ஏசாயா
18 ஆறுகள் ஓடும் பகுதியில் பூச்சிகளின் சிறகொலி கேட்கிற எத்தியோப்பிய தேசத்துக்கு ஐயோ கேடு!+
2 அது கடல் வழியாகத் தூதுவர்களை அனுப்புகிறது.
அவர்களை நாணற்புல்* படகுகளில் அனுப்பி,
“தூதுவர்களே, வேகமாகப் போங்கள்.
உயரமாகவும் பளபளப்பான சருமத்தோடும் இருக்கிற ஜனங்களிடம் போங்கள்.
எல்லாரும் பார்த்துப் பயப்படுகிற ஜனங்களிடம் போங்கள்.+
பல தேசங்களை வென்ற பலம்படைத்த ஜனங்களிடம் போங்கள்.
ஆறுகள் அடித்துக்கொண்டு போகிற தேசத்தில் வாழ்கிறவர்களிடம் போங்கள்” என்று சொல்கிறது.
3 தேசத்து ஜனங்களே, பூமியின் குடிமக்களே,
மலைகள்மேல் ஏற்றப்பட்ட கொடியை* போன்ற ஒன்று உங்கள் கண்களுக்குத் தெரியும்.
ஊதுகொம்பின் சத்தம் போன்ற ஒரு சத்தம் உங்கள் காதில் கேட்கும்.
4 யெகோவா என்னிடம்,
“சூரிய ஒளியையும் வெப்பத்தையும் போலவும்,
அறுவடைக் கால உஷ்ணத்தில் உண்டாகும் பனி மூட்டத்தைப் போலவும்,
நான் அமைதியாக இருந்து, நான் நிலைநாட்டிய இடத்தை* பார்த்துக்கொண்டிருப்பேன்.
5 திராட்சைக் கொடி பூ பூத்து, காய் காய்த்து, பழம் பழுப்பதைப் பார்த்துக்கொண்டிருப்பேன்.
ஆனால், அறுவடைக்கு முன்பே அதன் கிளைகளை அரிவாளால் வெட்டிப்போடுவேன்.
அதன் கொடிச் சுருள்களை அறுத்து எறிவேன்.
6 அவையெல்லாம் மலைகளிலுள்ள பறவைகளுக்கும்
நிலத்திலுள்ள மிருகங்களுக்கும் உணவாகும்.
அந்தப் பறவைகள் கோடைக் காலம் முழுவதும் அவற்றைத் தின்னும்.
அந்த மிருகங்கள் அறுவடைக் காலம் முழுவதும் அவற்றைத் தின்னும்.
7 அப்போது, பரலோகப் படைகளின் யெகோவாவுக்கு ஒரு அன்பளிப்பு கொண்டுவரப்படும்.
அது, உயரமாகவும் பளபளப்பான சருமத்தோடும் இருக்கிற ஜனங்களின் தேசத்திலிருந்து,
எல்லாரும் பார்த்துப் பயப்படுகிறவர்களின் தேசத்திலிருந்து,
பல தேசங்களை வென்ற பலம்படைத்த தேசத்திலிருந்து,
ஆறுகள் அடித்துக்கொண்டு போகிற தேசத்திலிருந்து,
பரலோகப் படைகளின் யெகோவாவுடைய பெயர் தாங்கிய சீயோன் மலைக்குக்+ கொண்டுவரப்படும்” என்று சொன்னார்.