ஆபிரகாம்—இங்குப் புதைக்கப்பட்டார், இன்னும் உயிருடன் இருக்கிறாரா?
பல நூற்றாண்டுகளாக யூதர்கள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் இந்த இடத்துக்குப் பயணம்செய்திருக்கின்றனர்.
எருசலேமின் தெற்கே உள்ள பூர்வீக நகரமாகிய எபிரோனில் அதைக் காண்பதற்கு நீங்கள் போகலாம். இந்த வடிவமைப்பு, ஹெரிம் யல்-கலில் என்றும், கோத்திரப் பிதாக்களின் கல்லறை என்றும் அழைக்கப்படுகிறது. ஆம், இது கோத்திரப் பிதாக்களாகிய ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரும், அவர்களின் மனைவிகளாகிய சாராள், ரெபெக்காள், லேயாள் ஆகியோரும் புதைக்கப்பட்ட இடமாக பரவலாக ஒத்துக்கொள்ளப்படுகிறது.
ஆபிரகாம் தன் பிரியமுள்ள மனைவியாகிய சாராள் இறந்தபோது, புதைக்கும் இடமாக எபிரோனுக்கு அருகே மக்பேலாவில் ஒரு குகையையும் சிறு நிலத்தையும் வாங்கியதாக பைபிளிலிருந்து ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். (ஆதியாகமம் 23:2-20) பின்னர், மற்ற குடும்ப அங்கத்தினர்கள் போலவே ஆபிரகாமும் இங்கே புதைக்கப்பட்டார். நூற்றாண்டுகளுக்குப் பின்பு, பரம்பரையாகப் புதைக்கப்பட்ட இடத்தைச் சுற்றி மகா ஏரோது ஒரு கவர்ச்சியான கட்டடத்தைக் கட்டினார், காலப்போக்கில் அது படையெடுத்து வெற்றியடைந்தவர்களால் அவர்களுடைய சொந்த மத நம்பிக்கைகளைப் பிரதிபலிக்கும் விதத்தில் மாற்றப்பட்டு, பெரியதாக்கப்பட்டது.
உள்ளே போகும்போது, நீங்கள் ஆறு நினைவுச் சின்னங்களை (நினைவு மண்டபங்களை அல்லது வெறுமையான சமாதிகளை) காண்பீர்கள். கொடுக்கப்பட்டுள்ள படம் ஆபிரகாமின் மகனாகிய ஈசாக்குக்கு எழுப்பப்பட்டதைக் குறிக்கிறது. அதற்கு அருகிலுள்ள தரையில் துளைகள் இருக்கின்றன, இவை அதற்குகீழே என்ன இருக்கிறது என்பதைக் காணப்போவதற்கு அனுமதிக்கின்றன. கண்டுபிடிப்பாளர்கள் எண்ணற்ற பூர்வீக எலும்புகள் இருக்கிற கூடங்களைக் கண்டிபிடித்திருக்கின்றனர்.
ஆபிரகாமைப் பற்றி என்ன? இப்போது இந்த இடத்திற்கு கீழே உள்ள ஒரு குகையில் அவர் புதைக்கப்பட்டிருந்தார் என்றால், அவர் இறந்து பல காலம் கடந்திருக்கிறது அல்லவா? பெரும்பான்மையான பார்வையாளர்கள் ஒத்துக்கொள்வார்கள். ஆனால் ஆபிரகாமைவிட பெரிய தீர்க்கதரிசி ஒரு விதத்தில் அவர் இன்னும் உயிரோடிருப்பதாக சொன்னார். எப்படி? இது உங்கள் விசுவாசத்தின்மீது என்ன பாதிப்பைக் கொண்டிருக்கக்கூடும்?
“உங்களுடைய மரித்த அன்பானவர்கள்—எங்கே இருக்கிறார்கள்?” என்ற (பக்கம் 3) கட்டுரையை நீங்கள் தயவுசெய்து வாசியுங்கள். அது ஆபிரகாம் இன்னும் உயிரோடிருக்கிறார் என்பதைப் பற்றி அந்தப் பெரிய தீர்க்கதரிசி என்ன சொன்னார் என்பதைச் சொல்கிறது; அந்தச் செய்தி உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் மிகப் பெரிய மதிப்புவாய்ந்ததாய் இருக்கக்கூடும்.