கலிலேயா கடலில் வாழும் மீன்கள்
பைபிளில் உள்ள நிறைய வசனங்கள் கலிலேயா கடலில் மீன் பிடிக்கப்பட்டதைப் பற்றியும், அங்கிருந்த மீன்களைப் பற்றியும், மீனவர்களைப் பற்றியும் சொல்கிறது. கலிலேயா கடலில் சுமார் 18 வகையான மீன்கள் வாழ்கின்றன. அவற்றில் கிட்டத்தட்ட பத்து வகைகளைத்தான் மீனவர்கள் பிடித்தார்கள். அந்தப் பத்து வகையான மீன்களை வியாபார ரீதியில் மூன்று முக்கியப் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அதில் ஒரு பிரிவுதான் பினி. இது “பார்பஸ் கெண்டை” என்றும் அழைக்கப்படுகிறது (படத்தில் காட்டப்பட்டிருப்பது பார்பஸ் லாங்கிசெப்ஸ்) (1). அதன் மூன்று இனங்களுக்கு வாயின் ஓரங்களில் முடிபோன்ற இழைகள் இருக்கின்றன; அதனால் செமிட்டிக் மொழியில் “முடி” என்ற அர்த்தத்தைத் தரும் பினீ என்ற பெயரால் அது அழைக்கப்படுகிறது. அது மெல்லுடலிகளையும் நத்தைகளையும் சின்ன மீன்களையும் சாப்பிட்டு உயிர்வாழ்கிறது. நீளமான தலையைக் கொண்ட “பார்பஸ் கெண்டை” 75 செ.மீ. (30 அங்.) நீளத்துக்கு வளருகிறது. அதன் எடை 7 கிலோவுக்கும் அதிகமாக இருக்கலாம். இரண்டாவது பிரிவின் பெயர் முஷ்ட் அல்லது “ஜிலேபி கெண்டை” (படத்தில் காட்டப்பட்டிருப்பது டிலாப்பியா கலிலியா) (2). அரபிய மொழியில் அதற்கு “சீப்பு” என்று அர்த்தம். அதன் ஐந்து இனங்களுக்கு சீப்புபோன்ற முதுகுத் துடுப்பு இருப்பதால் அதற்கு அந்தப் பெயர். ஒரு வகையான முஷ்ட் சுமார் 45 செ.மீ. (18 அங்.) வளருகிறது. அதன் எடை சுமார் 2 கிலோ இருக்கலாம். மூன்றாவது பிரிவின் பெயர் கின்னரேத் சாளை (படத்தில் காட்டப்பட்டிருப்பது அகான்தோபிராமா டெர்ரே சான்க்டே) (3). இந்த சாளை மீன் பார்ப்பதற்கு ஒரு சின்ன ஹெர்ரிங் மீன்போல் இருக்கிறது. பழங்காலத்திலிருந்தே இந்த மீன் பதப்படுத்தப்பட்டு வருகிறது.
சம்பந்தப்பட்ட வசனங்கள்: