எரேமியா
13 யெகோவா என்னிடம், “நீ போய், ஒரு நாரிழை* இடுப்புவாரை வாங்கி உன் இடுப்பில் கட்டிக்கொள்; ஆனால், அதைத் தண்ணீரில் நனைக்காதே” என்று சொன்னார். 2 யெகோவா சொன்னபடியே நான் இடுப்புவாரை வாங்கி என் இடுப்பில் கட்டிக்கொண்டேன். 3 பின்பு, யெகோவா இரண்டாவது தடவையாக என்னிடம் பேசினார். 4 “இப்போது நீ எழுந்து, நீ கட்டியிருக்கிற இடுப்புவாரை எடுத்துக்கொண்டு யூப்ரடிஸ்* ஆற்றுக்குப் போ. அங்கே ஒரு பாறை இடுக்கில் அதை மறைத்து வை” என்று சொன்னார். 5 யெகோவா கட்டளை கொடுத்தபடியே நான் யூப்ரடிஸ் ஆற்றுக்குப் போய் அதை மறைத்து வைத்தேன்.
6 ஆனால், பல நாட்களுக்குப் பின்பு யெகோவா என்னிடம், “நீ எழுந்து, யூப்ரடிஸ் ஆற்றுக்குப் போ. நான் மறைத்து வைக்கச் சொன்ன இடுப்புவாரை அங்கிருந்து எடுத்து வா” என்று சொன்னார். 7 அதனால், நான் யூப்ரடிஸ் ஆற்றுக்குப் போனேன். நான் மறைத்து வைத்திருந்த இடத்திலிருந்து அந்த இடுப்புவாரைத் தோண்டி எடுத்தேன். ஒன்றுக்குமே உதவாத அளவுக்கு அது பாழாகிப்போயிருந்தது.
8 அப்போது யெகோவா என்னிடம், 9 “யெகோவா சொல்வது இதுதான்: ‘இந்த இடுப்புவாரைப் போலவே நான் யூதாவின் ஆணவத்தையும் எருசலேமின் மட்டுக்குமீறிய அகம்பாவத்தையும் அழிப்பேன்.+ 10 இந்தக் கெட்ட ஜனங்கள் இந்த இடுப்புவாரைப் போலவே ஒன்றுக்கும் உதவாதவர்களாக ஆவார்கள். ஏனென்றால், அவர்கள் என் பேச்சைக் கேட்பது இல்லை.+ தங்கள் இதயத்தின் போக்கிலேயே பிடிவாதமாகப் போகிறார்கள்.+ மற்ற தெய்வங்களைத் தேடிப்போய் அவற்றை வணங்குகிறார்கள்.’ 11 யெகோவா சொல்வது இதுதான்: ‘இடுப்புவார் எப்படி ஒருவருடைய இடுப்போடு ஒட்டிக்கொண்டிருக்கிறதோ அதுபோலவே இஸ்ரவேல் ஜனங்களும் யூதா ஜனங்களும் என்னை ஒட்டிக்கொண்டிருக்கும்படி செய்தேன். எனக்குப் புகழும் மகிமையும்+ அழகும் சேர்க்கிற ஜனங்களாக+ அவர்கள் இருப்பதற்காகவே அப்படிச் செய்தேன். ஆனால், அவர்கள் என் பேச்சைக் கேட்கவில்லை.’+
12 நீ அவர்களிடம், ‘இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா சொல்வது இதுதான்: “எல்லா பெரிய ஜாடிகளிலும் திராட்சமதுவை நிரப்புங்கள்”’ என்று சொல். அதற்கு அவர்கள், ‘எல்லா பெரிய ஜாடிகளிலும் திராட்சமதுவை நிரப்ப வேண்டும் என்று எங்களுக்குத் தெரியாதா?’ என்று கேட்பார்கள். 13 அப்போது நீ அவர்களிடம், ‘யெகோவா சொல்வது இதுதான்: “எருசலேமில் இருக்கிற ஜனங்கள், குருமார்கள், தீர்க்கதரிசிகள், தாவீதின் சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கிற ராஜாக்கள் என எல்லாருடைய வயிற்றையுமே நான் திராட்சமதுவால் நிரப்பி, அவர்களைப் போதையில் தள்ளாட வைப்பேன்.+ 14 ஒருவர்மேல் ஒருவர் மோதிக்கொள்ளும்படி செய்வேன்; அப்பாவும் பிள்ளையும்கூட மோதிக்கொள்வார்கள்.+ நான் அவர்கள்மேல் இரக்கமோ கரிசனையோ காட்ட மாட்டேன், பரிதாபப்பட மாட்டேன். எந்தக் காரணத்துக்காகவும் அவர்களை அழிக்காமல் விட மாட்டேன்” என்று யெகோவா சொல்கிறார்’+ என்று சொல்.
