லேவியராகமம்
13 பின்பு யெகோவா மோசேயிடமும் ஆரோனிடமும், 2 “ஒருவனுடைய தோலில் தடிப்பு, புண்,* அல்லது திட்டு ஏற்பட்டு, அதில் தொழுநோயின்+ அறிகுறி தெரிந்தால், குருவாகச் சேவை செய்யும் ஆரோனிடமோ அவனுடைய மகன்களில் ஒருவனிடமோ அவனைக் கொண்டுவர வேண்டும்.+ 3 அவனுடைய தோலில் வந்துள்ள தொற்றை குருவானவர் பரிசோதிக்க வேண்டும். அந்த இடத்திலுள்ள முடி வெள்ளையாய் மாறி, அந்த இடம் பள்ளமாகத் தெரிந்தால், அது தொழுநோய். குருவானவர் அதைப் பரிசோதித்து, அவன் தீட்டுள்ளவன் என்று அறிவிக்க வேண்டும். 4 ஆனால் அவனுடைய தோலில் வந்துள்ள திட்டு வெள்ளையாக இருந்தும், அந்த இடம் பள்ளமாக இல்லாமலும் அங்குள்ள முடி வெள்ளையாக மாறாமலும் இருந்தால், அவனை குருவானவர் ஏழு நாட்களுக்குத் தனியாக வைக்க வேண்டும்.+ 5 பின்பு, ஏழாம் நாளில் அவனைப் பரிசோதிக்க வேண்டும். அந்தத் தொற்று பரவாமல் அப்படியே இருந்தால், குருவானவர் இன்னும் ஏழு நாட்களுக்கு அவனைத் தனியாக வைக்க வேண்டும்.
6 குருவானவர் மறுபடியும் அவனை ஏழாம் நாளில் பரிசோதிக்க வேண்டும். அந்தத் தொற்று பரவாமல் வெளிறிப்போய் இருந்தால், அவன் தீட்டில்லாதவன் என்று குருவானவர் அறிவிக்க வேண்டும்.+ அது சாதாரண புண். அவன் தன்னுடைய உடைகளைத் துவைக்க வேண்டும், அப்போது அவன் சுத்தமாவான். 7 ஆனால், தீட்டு இருக்கிறதா இல்லையா என்பதை உறுதிப்படுத்த குருவானவரிடம் போய் வந்த பிறகு அந்தப் புண் தோலில் அதிகமாகப் பரவினால், அவன் மறுபடியும் அவரிடம் போக வேண்டும். 8 குருவானவர் அதைப் பரிசோதிக்க வேண்டும். அந்தப் புண் தோலில் பரவியிருந்தால், அவன் தீட்டுள்ளவன் என்று அறிவிக்க வேண்டும். அது தொழுநோய்.+
9 ஒருவனுக்குத் தொழுநோய் இருப்பதற்கான அறிகுறி தெரிந்தால், அவனை குருவானவரிடம் கூட்டிக்கொண்டு வர வேண்டும். 10 அவனை குருவானவர் பரிசோதிக்க வேண்டும்.+ அவனுடைய தோலில் வெள்ளை நிறத்தில் தடிப்பு வந்து அங்குள்ள முடி வெள்ளையாக மாறியிருந்தால், அதோடு அந்தத் தடிப்பில் இரத்தக் கசிவுள்ள+ புண் வந்திருந்தால், 11 அது அவனுடைய தோலில் வந்துள்ள தீராத தொழுநோய். அவனைத் தீட்டுள்ளவன் என்று குருவானவர் அறிவிக்க வேண்டும். பரிசோதிப்பதற்காக அவனைத் தனிமையாக வைக்கத் தேவையில்லை,+ ஏனென்றால் அவன் தீட்டுள்ளவன். 12 ஆனால், அந்தத் தொழுநோய் அவனுடைய தலையிலிருந்து கால்வரை உடம்பு முழுக்க பரவியிருப்பதை குருவானவர் பார்த்தால், 13 அவனைப் பரிசோதித்துப் பார்த்து, தீட்டில்லாதவன் என்று அவர் அறிவிக்க வேண்டும். அவன் உடல் முழுவதும் வெண்மையாக மாறிவிட்டதால் அவன் தீட்டில்லாதவன். 14 ஆனால், எப்போது அவனுடைய உடலில் இரத்தக் கசிவுள்ள புண் வருகிறதோ அப்போது அவன் தீட்டுள்ளவனாக ஆகிவிடுவான். 15 அந்தப் புண்ணைக் குருவானவர் பார்த்த பின்பு அவன் தீட்டுள்ளவன் என்று அறிவிக்க வேண்டும்.+ அந்தப் புண் தீட்டானது, அது தொழுநோய்.+ 16 ஆனால், இரத்தக் கசிவுள்ள அந்தப் புண் இருந்த இடம் மறுபடியும் வெண்மையாக மாறிவிட்டால், குருவானவரிடம் அவன் வர வேண்டும். 17 குருவானவர் அவனைப் பரிசோதித்து,+ அந்த இடம் வெண்மையாக மாறிவிட்டதைப் பார்த்தால், அவன் தீட்டில்லாதவன் என்று அறிவிக்க வேண்டும். அவன் தீட்டில்லாதவன்.
