“முட்டாள்தனமாக எதையும் செய்துவிடாதே அல்லது உன்னைக் கொன்றுவிடுவேன்”
ஒரு துப்பாக்கியின் வாய்முகப்பு கார் ஜன்னலின் துவாரம் வழியாக ஊடுருவி என் தலையை நோக்கி குறிவைக்கப்பட்டிருக்கிறது. ஒரு குரல் சொன்னது:
“பெண்ணே, என்னைப் பார்க்காதே. கதவைத் திற. பயணிகள் உட்காரும் இடத்திற்கு நகர்ந்து செல்.” என்னிடம் சொல்லப்பட்டபடியே செய்தேன். இன்னும் துப்பாக்கியை என்னிடமாக குறிவைத்துக்கொண்டு மெதுவாக சக்கரத்தின் பின்னாலிருந்து புகுந்துவிட்டான் அந்த ஆள்.
“வங்கியின் சாவி உன்னிடம் இருக்கிறதா?”
“என்னிடம் சாவி இல்லை. திறப்பதற்காக எந்த நிமிடமும் யாராவது ஒருவர் இங்கு வந்துவிடுவார்.”
“முட்டாள்தனமாக எதையும் செய்துவிடாதே,” அவன் எச்சரித்தான், “அல்லது உன்னைக் கொன்றுவிடுவேன்.” அவன் என் காரைக் கிளப்பி ஓட்டி சென்றான்.
இது ஒரு பழக்கமாகிக்கொண்டிருந்தது. நான் டிரஸ்ட் கம்பெனி வங்கியின் கிளை ஒன்றில் பணப்பொறுப்பாளராக இருந்தேன். கடந்த ஏப்ரலில் ஒரு பெண் தன் பணப்பையை என்னிடமாக நீட்டிக்கொண்டு கூறினாள்: “இதனுள் ஒரு துப்பாக்கி இருக்கிறது. பணத்தை ஒப்படைத்துவிடு.” நான் அவ்வாறே செய்தேன்.
சில வாரங்களுக்குப்பின், ஓர் ஆள் என்னிடமுள்ள பணபரிமாற்றம் செய்யும் ஜன்னலிடமாக வந்தான். அவனுடைய துப்பாக்கி தெளிவாகவே தெரிந்தது. “என்னிடம் பணத்தைக் கொடு.” ஒரு குவியலான பணச்சீட்டுகளை அவனிடமாகத் தள்ளிவிட்டேன்.
இனிமேலும் என்னால் இதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இன்னொரு கிளைக்கு மாற்றல் செய்யும்படி கேட்டேன். என்னுடைய வேண்டுதல் கொடுக்கப்பட்டது. எனவே இப்போது, இந்த மே 23, வியாழன் அன்று காலை, ஜார்ஜியாவிலுள்ள கொலம்பஸின் பீச்ட்ரீ மால் கிளை என்ற புதிய கிளையின் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் என்னுடைய காரினுள் உட்கார்ந்திருந்தேன். அது திறப்பதற்காக காத்துக்கொண்டிருந்தேன். சமயம் 8:25. நான் வழக்கமாக, வேலைக்குச் சில நிமிடங்கள் முன்னதாக வந்து, அந்த நாளுக்குரிய பைபிள் தினவசனத்தை வாசிப்பேன். இந்தக் குறிப்பிட்ட காலையில், வசனம் மத்தேயு 6:13 ஆக இருந்தது; அது சொல்கிறது: “தீயோனிடமிருந்து எங்களை இரட்சித்துக்கொள்ளும்.” (NW) நான் அப்போது அதை உணரவில்லை; ஆனால் அடுத்த இரண்டு நாட்களுக்கு அந்த வசனம் எனக்கு மிக முக்கியமானதாக இருக்கப்போவதாக இருந்தது.
இந்தப் புதிய கிளையில் நான் வேலைசெய்து இரண்டு வாரங்களே ஆயிற்று; இன்னும் சாவி என்னிடம் கொடுக்கப்படவில்லை. என்னுடைய கார் ஜன்னல் சற்று இறக்கிவிடப்பட்டிருந்தது; துப்பாக்கியின் வாய்முகப்பு ஜன்னலில் தோன்றியபோது, அப்போதுதான் வாசித்திருந்த தினவாக்கியத்தைக்குறித்துச் சிந்தித்துக்கொண்டிருந்தேன். முன்னர் இரண்டு தடவைகள், திருடர்கள் வங்கி பணத்துடன் தலைமறைவாகிவிட்டனர். இந்த முறை என்னோடு அது சம்பவிப்பதாய் இருந்தது.
