பயன்படுத்தும் முறை “வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல்”
பைபிளைப் புரிந்துகொள்ள மற்றவர்களுக்கு உதவிசெய்வதில், இயேசு கிறிஸ்துவும் அவருடைய அப்போஸ்தலரும் அளித்த மாதிரியைப் பின்பற்றவேண்டும். கேள்விகளுக்கு விடைகொடுக்க, இயேசு வேதவசனங்களை மேற்கோளாக எடுத்துக் காட்டினார், மேலும் பைபிளில் சொல்லியிருப்பதை ஏற்க நேர்மை-இருதயமுள்ள ஆட்களுக்கு உதவிசெய்யும் பொருத்தமான உதாரணங்களைச் சில சமயங்களில் பயன்படுத்தினார். (மத். 12:1-12) அப்போஸ்தலனாகிய பவுல், தான் கற்பித்ததை ‘வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசி, விளக்குவதையும் மேற்கோள் குறிப்புகளைக்கொண்டு நிரூபிப்பதையும்’ நடைமுறைப் பழக்கமாக்கினான். (அப். 17:2, 3, NW) இந்தப் புத்தகத்தில் அடங்கியுள்ள பொருள் அவ்வாறு செய்ய உங்களுக்கு உதவிசெய்யும்.
ஒவ்வொரு பொருளின்பேரிலும் விரிவான மற்றும் பொதுவான விவரங்களை அளிப்பதற்குப் பதில், வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல், பல ஆட்கள் தற்போது கேட்கும் கேள்விகளின்பேரில் முக்கிய கவனத்தைச் செலுத்துகிறது.
இந்தப் பிரசுரம், சத்தியத்தை மதியாத ஆட்களுடன் “தர்க்கங்களில் வெற்றிபெறுவதற்கு” எவருக்காவது உதவிசெய்யும் நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டில்லை. அதற்கு மாறாக, நியாயங்காட்டிப் பேச உங்களை அனுமதிக்கும் ஆட்களுடன் அவ்வாறு பேசும்படி கருதியே இது விலைமதியா தகவலை அளிக்கிறது. அவர்களில் சிலர், திருப்திதரும் விடைகளை உண்மையில் விரும்பி கேள்விகள் கேட்கலாம். மற்றவர்கள், உரையாடலின்போது, வெறுமென தங்கள் சொந்த நம்பிக்கைகளைக் கூறலாம், அவற்றை நம்பும் ஓரளவு உறுதியுடனும் அவ்வாறு குறிப்பிடலாம். ஆனால் அவர்கள் மற்றொரு நோக்குநிலைக்குச் செவிகொடுத்துக் கேட்க மனமுள்ள நியாய சிந்தையுள்ள ஆட்களா? அப்படியானால், பைபிளில் சொல்லியிருப்பதை நீங்கள் அவர்களோடு பகிர்ந்துகொள்ளலாம், சத்தியத்தை நேசிப்போரின் இருதயங்களில் அது ஆவலோடு ஏற்கப்படுவதற்கேதுவாய் உறுதியான நம்பிக்கையுடன் அவ்வாறு செய்யுங்கள்.
இந்தக் கைப்புத்தகத்தில் உங்களுக்குக் குறிப்பாகத் தேவைப்படும் பொருளின் இடத்தை நீங்கள் எவ்வாறு கண்டுபிடிக்கலாம்? தர்க்கிக்கப்படும்பொருளைக் குறிப்பிடும் முக்கிய தலைப்புக்கு நேரடியாய்த் திருப்புவதன்மூலம் பெரும்பாலும் வெகு விரைவில் நீங்கள் கண்டுபிடிக்கலாம். எல்லா பிரதான தலைப்புகளின்கீழும், முக்கியக் கேள்விகளைத் தனிப்படுத்திக் காண்பது எளிது; அவை தடித்த அச்சில் இடப்பக்க ஓரத்திலிருந்து தொடங்குகின்றன. உங்களுக்குத் தேவைப்பட்டதை நீங்கள் விரைவில் கண்டுபிடிக்காவிடில், புத்தகத்தின் பின்னாலுள்ள அகரவரிசை அட்டவணையில் பாருங்கள்.
