‘அந்நிய நுகத்திலே பொருத்தமற்று பிணைக்கப்பட்டவர்களாகாதிருங்கள்’
இங்கே படத்தில் காண்பிக்கப்பட்டிருக்கும் இரண்டு எருதுகள் பெரும் பலத்தை உடையனவாய் இருக்கின்றன, அதன் காரணமாக அவை பெரும் பாரங்களை சுலபமாக இழுக்கின்றன. ஆனால் ஒரு எருதுக்குப் பதிலாக ஒரு கழுதை வைக்கப்பட்டது என்று வைத்துக் கொள்வோம். கழுதை எருதைக் காட்டிலும் சிறியதாயும் பலவீனமானதாயும் இருப்பதால், இந்தப் பொருத்தமற்ற நுகத்தில் தன்னை இணைத்திருக்கும் நீண்ட மரத்துண்டை உதைப்பதன் மூலம் அது எதிர்க்கும். நல்ல காரணத்தோடுதான் இஸ்ரவேலருக்கு கடவுள் கொடுத்த சட்டம் இவ்வாறு சொன்னது: “மாட்டையும் கழுதையையும் பிணைத்து உழாதிருப்பாயாக.”—உபாகமம் 22:10.
அப்போஸ்தலனாகிய பவுல் மனிதர்களைக் குறித்த விஷயத்தில் இதைப் போன்ற ஏதோவொன்றை எழுதினார். அவர் சொன்னார்: “அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பொருத்தமற்று பிணைக்கப்பட்டவர்களாகாதிருங்கள்.” (2 கொரிந்தியர் 6:14, NW) விசேஷமாக ஒரு விவாகத் துணைவரைத் தேர்ந்தெடுக்கையில் இதை மனதில் வைக்க வேண்டும். விவாகம் ஒரு நிரந்தரமான கூட்டு ஒப்பந்தம், ஏனென்றால் இயேசு கிறிஸ்து சொன்னார்: “தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன்.” (மத்தேயு 19:6) விவாகமான தம்பதிகள் ஒரேவிதமான மத நம்பிக்கைகள், நியமங்கள், இலக்குகள் ஆகியவற்றைக் கொண்டிராவிட்டால் மிகுந்த மனவேதனை உண்டாகிறது. ஆகையால் ‘கர்த்தருக்குள் மட்டுமே’ விவாகம் செய்ய வேண்டும் என்ற பைபிளின் புத்திமதியைப் பின்பற்றுவது நியாயமானதுதான். (1 கொரிந்தியர் 7:39, NW) உங்களுடைய மத நம்பிக்கைகளைப் பகிர்ந்துகொள்ளாத ஒருவரை நீங்கள் திருமணம் செய்துகொள்வது, ஓர் எருதையும் ஒரு கழுதையையும் இணைப்பதைக் காட்டிலும் பெரிய பிரச்சினைகளைக் கொண்டு வரும்.
ஒரு தம்பதி பொருத்தமற்று பிணைக்கப்படுவதற்கு, மத நம்பிக்கைகளில் வித்தியாசப்படுவது ஒரு காரணம். திருமணம் செய்துகொள்ளப் போகும் துணைவர்கள் ஒரே விசுவாசத்தைக் கொண்டிருந்தாலும்கூட, பின்வரும் கேள்விகளைக் கேட்டுக்கொள்வது நல்லது—‘நாம் ஒரே இலக்குகளை வைத்திருக்கிறோமா? எங்கே வசிப்போம்? வரவு செலவு கணக்குகளை யார் கையாளுவது? இருவருமே வேலை செய்வோமா? பிள்ளைகளைக் கொண்டிருப்போமா? நம்முடைய விவாக உறவில் தயவும் பரிவும் இருக்குமா?’
இப்படிப்பட்ட பிரச்சினைகளைக் கலந்தாலோசிக்கும் விதம், ஒரு நுகம் பொருத்தமானதாக இருக்குமா பொருத்தமற்றதாக இருக்குமா என்பதை ஓரளவுக்கு சுட்டிக் காண்பிக்கலாம். நிச்சயமாகவே, எந்த இரண்டு நபரும் முழுவதும் இணக்கமாயிருப்பதில்லை. இருப்பினும், எல்லாவற்றையும் உள்ளிட்டுப் பார்க்கையில், ஒரு தம்பதி விவாகத்திற்கு முன்பு பழகும் சமயத்தில், ஒன்றாக சேர்ந்து பிரச்சினைகளை எதிர்ப்பட்டு அவற்றைத் தீர்க்கக்கூடியவர்களாய், ஒருவரோடொருவர் தாராளமாக பேசுகிறவர்களாயுமிருந்தால், அவர்கள் அந்நிய நுகத்தில் பொருத்தமற்று பிணைக்கப்படாமல் இருப்பதைப் பெரும்பாலும் தவிர்க்கக்கூடும்.