ஒரு மரத்தைப்போல்
“செய்யுட்கள் என்னைப்போன்ற முட்டாள்களால் உண்டாக்கப்படுகின்றன, ஆனால் கடவுள் ஒருவரே ஒரு மரத்தை உண்டாக்க முடியும்.” மரங்களின் பல நற்பண்புகளை உயர்வாகப் புகழ்ந்து பேசி, கவிஞர் ஜாய்ஸ் கில்மர், அவற்றின் படைப்புக்காகப் புகழை கடவுளுக்கே உரித்தாக்குகிறார்.
மிகப் பல்வேறு வகையும், மிகச் சிறப்பும், பயனுமுள்ள மரங்களை யெகோவா தேவன் உண்டாக்கியிருக்கிறார். மிகச் சிறிய மரங்களும் பெரும் உயரமான மரங்களும் ஒன்றுபோல், விவரிக்க முடியாத வகையில் அவ்வளவு மிக அழகுவாய்ந்தவையாக இருக்கக்கூடும். மேலும், மரங்கள் உணவும், விறகும், நிழலும் அளிக்கின்றன. திட்டமிடுவோர், மரங்களைப் பயன்படுத்துவதற்குரிய புதிய உபயோகங்களைத் தொடர்ந்து கண்டுபிடித்துக்கொண்டிருக்கின்றனர்.
பைபிளில் மரங்கள், ராஜ்யங்களையும், அரசர்களையும், தனியாட்களையும் குறித்துக்காட்டுவதற்கு அடையாள முறையில் சிலசமயங்களில் பயன்படுத்தப்படுகின்றன. (எசேக்கியேல் 31:1-18; தானியேல் 4:10-26) யெகோவாவின் அரசாட்சியின் பலனாகவும் அவருடைய ஜனங்கள் திரும்ப நிலைநாட்டப்படுவதிலிருந்தும் உண்டாகும் மகிழ்ச்சியும், சமாதானமும், செழிப்புமுள்ள நிலைமைகளோடு சம்பந்தப்படுத்தி மரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. (1 நாளாகமம் 16:33; ஏசாயா 55:12; எசேக்கியேல் 34:27; 36:30) கடவுளுடைய ஜனங்களின் நாட்கள் ஒரு மரத்தினுடையதைப்போல் இருக்குமென்றும் வேத வசனங்கள் வாக்குக் கொடுக்கின்றன. (ஏசாயா 65:22) சில மரங்கள் பல நூற்றாண்டுகள் வாழ்கின்றனவென்பதை நாம் உணருகையில் இது பெரும் உட்கருத்துடையதாக உள்ளது.
கடவுளுடைய சட்டத்தில் இன்பங்கொள்ளுகிற ஒரு மனிதன் “நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்” என்று பைபிள் சங்கீதக்காரன் ஒருவர் சொன்னார். ஏராளமான தண்ணீருள்ள நீரூற்றுக்கருகில் நடப்பட்ட செழிப்பான மரம், ‘யெகோவாவின் சட்டத்தில் இன்பங்கொள்ளும்’ ஒருவன் அனுபவித்து மகிழும் ஆவிக்குரிய செழுமையை இந்தச் சங்கீதக்காரனுக்கு நினைப்பூட்டினது. (சங்கீதம் 1:1-3) கடவுளுடைய சட்டத்திலும் பரிசுத்த வார்த்தையிலும் நீங்கள் உண்மையான இன்பங்கொள்வீர்களானால், உங்கள் நாட்கள் ஒரு மரத்தினுடையதைப் போன்றதாகும். உண்மையில், யெகோவா தேவனையும் இயேசு கிறிஸ்துவையும் பற்றிய திருத்தமான அறிவுக்கு இசைவாக நடப்பதன்மூலம், நித்திய ஜீவனின் நம்பிக்கையை உடையோராக நீங்கள் மனமகிழக்கூடும்.—யோவான் 17:3.