பரலோகத்திற்குப் போகிறீர்களா அல்லது நரகத்திற்கா?
“நீங்கள் பரலோகத்திற்குப் போவதற்கான அல்லது நரகத்திற்குப் போவதற்கான என்ன வாய்ப்புகள் இருக்கின்றன?”
அடிப்படையாக, சமீப சுற்றாய்வு ஒன்றில், எல்லா வகையிலும் பண்புகளின் பிரதிநிதியாக அமைந்துள்ள அமெரிக்கர்களிடம் இவ்வாறு கேட்கப்பட்டது. பிரின்ஸ்டன் மத ஆராய்ச்சி மையம் இதன் முடிவுகளை ரிலிஜன் இன் அமெரிக்கா 1992-1993-ல் வெளியிட்டது.
நீங்கள் எவ்வாறு பதில் அளித்திருந்திருப்பீர்கள்? உங்களுடைய துணைவரோ மற்ற அன்பார்ந்தவர்களோ மரணத்தின்போது பரலோகத்திற்குப் போவதற்கான என்ன வாய்ப்புகள் இருக்கின்றன? நீங்களோ அவர்களோ முடிவில் நரகத்திற்குப் போக வாய்ப்பிருக்கிறது என்று நினைக்கிறீர்களா?
பரலோகத்திற்குப் போவதற்கு அவர்களுக்கு நல்ல அல்லது மிகச் சிறந்த வாய்ப்புகள் இருக்கின்றன என்று 78 சதவீதத்தினர் நினைத்தனர் என்பதாக அந்தச் சுற்றாய்வு காண்பித்தது. இது சுமார் 40 வருடங்களுக்குமுன் இதேபோல் பதிலளித்தவர்களின் எண்ணிக்கையைவிட அதிகமாகும். நரகத்திற்கு? அங்குப் போவதற்கான வாய்ப்புகள் குறைவு என சுமார் 77 சதவீதத்தினர் கூறினர்.
அவர்களுடைய பதில்கள் திருத்தமான பைபிள் அறிவின் அடிப்படையில் இருந்தனவா? ஐந்து வருடங்களுக்கு முன்பைவிட குறைவாகவே தாங்கள் மத ஆராதனைகளுக்கு ஆஜராகியிருக்கின்றனர் என்று 10-ல் சுமார் 4 பேர் ஒப்புக்கொண்டனர். 28 சதவீதத்தினர் மட்டுமே பைபிள் படிப்புக் குழுக்களிலும், 27 சதவீதத்தினர் மத சம்பந்தமான கல்வி படிப்புகளிலும் பங்குகொள்வதாக கூறினர்.
பைபிளை நீங்கள் கருத்தூன்றிப் படித்தால், ஆச்சரியப்படுத்தும் சில உண்மைகளை நீங்கள் காண்பீர்கள். உதாரணமாக, சில பைபிள் மொழிபெயர்ப்புகளில் மொழிபெயர்த்துள்ளபடி, இயேசு மரணத்தில் ‘நரகத்திற்கு’ போனார் என்று பைபிள் குறிப்பாகச் சுட்டிக்காட்டுகிறது. (அப்போஸ்தலர் 2:31, கிங் ஜேம்ஸ் வெர்ஷன்; “ஹேடிஸ்,” புதிய உலக மொழிபெயர்ப்பு) தாவீது ராஜாவோ யோவான்ஸ்நானனோ மரணத்தில் பரலோகத்திற்குச் செல்லவில்லை என்றும்கூட கடவுளுடைய வார்த்தை நிரூபிக்கிறது. (மத்தேயு 11:11; அப்போஸ்தலர் 2:29) அவை உண்மைகளாக இருக்கின்றன, ஏதோ ஒரு மத சுற்றாய்விலிருந்து பெற்ற வெறும் அபிப்பிராயங்கள் அல்ல.
உங்களை ஒருவேளை பாதிக்கக்கூடிய மற்ற உண்மைகள்: இயேசுவின் அப்போஸ்தலரும் ஒரு சிறிய எண்ணிக்கையான மற்றவர்களும், இயேசுவோடு அரசாள பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவார்கள் என்று பைபிள் போதிக்கிறது. எனினும், மரித்தவர்களில் பெரும்பகுதியினர் வெறுமனே மனிதவர்க்கத்தின் பொதுவான பிரேதக்குழிக்கே சென்றனர். கடவுள் அவர்களை உயிர்த்தெழுப்புவார். திரும்ப நிலைநாட்டப்பட்ட பூமிக்குரிய பரதீஸில் ஒரு முழுமையான, மகிழ்ச்சி நிறைந்த, முடிவில்லா வாழ்க்கையை வாழ்வதற்கான வாய்ப்போடு அவர்களை பூமியில் உயிருக்குக் கொண்டுவருவார்.
அந்த நம்பிக்கைக்கான நம்பகமான ஆதாரத்தை உங்களுடைய சொந்த பைபிளிலிருந்தே நீங்கள் நிரூபித்துக்கொள்வதில் உங்களுக்கு உதவிசெய்ய யெகோவாவின் சாட்சிகள் மகிழ்ச்சியுள்ளவர்களாய் இருப்பார்கள்.