கலந்து பேசுவதற்கு முன்கூட்டிய தயாரிப்பு எப்பொழுதும் பயனுள்ளது. ஆனால் இந்தப் புத்தகத்தின் சில பகுதிகளுடன் நீங்கள் பழக்கப்பட்டிராவிடினும், அவற்றையும் நல்லமுறையில் பயன்படுத்தலாம். எவ்வாறு? நீங்கள் தர்க்கித்துப்பேச விரும்பும் அந்தக் குறிப்புக்குப் பெரும்பாலும் ஒத்துள்ள கேள்வி இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கையில், அதற்குக் கீழுள்ள உபதலைப்புகளைக் கவனித்துப் பாருங்கள். இந்த உபதலைப்புகள் தடித்த சாய்வெழுத்துக்களில் அமைந்துள்ளன மேலும் இவை சம்பந்தப்பட்டுள்ள கேள்விகளின்கீழ் ஓரத்தில் இடம்விட்டுத் தொடங்கியிருக்கின்றன. அந்தப் பொருளைப்பற்றி நீங்கள் ஏற்கெனவே ஓரளவு அறிந்திருந்தால், இந்த உபதலைப்புகளைத் திரும்பப் பார்வையிட்டு இவற்றின்கீழ் கொடுத்துள்ள எண்ணங்கள் சிலவற்றிற்கு விரைவில் கண்ணோட்டம் செலுத்துவது மாத்திரமே உங்களுக்குப் போதுமானதாயிருக்கலாம், ஏனெனில் இவை நீங்கள் பயன்படுத்தக்கூடிய உதவியான நியாயவிவாத நடைமுறைப்போக்கைச் சுருக்கமாய்க் கொடுக்கின்றன. அந்த எண்ணங்களை உங்கள் சொந்தச் சொற்களில் எடுத்துக்கூறத் தாமதியாதீர்கள்.
உங்களுக்கு இன்னும் அதிகம் தேவையென—ஒருவேளை அதற்குரிய வேத வசனங்கள், அந்த வசனங்களுக்குப் பொருத்தமாய்ப் பயன்படுத்தவேண்டிய நியாயவிவாதம், பைபிளில் சொல்லப்பட்டுள்ளதன் நியாயமானத் தன்மையைத் தெளிவாக்க உங்களுக்கு உதவிசெய்யும் சில உதாரணங்கள், போன்றவைத் தேவையென உணருகிறீர்களா? அப்படியானால், இந்தப் புத்தகத்திலிருப்பவற்றை நீங்கள் பேசிக்கொண்டிருக்கும் ஆளிடம் காட்டி, அவர் எழுப்பின கேள்வியைக் கையாளும் பகுதியைப் பின்பு அவருடன் சேர்ந்து வாசியுங்கள். அந்தப் பொருளை நீங்கள் முன்பே படித்திராவிடினும், திருப்திதரும் விடையைக் கொடுக்க நீங்கள் அதைப் பயன்படுத்தலாம். எல்லாம் இந்தப் புத்தகத்தில்தானே உள்ளது, எளிய மற்றும் சுருக்கமான முறையில் கூறப்பட்டுள்ளது.
இந்தப் புத்தகம் ஓர் உதவிமாத்திரமே என்பதை மனதில் வையுங்கள். பைபிளே அதிகாரமுடையது. அது கடவுளுடைய வார்த்தை. இந்தப் புத்தகத்திலுள்ள மேற்கோள்கள் பைபிளிலிருந்து எடுத்துக் குறிப்பிட்டிருக்கையில், நீங்கள் பேசுபவர்களின் மனதில் இந்த உண்மையை ஆழமாய்ப் பதியச் செய்யுங்கள். நீங்கள் சொல்வது உண்மையில் அவர்களுடைய சொந்த வேதாகமப் பிரதியில் உள்ளதேயென அவர்கள் காணும்படி, கூடியபோதெல்லாம் அவர்கள் தங்கள் சொந்த பைபிளில் வசனங்களை எடுத்துப் பார்க்கும்படி கேளுங்கள். பொதுவாய் யாவரும் பயன்படுத்தும் பைபிள் மொழிபெயர்ப்புகள் சில வசனங்களின் முக்கியப் பகுதிகளை வேறுபட்ட முறையில் மொழிபெயர்த்திருந்தால், பெரும்பாலும் இதற்குக் கவனத்தை இழுத்து, ஒத்துப்பார்ப்பதற்குப் பற்பல மொழிபெயர்ப்புகள் மொழிபெயர்த்துள்ள முறைகளை இந்தப் புத்தகம் கொடுக்கிறது.
