வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
“பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி” என்று அப்போஸ்தலன் பவுல் கூறியபோது, அவர் எதை அர்த்தப்படுத்தினார்? (பிலிப்பியர் 3:13) ஒரு நபரால் வேண்டுமென்றே எதையாவது மறக்க முடியுமா?
முடியாது, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் வேண்டுமென்றே நம் மனதிலிருந்து நினைவை நீக்க முடிவதில்லை. நாம் நினைவில் நிறுத்த விரும்பும் அநேக காரியங்களை மறந்துவிடுவதும், நாம் விரைவில் மறந்துவிட விரும்பும் அநேக காரியங்களை நினைவில் வைப்பதும்தான் உண்மையாக இருக்கிறது. அப்படியென்றால், பிலிப்பியர் 3:13-ன் வார்த்தைகளை பவுல் எழுதியபோது எதை அர்த்தப்படுத்தினார்? புரிந்துகொள்ள நமக்கு சூழமைவு உதவுகிறது.
பவுல் தான் ‘மாம்சத்தின்மேல் நம்பிக்கை வைப்பதற்கான . . . காரணங்களை’ பற்றி பிலிப்பியர் 3-ம் அதிகாரத்தில் விவரிக்கிறார். அவர் தன்னுடைய மாசற்ற யூத பின்னணியைப் பற்றியும் நியாயப்பிரமாணத்தின் பேரில் அவருக்கிருந்த வைராக்கியத்தை—இஸ்ரவேல் தேசத்தாரின் மத்தியில் அவருக்கு பல சலுகைகளைக் கொடுத்திருக்கும் காரியங்களை—பற்றியும் பேசுகிறார். (பிலிப்பியர் 3:4-6, NW; அப்போஸ்தலர் 22:3-5) இருப்பினும், அத்தகைய சலுகைகளுக்கு அவர் புறமுதுகைக் காட்டினார், அடையாள அர்த்தத்தில் சொன்னால் அவற்றை நஷ்டமென்று ஒதுக்கித்தள்ளிவிட்டார். ஏன்? ஏனென்றால் மேன்மையான ஏதோ ஒன்றை—‘கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மையை’—கண்டார்.—பிலிப்பியர் 3:7, 8.
பவுலின் முக்கிய இலக்கானது, இந்த உலகில் முக்கிய அந்தஸ்தைப் பெறவேண்டும் என்பதல்ல, ஆனால் “முதலாம் உயிர்த்தெழுதல்” அடையவேண்டும் என்பதே. (பிலிப்பியர் 3:11, NW, 12) எனவே, அவர் எழுதுகிறார்: “பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளாக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.” (பிலிப்பியர் 3:13, 14) “பின்னானவைகளை மறந்து” என்று பவுல் கூறியபோது, “பின்னானவைகளை” தன் மனதிலிருந்து எப்படியோ அழித்துவிட்டதாக அவர் அர்த்தப்படுத்தவில்லை. சற்று முன்புதான் அவற்றை வரிசைப்படுத்தியதால் இன்னும் அவற்றை நினைவுகூர்ந்தார் என்பது தெளிவாக உள்ளது. அதுமட்டுமின்றி, மூல கிரேக்க பாஷையில், முடிந்துவிட்ட செயலை அல்ல, நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒரு செயலைக்குறிக்கும் வினைச்சொல்லை அவர் உபயோகித்தார். அவர் ‘மறந்துகொண்டிருக்கும்’ என்று கூறுகிறாரே தவிர ‘மறந்துவிட்டிருக்கும்’ என்று கூறவில்லை.
“மற” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை (எபிலான்தேனொமாய் [e·pi·lan·thaʹno·mai]) வெவ்வேறு அர்த்தங்களைக் கொண்டிருக்கிறது, அவற்றில் ஒன்று, “அதைப்பற்றி கவலையற்று இருத்தல்,” அல்லது “புறக்கணித்தல்.” புதிய ஏற்பாட்டின் விளக்க அகராதி (ஆங்கிலம் [ஹோர்ஸ்ட் பால்ஸ் மற்றும் கெர்ஹார்டு ஷ்னீடர் ஆகியோரால் தொகுக்கப்பட்டது]) பிரகாரம் பிலிப்பியர் 3:13 சொல்கிற ‘மறந்துகொண்டிருப்பது’ இதைத் தான் அர்த்தப்படுத்துகிறது. பவுல் தான் விட்டுவந்த காரியங்களைத் தொடர்ந்து யோசித்துக்கொண்டிருக்கவில்லை. அவற்றை அற்பமாக நோக்க கற்றுக்கொண்டவராக இருந்தார். பரலோக நம்பிக்கையுடன் ஒப்பிடுகையில் அவை, ‘குப்பையை’ போன்று இருந்தன.—பிலிப்பியர் 3:11.
