கண்ணாடி எதைக் காட்டுகிறது?
ஒரு கண்ணாடியில் பாருங்கள். நீங்கள் எதைப் பார்க்கிறீர்கள்? சில சமயங்களில், கண்ணாடியில் ஒரு பார்வையைச் செலுத்துவது, உங்கள் தோற்றத்தில் உங்களுக்குச் சங்கடத்தைக் கொடுக்கக்கூடிய ஒரு குறையைக் காட்டுகிறது; அதை மற்றவர்கள் கவனிப்பதற்குள் திருத்திவிடுவதில் நீங்கள் சந்தோஷப்படுகிறீர்கள்.
பைபிள் பெரும்பாலும் ஒரு கண்ணாடியைப் போலவே இருக்கிறது. அது நம்மைப்பற்றி நேர்மையான நோக்கைப் பெற்றுக்கொள்ள உதவக்கூடும்; அந்த நோக்கு, நாம் கடவுளுடைய பார்வையில் நம்முடைய தகுதியைக் குறித்து, மிகவும் அதிகமாகவோ அல்லது மிகவும் குறைவாகவோ மதிப்பிடுவதைத் தடுக்கும். (மத்தேயு 10:29-31; ரோமர் 12:3) கூடுதலாக, நம்முடைய சொற்கள், செயல்கள், அல்லது மனப்பான்மைகளில் சரிப்படுத்த வேண்டிய குறைகளை பைபிள் நமக்குக் காட்ட முடியும். இப்படியாகும்போது, கண்ணாடி எதைக் காட்டுகிறதோ அதை நீங்கள் அசட்டை செய்வீர்களா?
பைபிள் எழுத்தாளர் யாக்கோபு இவ்வாறு சொல்கிறார்: “ஒருவன் திருவசனத்தைக் கேட்டும் அதின்படி செய்யாதவனானால், கண்ணாடியிலே தன் சுபாவ முகத்தைப் பார்க்கிற மனுஷனுக்கு ஒப்பாயிருப்பான்; அவன் தன்னைத்தானே பார்த்து, அவ்விடம்விட்டுப் போனவுடனே, தன் சாயல் இன்னதென்பதை மறந்துவிடுவான்.”—யாக்கோபு 1:23, 24.
மாறாக, “சுயாதீனப்பிரமாணமாகிய பூரணப்பிரமாணத்தை உற்றுப்பார்த்து, அதிலே நிலைத்திருக்கிற” வேறொரு மனிதனைப் பற்றியும் யாக்கோபு விவரிக்கிறார். (யாக்கோபு 1:25) “உற்றுப்பார்த்து” என்பதாக மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை, பார்க்கும்படியாக பக்கத்தில் குனிவதை அல்லது முன்பக்கமாகச் சாய்வதை அர்த்தப்படுத்துகிறது. “அவசரமான ஒரு பார்வை பார்த்துவிட்டுப் போவதைப் பார்க்கிலும் அதிகம் இதில் உட்பட்டிருக்கிறது” என்பதாக தியாலஜிக்கல் டிக்ஷனரி ஆஃப் தி நியூ டெஸ்டமன்ட் சொல்கிறது. மறைந்திருக்கும் ஒரு பொருளைக் கவனமாகத் தேடுவதை அந்த வார்த்தை குறிப்பிடுகிறது. “அதைப் பார்ப்பதும், அதன் அர்த்தத்தை உடனடியாகப் புரிந்துகொள்வதும் கடினமாக இருக்கக்கூடும் என்றாலும், பார்வையாளர் பார்க்க விரும்புகிற முக்கியமான ஏதோவொன்று இருக்கிறது,” என்று பைபிள் கருத்துரையாளர் ஆர். வி. ஜி. டாஸ்கர் எழுதுகிறார்.
இதன் காரணமாக, கடவுளுடைய வார்த்தையாகிய கண்ணாடியில் உங்களை ஆராய்ந்து, பின்னர் அது எதைத் தேவைப்படுத்துகிறதோ அதற்கிசைவாக உங்களை ஆக்கிக்கொள்வீர்களா? யாக்கோபு தொடர்கிறார்: “[இவன்] கேட்கிறதை மறக்கிறவனாயிராமல், அதற்கேற்ற கிரியை செய்கிறவனாயிருந்து, தன் செய்கையில் பாக்கியவானாயிருப்பான்.”—யாக்கோபு 1:25.