அவன் ஓட்டிக்கொண்டு சென்றபோது, நான் சத்தமாக ஜெபிக்க துவங்கினேன்: “யெகோவாவே, தயவுசெய்து எனக்கு உதவும்!”
“யெகோவா யார்?” என்னைக் கடத்திச்செல்பவன் வினவினான்.
“அவர்தான் நான் வணங்கும் கடவுள்.”
“என்னைப் பார்க்காதே! நீ ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக்கொண்டிரு! யெகோவா . . . அதுதான் உவாட்ச்டவர், யெகோவாவின் சாட்சிகள், இல்லையா?”
“ஆம்.”
“நியூ யார்க் நகரில் வாழ்ந்தபோது எனக்கு அவர்களைத் தெரியும். நான்தானே ஒரு கத்தோலிக்கன். என்னவாக இருந்தாலும், நீ மெளனமாக உன் ஜெபத்தைச் செய்துகொள். எனக்கு அதைக் கேட்க விருப்பமில்லை.” ஆனால் மேலும் அவன் கூறினான்: “நான் உனக்கு எந்தக் கேடும் செய்யமாட்டேன். எனக்கு வேண்டியது பணம், நீ அல்ல. முட்டாள்தனமாக எதையும் செய்துவிடாதே, உனக்கு எந்தக் கேடும் வராது.”
நாங்கள் போய்க்கொண்டிருக்கும் போதல்லாம், அவன் என்னிடம் அந்த வங்கியைப்பற்றியே கேட்டுக்கொண்டிருந்தான். அங்குத் திறப்பதற்கு யார் வருவார்கள்? பொதுமக்களுக்கு அது எத்தனை மணிக்குத் திறந்து வைக்கப்படுகிறது? அங்கு எவ்வளவு பணம் இருக்கும்? வங்கியைப்பற்றி அநேக கேள்விகள். என்னால் இயன்ற அளவிற்குப் பதிலளித்துக்கொண்டும், அதே சமயத்தில், மெளனமாக ஜெபித்துக்கொண்டும் இருந்தேன். இதைப் பத்திரமாகக் கடந்து செல்வதற்கு எனக்கு உதவும்படி யெகோவாவிடம் மன்றாடிக்கொண்டிருந்தேன்.
சுமார் பத்து நிமிடங்களுக்குப்பின், மரங்களினூடே ஓர் அழுக்குப் பாதையைத் தெரிந்துகொண்டான். அவன் யாரையோ சந்திப்பதற்கு எதிர்பார்த்ததாகத் தோன்றியது, ஏனென்றால் “அவன் எங்கே? அவன் எங்கே?” என்று அவன் தனக்குள்ளேயே முணங்கினான். காரை நிறுத்திவிட்டு, வெளியே வந்து, இருக்கைகளில் சறுக்கி ஓட்டுநரின் பக்கமாக என்னை வெளிவரச் செய்தான்; எப்பொழுதும் என்னுடைய பின்புறம் அவனுக்குமுன் இருப்பதாகவே வைத்துக்கொண்டான். துப்பாக்கி என் பக்கமாக நீட்டிக்கொண்டிருக்க, என் கண்கள் அவனைப் பார்க்காதபடி மண்ணையே நோக்க, அந்தக் காட்டுப்பகுதியினூடே கொண்டு சென்றான். அடர்ந்த புதர்கள் என்னுடைய உடையில் உராய்ந்திட, குதியடிக்கட்டையை உடைய செருப்புகளோடு செல்வது எனக்குக் கடினமாக இருந்தது. ஒரு மரத்தினிடமாக என்னைக் கொண்டுசென்று, அடிமரத்தைப் பார்த்திருக்கும்படி செய்து, பெரிய குழாய்களை அடைக்கும் ஒட்டுநாடாக்களை என் கண்கள் மேலும் வாய் மீதும் போட்டான். என் கைகளை முதுகுக்குப் பின்னால் சேர்த்துவைத்துக் கட்டி, என்னையும் அடிமரத்தையும் சூழ நாடாவால் மரத்தோடு இணைத்துக் கட்டினான்.
