பக்கம் இரண்டு
“ஏறக்குறைய பூமியில் குடியிருப்பவர்களில் ஐந்தில் ஒரு பாகம் 15-க்கும் 24-க்கும் இடைப்பட்ட வயதுகளிலுள்ள இளைஞர் ஆவர்.” இவ்விதமாக அறிவிப்பு செய்தது ஐ.நா. க்ரானிக்கல். இந்தப் புதிய பத்தாண்டின் ஆரம்பத்தில் உலகின் இளைஞர் மக்கள் தொகை 100 கோடி இலக்கத்தை எட்டிவிட்டதாக மதிப்பிடப்பட்டது! இன்றைய இளைஞர் கவனத்தை ஈர்க்கின்ற—கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய ஆற்றல் மிகுந்த ஒரு சக்தியாக இருக்கின்றனர்.
சைக்காலஜி டுடே, பத்து வித்தியாசமான தேசங்களிலுள்ள 6.000 வளரிளமைப் பருவத்தினரை வைத்து செய்யப்பட்ட ஒரு சுற்றாய்வைப் பற்றி அறிக்கை செய்தது, பொருளாதார அந்தஸ்திலும் கலாச்சாரத்திலும் மாபெரும் ஏற்றத்தாழ்வுகள் இருந்தபோதிலும், இளைஞர்கள் “குறிப்பிடத்தக்க வகையில் ஒரே மாதிரியாக” இருக்கும் மனநிலைகளையும் மதிப்பீடுகளையும் வெளிப்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டது. இப்படிப்பட்ட சுற்றாய்வுகளிலிருந்து உலகெங்கிலுமுள்ள இந்நாளைய இளைஞரின் வர்ணனை தோன்றியுள்ளது, அது வெளிப்படுத்தும் காரியங்கள் உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தக்கூடும்.