எசேக்கியேல்
30 யெகோவா மறுபடியும் என்னிடம், 2 “மனிதகுமாரனே, நீ இப்படித் தீர்க்கதரிசனம் சொல்: ‘உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்:
“ஜனங்களே, ‘ஐயோ, அந்த நாள் வருகிறதே!’ என்று கதறுங்கள்.
3 ஏனென்றால், யெகோவாவின் நாள் நெருங்கிவிட்டது! அது பக்கத்தில் வந்துவிட்டது!+
அது கார்மேகங்கள் சூழ்ந்துகொள்ளப்போகும் நாள்;+ தேசங்களுக்குத் தீர்ப்பு கிடைக்கப்போகும் நாள்.+
4 ஒரு வாள் எகிப்துக்கு எதிராக வரும்.
அங்குள்ள ஜனங்கள் வெட்டிச் சாய்க்கப்படுவார்கள்.
அப்போது, எத்தியோப்பியா கதிகலங்கிப்போகும்.
எகிப்து சூறையாடப்படும், அதன் அஸ்திவாரங்கள் அழிக்கப்படும்.+
5 எத்தியோப்பியர்களும்,+ பூத்தியர்களும்,+ லூத்தியர்களும்,
மற்ற தேசத்தாரும், கூபியர்களும், ஒப்பந்தம் செய்திருக்கிற ஜனங்களும்*
வாளால் வெட்டிச் சாய்க்கப்படுவார்கள்.”’
6 யெகோவா சொல்வது இதுதான்:
‘எகிப்துக்கு உதவி செய்கிறவர்களும் வீழ்த்தப்படுவார்கள்.
எகிப்தின் அதிகாரத் திமிர் அடங்கும்.’+
‘மிக்தோலிலிருந்து+ செவெனே+ நகரம் வரைக்கும் அவர்கள் வாளால் வெட்டிச் சாய்க்கப்படுவார்கள்’ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார். 7 ‘அவர்களுடைய தேசம் மற்ற எந்தத் தேசத்தையும்விட அதிகமாகப் பாழாக்கப்படும். அவர்களுடைய நகரங்கள் மற்ற எந்த நகரங்களையும்விட அதிகமாக நாசமாக்கப்படும்.+ 8 நான் எகிப்துக்குத் தீ வைத்து, அதன் கூட்டாளிகள் எல்லாரையும் அழிக்கும்போது நான் யெகோவா என்று அவர்கள் தெரிந்துகொள்வார்கள். 9 அந்த நாளில், மட்டுக்குமீறிய தன்னம்பிக்கையோடு இருக்கிற எத்தியோப்பியாவை நடுங்க வைப்பதற்காக நான் தூதுவர்களைக் கப்பல்களில் அனுப்புவேன். எகிப்து அழிந்த செய்தியைக் கேட்டு அவர்கள் பீதியடைவார்கள். அழிவு நாள் கண்டிப்பாக வரும்.’
10 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சாரை வர வைத்து எகிப்தியர்களின் கூட்டத்தை நான் அழிப்பேன்.+ 11 மிகவும் கொடூரமான ஜனங்கள்+ என்று பெயரெடுத்த அந்த ராஜாவையும் அவனுடைய படைவீரர்களையும் கொண்டுவந்து எகிப்தை அழிப்பேன். அவர்கள் வாளை உருவி எகிப்தில் இருக்கிற எல்லாரையும் வெட்டிச் சாய்ப்பார்கள்.+ 12 நைல் நதியின்+ கால்வாய்களை நான் வறண்டுபோக வைப்பேன். அந்தத் தேசத்தைக் கெட்டவர்களிடம் விற்றுவிடுவேன். மற்ற தேசத்து ஜனங்கள் வந்து அதையும் அதில் இருக்கிற எல்லாவற்றையும் பாழாக்கும்படி செய்வேன்.+ யெகோவாவாகிய நானே இதைச் சொல்கிறேன்.’
