகித்திருப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

19 இந்தக் கட்டுரையில் நாம் இதுவரை என்ன பார்த்தோம்? கஷ்டங்களைச் சகித்திருப்பதற்கு யெகோவா உதவி செய்கிறார். ஜெபம், பைபிள், சகோதர சகோதரிகள், எதிர்கால நம்பிக்கை ஆகியவற்றின் மூலமாக அவர் நமக்கு உதவுகிறார். யெகோவா செய்திருக்கும் இந்த ஏற்பாடுகளை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டால், புதிய உலகத்தின் வாசல்கதவு திறக்கும்வரை நம்மால் சகித்திருக்க முடியும்!—பிலி. 4:13.

சகித்திருக்க யெகோவா எப்படி . . .

  • ஜெபம் மற்றும் அவருடைய வார்த்தை மூலம் உதவுகிறார்?

  • சகோதர சகோதரிகள் மூலம் உதவுகிறார்?

  • எதிர்கால நம்பிக்கை மூலம் உதவுகிறார்?

பாட்டு 33 யெகோவாமேல் உன் பாரத்தைப் போட்டுவிடு

a சில பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.

b படவிளக்கம் : பருவங்கள் கடந்துபோனாலும், வயதான சகோதரர் ஒருவர் உண்மையோடு சகித்திருக்கிறார்.

c படவிளக்கம்: பருவங்கள் கடந்துபோனாலும், வயதான சகோதரர் ஒருவர் உண்மையோடு சகித்திருக்கிறார்.

d படவிளக்கம்: பருவங்கள் கடந்துபோனாலும், வயதான சகோதரர் ஒருவர் உண்மையோடு சகித்திருக்கிறார்.

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்