18 ஆனால், ஒருவனுடைய உடலில் கொப்புளம் வந்து குணமான பின்பு, 19 அந்த இடத்தில் வெள்ளை நிறத்தில் தடிப்போ சிவப்பும் வெள்ளையும் கலந்த நிறத்தில் திட்டோ ஏற்பட்டால் அவன் அதை குருவானவரிடம் காட்ட வேண்டும். 20 குருவானவர் அதைப் பரிசோதிக்க வேண்டும்.+ அந்த இடம் பள்ளமாகி, அங்குள்ள முடி வெள்ளையாக மாறியிருந்தால் அவன் தீட்டுள்ளவன் என்று அவர் அறிவிக்க வேண்டும். அது கொப்புளம் இருக்கும் இடத்தில் வந்துள்ள தொழுநோய். 21 ஆனால், குருவானவர் அதைப் பரிசோதிக்கும்போது அங்குள்ள முடி வெள்ளையாக மாறாமலும் அந்த இடம் பள்ளமாகாமலும் இருந்தால், அதோடு அது வெளிறிப்போய் இருந்தால், அவர் அவனை ஏழு நாட்களுக்குத் தனியாக வைக்க வேண்டும்.+ 22 அது தோலில் பரவியிருப்பது தெளிவாகத் தெரிந்தால், அவன் தீட்டுள்ளவன் என்று குருவானவர் அறிவிக்க வேண்டும். அது ஒரு நோய். 23 ஆனால், அந்தத் திட்டு வேறெங்கும் பரவாமல் அப்படியே இருந்தால், அது கொப்புளத்தினால் வந்த சாதாரண வீக்கம். அவன் தீட்டில்லாதவன் என்று குருவானவர் அறிவிக்க வேண்டும்.+
24 ஒருவனுடைய உடலில் தீக்காயம் ஏற்பட்டு அந்த இடத்தில் வெள்ளை நிறத்திலோ சிவப்பும் வெள்ளையும் கலந்த நிறத்திலோ திட்டு ஏற்பட்டால், 25 குருவானவர் அதைப் பரிசோதிக்க வேண்டும். அந்த இடத்தில் உள்ள முடி வெள்ளையாக மாறி அந்த இடம் பள்ளமாகத் தெரிந்தால், அது தீக்காயத்தில் வந்துள்ள தொழுநோய். அவன் தீட்டுள்ளவன் என்று குருவானவர் அறிவிக்க வேண்டும். அது தொழுநோய். 26 ஆனால், குருவானவர் அதைப் பரிசோதித்து, அங்குள்ள முடி வெள்ளையாக மாறாமலும் அந்த இடம் பள்ளமாகாமலும் வெளிறிப்போயும் இருப்பதைப் பார்த்தால், அவனை ஏழு நாட்களுக்குத் தனியாக வைக்க வேண்டும்.+ 27 அவனை குருவானவர் ஏழாம் நாளில் பரிசோதிக்க வேண்டும். அந்தத் திட்டு தோலில் பரவியிருப்பது தெளிவாகத் தெரிந்தால், அவன் தீட்டுள்ளவன் என்று அறிவிக்க வேண்டும். அது தொழுநோய். 28 அந்தத் திட்டு வேறெங்கும் பரவாமல் அந்த இடத்திலேயே வெளிறிப்போய் இருந்தால், அது தீக்காயத்தில் வந்த சாதாரண வீக்கம். அவன் தீட்டில்லாதவன் என்று குருவானவர் அறிவிக்க வேண்டும். ஏனென்றால், அது தீக்காயமுள்ள இடத்தில் வந்த வீக்கம்.
