பூமி முழுவதிலுமுள்ள பெண்கள்
முதல் மானிட ஜோடி கடவுளுக்கு விரோதமாக கலகம் செய்தபோது, அவர்களுக்கும் அவர்களுடைய சந்ததிக்கும் நேரிடப்போகும் அழிவுண்டாக்கும் விளைவுகளை யெகோவா முன்னறிவித்தார். யெகோவா ஏவாளிடம் சொன்னார்: “உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான்.” (ஆதியாகமம் 3:16) பெண்களுக்கு ஆழ்ந்த மரியாதை காண்பிக்கும்படி பைபிள் தொடர்ந்து உற்சாகப்படுத்துகிறது, இலட்சக்கணக்கான பெண்கள், தாங்களும் தங்களுடைய குடும்பங்களும் பைபிள் நியமங்களைப் பொருத்துவதால் மகிழ்ச்சியான, அதிக திருப்தியுள்ள வாழ்க்கையை அனுபவிக்கின்றனர்.
மனித உரிமைகளைப் பற்றிய ஒரு சமீபத்திய அறிக்கையின்படி, உலகமுழுவதிலுமுள்ள மற்ற பெண்கள் இழிவுபடுத்தப்படுகின்றனர், பிறருடைய சுயநலத்துக்காகப் பயன்படுத்தப்படுகின்றனர், மதிப்பிழக்கும்படிச் செய்யப்படுகின்றனர். அந்த அறிக்கையைப் பற்றி இன்டர்நேஷனல் ஹெரல்ட் ட்ரிபியூன் இவ்வாறு குறிப்பிடுகிறது: “193 தேசங்களின் பேரில் உள்ள அறிக்கை . . . துன்பந்தரும் விதத்தில் அன்றாடக வாழ்வில் பெண்கள் வித்தியாசமாகவும் தவறாகவும் நடத்தப்படுவதைப் பற்றிய ஒரு சோகமான காட்சியை விளக்கமாக வருணிக்கிறது.”
ஒருசில உதாரணங்கள்: மத்திய ஆப்பிரிக்காவில் பெண்கள் விளைநிலங்களில் பெரும்பாலான கடினமான வேலைகளைச் செய்யவேண்டும், பையன்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு பெண்களே பள்ளிக்குச் செல்கின்றனர். அங்குள்ள ஒரு தேசத்தில், பெண்களுக்கு விபசாரம் சட்டவிரோதமானது, ஆனால் ஆண்களுக்கு அல்ல. மற்றொரு ஆப்பிரிக்க தேசத்தின் சட்டம், ஒரு கணவன் தன் மனைவி விபசாரம் செய்வதைக் கண்டுபிடித்து அவளைக் கொலைசெய்தால், அது கணவனை மன்னித்துவிடுகிறது, ஆனால் அதேபோன்ற சூழ்நிலைமைகளில் ஒரு மனைவி தன் கணவனை கொலை செய்தால் அவளை மன்னிப்பதில்லை.
தென் அமெரிக்காவின் சில பகுதிகளில் வீட்டில் அடிபடும் பெண்களிடம் போலீசார் இரக்கமற்றவர்களாய் இருக்கின்றனர் என்று அந்த அறிக்கை சொல்கிறது. வேலைசெய்யும் பெண்கள் பொதுவாக ஆண்களைக் காட்டிலும் 30-லிருந்து 40 சதவீதம் வரை குறைவாக இருக்கும் வருமானத்தை வைத்து சமாளிக்க வேண்டும்.
ஆசியாவின் சில பகுதிகளில் பெண்கள் பலாத்காரமாக மலடாக்கப்படுவதற்கும் கருக்கலைப்பு செய்யப்படுவதற்கும் ஆளாகின்றனர். ஒரு தேசத்தில் 5,00,000 விலைமகளிர் இருக்கின்றனர், இவர்களில் அநேகர், தங்களுக்கென்று புதிய வீடுகளை வாங்குவதற்கு பணத்தைப் பெற விரும்பும் பெற்றோரால் இந்த விலைமகளிர் தொழிலுக்குள் விற்கப்பட்டிருக்கின்றனர். மற்றொரு தேசத்தில் உள்ள காவல்துறையினர் பரவலாய்க் காணப்படும் “வரதட்சிணை சாவுகளை” சமாளிக்க வேண்டியதாயிருக்கிறது—ஒரு மனைவி தன் சொந்த கணவனால் அல்லது அவருடைய குடும்பத்தினரால் கொல்லப்படுகிறாள், ஏனென்றால் அவள் கொண்டுவந்த வரதட்சிணை அவர்கள் எதிர்பார்த்த அளவு இருக்கவில்லை.
இயேசு கிறிஸ்துவைக் குறித்து பைபிள் நமக்கு இவ்வாறு உறுதியளிக்கிறது: “கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார். பலவீனனுக்கும் எளியவனுக்கும் அவர் இரங்கி, எளியவர்களின் ஆத்துமாக்களை இரட்சிப்பார். அவர்கள் ஆத்துமாக்களை வஞ்சகத்திற்கும் கொடுமைக்கும் தப்புவிப்பார்; அவர்களுடைய இரத்தம் அவருடைய பார்வைக்கு அருமையாயிருக்கும்.” (சங்கீதம் 72:12-14) எனவே நன்நம்பிக்கையோடிருக்க நமக்குக் காரணம் இருக்கிறது; அந்தச் சமயத்தில் நிலவப்போகும் மேம்பட்ட நிலைமைகளுக்காக உலகமுழுவதிலுமுள்ள பெண்கள் ஆவலோடு எதிர்பார்க்கலாம்.