வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு, சீஷர்களுக்கு முன்பாக தோன்றினதற்கு நீண்ட காலத்திற்குப் பின்பும், சில சீஷர்கள் தொடர்ந்து சந்தேகித்தார்கள் என்பதை மத்தேயு 28:17 அர்த்தப்படுத்துகிறதா?
இல்லை, மத்தேயு 28:16, 17 சொல்கிறதிலிருந்து நாம் அந்த முடிவுக்கு வரவேண்டியதில்லை. இது இவ்வாறு வாசிக்கிறது: “பதினொரு சீஷர்களும், கலிலேயாவிலே இயேசு தங்களுக்குக் குறித்திருந்த மலைக்குப் போனார்கள். அங்கே அவர்கள் அவரைக் கண்டு, பணிந்துகொண்டார்கள்; சிலரோ சந்தேகப்பட்டார்கள்.”
இயேசு, “தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் பல பாடுகள் பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும்,” என்பதை சீஷர்கள் உணரும்படி செய்வதற்காக முன்கூட்டியே அவர்களுக்கு உதவிசெய்ய முயற்சி செய்தார். (மத்தேயு 16:21) இருந்தபோதிலும், அவர் கைதுசெய்யப்பட்டதும், கொலைசெய்யப்பட்டதும் சீஷர்களை மனச்சோர்வடையச் செய்யவும் மனதைக் குழப்பவும் செய்திருக்கிறது. அவருடைய உயிர்த்தெழுதலோ, ஓர் ஆச்சரியப்படச் செய்யும் செயல் போலத் தோன்றியிருக்கிறது. அவர் தாமே மனித உருவில் காட்சியளித்தப்போது, ஆரம்பத்தில் சிலர் “சந்தோஷத்தினால் . . . இன்னும் விசுவாசியாமல் ஆச்சரியப்”பட்டார்கள். (லூக்கா 24:36-41) அவருடைய உயிர்த்தெழுந்தபின்பான தோன்றுதல்கள், அவர் உண்மையில் உயிர்த்தெழுந்தார் என்பதை முழுமையாக அவரை நெருக்கமாக பின்பற்றினவர்கள் ஒத்துக்கொள்வதற்கு உதவியாக இருந்தன; அப்போஸ்தலனாகிய தோமாவும்கூட இயேசு உயிர்த்தெழுப்பப்பட்டார் என நம்ப வைக்கப்பட்டார்.—யோவான் 20:24-29.
இதற்குப் பின்பு உண்மையுள்ள அப்போஸ்தலர்கள் 11 பேர் ‘கலிலேயாவுக்குப் போனார்கள்.’ (மத்தேயு 28:16; யோவான் 21:1) இவர்கள் அங்கு இருந்தபோது, இயேசு “ஐந்நூறுபேருக்கு அதிகமான சகோதரருக்கும் ஒரேவேளையில் தரிசனமானார்.” (1 கொரிந்தியர் 15:6) இந்தப் பின்னணியில் தான் மத்தேயு 28:17 “சிலரோ சந்தேகப்பட்டார்கள்” என்று சொல்கிறது. எனவே இன்னும் சந்தேகப்பட்டவர்கள், அந்தப் பின்பற்றுபவர்களாகிய 500 பேரில் சிலராக இருந்திருக்கவேண்டும்.
இதைப் பற்றி உவாட்ச் டவர் சொஸையிட்டியின் முதல் தலைவர் C. T. ரஸல் சொன்ன, அக்கறையைத் தூண்டும் குறிப்பைக் கவனியுங்கள்:
“அப்போது சந்தேகம் கொண்டவர்கள், பதினொரு அப்போஸ்தலர்களில் ஒருவராக இருக்க முடியாது, ஏனென்றால் அவர்கள் ஏற்கெனவே சந்தேகம் அகற்றப்பட்டவர்களாக, முழுவதும் நம்பவைக்கப்பட்டவர்களாக இருந்தார்கள், மேலுமாக அவர்கள் அவ்வாறு இருப்பதாக சொல்லியும் இருக்கிறார்கள். திட்டமிட்டு நடந்த இந்தக் கூட்டத்தில் ஆஜராக இருந்த ‘ஐந்நூறு சகோதரர்’களில் சந்தேகப்பட்டவர்கள் சிலராகத் தான் இருக்கவேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். அவர் உயிர்த்தெழுப்பப்பட்டதிலிருந்து அவரை இதுவரைப் பார்த்திராதவர்கள் இவர்கள்; இவர்களில் சிலர், அப்போஸ்தலர்களையும் இயேசு ஏற்கெனவே தொடர்புகொண்ட நெருங்கிய தோழர்களையும் விட, ஒருவேளை