இதற்குள் நான் பயங்கரமாக நடுங்கினேன். அதை நிறுத்தும்படி அவன் கட்டளையிட்டான். என்னால் முடியவில்லை என்று அந்த நாடாவினூடே முணுமுணுத்தேன். “வெறுமென அசையாமல் இரு. யாரோ ஒருவர் உன்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறார், நீ விடுவிக்கப்படுவதற்காக போரடிக்கொண்டிருப்பதைக் கண்டால் அவர் உன்னைக் கொன்றுவிடுவார்.” அதோடு அவன் என்னை விட்டுச் சென்றான். “தீயோனிடமிருந்து எங்களை இரட்சித்துக்கொள்ளும்” என்று வாசித்த அந்தத் தினவாக்கியத்தை ஞாபகப்படுத்திக் கொண்டு இந்த நேரத்திற்கு அது எவ்வளவு பொருத்தமானது என சிந்தித்துக்கொண்டிருந்தேன்.
சிறிது நேரத்தில் அவன் திரும்பினான், ஆனால் வேறொரு காரில்—நான் என்னுடையதை அதன் இயந்திர சத்தத்தின் மூலம் அடையாளம் கண்டிருப்பேன். அவன் தன்னுடையதற்கு அதை மாற்றீடு செய்திருக்கக்கூடும். என்னுடைய இடையிலும் அடிமரத்திலுமாக இருந்த நாடாவை எடுத்துவிட்டான்; ஆனால் கண்களிலும் வாயிலும் இருந்ததை அப்படியே விட்டுவிட்டான், என்னுடைய மணிக்கட்டுகள் இன்னும் என் முதுகுக்குப்பின்னால் கட்டப்பட்டிருந்தன. திரும்பவுமாக அந்தப் புதர்களினூடே காரிடமாகக் கொண்டு சென்றான். அங்குச் சாமான்கள் ஏற்றும் பெட்டி பகுதியைத் திறந்து, என்னை ஒரு மூட்டையாக அதனுள் போட்டு, அதன் மூடியைப் படாரென்று அடைத்துவிட்டு, ஓட்டி சென்றான்.
நான் திரும்பவுமாக ஜெபிக்கத் தொடங்கினேன். அந்த நாளின் பெரும்பகுதியில் ஜெபித்துக்கொண்டே இருந்தேன்; என்னென்ன நேரிடவிருக்கிறதோ அவற்றைப் பொறுத்துக்கொள்ள சக்தி கொடுக்குமாறு யெகோவாவிடம் கேட்டுக்கொண்டிருந்தேன். அவன் நிறுத்தி, என் வாயிலிருந்த நாடாவை எடுத்துவிட்டு, வங்கியின் தொலபேசி எண்ணைக் கேட்பதற்குமுன் ஒருவேளை 15 அல்லது 20 நிமிடங்கள் சென்றிருப்போம். அதை அவனிடம் கொடுத்தேன். என்னுடைய மேலதிகாரி யார் என்று கேட்டான். அதை சொன்னபின், திரும்பவும் அந்த நாடாவை என் வாயில் போட்டுவிட்டான். அப்போதுதான் அவன் வங்கியை அழைத்து பணம் கோரினான்—அது $1,50,000 என்று பின்னர் தெரிந்துகொண்டேன்.
அவன் ஜார்ஜிடம்—அதுதான் அன்று அந்த வங்கியில் இருந்த அலுவலரின் பெயர்—பணத்துடன் அன்று மதியம் இரண்டு மணிக்கு அட்லான்டாவுக்கு தெற்கிலுள்ள ஒரு குறிப்பிட்ட தொலபேசி சாவடிக்கு வரவும், அங்கு மேலுமாக செய்யவேண்டிய காரியங்கள் சொல்லப்படும் என்றும் கூறினான். இந்த முன்னேற்றங்களைப்பற்றி எனக்குத் தெரிவித்துக்கொண்டிருந்தான்; மேலும், நான் சீக்கிரத்தில் விடுவிக்கப்படுவேன் என்றும் எனக்கு உறுதியளித்தான். நான் இன்னும் இந்தப் பெட்டியினுள் அடைக்கப்பட்டு, இறுக்கிவைக்கப்பட்டிருந்தேன், மேலும் எப்பொழுதும் அனலாகிக்கொண்டே இருந்தது. மணிநேரங்கள் இழுத்துக்கொண்டே சென்றன. ஓரிரண்டு முறைகள் நான் எப்படி இருக்கிறேன் என்று என்னைப் பார்த்துக்கொண்டான். “உன் கடவுளாகிய யெகோவா உன்னை கவனித்துக் கொண்டிருக்கிறார்,” என்று அவன் குறிப்பிட்டான். ஆகவே, காலையிலிருந்து நான் யெகோவாவிடம் செய்த ஜெபத்தை அவன் ஞாபகத்தில் வைத்திருந்தான்.