15 ஜனங்களே, நன்றாகக் கவனித்துக் கேளுங்கள்.
பெருமையோடு நடந்துகொள்ளாதீர்கள். ஏனென்றால், யெகோவா இதைச் சொல்லியிருக்கிறார்.
16 உங்கள் கடவுளாகிய யெகோவா இருளை வர வைப்பதற்கு முன்பே,
இருட்டும் நேரத்தில் நீங்கள் மலைகளில் தடுமாறி விழுவதற்கு முன்பே,
அவரை மகிமைப்படுத்துங்கள்.
வெளிச்சம் வரும் என்று நீங்கள் காத்திருப்பீர்கள்.
ஆனால், அவர் இருட்டைக் கொண்டுவருவார்.
எல்லாவற்றையும் கும்மிருட்டாக மாற்றிவிடுவார்.+
17 நீங்கள் அவருடைய பேச்சைக் கேட்காவிட்டால்,
நான் உங்களுடைய கர்வத்தை நினைத்து மறைவில் அழுவேன்.
யெகோவாவின் ஜனங்கள்*+ சிறைபிடிக்கப்பட்டுப் போனதை நினைத்து
கதறிக் கதறி அழுவேன்; என் கண்ணீர் ஆறாக ஓடும்.+
18 நீங்கள் ராஜாவிடமும் அவருடைய தாயிடமும்*+ போய், ‘சிம்மாசனத்தைவிட்டு இறங்கிவிடுங்கள்.
உங்கள் தலையில் இருக்கிற அழகான கிரீடங்கள் கீழே விழப்போகின்றன’ என்று சொல்லுங்கள்.
19 தெற்கு நகரங்களின் நுழைவாசல்கள் மூடப்பட்டிருக்கின்றன; அவற்றைத் திறக்க யாருமே இல்லை.
யூதா ஜனங்கள் எல்லாரையுமே எதிரிகள் சிறைபிடித்துக்கொண்டு போனார்கள்; ஒருவரைக்கூட விட்டுவைக்கவில்லை.+
20 வடக்கிலிருந்து வருகிறவர்களை நிமிர்ந்து பாருங்கள்.+
உங்களிடம் கொடுக்கப்பட்ட அழகான ஆடுகள் எங்கே?+
21 ஆரம்பத்திலிருந்து உங்கள் தோழர்களாக இருந்தவர்களே உங்களைத் தண்டிக்கும்போது
நீங்கள் என்ன சொல்வீர்கள்?+
பிரசவ வேதனையில் துடிக்கிற பெண்ணைப் போலத் துடிக்க மாட்டீர்களா?+
22 ‘எனக்கு ஏன் இப்படியெல்லாம் நடந்தது?’+ என்று உள்ளத்தில் யோசிப்பீர்கள்.
நீங்கள் செய்த பயங்கரமான அக்கிரமங்களால்தான் உங்கள் மானம்* பறிபோனது,+
உங்கள் குதிங்காலும் கடுகடுத்தது.
23 கெட்டது செய்வதில் ஊறிப்போனவர்களே,
கூஷியன்* தன்னுடைய நிறத்தையும் சிறுத்தை அதன் புள்ளிகளையும் மாற்றிக்கொள்ள முடியுமா?+ முடியாதே!
அப்படித்தான் உங்களாலும் நல்லது செய்ய முடியாது.
24 பாலைவனக் காற்றில் அடித்துச் செல்லப்படும் வைக்கோலைப் போல நான் உங்களைச் சிதறிப்போக வைப்பேன்.+
25 இதுதான் நான் உங்களுக்கு அளந்து கொடுக்கும் கூலி” என்று யெகோவா சொல்கிறார்.
“ஏனென்றால், நீங்கள் என்னை மறந்துவிட்டீர்கள்.+ பொய்களை நம்புகிறீர்கள்.+
26 அதனால், நான் உங்களுடைய ஆபாசத்தை எல்லாருக்கும் காட்டுவேன்.
உங்களுடைய வெட்கக்கேட்டையும்,+
27 முறைகேடான உறவையும்,+ காமவெறியையும்,
மானங்கெட்ட விபச்சாரத்தையும் எல்லாரும் பார்க்கும்படி செய்வேன்.
மலைகளிலும் வயல்வெளிகளிலும்
நீங்கள் செய்த அருவருப்புகளை நான் பார்த்தேன்.+
எருசலேமே, உனக்குக் கேடுதான் வரப்போகிறது!
இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் இப்படி அசுத்தமாக நடப்பாய்?”+