உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • nwt ஆகாய் 1:1-2:23
  • ஆகாய்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஆகாய்
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
ஆகாய்

ஆகாய்

1 தரியு ராஜா ஆட்சி செய்த இரண்டாம் வருஷம், ஆறாம் மாதம், முதலாம் நாள் ஆகாய்* தீர்க்கதரிசிக்கு+ யெகோவா ஒரு செய்தியைச் சொன்னார். அதை சலாத்தியேலின் மகனாகிய யூதாவின் ஆளுநர் செருபாபேலுக்கும்,+ யோசதாக்கின் மகனாகிய தலைமைக் குரு யோசுவாவுக்கும் சொல்லச் சொன்னார். அந்தச் செய்தி இதுதான்:

2 “‘“யெகோவாவின் ஆலயத்தைக் கட்ட* இன்னும் நேரம் வரவில்லை” என்று இந்த ஜனங்கள் சொல்கிறார்கள்’+ எனப் பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.”

3 மறுபடியும் ஆகாய் தீர்க்கதரிசியின் மூலம் யெகோவா இப்படிச் சொன்னார்:+ 4 “என்னுடைய வீடு இடிந்து கிடக்கும்போது நீங்கள் மட்டும் ஆடம்பரமான* வீடுகளில் குடியிருப்பது சரியா?+ 5 பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: ‘உங்கள் வழிகளைப் பற்றி நன்றாக யோசித்துப் பாருங்கள். 6 நீங்கள் நிறைய விதைக்கிறீர்கள், ஆனால் கொஞ்சமாகத்தான் அறுக்கிறீர்கள்.+ சாப்பிடுகிறீர்கள், ஆனால் பசியோடுதான் இருக்கிறீர்கள். குடிக்கிறீர்கள், ஆனால் தாகத்தோடுதான் இருக்கிறீர்கள். உடுத்துகிறீர்கள், ஆனால் குளிரில் நடுங்கிக்கொண்டுதான் இருக்கிறீர்கள். செய்த வேலைக்குக் கூலி வாங்குகிறீர்கள், ஆனால் ஓட்டைகள் நிறைந்த பையில்தான் அதைப் போடுகிறீர்கள்.’”

7 “‘உங்கள் வழிகளைப் பற்றி நன்றாக யோசித்துப் பாருங்கள்’ என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.

8 ‘மலைகளுக்குப் போய், மரங்களை வெட்டிக்கொண்டு வந்து,+ என்னுடைய ஆலயத்தைக் கட்டுங்கள்.+ அந்த ஆலயத்தைப் பார்த்து நான் சந்தோஷப்படுவேன், அது எனக்குப் புகழ் சேர்க்கும்’+ என்று யெகோவா சொல்கிறார்.”

9 “பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: ‘நீங்கள் நிறைய விளைச்சலை எதிர்பார்த்தீர்கள், ஆனால் கொஞ்சம்தான் கிடைத்தது. கிடைத்ததை உங்கள் வீட்டுக்குக் கொண்டுவந்தீர்கள், ஆனால் நான் அதை ஊதித்தள்ளினேன்.+ உங்களுக்கு ஏன் இந்தக் கதி என்று தெரியுமா? இடிந்து கிடக்கும் என் வீட்டைக் கவனிக்காமல் உங்கள் வீட்டை மட்டும் ஓடி ஓடி கவனித்துக்கொள்கிறீர்களே.+ 10 அதனால்தான் வானம் பனியைப் பொழியவில்லை, பூமி விளைச்சலைத் தரவில்லை. 11 நான் பூமியிலும் மலைகளிலும் பஞ்சத்தை வர வைத்தேன். தானியத்துக்கும் எண்ணெய்க்கும் புதிய திராட்சமதுவுக்கும் நிலத்தில் விளையும் எல்லாவற்றுக்கும் தட்டுப்பாடு ஏற்படும்படி செய்தேன். மனுஷர்களையும் மிருகங்களையும் தவிக்க வைத்தேன். உங்கள் உழைப்பெல்லாம் வீணாகிப்போகும்படி செய்தேன்.’”

12 அதன்பின், சலாத்தியேலின்+ மகன் செருபாபேலும்,+ யோசதாக்கின்+ மகனும் தலைமைக் குருவுமான யோசுவாவும், எல்லா ஜனங்களும் தங்கள் கடவுளான யெகோவா சொன்னதைக் கேட்டு நடந்தார்கள். யெகோவா அனுப்பிய ஆகாய் தீர்க்கதரிசி சொன்னதையும் கேட்டு, யெகோவாவுக்குப் பயந்து நடக்க ஆரம்பித்தார்கள்.

13 அப்போது, யெகோவாவின் தூதுவரான ஆகாய் யெகோவாவின் கட்டளைப்படியே ஜனங்களிடம் போய், “‘நான் உங்களோடு இருக்கிறேன்’+ என்று யெகோவா சொல்கிறார்” என அறிவித்தார்.

