“புகைத்தல் நாறுகிறது”
கலிபோர்னியாவின் சுகாதார சேவைத்துறை சமீப ஆண்டுகளில் புகைத்தலுக்கு எதிராக மும்முரமான கல்விபுகட்டும் திட்டம் ஒன்றை நடத்தியிருக்கிறது. அந்த மாவட்டம் முழுவதிலும் விளம்பரப் பலகைகளில் அறிவிக்கப்பட்டிருக்கும் செய்தி சுருக்கமாகவும் நேரடியாகவும் உள்ளது. இந்த விளம்பரச் செய்திகளில் சில யாவை? “புகைப்பவர்கள் துர்ப்பழக்கத்திற்கு அடிமைகள். புகையிலை கம்பெனிகள் போதைமருந்து விற்பவை. புகைத்தல் நாறுகிறது.” “புகைப்பவர்கள் வெளியே விடும் புகையை புகைக்காதவர்கள் சுவாசிப்பதால் இந்த வருடம் 50,000 புகைக்காதவர்கள் மரணமடைவர். புகைத்தல் நாறுகிறது.” மற்றொரு விளம்பரப் பலகையில் ஒரு சிகரெட் பெட்டியிலுள்ள படத்தின்கீழ், “இப்போது வாங்குங்கள். பின்பு செலுத்துங்கள்” என்று எழுதப்பட்டிருக்கிறது. நிச்சயமாகவே உங்கள் உயிரைச் செலுத்துவீர்கள். ஸ்பானிய மொழியில் ஒரு விளம்பரம் இவ்வாறு சொல்கிறது: “மீ முவீரோ போர் ஃப்யூமார்.” இது வார்த்தை ஜாலமாக இருக்கிறது. இது “நான் புகைப்பதற்காக சாகத் தயார்” அல்லது “புகைப்பதனால் நான் சாகிறேன்” என்று வாசிக்கப்படலாம். பாதி மண்டை ஓடும் பாதி முகமும் கொண்ட படம் இக்கருத்தைத் தெளிவாக்குகிறது.
புகையிலையையும் நிக்கோட்டினையும் விட்டு ஜனங்களைத் திருப்புவதற்கு சில நாடுகளில் பயன்படுத்தப்படும் மற்றொரு தொழில்முறை ஏற்பாடு, “மரணம்” என்ற பெயரில் விற்கப்படும் ஒரு சிகரெட். அதன் கருப்புநிற அட்டைப்பெட்டியின் மேல் மண்டை ஓடும் இரண்டு எலும்புகளும் கொண்ட படமும் “சிகரெட்டுகள் துர்ப்பழக்கத்தை உண்டாக்கி தளர்வூட்டும். நீங்கள் புகைப்பதில்லையென்றால் அப்பழக்கத்தை ஆரம்பிக்க வேண்டாம். புகைத்துக் கொண்டிருந்தீர்களென்றால் அதை நிறுத்துங்கள்,” என்ற செய்தியும் பொறிக்கப்பட்டிருக்கிறது.
விளம்பரப் பலகைகளில் அதிர்ச்சியூட்டும் செய்திகளைப் பயன்படுத்தும் மற்ற முறைகள் புகைப்போரின் பேரில் எந்தப் பாதிப்பையாவது ஏற்படுத்துமா என்று சொல்வது கடினம். கடந்த ஆறு ஆண்டுகளில் “கலிபோர்னியாவில் புகையிலையின் உபயோகம் 27 சதவீதம் குறைந்துள்ளது, இது தேசிய சராசரியைவிட மூன்று மடங்கு ஆகும்.” (தி வாஷிங்டன் போஸ்ட் நேஷனல் வீக்லி எடிஷன்) இந்த விளம்பரத் திட்டம் புகைப்பவர்களாக ஆகும் சாத்தியம் உள்ளவர்களையும்கூட இந்த அபாயகரமான பழக்கத்திலிருந்து விலகும்படி செய்யக்கூடும். கிறிஸ்தவர்கள் என சொல்லிக்கொள்பவர்கள் நிச்சயமாகவே இந்த அசுத்தமான, சுயநல துர்ப்பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும். பவுல் அப்போஸ்தலன் எழுதினார்: “இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டாயிருக்கிறபடியினால், பிரியமானவர்களே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலைத் தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்.”—2 கொரிந்தியர் 7:1.