சவக்கடல் சுருளின் எஞ்சிய பகுதிகளை வெளியிடுதல்
கடந்த செப்டம்பரில், பல பத்தாண்டுகள் நீடித்திருந்த புலமைச் சார்ந்த தடையரண் இறுதியாக உடைந்தது. சவக்கடல் சுருளின் மாணவர்களிடையே புதிய கருத்துவேறுபாடுகள் ஆரம்பமாயிருந்தபோதிலும் அவர்களிடையே இருந்த கசப்பான ஒரு கருத்து வேறுபாடு முடிவுக்கு வந்தது போல் தோன்றியது.
சவக்கடல் சுருள்கள், 1947-லும் அதைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளிலும் சவக்கடல் அருகே குகைகளில் கண்டெடுக்கப்பட்டன. அவை எபிரெய வேதாகம வாசகத்தின் அடிப்படையான திருத்தமானத் தன்மையைக் காண்பிப்பதற்கும், இயேசு பூமியின் மீதிருந்த போது பலஸ்தீனாவிலிருந்த மத சம்பந்தமான நிலைமைகளை விளக்குவதற்கும் பெரும் மதிப்புள்ளவையாக இருந்தன. (ஏசாயா 40:8) ஒரு சில கையெழுத்துப் பிரதிகள் போதிய அளவு விரைவிலேயே வெளியிடப்பட்ட போது, 1991-ல் சுமார் 400 கையெழுத்துப் பிரதிகள் இன்னும் வெளியிடப்படாமலும் பெரும்பாலான கல்விமான்களுக்குக் கிடைக்காமலுமே இருந்தன. பேராசிரியர் பென் சயன் வாக்ஹோல்டர் உணர்ந்த விதமாகவே அநேகர் “இப்பொழுது வெளியிடப்படும் வேகத்தில், சவக்கடல் வாசகம் முழுவதும் உலகிற்குக் கிடைக்கும் சமயத்தில் நாம் அனைவருமே மரித்துவிட்டிருப்போம் என்பதாக ஏமாற்ற உணர்வை உடையவர்களாக” இருந்தனர்.
ஆனால் கடந்த செப்டம்பரில் அந்த நிலை மாறியது. முதலில், பேராசிரியர் வாக்ஹோல்டரும் ஒரு கூட்டாளியுமான மார்டின் ஏபெக்கும் சமார்த்தியமாக கம்ப்யூட்டரை உபயோகித்து பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த வாசகத்தின் பிரதியை எடுத்திருப்பதாக அறிவிப்பு செய்தார்கள். பின்னர் அ.ஐ.மா., கலிபோர்னியா, சான் மரினோவில் ஹன்டிங்டன் நூல் நிலையம், தங்களிடம் மூல கையெழுத்துப் பிரதிகளின் புகைப்படங்கள் இருப்பதாகவும் அவற்றைக் கட்டுப்பாடுகள் எதுவுமின்றி கல்விமான்களுக்கு கிடைக்கப் பெறச் செய்வர் என்றும் அறிவிப்பு செய்தது. சுருள்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய பல புகைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. புகைப்படங்களின் தொகுதிகள் பல்வேறு இடங்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்தது, அதில் ஒன்று ஹன்டிங்டன் நூலகத்தில் இருந்தது.
சம்பவங்களின் இந்தத் திருப்பம் குறித்து இது “கல்விமான்கள் பெர்லின் சுவரைத் தகர்ப்பதற்கு சமமானது” என்பதாக ஒரு கல்விமான் கூறினார். அதிகாரப்பூர்வமான பதிப்பாசிரியர்கள் கம்ப்யூட்டரில் உருவாக்கப்பட்ட வாசகத்தையும் புகைப்படங்களின் வெளியீட்டையும் ‘திருடு’ என்பதாக அழைத்தனர். நெறி பற்றியும் சட்டம் பற்றியும் விவாதம் பல ஆண்டுகள் நடைபெறுவது சாத்தியமாகும். இதற்கிடையில் கல்விமான்கள் சவக்கடல் சுருளின் முழு தகவலையும் பெற்றிருப்பர்.
[பக்கம் 32-ன் படம்]
ஆபகூக் பற்றிய ஒரு விளக்கவுரையின் உருவமைப்பு, சவக்கடல் சுருள்களில் ஒன்று