என் குடும்பத்தைப்பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். நான் காணாமற்போய்விட்டேன் என்றாவது அவர்களுக்குத் தெரியுமா? தெரிந்திருந்தால், அவர்கள் எவ்வாறு பிரதிபலிக்கின்றனர்? நான் என்னைவிட அவர்களைப்பற்றி மிகவும் கவலையுற்றிருந்தேன். வெவ்வேறு வசனங்களைப்பற்றி சிந்தித்தேன். யெகோவாவின் நாமம் ‘ஒரு பலத்த துருகமாகவும் நீதிமான் அதற்குள் ஓடி சுகமாயிருப்பது’ பற்றிய ஒன்று. மேலும் ‘யெகோவாவின் நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்.’ பவுல் அப்போஸ்தலனுடைய “இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்” என்ற அறிவுரையை நான் நிச்சயமாக பொருத்திப் பிரயோகித்துக்கொண்டிருந்தேன். (நீதிமொழிகள் 18:10; ரோமர் 10:13; 1 தெசலோனிக்கேயர் 5:17) இதோடுகூட, ‘யெகோவா, என் கன்மலை, என் பெலன், என் வல்லமை’ மற்றும் ‘யெகோவா என் அடைக்கலம்’ என்பவைபோன்ற ராஜ்ய பாட்டுகளின் வார்த்தைகளும் ராகங்களும் என் மனதில் ஓடிக்கொண்டிருந்தன.
காவற்கோபுரம் பத்திரிகையில் நான் வாசித்திருந்த அனுபவங்களிலிருந்து, தனிப்பட்ட சோதனைகளைச் சகித்துக்கொள்ள யெகோவா அநேகருக்கு எவ்வாறு உதவியிருக்கிறார் என்பதை நினைவுக்குக் கொண்டு வந்தேன். ஒரு வங்கி திருட்டில் ஒரு சாட்சி பிணையாளியாக வைக்கப்பட்ட, விழித்தெழு! பத்திரிகையில் வந்த ஒரு சம்பவம் என் மனதில் மேலோங்கி நின்றது.a அவள் கழுத்து இறுக பிடிக்கப்பட்டிருக்கையில் அந்தத் திருடன் ஒரு கைவீச்சுக்குண்டைச் சுழற்றிக்கொண்டு அவளை மிரட்டிக்கொண்டிருந்தான். அவளுடைய கடும் சோதனை பல மணிநேரங்களுக்குச் சென்றது. காவல்துறையினர் வெளியே இருக்க அவளும் அந்தத் திருடனும் உள்ளே மாட்டிக்கொண்டனர். அவளும் யெகோவாவிடம் ஜெபிப்பதன்மூலமும் வேதவசனங்களை ஞாபகப்படுத்திக்கொள்வதன் மூலமுமே அவளுடைய கடும் சோதனையைச் சகித்தாள்; அவள் பாதுகாப்பாக தன்னுடைய குடும்பத்தோடு திரும்ப சேர்க்கப்பட்டதன் மூலம் அவளுடைய திடமனதிற்குப் பலனளிக்கப்பட்டாள்.
முடிவாக, கார் நின்றுவிட்டது, ஓட்டுபவன் வெளியே இறங்கிவிட்டான். என்னுடைய கடிகாரத்தை என்னால் பார்க்கமுடியவில்லை, ஏனென்றால் முதுகுக்குப் பின்னால் கட்டி வைக்கப்பட்ட என்னுடைய மணிக்கட்டில் அது இருந்தது; ஆனால் சரியாகவே இரண்டு மணி இருக்கும் என்றும், வங்கியில் உள்ள ஜார்ஜுடன் அவன் தொடர்புகொள்ள சென்றிருக்கிறான் என்றும் நான் நினைத்தேன். என்னுடைய விடுதலை சீக்கிரமாக வந்துவிடும் என நான் நம்பிக்கையாக இருந்தேன். ஆனால் அது அந்த விதத்தில் செயல்படவில்லை. தெளிவாகவே, அவனுடைய திட்டங்கள் சுமூகமாக செல்லவில்லை; எனவே நாங்கள் திரும்பவும் சென்றுகொண்டே இருந்தோம்.