14 சலாத்தியேலின் மகனும் யூதாவின் ஆளுநருமான செருபாபேலின்+ மனதையும், யோசதாக்கின் மகனும் தலைமைக் குருவுமான யோசுவாவின்+ மனதையும், ஜனங்கள் எல்லாருடைய மனதையும் யெகோவா தூண்டினார்.+ உடனே அவர்கள், தங்களுடைய கடவுளான பரலோகப் படைகளின் யெகோவாவுடைய ஆலயத்தைக் கட்ட ஆரம்பித்தார்கள்.+ 15 அந்த வேலை, தரியு ராஜா ஆட்சி செய்த இரண்டாம் வருஷம், ஆறாம் மாதம், 24-ஆம் நாளில் ஆரம்பித்தது.+

2 ஏழாம் மாதம், 21-ஆம் நாளில் ஆகாய் தீர்க்கதரிசியிடம்+ யெகோவா இப்படிச் சொன்னார்: 2 “நீ தயவுசெய்து சலாத்தியேலின் மகனாகிய யூதாவின் ஆளுநர் செருபாபேலிடமும்,+ யோசதாக்கின்+ மகனாகிய தலைமைக் குரு யோசுவாவிடமும்,+ மற்ற ஜனங்களிடமும் போய், 3 ‘முன்பிருந்த ஆலயத்தின் மகிமையைப் பார்த்தவர்கள் யாராவது இங்கு இருக்கிறீர்களா?+ இப்போது இந்த ஆலயம் எப்படி இருக்கிறது? முன்பிருந்த ஆலயத்தோடு ஒப்பிடும்போது இது ஒன்றுமே இல்லையென்று நினைக்கிறீர்களா?’+ என்று கேள்.

4 ‘செருபாபேலே, இப்போது நீ தைரியமாக இரு. யோசதாக்கின் மகனும் தலைமைக் குருவுமான யோசுவாவே, தைரியமாக இரு’ என்று யெகோவா சொல்கிறார்.

‘தேசத்து ஜனங்களே, தைரியமாக வேலையில் இறங்குங்கள்’+ என்று யெகோவா சொல்கிறார்.

‘நான் உங்களோடு இருக்கிறேன்’+ என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார். 5 ‘நீங்கள் எகிப்திலிருந்து வந்தபோது நான் கொடுத்த வாக்குறுதியை+ மறந்துவிடாதீர்கள். என்னுடைய சக்தி இப்போதும் உங்களோடு இருக்கிறது.*+ பயப்படாமல் இருங்கள்.’”+

6 “‘சீக்கிரத்தில் நான் வானத்தையும் பூமியையும் கடலையும் நிலத்தையும் இன்னொரு தடவை உலுக்குவேன்’ என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.+

7 ‘எல்லா தேசங்களையும் நான் உலுக்குவேன். அப்போது, எல்லா தேசங்களின் செல்வங்களும்* இந்த ஆலயத்துக்குள் வந்து சேரும்.+ இந்த ஆலயத்தை நான் மகிமையால் நிரப்புவேன்’+ என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.

8 ‘வெள்ளியும் என்னுடையது, தங்கமும் என்னுடையது’ என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.

9 ‘இந்த ஆலயத்தின் மகிமை முன்பிருந்த ஆலயத்தின் மகிமையைவிட அதிகமாக இருக்கும்’+ என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.

‘இந்த இடத்தில் நான் சமாதானத்தைப் பொழிவேன்’+ என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.

10 தரியு ஆட்சி செய்த இரண்டாம் வருஷம், ஒன்பதாம் மாதம், 24-ஆம் நாளில் ஆகாய் தீர்க்கதரிசிக்கு யெகோவா ஒரு செய்தியைச் சொன்னார்.+ 11 “பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது என்னவென்றால், ‘நீ குருமார்களிடம் போய் தயவுசெய்து திருச்சட்டத்தைப் பற்றிக் கேள்.+ 12 அவர்களைப் பார்த்து, “ஒருவன் பரிசுத்தமான இறைச்சியைத் தன் உடையின் மடிப்பில் எடுத்துக்கொண்டு போகும்போது ரொட்டி, கூழ், திராட்சமது, எண்ணெய், அல்லது வேறெதாவது உணவுப் பொருளின் மேல் அவனுடைய உடை பட்டால் அந்த உணவுப் பொருள் பரிசுத்தமாகுமா?” என்று கேள்’” என்றார்.

அதன்படியே அவர் கேட்டபோது, “அது பரிசுத்தமாகாது!” என்று குருமார்கள் சொன்னார்கள்.

13 பின்பு ஆகாய் அவர்களிடம், “பிணத்தை* தொட்டுத் தீட்டுப்பட்ட ஒருவன், அந்த உணவுப் பொருள்களில் ஒன்றைத் தொட்டால் அது தீட்டுப்படுமா?”+ என்று கேட்டார்.

