மொஸாம்பிக்கில் “உப்பு விற்பது”
மொஸாம்பிக்கிலுள்ள நாட்டு ஆலோசனைக் குழுவின் அங்கத்தினராயிருக்கும் ஃப்ரான்சிஸ்கோ கோஆனா என்பவர் “மறுகல்வி முகாம்களில்” பத்து வருடங்களைக் கழித்தார். தன்னுடைய அனுபவத்தை சொல்கிறார்: “நாங்கள் இங்கே கொஞ்ச காலம் இருப்போம் என்று எனக்குத் தெரியும், இதனால் நான் ஓர் ஒழுங்கான பயனியராகத் தொடரக்கூடுமா என்று வட்டாரக் கண்காணியிடம் கேட்டேன். ஆனால் முகாம்களில் ஏறத்தாழ எல்லாரும் யெகோவாவின் சாட்சிகளாக இருப்பதால், எப்படி என்னால் வெளி ஊழியத்தில் போதுமான நேரத்தை அர்ப்பணிக்க முடியும் என்று அவர் கேட்டார். பிரசங்கிப்பதற்கு ஆட்களைக் கண்டுபிடிக்க 47 கிலோமீட்டர் தள்ளியிருக்கிற மிலான்ஷ் என்ற டவுனுக்குப் போவதாக நான் சொன்னேன்.
“அந்த முகாமை விட்டு வெளியே போக எங்களுக்கு அதிகாரப்பூர்வமாக அனுமதியில்லை என்றாலும், இந்தச் சட்டம் கண்டிப்பான அமலிலில்லை. ஒரு புதருக்குள் போய், உள்ளூர் மக்களிடம் பிரசங்கிக்க ஒரு வழி காண்பிக்க வேண்டும் என்று முட்டிப்போட்டு ஜெபித்தது எனக்கு ஞாபகம் இருக்கிறது. யெகோவா விரைவில் பதிலளித்தார்.
“ஒரு சைக்கிள் வைத்திருந்த மனிதனைச் சந்தித்து, அவரோடு ஓர் ஒப்பந்தம் செய்தேன். மழைக்காலம் துவங்குவதற்கு முன்பாக அவருடைய இரண்டு ஏக்கர் நிலத்தை நான் பண்படுத்தித் தந்தேனானால், இந்த சைக்கிளைச் சம்பளமாகக் கொடுப்பதற்கு அவர் ஒப்புக்கொண்டார். எனவே அவருடைய வயல்களை ஒவ்வொரு நாள் காலையும் நான் பண்படுத்தினேன். யெகோவா இந்த ஏற்பாட்டை ஆசீர்வதித்ததால், இறுதியில் எனக்குச் சைக்கிள் கிடைத்தது.
“இதன் விளைவு மிலான்ஷ் என்ற பெரிய டவுனுக்குச் சென்று இந்தக் கனிதரும் பிராந்தியத்தில் பலன்தரும் விதத்தில் பயனியர் சேவையை என்னால் தொடர முடிந்தது. எங்களுடைய வேலை தடையுத்தரவின்கீழ் இருந்ததால், மக்களைச் சத்தியத்தினிடம் அறிமுகப்படுத்த ஒரு திட்டம் தீட்டவேண்டி இருந்தது. புத்தகங்களையும் பத்திரிகைகளையும் என்னுடைய ஷர்ட்டில் திணித்துக்கொண்டு, ஒரு பையில் கொஞ்சம் உப்பை எடுத்துக்கொண்டு, உப்பு விற்கும் வியாபாரத்தில் ஈடுபட்டேன். 5 மெடிகாய்ஸ் என்ற பணத்துக்கு விற்பதற்குப் பதிலாக, நான் 15 மெட்டிகாய்ஸ்க்கு அதை விற்றேன். (மிகவும் மலிவாக இருந்தால், மக்கள் அதெல்லாவற்றையும் வாங்கிவிடுவார்கள்; அப்புறம் பிரசங்க வேலையில் பயன்படுத்த என்னிடத்தில் உப்பே இருக்காதே!) என் உரையாடல்கள் இதுபோன்று இருந்தது:
“‘வணக்கம்! இன்றைக்கு நான் உப்பு விற்று வருகிறேன்.’
“‘என்ன விலை?’
“‘பதினைந்து மெட்டிகாய்ஸ்.’
“‘வேண்டாம், வேண்டாம். ஏகப்பட்ட விலை!’
“‘ஆமாம், ரொம்ப விலை என்று நான் ஒத்துக்கொள்கிறேன். இப்பொழுதே விலை ஜாஸ்தியாயிருக்கிறது என்று சொல்வீர்களென்றால், கொஞ்ச காலம் பொறுத்து என்ன சொல்வீர்கள், ஏனென்றால் பிற்காலத்தில் பயங்கர விலையாயிருக்கும். இது பைபிளில் முன்னுரைக்கப்பட்டது என்று உங்களுக்குத் தெரியுமா?’
“‘என் பைபிளில் நான் படித்ததே கிடையாது.’
“‘அதில் இருக்கிறது. உங்கள் பைபிளை எடுத்து வாங்க, நான் காட்டுகிறேன்.’
“‘இப்படி பைபிளைப் பயன்படுத்தி ஒரு சம்பாஷணைத் தொடரும், இதனால் எனது ஷர்ட்டுக்குள்ளாகவே செருகியிருக்கும். நெருக்கடியான நிலைமைகள், உணவு பற்றாக்குறைகள் சம்பந்தமாக வெளிப்படுத்துதல் 6-ம் அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிற காரியங்களை எடுத்துக் காட்டுவேன். சாதகமாய்ப் பிரதிபலிப்பதாகத் தெரிந்தால், நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம் அல்லது உங்களைச் சந்தோஷிப்பிக்கும் நற்செய்தி (ஆங்கிலம்) புத்தகத்தை வெளியே எடுத்து முறைப்படியான பைபிள் படிப்பைத் துவங்குவேன்.
“இதன் பயன், மிலான்ஷில் 15 அக்கறை காட்டிய ஆட்கள் அடங்கிய ஒரு தொகுதிக்கு என்னால் படிப்பைத் தொடங்க முடிந்தது. ஆனால் சீக்கிரத்தில், அதிகாரிகள் எங்களை மாட்டிவைக்கப் பார்த்தார்கள். ஒரு நாள் பைபிள் படிப்பை நடத்திக்கொண்டிருக்கையில், போலீஸ்காரர் திடீரென உள்ளே நுழைந்து எங்களைக் கைது செய்தனர். அந்தக் குடும்பத்திலுள்ள சிறிய பிள்ளைகள் அடங்கலாக எங்கள் யாவரையும் உள்ளூர் சிறைச்சாலைக்குக் கூட்டிச் சென்றனர். ஒரு மாதம் அங்கிருந்த பிறகு, திரும்பவும் முகாமுக்கு எங்களை அனுப்பி வைத்தனர்.”
இந்த அனுபவங்கள் எங்கள் சகோதரர்களின் வைராக்கியத்தை மங்கச் செய்யவில்லை. அதற்கு மாறாக, ஃப்ரான்சிஸ்கோவும் அவருடைய குடும்பத்தினரும் அந்த முகாம்களிலிருந்த அவர்கள் சகோதரர்களோடுகூட இப்போது மொஸாம்பிக்கில் சுதந்திரமான நிலைமைகளில் வணங்கிக் கொண்டும் பிரசங்கித்துக் கொண்டும் வருகின்றனர்.