விசுவாசத்தில் குறைவுபட்டவர்களாக இருக்கலாம். இந்தச் ‘சிலரோ சந்தேகப்பட்டார்கள்’ என்ற வார்த்தை, சுவிசேஷப் பதிவின் கபடமற்றத் தன்மையை எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது. இது, கர்த்தரைப் பின்பற்றுபவர்கள், எதையும் நம்புகிற ஏமாளிகளல்ல என்பதையும் காட்டுகிறது; ஆனால் சொல்லப்பட்ட விஷயத்தின் சான்றுகளை அலசி, பகுத்தாராய்ந்து பார்க்கும் வாய்ப்பளிக்கப்பட்டவர்களாக இருந்தார்கள்; மேலுமாக இதைப் பின்தொடர்ந்து விசுவாசித்தவர்களின் ஆர்வம், பலம், சுய-தியாகம் உள்ள ஆவி போன்றவை, நம்முடைய கர்த்தரின் உயிர்த்தெழுதல் பற்றிய அவர்களுடைய நம்பிக்கைகளின் உண்மைத்தன்மைக்கு அதிகமான சான்றுகளை நமக்குத் தருவதாக இருக்கின்றன. இதுவே அவர்களும், நாமும் அவரில் விசுவாசம்வைப்பதற்கு உண்மையான உயிர்நாடியாக இருப்பதாக நாம் ஒப்புக்கொள்கிறோம். கிறிஸ்து உயிர்த்தெழவில்லை என்றால், நம் விசுவாசம் வீண், நாம் இன்னும் நம் பாவத்தில் இருப்போம்.—1 கொரி. 15:17.”—சீயோனின் காவற்கோபுரம், கிறிஸ்துவின் வந்திருத்தலை அறிவிக்கிறது (சயான்ஸ் உவர்ட்ச் டவர் அண்டு ஹெரால்டு ஆஃப் கிரைஸ்ட்ஸ் பிரசன்ஸ்) மே 1, 1901, பக்கம் 152.
மத்தேயு இந்தக் குறிப்பைச் சொல்லும்விதம், பைபிளின் உண்மைத்தன்மைக்கும் நேர்மைத்தன்மைக்கும் ஒரு சான்றை நமக்குக் கொடுக்கிறது என்பதை நாம் உணரமுடிகிறது. ஒருவர் தன்னுடைய பதிவில் கதைவிட முயற்சிசெய்யும்போது, அவருடைய அந்தக் கட்டுக்கதையை நம்பத்தக்கதாக ஆக்கும்படி தெளிவாக அநேக விளக்கங்களோடு கொடுக்க முயற்சிசெய்வார்; ஒதுக்கப்பட்ட விளக்கங்கள் அல்லது இடைவெளிப்போன்று தோன்றுபவை தன்னுடைய கட்டுக்கதையில் சந்தேகங்களைக் கிளப்பிவிடும் என்பதைப் பெரும்பாலும் உணர்ந்திருப்பார். மத்தேயுவைப் பற்றி என்ன?
“சிலரோ சந்தேகப்பட்டார்கள்” என்று தான் குறிப்பிட்டதற்கு ஒரு விவரமான விளக்கத்தைக் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கிறார் என அவர் உணரவில்லை. மாற்கு, லூக்கா, யோவான் ஆகியோரின் பதிவுகள் இதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை; ஆதலால், மத்தேயுவின் பதிவை மட்டும் எடுத்துக்கொண்டால், ஒருவேளை இவரையும் உட்படுத்திய அந்தப் 11 அப்போஸ்தலர்களைக் குறிப்பதாகத் தோன்றலாம். ஆனாலும் மத்தேயு கூடுதலான விளக்கம் எதையும் தராமல், சிறு குறிப்பையே கொடுத்தார். சுமார் 14 ஆண்டுகளுக்குப் பின்பு, முதலாம் கொரிந்தியர் புத்தகத்தைப் பவுல் அப்போஸ்தலன் எழுதினார். இவர், 1 கொரிந்தியர் 15:6-ல் கொடுத்த விளக்கத்தின்படி, சந்தேகித்தவர்கள் அப்போஸ்தலர்கள் அல்ல, ஆனால் இயேசு இன்னும் காட்சிகொடுத்திராத கலிலேயாவிலிருந்த சீஷர்களே என்ற மிகச் சரியான தீர்மானத்திற்கு நாம் வரமுடியும். எனவே, மத்தேயு சொன்ன “சிலரோ சந்தேகப்பட்டார்கள்” என்ற குறிப்பு மிகச் சரியாகவே இருக்கவேண்டும்; ஓர் உண்மையான பதிவை ஒரு நேர்மையான எழுத்தாளர் எப்படி ஒவ்வொரு நுணுக்கமான விஷயத்தையும் சொல்ல முயற்சி செய்யாமல் விளக்க விரும்புவாரோ, அதைப்போலத்தான் இது இருக்கிறது.