திடீரென்று இயந்திரம் விரைந்தது, கார் முழு வேகத்தில் சென்றுகொண்டிருந்தது! அவன் மிக அதிக வேகத்தில் ஓட்டிக்கொண்டிருந்தது மட்டுமல்லாமல், போக்குவரவை ஏய்த்துக்கொண்டு செல்வதுபோல உள்ளும் வெளியிலுமாக வளைத்து நெளித்துக்கொண்டு சென்றான். நான் அந்தப் பெட்டியினுள் அங்குமிங்குமாக வீசப்பட்டேன். என் உடல் தரைமட்டத்திலிருந்து துள்ளியது, என் தலை பெட்டியின் எல்லா பக்கங்களிலும் மோதியது. என்னுடைய கைகள் முதுகுக்குப் பின்னால் கட்டப்பட்டிருக்க, நான் எந்தத் திசைக்கு வேண்டுமானாலும் தூக்கியெறியப்படுவதால் என்னைக் காத்துக்கொள்ள அல்லது அந்த அடிகளிலிருந்து என்னைத் தற்காத்துக்கொள்ள எனக்குச் சக்தியில்லாதிருந்தது. அது ஒருவேளை பத்து நிமிடங்களுக்கு நீடித்திருக்கலாம், ஆனால் அதைவிட நீண்டநேரம்போல் தோன்றியது.
சற்று நேரத்தில் கார் நிறுத்தப்பட்டது; நான் எப்படி இருக்கிறேன் என்று பார்ப்பதற்கு அவன் பெட்டியைத் திறந்தான். தெளிவாகவே, நான் கடுமையாக குலுக்கப்பட்டு, பட்ட அடிகளினின் காரணமாக துயரத்திலிருந்தேன். என் இருதயம் படபடவென்று அடித்துக்கொண்டிருந்தது; மேலும் கஷ்டப்பட்டு மூச்சுவிட்டுக்கொண்டிருந்தேன். உடல் முழுவதும் வியர்வை, ஆனால் துடைப்பதற்கோ என் கைகள் எனக்குப்பின் கட்டப்பட்டிருந்தன. என் கண்கள் மற்றும் வாயை மூடும் வகையில் நாடாக்கள் செல்ல அவற்றிற்கு இடையிலிருந்து எட்டிப்பார்க்கும் என்னுடைய மூக்குவழியாய் மட்டும் மூச்சுவிடுவது அதிக கடினமாகவே இருந்தது. எளிதாக மூச்சுவிடுவதற்கும், வேண்டுமானால் பேசுவதற்கும் அவன் சற்றுநேரம் என் வாயின் மேலிருந்த நாடாவை எடுத்துவிட்டான்.
ஒருவேளை தங்களுடைய கவனிக்குமிடத்திலிருந்து காவல்துறையினர் என்னுடைய காரைக் கண்டுபிடித்து, பின்தொடர்ந்தனர் என்று அவன் கூறினான். அதனால்தான் மிக வேகமாகவும் மற்ற கார்களை மோதிவிடுவதைத் தவிர்ப்பதற்காக வளைந்தும் நெழிந்தும் சென்றிருக்கிறான். காவல்துறையினரிடம் பிடிபடாமல் தப்புவதில் அவன் வெற்றி அடைந்தான். அவனுக்கு அதுவரை பணம் கிடைக்கவில்லையென்றும், ஆனால் அவன் இன்னும் சிறிது நேரம்பிடிக்கும் வேறுமுறையை முயற்சிசெய்யப்போவதாகவும், நான் எதற்கும் கவலைப்படவேண்டாம் என்றும் விவரித்தான். எனக்கு உடல்சார்ந்த தீங்கு செய்யமாட்டான் என்றும் அது அவனுடைய உள்நோக்கம் இல்லை என்றும் திரும்பவுமாக உறுதியளித்தான். அவனுக்குத் தேவை பணம், அதை அடைவதற்கு நான்தான் முக்கியமானவளாக இருந்தேன். இவ்வாறு அவன் கூறியதும் நான் மனஅமைதி அடைந்தேன், ஏனென்றால் அவன் எனக்குத் தீங்கிழைக்கத் தொடங்கினால், நான் சரியான விதத்தில் பிரதிபலிக்க உதவும்படி நான் யெகோவாவிடம் ஜெபம் செய்திருந்தேன்.