13 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘எகிப்திலுள்ள அருவருப்பான* சிலைகளையும் நோப்*+ நகரத்திலுள்ள ஒன்றுக்கும் உதவாத தெய்வங்களையும் நான் அழிப்பேன். எகிப்து தேசத்தை ஆட்சி செய்ய இனி எந்த எகிப்தியனும் இருக்க மாட்டான். நான் தேசத்தில் பீதியைக் கிளப்புவேன்.+ 14 பத்ரோசைப்+ பாழாக்குவேன், சோவானுக்குத் தீ வைப்பேன், நோ*+ நகரத்தைத் தண்டிப்பேன். 15 எகிப்தின் கோட்டையாகிய சின் நகரத்தின் மேல் என் கோபத்தைக் கொட்டுவேன். நோ நகரத்தில் இருக்கிறவர்களை அழிப்பேன். 16 எகிப்துக்குத் தீ வைப்பேன். சின் நகரம் நடுநடுங்கும். நோ நகரம் இடிக்கப்படும். நோப்* நகரம் பட்டப்பகலில் தாக்கப்படும். 17 ஓன்* நகரத்தையும் பிபேசெத் நகரத்தையும் சேர்ந்த வாலிபர்கள் வாளுக்குப் பலியாவார்கள். அந்த நகரத்து ஜனங்கள் சிறைபிடிக்கப்பட்டுப் போவார்கள். 18 எகிப்தின் நுகத்தடிகளை தக்பானேசில் நான் உடைக்கும்போது அங்கே பகல் இருட்டாகிவிடும்.+ எகிப்தின் அதிகாரத் திமிர் அடங்கிவிடும்.+ மேகங்கள் அதை மூடும். அதன் சிற்றூர்களில் இருக்கிறவர்கள் சிறைபிடிக்கப்பட்டுப் போவார்கள்.+ 19 நான் எகிப்தைத் தண்டிக்கும்போது, நான் யெகோவா என்று அவர்கள் தெரிந்துகொள்வார்கள்’” என்றார்.
20 11-ஆம் வருஷம், முதலாவது மாதம், ஏழாவது நாளில் யெகோவா என்னிடம், 21 “மனிதகுமாரனே, எகிப்தின் ராஜாவான பார்வோனின் கையை நான் முறித்துவிட்டேன். அது குணமாவதற்காகவும், வாளை எடுக்கும் அளவுக்குப் பலம் அடைவதற்காகவும் யாருமே அதற்குக் கட்டுப்போட மாட்டார்கள்” என்றார்.
22 “உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘எகிப்தின் ராஜாவான பார்வோனுக்கு விரோதமாக நான் வருவேன்.+ நல்ல நிலையிலுள்ள கையையும், ஏற்கெனவே முறிக்கப்பட்ட கையையும் நான் முறிப்பேன்.+ அவனுடைய கையிலுள்ள வாளை கீழே விழ வைப்பேன்.+ 23 பின்பு, எகிப்தியர்களை மற்ற தேசங்களின் நடுவிலும் மற்ற ஜனங்களின் நடுவிலும் சிதறிப்போக வைப்பேன்.+ 24 பாபிலோன் ராஜாவின் கைகளைப் பலப்படுத்தி,*+ என்னுடைய வாளை அவன் கையில் கொடுப்பேன்.+ பின்பு, பார்வோனின் கைகளை முறிப்பேன். அப்போது, சாகிறவன் முனகுவது போல அவன் பாபிலோன் ராஜாவுக்குமுன் சத்தமாக முனகுவான். 25 பாபிலோன் ராஜாவின் கைகளை நான் பலப்படுத்துவேன். ஆனால், பார்வோனின் கைகள் உடைந்து தொங்கும். பாபிலோன் ராஜாவின் கையில் என் வாளைக் கொடுத்து எகிப்து தேசத்தை அழிக்கும்போது+ நான் யெகோவா என்று அவர்கள் தெரிந்துகொள்வார்கள். 26 நான் எகிப்தியர்களை மற்ற தேசங்களின் நடுவிலும் மற்ற ஜனங்களின் நடுவிலும் சிதறிப்போக வைப்பேன்.+ அப்போது, நான் யெகோவா என்று அவர்கள் தெரிந்துகொள்வார்கள்.’”