29 ஒரு ஆணின் அல்லது பெண்ணின் தலையிலோ முகவாய்க்கட்டையிலோ தொற்று ஏற்பட்டால், 30 குருவானவர் அதைப் பரிசோதிக்க வேண்டும்.+ அந்த இடம் பள்ளமாகத் தெரிந்தாலும், அங்குள்ள முடி தங்க நிறத்தில் சன்னமாக இருந்தாலும், அந்த நபர் தீட்டுள்ளவர் என்று குருவானவர் அறிவிக்க வேண்டும். அது உச்சந்தலையிலோ தாடியிலோ வந்துள்ள தொற்று. அது தலையில் அல்லது முகவாய்க்கட்டையில் வந்துள்ள தொழுநோய். 31 ஆனால், அந்த இடம் பள்ளமாக இல்லாததையும் அங்கே கறுப்பு முடி இல்லாததையும் குருவானவர் பார்த்தால், அந்த நபரை ஏழு நாட்களுக்குத் தனியாக வைக்க வேண்டும்.+ 32 ஏழாம் நாளில் அந்தத் தொற்றைக் குருவானவர் பரிசோதிக்க வேண்டும். அது வேறெங்கும் பரவாமல் இருந்தாலோ, அங்கே உள்ள முடி தங்க நிறத்துக்கு மாறாமல் இருந்தாலோ, அந்த இடம் பள்ளமாகாமல் இருந்தாலோ, 33 தொற்று ஏற்பட்டுள்ள அந்த இடத்தைத் தவிர மற்ற பகுதிகள் சவரம் செய்யப்பட வேண்டும். பின்பு, அந்த நபரைக் குருவானவர் ஏழு நாட்களுக்குத் தனியாக வைக்க வேண்டும்.
34 தொற்று ஏற்பட்டுள்ள அந்த இடத்தைக் குருவானவர் ஏழாம் நாளில் மறுபடியும் பரிசோதிக்க வேண்டும். உச்சந்தலையிலும் தாடியிலும் வந்துள்ள அந்தத் தொற்று வேறெங்கும் பரவாமலும் அந்த இடம் பள்ளமாகாமலும் இருந்தால், அவன் தீட்டில்லாதவன் என்று குருவானவர் அறிவிக்க வேண்டும். அவன் தன்னுடைய உடைகளைத் துவைக்க வேண்டும், அப்போது அவன் சுத்தமாவான். 35 ஆனால், குருவானவரிடம் காட்டிய பின்பு அந்தத் தொற்று பரவியிருப்பது தெளிவாகத் தெரிந்தால், 36 அவனைக் குருவானவர் பரிசோதிக்க வேண்டும். அந்தத் தொற்று பரவியிருந்தால், தங்க நிற முடி இருக்கிறதா என்று குருவானவர் பார்க்க வேண்டிய அவசியமில்லை. அவன் தீட்டுள்ளவன்தான். 37 ஆனால், குருவானவர் அந்தத் தொற்றைப் பரிசோதிக்கும்போது அது பரவாமல் இருப்பதையும், அந்த இடத்தில் கறுப்பு முடி வளர்ந்திருப்பதையும் பார்த்தால், அது குணமாகிவிட்டது என்று அர்த்தம். அவன் தீட்டில்லாதவன். குருவானவர் அவனைத் தீட்டில்லாதவன் என்று அறிவிக்க வேண்டும்.+
38 ஒரு ஆணின் அல்லது பெண்ணின் தோலில் திட்டுகள் ஏற்பட்டு அவை வெண்மையாக இருந்தால், 39 குருவானவர் அந்த நபரைப் பரிசோதிக்க வேண்டும்.+ அந்தத் திட்டுகள் வெளிறிப்போய் இருந்தால், அது தோலில் வந்துள்ள தீங்கில்லாத தேமல். அந்த நபர் தீட்டில்லாதவர்.
40 ஒருவனுடைய தலையில் வழுக்கை விழுந்தால் அவன் தீட்டில்லாதவன். 41 அவனுடைய முன்னந்தலையில் வழுக்கை விழுந்தால் அவன் தீட்டில்லாதவன். 42 ஆனால், உச்சந்தலையிலோ முன்னந்தலையிலோ வழுக்கை விழுந்த இடத்தில் சிவப்பும் வெள்ளையும் கலந்த புண் வந்தால், அது உச்சந்தலையில் அல்லது முன்னந்தலையில் வந்துள்ள தொழுநோய். 43 குருவானவர் அவனைப் பரிசோதிக்க வேண்டும். தோலில் தோன்றும் தொழுநோயைப் போல, வழுக்கை விழுந்த உச்சந்தலையிலோ முன்னந்தலையிலோ சிவப்பும் வெள்ளையும் கலந்த தடிப்புகள் இருந்தால், 44 அவன் தொழுநோயாளி. அவன் தீட்டுள்ளவன். அவனுடைய தலையில் தொழுநோய் வந்திருப்பதால், அவன் தீட்டுள்ளவன் என்று குருவானவர் அறிவிக்க வேண்டும். 45 தொழுநோயாளி தன்னுடைய உடைகளைக் கிழித்துக்கொண்டு தன் தலையை அலங்கோலமாக விட்டுவிட வேண்டும். துணியால் வாயை* மறைத்துக்கொண்டு, ‘தீட்டு, தீட்டு!’ என்று கத்த வேண்டும். 46 அந்த நோய் இருக்கும் காலமெல்லாம் அவன் தீட்டுள்ளவனாக இருப்பான். அதனால், அவன் ஒதுக்குப்புறத்தில் வாழ வேண்டும். முகாமுக்கு வெளியே குடியிருக்க வேண்டும்.+