மணிநேரங்கள் இழுத்துக்கொண்டே சென்றன. மேலுமான தொலபேசி அழைப்பொலிகளுக்காக அல்லது பணத்தைப் பெறும் முயற்சிகளுக்காக இரு முறை அவன் நிறுத்தியிருக்கக்கூடும். ஒரு முறை நிறுத்தியபோது, டாங்கில் பெட்ரோல் நிரப்பும் சத்தம் கேட்டது. நான் மிகவும் குறுக்கப்பட்ட நிலையில் இருந்ததால், முடிந்தவரை திசை திரும்புவதற்கு முயற்சிசெய்து கொஞ்சம் சத்தம் உண்டாக்கினேன். அவன் உடனே பெட்டியைத் திறந்து, எந்தச் சத்தமும் உண்டாக்கக்கூடாதென எச்சரித்தான். அப்போது மணி என்னவாயிருக்கும் என நான் யோசித்துக்கொண்டிருந்தேன். முதல் தடவை இரண்டு மணி என்று சொன்னதைத்தவிர மற்றபடி அவன் குறிப்பாக எதுவும் என்னிடம் சொல்லவில்லை. வானூர்தி நிலையத்திலிருந்து விமானங்கள் புறப்படும் மற்றும் வந்திறங்கும் சத்தம் கேட்டதால், அட்லான்டா பகுதியில் இருக்கிறோம் என்று எனக்குத் தெரிந்தது.
அதன் பின்னர், அவன் பெட்டியைத் திறந்து, ‘இன்னொரு மணிநேரம் ஆகப்போகிறது. இன்னும் ஒரு மணிநேரம்தான், நீ விடுவிக்கப்படுவாய்,’ என்று கூறிக்கொண்டிருந்தான். நான் இனிமேலும் அவனை நம்பவில்லை. வெறுமென எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். வெளியில், மிகவும் வெப்பமான நாளாக இருக்கவில்லை, ஆனால் அந்தப் பெட்டியினுள் நெருக்கமாகவும், புழுக்கமாகவும், வெப்பமாகிக்கொண்டும் இருந்தது. எனக்கு மிகவும் வியர்த்தது, மூச்சுவிட மிகக் கஷ்டமாகிக்கொண்டிருந்தது. இன்னும் எவ்வளவு நேரம் என்னால் மூச்சுவிட முடியும் என்பதைக்குறித்து நான் நிச்சயமற்றிருந்ததால் உயிர்த்தெழுதலைப்பற்றி ஜெபிக்க ஆரம்பித்துவிட்டேன்.
நான் மரித்துவிட்டால், என் குடும்பம் அதைச் சமாளித்துக்கொள்ள யெகோவா உதவி செய்வார் என்று நம்பிக்கை வைத்திருந்தேன். நான் என்னையும் என் குடும்பத்தையும்பற்றி அக்கறையுள்ளவளாயிருந்தேன். நான் மரித்துவிட்டாலும் யெகோவா என்னை உயிர்த்தெழுதலில் திரும்ப கொண்டுவருவார் என்றும், அவர் வாக்குத்தத்தம் செய்துள்ள நீதியான புதிய உலகில் என் குடும்பத்துடன் திரும்பவுமாக சேர்க்கப்படுவேன் என்றும் எனக்குத் தெரியும். (யோவான் 5:28, 29; 2 பேதுரு 3:13) யெகோவாவையும் அவருடைய வாக்குத்தத்தங்களையும் பற்றிய எண்ணங்களே என்னை நிலைத்திருக்கச் செய்தன.
ஓட்டுபவன் திரும்பவும் பெட்டியைத் திறந்தான். அப்போது இருட்டாக இருந்தது—பல மணிநேரங்கள் இருட்டாக இருந்திருக்கிறது. அவன் பல தொலபேசி தொடர்புகளைச் செய்திருந்தான். அவனுக்குத் தேவையான மீட்புத் தொகயைத் திரட்டுவதற்காக அவன் எடுத்த எந்த முயற்சியும் வெற்றியடையவில்லை. முயற்சி செய்து தளர்ந்துவிட்டதாகவும், மறுபடியுமாக என்னைக் கொலம்பஸுக்குக் கொண்டுபோய் விட்டுவிடப் போவதாகவும் கூறினான். நாங்கள் திரும்ப சென்றெட்டுவதற்குள், நான் முழுமையாக களைத்துப்போயிருந்தேன். நான் வெறுமென அந்தப் பெட்டிக்குள் கிடந்து, இவை யாவும் முடிவுறுவதற்காக விரும்பிக்கொண்டிருந்தேன். ஆனால் நான் திரும்பவும் என்னைத் திடப்படுத்திக்கொண்டு, ‘இல்லை, நான் கவனமாக இருக்கவேண்டும். என்னை விழிப்புடன் வைத்துக்கொள்ளவேண்டும். சீக்கிரத்தில் எல்லாம் முடிந்துவிடப்போகிறது. அவன் முயற்சியைக் கைவிட்டுவிட்டான்; என்னை வீட்டிற்குக் கொண்டுசெல்ல போகிறான்,’ என்று நினைத்தேன்.
