-
2 நாளாகமம் 26:16-21பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
16 வலிமைமிக்கவராக ஆனதும், அவருக்கு ஆணவம் தலைக்கேறியது. அதுவே அவருடைய அழிவுக்குக் காரணமானது. யெகோவாவின் ஆலயத்துக்குள்ளே நுழைந்து தூபபீடத்தில் தூபம் காட்டப் போனதன் மூலம் தன்னுடைய கடவுளான யெகோவாவின் கட்டளையை அவர் மீறினார்.+ 17 உடனே குருவாகிய அசரியாவும் யெகோவாவுக்குச் சேவை செய்துவந்த தைரியமுள்ள 80 குருமார்களும் அவருக்குப் பின்னால் போனார்கள். 18 அவர்கள் உசியா ராஜாவைத் தடுத்து, “உசியா, நீங்கள் யெகோவாவுக்குத் தூபம் காட்டுவது சரியில்லை! குருமார்கள் மட்டும்தான் தூபம் காட்ட வேண்டும்,+ அவர்கள்தான் ஆரோனின் வம்சத்தில் வந்தவர்கள்,+ அவர்கள்தான் இந்த வேலைக்காகப் புனிதப்படுத்தப்பட்டவர்கள். பரிசுத்த இடத்தைவிட்டு வெளியே போங்கள். நீங்கள் உண்மையில்லாமல் நடந்துகொண்டீர்கள். இப்படிச் செய்ததற்காக யெகோவா தேவனிடமிருந்து உங்களுக்கு எந்த மகிமையும் கிடைக்காது” என்று சொன்னார்கள்.
19 அதைக் கேட்டதும், தூபம் காட்டுவதற்காகக் கையில் தூபக்கரண்டியுடன் நின்றுகொண்டிருந்த உசியாவுக்குப் பயங்கர கோபம் வந்தது.+ குருமார்களிடம் அவர் கோபமாகப் பேசியபோதே, அவர்களுக்கு முன்னால் அவருடைய நெற்றியில் தொழுநோய்+ வர ஆரம்பித்தது. அப்போது யெகோவாவின் ஆலயத்தில் இருந்த தூபபீடத்துக்குப் பக்கத்தில் அவர் நின்றுகொண்டிருந்தார். 20 முதன்மை குருவான அசரியாவும் மற்ற குருமார்கள் எல்லாரும் அவரைப் பார்த்தபோது, அவருடைய நெற்றியில் தொழுநோய் வந்திருந்தது. யெகோவா அவருக்குத் தண்டனை கொடுத்ததால், அவரை அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். அவரும் வேகமாக வெளியேறினார்.
21 சாகும்வரை உசியா ராஜா தொழுநோயாளியாக இருந்தார். அதனால், யெகோவாவின் ஆலயத்திலிருந்து அவர் விலக்கி வைக்கப்பட்டிருந்தார்.+ ஒரு தனி வீட்டில் வாழ்ந்துவந்தார். அந்தச் சமயத்தில், அவருடைய மகன் யோதாம் அரண்மனையைக் கவனித்துக்கொண்டு, தேசத்து மக்களுக்கு நீதி வழங்கிவந்தார்.+
-