அப்போஸ்தலனாகிய பவுல், அத்தேனே பட்டணத்தாருக்குப் பிரசங்கிக்கையில், “அறியப்படாத தேவனுக்கு” என்றெழுதியிருந்த பலிபீடத்தைக் குறிப்பிட்டதிலும், பொதுவாய் ஏற்கப்பட்ட உலகப்பிரகாரமான சில செய்திமூலங்களை மேற்கோளாகக் குறிப்பிட்டதிலும் (அப். 17:22-28) வைத்த முன்மாதிரிக்குப் பொருந்த, இந்தப் புத்தகம், உலகப்பிரகாரமான சரித்திரம், கலைக்களஞ்சியங்கள், மதக் குறிப்புப் புத்தகங்கள், மேலும் பைபிள்-மொழி அகராதிகள் ஆகியவற்றை மட்டுப்பட்ட முறையில் பயன்படுத்துகிறது. இவ்வாறு, பொய்மதப் பழக்கவழக்கங்களின் தொடக்கம், சில கோட்பாடுகளின் வளர்ச்சி, மேலும் எபிரெய மற்றும் கிரேக்கப் பதங்களின் அர்த்தங்கள் ஆகியவற்றைக் குறித்து வெறுமென தானே வலியுறுத்தாமல், இந்தப் புத்தகம், அந்தக் கூற்றுகளுக்குக் காரணங்களைக் காட்டுகிறது. எனினும், சத்தியத்தின் அடிப்படை ஊற்றுமூலமாக பைபிளுக்கே கவனத்தைச் செலுத்தும்படி வழிநடத்துகிறது.
பைபிளிலுள்ள சத்தியத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதை எளிதாக்குவதில் மேலுமான உதவிகளாக, இந்தப் புத்தகத்தின் தொடக்கப் பகுதிகள் “வெளி-ஊழியத்தில் பயன்படுத்துவதற்கு அறிமுகங்கள்” அடங்கிய ஒரு பட்டியலையும் “உரையாடலை நிறுத்தும் பதிற்சொற்களுக்கு நீங்கள் எவ்வாறு மறுமொழியளிக்கலாம்” என்பதற்கு ஆலோசனைகளடங்கிய ஒரு தொகுப்பையும் கொண்டிருக்கின்றன. “உரையாடலை நிறுத்த” முயலும் மற்றும் பல பதிற்சொற்கள், குறிப்பிட்ட நம்பிக்கைகள் சம்பந்தப்பட்டவையாகும். இவை அந்த நம்பிக்கைகளைக் கையாளும் முக்கிய பகுதிகள் ஒவ்வொன்றின் முடிவிலும் சிந்திக்கப்படுகின்றன. இந்த மறுமொழிகள் நீங்கள் மனப்பாடம் செய்வதற்கு என்ற எண்ணத்துடன் கொடுக்கப்படவில்லை, ஆனால் மற்றவர்கள் இவற்றைப் பலன்தருபவையாகக் கண்டதன் காரணத்தைப் பகுத்தாராய்வது சந்தேகமில்லாமல் உதவியாயிருக்கிறதெனக் காண்பீர்கள்; பின்பு அந்த எண்ணங்களை உங்கள் சொந்த சொற்களில் எடுத்துக் கூறுங்கள்.
இந்தக் கைப்புத்தகத்தைப் பயன்படுத்துவது வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுவதற்கானத் திறமையை முன்னேற்றுவதற்கும், “தேவனுடைய மகத்துவங்களைப்” பற்றிக் கற்றுக்கொள்ள மற்றவர்களுக்கு உதவிசெய்வதில் வேதவசனங்களைத் திறம்பட்ட முறையில் பயன்படுத்துவதற்கும் உங்களுக்கு உதவிசெய்யவேண்டும்.—அப். 2:11.