என்னுடைய காரிடமாக என்னைக் கொண்டுபோய் விடப்போனான்; ஆனால் அது எங்கிருக்கும் என்று அவன் நினைத்தானோ அது அங்கிருக்கவில்லை. யெகோவாவின் சாட்சிகளின் ஒரு ராஜ்ய மன்றத்திற்கு அவன் என்னைக் கொண்டுசென்றான்; ஆனால் ஒரு பயணக்கண்காணி தங்கியிருந்ததால் வெளிச்சம் இருந்தது. “ஆட்கள் இருக்கும் இடத்தில் நான் உன்னை விடப்போவதில்லை!” இருப்பினும், அவன் என்னை முதல்முறையாக பெட்டியிலிருந்து வெளியே விட்டான். நான் இன்னும் என் கண்கள் கட்டப்பட்டவளாகவும், என் கைகள் என் முதுகுக்குப்பின்னால் கட்டப்பட்டும் இருந்தேன், ஆனால் என் வாயிலிருந்து அந்த நாடாவை எடுத்துவிட்டான். எனக்குத் தலைச்சுற்றியது, நடக்கவும் முடியவில்லை—என் கால்கள் மரத்துப்போய் இருந்தன. அவன் திரும்பவும் என்னை அந்தப் பெட்டியினுள் அடைத்து, அந்த வழியில் கொஞ்சம் தூரம் என்னைக் கொண்டுசென்று, பாப்டிஸ்ட் சர்ச்சுக்குப் பின்னால் விட்டுவிட்டுப் போய்விட்டான். அப்போது வெள்ளிக்கிழமை விடியற்காலை மணி 1:30.
எனக்கு உண்மையிலேயே தலைசுற்றுவது போலிருந்தது; உட்கார்ந்தேன், மயங்கிவிழுந்துவிட்டேன். எனக்கு நினைவிலிருக்கும் கடைசி காரியம், அவனுடைய கார் கடந்து சென்றதைக் கேட்டதுதான். மூன்று மணிநேரங்களுக்குப்பின் நான் என்னுடைய நினைவிற்குத் திரும்பியபோது, நான் புல்லிலும் மணலிலும் கிடந்தேன். என்னுடைய மணிக்கட்டிலிருந்த நாடாக்களை எடுத்துவிட்டு, என் கண்களிலிருந்தும் எடுத்துவிட்டேன். என் கடிகாரத்தைப் பார்த்தேன். 5 ஆக 15 நிமிடங்கள் இருந்தன. அந்தப் பெட்டியில் 17 மணிநேரங்களும், மயக்கமடைந்த நிலையில் 3 மணிநேரங்கள் தரையிலும் நான் இருந்திருக்கிறேன். நடுங்கும் மரத்துப்போன கால்களால் சாலையில் நடந்தேன். ஒரு மனிதன் தன் சரக்கு வண்டியில் வண்டிபாதையிலிருந்து பின்னால் வந்துகொண்டிருந்தான். நான் கடத்திச்செல்லப்பட்டிருந்ததாகவும் என் வீட்டையும் காவல்துறையினரையும் அழைக்கவேண்டும் என்றும் அவனிடம் கூறினேன். பத்து நிமிடங்களில் காவல்துறையினர் அங்கு வந்துவிட்டார்கள். அது முடிந்தது.
நான் பரிசோதிக்கப்படுவதற்காக மருத்துவ மையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டேன். எனக்கு 20 மணிநேரங்களுக்குக் குடிக்கவோ சாப்பிடவோ ஒன்றுமில்லாதிருந்தது, குழியலறை வசதிகளும் இருக்கவில்லை; கடந்த மூன்று மணிநேரங்களாகதான் தூங்க முடிந்தது. என் உடல் காயமடைந்தும், என் உடை சேறாக்கப்பட்டும், என் முடி கலைந்தும், என் முகம் அழுக்காகவும் நாடாவின் அடையாளங்களால் உருக்குலைக்கப்பட்டும் இருந்தது. ஆனால் இதில் எதுவும் நான், என் கணவர் ப்ராட், என் தாய் க்ளென்டா, இன்னும் என்னைத் திரும்ப வரவேற்பதற்காகக் கூடியிருந்த அநேக உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் திரும்ப ஒன்றுசேருவதைக் கெடுத்துவிடவில்லை. காத்துக்கொண்டிருந்து வருத்தப்படும் அவர்களுடைய கடுஞ்சோதனை என்னுடையதைக் காட்டிலும் வித்தியாசமானதாய் இருந்தாலும், ஒரு விதத்தில் அதிக வேதனைமிக்கதாகவும் இருந்திருக்கும்.
கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்கும் ஒரு வாக்குமூலம் கொடுப்பதற்காகவும் மருத்துவ மையத்திலிருந்து நான் காவல் நிலையத்திற்குச் சென்றேன். மே 25, 1991 தேதியிட்ட கொலம்பஸ் லெட்ஜர்-என்குவய்ரர் அறிவிக்கிறபடி, தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள அந்தக் கடத்திச்சென்றவர், “சென்ற வாரஇறுதியில், ஒரு கற்பழிப்பிற்காகவும், மிகைப்பட்ட ஆண்கள் புணர்ச்சிக்காகவும் குற்றஞ்சாட்டப்பட வேண்டும்,” என்று காவல்துறையினர் கூறினர்; நான் அவனால் கடத்திச்செல்லப்படுவதற்குச் சற்று முன்னரே இது நடந்திருக்கிறது. மேலும் இந்தப் பத்திரிகை வெளியீடு, இந்தச் செய்தி வெளியாகாதபடிச் செய்வதற்காக காவல்துறை அதிகாரி வெதரிங்டன் கொடுத்த காரணத்தையும் அறிக்கை செய்தது: “நாங்கள் உண்மையிலே லீசாவின் உயிரைக்குறித்து அக்கறையுள்ளவர்களாய் இருந்தோம்.” இவை யாவும் நான் யெகோவாவின்மேல் சார்ந்திருந்ததனால்தான் பாதுகாக்கப்பட்டேன் என்று மேலுமாக நம்பச் செய்தது.
வீட்டிற்குச் சென்று வெந்நீரில் என் வாழ்விலேயே மிகச் சிறந்த குளிப்பைக் குளித்து, ஆரோக்கியத்தை மீட்கும் சுகமான உறக்கத்திற்குச் சென்று, இந்த இருதயத்திற்கு அனலூட்டும் எண்ணத்தோடு அயர்ந்த தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டேன்: மத்தேயு 6:13-ன் தினவாக்கியம் எனக்கு இன்னும் ஆறுதலளிப்பதாய் இருந்தது, மேலும் சங்கீதம் 146:7-ல் சொல்லப்பட்டவிதமாகவே, ‘கட்டிலிருந்து விடுதலையாக்கப்படுதலை,’ நான் அனுபவித்தேன்.—லீசா டாவன்போர்ட் கூறியது. (g91 11/22)
[அடிக்குறிப்புகள்]
a டிசம்பர் 8, 1990, விழித்தெழு! (ஆங்கிலம்), பக்கங்கள் 17-19-ஐ பார்க்கவும்.
[பக்கம் 21-ன் சிறு குறிப்பு]
“மெளனமாக உன் ஜெபத்தைச் செய்துகொள். எனக்கு அதைக் கேட்க விருப்பமில்லை”
[பக்கம் 21-ன் சிறு குறிப்பு]
சாமான்கள் ஏற்றும் பெட்டிப் பகுதியைத் திறந்து, என்னை ஒரு மூட்டையாக அதனுள் போட்டு, அதன் மூடியைப் படாரென்று அடைத்துவிட்டு, ஓட்டிச் சென்றான்
[பக்கம் 22-ன் சிறு குறிப்பு]
நான் தரைமட்டத்திலிருந்து துள்ளினேன், என் தலை பெட்டியின் எல்லா பக்கங்களிலும் மோதியது
[பக்கம் 23-ன் சிறு குறிப்பு]
நான் வெறுமென அந்தப் பெட்டிக்குள் கிடந்து, இவை யாவும் முடிவுறுவதற்காக விரும்பிக்கொண்டிருந்தேன்
[பக்கம் 24-ன் சிறு குறிப்பு]
மூன்று மணிநேரங்களுக்குப்பின் என்னுடைய நினைவிற்குத் திரும்பியபோது, நான் புல்லிலும் மணலிலும் கிடந்தேன்