47 கம்பளி உடை, நாரிழை* உடை, 48 நாரிழை பாவு நூல்* அல்லது ஊடை நூல்,* கம்பளி பாவு நூல் அல்லது ஊடை நூல், தோல் அல்லது ஏதாவது தோல் பொருள் ஆகியவற்றில் தொழுநோய்* பிடிக்கலாம். 49 தொழுநோய் பிடித்த அந்த உடையிலோ தோலிலோ பாவு நூலிலோ ஊடை நூலிலோ ஏதாவது தோல் பொருளிலோ மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் அல்லது சிவப்பு நிறத்தில் கறை ஏற்பட்டால், அது அந்தத் தொழுநோயின் கறை. அதை குருவானவரிடம் காட்ட வேண்டும். 50 தொழுநோய் பிடித்த அந்தப் பொருளைக் குருவானவர் பரிசோதித்து, ஏழு நாட்களுக்குத் தனியாக வைக்க வேண்டும்.+ 51 ஏழாம் நாளில் அதை அவர் பரிசோதிக்கும்போது, அந்தத் தொழுநோய் உடையிலோ பாவு நூலிலோ ஊடை நூலிலோ தோலிலோ (அந்தத் தோலை எதற்குப் பயன்படுத்தினாலும் சரி) பரவியிருப்பதைப் பார்த்தால், அது ஒரு கொடிய தொழுநோய்; அது தீட்டு.+ 52 அந்த உடையையோ நாரிழை பாவு நூலையோ ஊடை நூலையோ அல்லது கம்பளி பாவு நூலையோ ஊடை நூலையோ தோல் பொருளையோ எரித்துவிட வேண்டும். அது கொடிய தொழுநோயாக இருப்பதால் அதை எரித்துவிட வேண்டும்.
53 ஆனால், அந்த உடையையோ பாவு நூலையோ ஊடை நூலையோ ஏதாவது தோல் பொருளையோ குருவானவர் பரிசோதிக்கும்போது அதில் தொழுநோய் பரவாமல் இருப்பதைப் பார்த்தால், 54 அந்தப் பொருளைத் தண்ணீரில் கழுவும்படி சொல்ல வேண்டும். பின்பு, அடுத்த ஏழு நாட்களுக்கு அதைத் தனியாக வைக்க வேண்டும். 55 தொழுநோய் பிடித்த அந்தப் பொருள் நன்றாகக் கழுவப்பட்ட பின்பு, குருவானவர் அதை மறுபடியும் பரிசோதிக்க வேண்டும். தொழுநோய் பரவவில்லை என்றாலும் அந்தக் கறை அப்படியே இருந்தால், அது தீட்டு. அது உள்பக்கத்திலோ வெளிப்பக்கத்திலோ அரிக்கப்பட்டு இருப்பதால் அதை எரித்துவிட வேண்டும்.
56 தொழுநோய் பிடித்த அந்தப் பகுதி நன்றாகக் கழுவப்பட்ட பின்பு குருவானவர் அதைப் பரிசோதித்து அது வெளிறியிருப்பதைப் பார்த்தால், உடையிலிருந்தோ, தோல் பொருளிலிருந்தோ, பாவு நூலிலிருந்தோ, ஊடை நூலிலிருந்தோ அதை அவர் அறுத்துவிட வேண்டும். 57 ஆனால், அது உடையிலோ பாவு நூலிலோ ஊடை நூலிலோ தோல் பொருளிலோ வேறொரு இடத்தில் மறுபடியும் வந்திருக்கிறது என்றால் அது பரவுகிறது என்று அர்த்தம். கறைபட்ட அந்தப் பொருளை எரித்துவிட வேண்டும்.+ 58 உடையையோ பாவு நூலையோ ஊடை நூலையோ தோல் பொருளையோ கழுவிய பின்பு அந்தக் கறை மறைந்துவிட்டால், அதை இன்னொரு தடவை கழுவ வேண்டும். அப்போது அதன் தீட்டு நீங்கிவிடும்.
59 கம்பளி உடையிலோ, நாரிழை உடையிலோ, பாவு நூலிலோ, ஊடை நூலிலோ, ஏதாவது தோல் பொருளிலோ தொழுநோய் பிடித்தால், அது தீட்டுள்ளதா இல்லையா என்று அறிவிப்பதற்கான சட்டங்கள் இவைதான்” என்றார்.