எமது வாசகரிடமிருந்து
குடி எனும் கண்ணி—சிக்கிவிடுவீர்களா? (நவம்பர் 8, 2005) “சரியான சமயத்தில் அந்தக் கட்டுரை வந்தது” என்று வாசகர்கள் தங்கள் கடிதங்களில் சொல்வதை பலமுறை படித்திருக்கிறேன். நானும் ஒருநாள் அந்த வார்த்தைகளை சொல்வேன் என்று நினைக்கவேயில்லை. ஆனால், இந்தத் தொடர் கட்டுரைகளைப் படித்தபோது, இதே வார்த்தைகளைத்தான் என் வாய் முணுமுணுத்தது. வெறித்துப்போகும் அளவுக்கு நான் குடிப்பதில்லை என்றாலும், தினமும் மதுபானத்தை பயன்படுத்துவதை நினைத்து கொஞ்சம் கவலைப்பட்டேன். சரியான சமயத்தில் இந்தத் தொடர்கட்டுரைகள் கையில் கிடைத்தன; குடிப்பழக்கத்தின் ஆபத்துக்களைப் பற்றி படித்தபோது, அதை விட்டுவிடுவதற்கு அதுவே சரியான நேரம் என்பதை உணர்ந்தேன்.
கே. டபிள்யூ., ஜெர்மனி
முப்பது வருடங்களாக குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்த இலாரியோ என்பவரின் அனுபவத்தை இந்தக் கட்டுரைக் குறிப்பிட்டிருந்தது. அதை விடமுயன்றும் ‘அநேக முறை அப்பழக்கத்திற்கு திரும்பிச் சென்றதாக’ அதில் சொல்லியிருந்தார். அதோடு, சபையிலிருந்தவர்கள் ‘எப்போதும் என்கூடவே இருந்து உற்சாகம் அளித்தார்கள்’ என்றும் சொல்லியிருந்தார். அவர் கண்டிக்கப்பட்டிருக்க அல்லது சபையிலிருந்தே வெளியேற்றப்பட்டிருக்க வேண்டாமா?
ஆர். எல்., ஐக்கிய மாகாணங்கள்
“விழித்தெழு!” பதில்: இலாரியோவுடைய அனுபவத்தின் இந்த சுருக்கமான விவரம் அவருடைய 30-வருட மதுபானப் போராட்டத்தில் எப்பொழுது அவர் முழுக்காட்டப்பட்ட கிறிஸ்தவராக ஆனார் என்பதைச் சொல்லவில்லை. சபை மூப்பர்களால் எப்போதாவது கண்டிக்கப்பட்டாரா என்பதையும் சொல்லவில்லை. இருந்தாலும், அவருக்கு ‘சரியான சமயங்களில் பைபிளிலிருந்து ஆலோசனைகள்’ கொடுக்கப்பட்டதாக அந்தக் கட்டுரை சொல்கிறது. இது, சில சமயம் நீதிவிசாரணை குழுவின் மூலம் கொடுக்கப்படுகிறது. இலாரியோவைப் போலவே, குடிப்பழக்கத்தை விட்டுவிட முயலுகிறவர்கள் சில சமயம் அப்பழக்கத்தில் மறுபடியும் விழுந்துவிட நேரிடலாம். இவ்விஷயத்தில் ஒரு முழுக்காட்டப்பட்ட கிறிஸ்தவர் உட்படும்போது, காரியங்கள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பினால், தயவுசெய்து மே 1, 1983 ஆங்கில “காவற்கோபுரம்,” பக்கங்கள் 8-11-ஐப் பார்க்கவும்.