பவுலின் வார்த்தைகள் இன்று எவ்வாறு பொருந்தும்? கடவுளைச் சேவிப்பதற்காக பவுலை போலவே கிறிஸ்தவர் ஒருவர், தியாகங்களைச் செய்திருக்கலாம். முழுநேர சேவைக்காக லாபகரமான தொழிலை விட்டு வந்திருக்கலாம். அல்லது பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம், சத்தியத்தை அவர்கள் ஏற்காத காரணத்தால் பொருள்சம்பந்தமான உதவியை அவருக்குக் கொடுப்பதிலிருந்து முற்றிலும் நிறுத்திவிட்டிருக்கலாம். அத்தகைய தியாகங்கள் போற்றத்தகுந்தவையே, ஆனாலும் அவை எந்நேரமும் சிந்தித்துக்கொண்டிருக்கவேண்டிய காரியங்கள் அல்ல. ஒரு கிறிஸ்தவர் அவருக்கு முன் ஒளிமயமான எதிர்காலம் காத்திருப்பதன் பொருட்டு, “பின்னானவைகளை” ‘மறக்கிறார்,’ கவலைப்படுவதை நிறுத்திவிடுகிறார்.—லூக்கா 9:62.
பவுலின் வார்த்தைகளில் பொதிந்துள்ள நியமங்களை ஒருவேளை மற்றொரு விதத்தில் பயன்படுத்தலாம். ஒரு கிறிஸ்தவர் கடவுளைப் பற்றி கற்கும் முன்பே தவறான நடத்தையில் ஈடுபட்டவராக இருந்திருந்ததால் அவரைப் பற்றியதில் என்ன? (கொலோசெயர் 3:5-7) அல்லது, ஒருவேளை கிறிஸ்தவராக மாறியப்பின்பு அவர் பயங்கரமான பாவத்தை செய்து, அதற்காகச் சபையால் சிட்சிக்கப்பட்டிருக்கலாம். (2 கொரிந்தியர் 7:8-13; யாக்கோபு 5:15-20) ஒருவேளை அவர் உண்மையில் மனஸ்தாபப்பட்டு தன்னுடைய வழிகளை மாற்றியிருந்தால், அவர் ‘கழுவப்பட்டிருக்கிறார்.’ (1 கொரிந்தியர் 6:9-11) என்ன நடந்ததோ அது கடந்தகாலகாரியமாகிவிட்டது. அவர் செய்ததை ஒருவேளை என்றுமே சொல்லர்த்தமாக மறந்திருக்க மாட்டார்; மறுப்புக்கிடமின்றி, பட்ட அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்டு, அந்தப் பாவத்தை மீண்டும் செய்யாதவாறு அவர் ஞானமுள்ளவாராக இருப்பார். இருப்பினும், தன்னைத்தானே தொடர்ந்து கடிந்துகொண்டிருக்கமாட்டார் என்ற கருத்தில் அவர் ‘மறந்துவிடுகிறார்.’ (ஏசாயா 65:17-ஐ ஒப்பிடுக.) இயேசுவினுடைய பலியின் அடிப்படையில் மன்னிக்கப்பட்டபின், அவர் கடந்தகாலத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட கடும் முயற்சி செய்கிறார்.
பிலிப்பியர் 3:13, 14-ல் ஓட்டப்பந்தயத்தில் இலக்கை அடைவதற்காக ‘முன்னானவைகளை நாடும்’ ஓர் ஓட்டக்காரராகத் தன்னை பவுல் விவரிக்கிறார். ஓட்டக்காரர் முன்னோக்கி பார்க்கிறாரே தவிர பின்னோக்கி பார்ப்பதில்லை. அவ்விதமே, ஒரு கிறிஸ்தவர், முன்னிருக்கும் ஆசீர்வாதங்களைப் பார்க்க வேண்டும், பின்விட்டு வந்த காரியங்களை அல்ல. பவுல் மேலும் கூறுகிறார்: “எந்தக் காரியத்திலாவது நீங்கள் வேறே சிந்தையாயிருந்தால், அதையும் தேவன் உங்களுக்கு வெளிப்படுத்துவார்.” (பிலிப்பியர் 3:15) இவ்வாறாக, இப்படிப்பட்ட நோக்குநிலையை வளர்க்க உங்களுக்கு உதவும்படி கடவுளிடம் ஜெபம் செய்யுங்கள். பைபிளில் காணப்படுவதைப்போல், கடவுளுடைய சிந்தைகளால் உங்கள் மனதை நிரப்புங்கள். (பிலிப்பியர் 4:6-9) யெகோவா உங்கள்மீது வைத்திருக்கும் அன்பின் பேரிலும், அதனால் நீங்கள் அனுபவிக்கும் ஆசீர்வாதங்கள் பேரிலும் தியானம் செய்யுங்கள். (1 யோவான் 4:9, 10, 17-19) அன்பிறகு, யெகோவா தம்முடைய பரிசுத்த ஆவியின் மூலம், நீங்கள் எதைப் பின்விட்டு வந்தீர்களோ, அவற்றைக் குறித்து கவலையற்றவர்களாக இருக்க உதவுவார். பவுலை போலவே நீங்களும் மகிமையான எதிர்காலத்தை முன்னோக்கி பார்ப்பீர்கள்.—பிலிப்பியர் 3:17.