அதற்கு அவர்கள், “ஆமாம், தீட்டுப்படும்” என்று சொன்னார்கள்.

14 அதற்கு ஆகாய் அவர்களிடம் இப்படிச் சொன்னார்: “‘இந்த ஜனங்களும் அப்படித்தான் தீட்டுப்பட்டிருக்கிறார்கள், இவர்களுடைய தேசமும் தீட்டுப்பட்டிருக்கிறது. இவர்கள் செய்யும் எல்லா வேலைகளும் தீட்டுப்பட்டிருக்கின்றன, இவர்கள் எனக்குக் கொடுப்பது எல்லாமே தீட்டுப்பட்டவைதான்’ என்று யெகோவா சொல்கிறார்.

15 ‘தயவுசெய்து இன்றுமுதல் இதை நன்றாக யோசித்துப் பாருங்கள்: யெகோவாவின் ஆலயம் கட்டப்படுவதற்குமுன் நிலைமை எப்படி இருந்தது?+ 16 குவித்து வைக்கப்பட்டிருந்த தானியத்திலிருந்து 20 படி எடுத்துக்கொள்ளலாம் என்று நினைத்து வந்தவருக்கு வெறும் 10 படிதான் கிடைத்தது. திராட்சரசத் தொட்டியிலிருந்து 50 ஜாடி மதுவை மொண்டுகொள்ளலாம் என்று நினைத்து வந்தவருக்கு வெறும் 20 ஜாடிதான் கிடைத்தது.+ 17 உங்கள் உழைப்பின் பலனையெல்லாம் வெப்பக் காற்றினால் கருக வைத்தேன், நோயினால் தாக்கினேன்,+ ஆலங்கட்டி* மழையினால் நாசமாக்கினேன். அப்போதுகூட உங்களில் யாருமே என்னிடம் திரும்பி வரவில்லை’ என்று யெகோவா சொல்கிறார்.

18 ‘யெகோவாவின் ஆலயத்துக்கு அஸ்திவாரம் போடப்பட்ட இந்த ஒன்பதாம் மாதம், 24-ஆம் நாள்முதல் நடக்கப்போகிற விஷயங்களைத் தயவுசெய்து நன்றாக யோசித்துப் பாருங்கள்.+ 19 இதையெல்லாம் நன்றாக யோசித்துப் பாருங்கள்: தானியக் கிடங்கில் இதுவரை தானியம் இருந்திருக்கிறதா?+ திராட்சைக் கொடியும் அத்தி மரமும் மாதுளை மரமும் ஒலிவ மரமும் இதுவரை காய்த்திருக்கிறதா? ஆனால், இன்றுமுதல் நான் உங்களை ஆசீர்வதிக்கப்போகிறேன்.’”+

20 அந்த மாதம், 24-ஆம் நாளில் இரண்டாவது தடவையாக ஆகாயிடம் யெகோவா இப்படிச் சொன்னார்:+ 21 “‘நான் வானத்தையும் பூமியையும் உலுக்குவேன்.+ 22 ராஜ்யங்களின் சிம்மாசனங்களைக் கவிழ்ப்பேன், எல்லா தேசத்து ராஜ்யங்களின் பலத்தையும் அழிப்பேன்.+ ரதங்களையும் ரதவீரர்களையும், குதிரைகளையும் குதிரைவீரர்களையும் வீழ்த்துவேன். அவர்கள் ஒருவரை ஒருவர் வாளால் வெட்டிக்கொண்டு சாவார்கள்’+ என்று யூதாவின் ஆளுநர் செருபாபேலிடம் போய்ச் சொல்.”

23 “‘சலாத்தியேலின் மகனும் என்னுடைய ஊழியனுமான செருபாபேலே,+ அந்த நாளில் என்னுடைய வேலைக்காக உன்னைப் பயன்படுத்துவேன்’ என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார். ‘உன்னை முத்திரை மோதிரம் போலாக்குவேன்’ என்று யெகோவா சொல்கிறார். ‘ஏனென்றால், உன்னைத்தான் நான் தேர்ந்தெடுத்திருக்கிறேன்’ என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.”

அர்த்தம், “பண்டிகை நாளில் பிறந்தவர்.”

வே.வா., “திரும்பக் கட்ட.”

வே.வா., “மரவேலைப்பாடுகள் செய்யப்பட்ட.”

அல்லது, “என் சக்தி உங்களோடு தங்கியிருந்தபோது நான் கொடுத்த வாக்குறுதியை மறந்துவிடாதீர்கள்.”

வே.வா., “அருமையான பொக்கிஷங்களும்.”

சொல் பட்டியலில் “நெஃபெஷ், சைக்கீ” என்ற தலைப்பைப் பாருங்கள்.

அதாவது, “பனிக்கட்டி.”

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்