இளைஞர் கேட்கின்றனர் . . . நான் ஏன் தவறான ஆட்களிடம் கவரப்படுகிறேன்? (ஆகஸ்ட் 8, 2005) என்னுடைய குறிக்கோள்களில் குழப்பமுள்ளவனாக இருக்க முடியாது என்பதைக் காண இந்தக் கட்டுரை எனக்கு உதவியது. கெட்ட நண்பர்களை விட்டு விலக வேண்டுமென்ற தீர்மானத்தை செயல்படுத்த அது உதவியது. சபையிலுள்ள சிறியவர்கள் பெரியவர்கள் என நிறையப் பேர் இப்போது எனக்கு நெருங்கிய நண்பர்களாகி விட்டார்கள்; யெகோவாவை நேசிப்பவர்களாலும் ஜீவ பாதையைத் தொடர என்னை உற்சாகப்படுத்துபவர்களாலும் நேசிக்கப்படுவதை இப்போது உணர்கிறேன்.
எம். டி., மெக்சிகோ
இலட்சியத்தை அடைவதில் குறியாக இருந்தேன் (ஜூலை 8, 2005) மார்ட்டாவின் அனுபவத்தைப் படிக்கும்போதே கண்ணீர் என் கன்னங்களில் வழிந்தோடியது. நானும் காக்காய்வலிப்பு நோயால் கஷ்டப்பட்டிருக்கிறேன். கடந்த பத்து ஆண்டுகளாக நற்செய்தியை முழுநேரமாக பிரசங்கித்து வருகிறேன். சில சமயங்களில்—குறிப்பாக எனக்கு வலிப்பு ஏற்படும்போது பயனியர் செய்வது சிரமமாக இருக்கிறது. மார்ட்டாவின் அனுபவத்தை படித்தபிறகு, பயனியர் செய்வதை விட்டுவிடக்கூடாது என்ற தீர்மானம் பலப்பட்டுள்ளது. அந்தக் கட்டுரை எனக்கு ரொம்பவே ஆறுதலாக இருந்தது.
ஜே. எஸ்., போலந்து
மார்ட்டாவைப் போல நானும் காக்காய்வலிப்போடு போராடிக்கொண்டிருக்கிறேன். அவருடைய கதையைப் படித்த பிறகு, உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க ஆரம்பித்திருக்கிறேன். காக்காய்வலிப்புக்கு பயந்தே பத்து வருடங்களுக்கு மேலாக, யெகோவாவுக்கு அதிகமாக சேவை செய்யாமல் இருந்தேன். ஆனால், கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு முன்னால் ஒரு தீர்மானத்திற்கு வந்து, முழுநேரமாக பிரசங்கிக்க ஆரம்பித்தேன்; எனக்கு அதில் துளிகூட வருத்தம் இல்லை. இதுபோன்ற உற்சாகமூட்டும் அனுபவங்களை பிரசுரிப்பதற்காக யெகோவா உங்களை ஆசீர்வதிப்பாராக!
பீ. சீ. சீ., பிரேசில்
மார்ட்டாவின் உறுதியான மனநிலைதான் என்னை அதிகமாக உற்சாகப்படுத்தியது. அவளுடைய சேவையை விட்டுவிட நேரிட்டபோதும், சமநிலையான மனப்பான்மையைக் கொண்டிருந்தாள். மேலும், நம்முடைய மனப்பூர்வமான சேவையைக் கண்டு யெகோவா மகிழ்ச்சியடைகிறார் என்பதில் நம்பிக்கை கொண்டிருந்தாள். அது எனக்கு ஆறுதலாக இருந்தது.
எஸ். எச்., ஜப்பான்
மார்ட்டாவுடைய அதே சூழ்நிலையை நானும் எதிர்ப்பட்டதால், என்னுடைய வரம்புகளை புரிந்துகொள்ள வேண்டியிருந்தது. அதோடு, மார்ட்டாவைப்போல, என்னாலும் முழுநேரமாக பிரசங்கிக்க முடிந்திருக்கிறது. அதனால், அவளுடைய அனுபவம் என்னை மிகவும் உற்சாகப்படுத்தியது.
எஃப். ஜி., சுவிட்சர்லாந்து