வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
“டோட்டே” (அப்பொழுது) என்ற கிரேக்க சொல், பின்தொடர்ந்து வரும் ஏதோவொன்றை அறிமுகப்படுத்து வதற்கு பயன்படுத்தப்பட்டது என்று நான் விளங்கிக் கொண்டிருக்கிறேன். ஆனால், லூக்கா 21:12 ‘இவைக ளெல்லாம் நடப்பதற்கு முன்னே அவர்கள் உங்களைப் பிடித்து துன்பப்படுத்துவார்கள்’ என்று சொல்கையில் மத்தேயு 24:9-ல் உள்ள அதற்கு இணையான பதிவு, ‘அப்பொழுது [“டோட்டே”] உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுப்பார்கள்,’ என்று ஏன் சொல்லுகிறது?
பின்தொடர்ந்து வரும் ஏதோவொன்றை, ஒன்றன்பின் ஒன்றாக நிகழும் ஏதோவொன்றை அறிமுகப்படுத்துவதற்கு டோட்டே என்ற சொல் பயன்படுத்தப்படலாம் என்பது சரியே. ஆனால் இந்தச் சொல் இதற்கு மட்டுமே பைபிளில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று நாம் விளங்கிக்கொள்ள வேண்டியதில்லை.
வேதாகமத்தில் டோட்டே என்ற சொல் இரண்டு அடிப்படையான அர்த்தங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை பார், ஆர்ன்ட், கிங்ரிச் என்பவர்களின் புதிய ஏற்பாடு மற்றும் பிற பூர்வீக கிறிஸ்தவ பிரசுரங்களின் கிரேக்க-ஆங்கில அகராதி காண்பிக்கிறது.
அதன் ஓர் உபயோகம், “அப்பொழுது” என்பதைக் குறிப்பதற்கு ஆகும். “அப்பொழுது என்பது கடந்தகாலத்தில் ஒரு குறிப்பிட்ட சமயத்தை” குறிப்பிடுகிறது. மத்தேயு 2:18 ஓர் உதாரணமாக கொடுக்கப்பட்டிருக்கிறது: “எரேமியா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது அப்பொழுது நிறைவேறிற்று.” ஒன்றன்பின் ஒன்றாக நிகழும் ஏதோவொன்றை இது குறிப்பிடுவதில்லை, ஆனால் கடந்தகாலத்தில் ஒரு குறிப்பிட்ட சமயத்தைச் சுட்டிக் காண்பிக்கிறது. அதேபோல், டோட்டே என்ற சொல் “எதிர்காலத்தில் ஒரு குறிப்பிட்ட சமயத்தைக் குறிப்பிட” பயன்படுத்தப்படலாம். ஓர் உதாரணம் 1 கொரிந்தியர் 13:12-ல் காணப்படுகிறது: “இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம். இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்துகொள்ளுவேன்.” ‘எதிர்காலத்தில் அந்தக் குறிப்பிட்ட சமயத்தில்’ என்ற அர்த்தத்தில் பவுல் இங்கே டோட்டே என்ற சொல்லைப் பயன்படுத்தினார்.
இந்த அகராதியின்படி, “காலப்போக்கில் பிற்பாடு வருவதை அறிமுகப்படுத்த பயன்படுத்தப்படுவது” மற்றொரு உபயோகமாகும். இயேசுவின் வந்திருத்தலைக் குறித்து அப்போஸ்தலர் கேட்ட கேள்விக்கு இயேசு கொடுத்த பதில் காணப்படும் மூன்று பதிவுகளில் உள்ள அநேக உதாரணங்களை இந்த அகராதி அளிக்கிறது.a “காலப்போக்கில் பிற்பாடு வருவதை அறிமுகப்படுத்த” டோட்டே என்ற சொல் பயன்படுத்தப்படுவதற்கு உதாரணங்களாக, அந்த அகராதி மத்தேயு 24:10, 14, 16, 30; மாற்கு 13:14, 21; மற்றும் லூக்கா 21:20, 27 ஆகிய வசனங்களை மேற்கோள் காண்பித்திருக்கிறது. ஏன் காலப்போக்கில் அடுத்து அடுத்து நிகழும் ஏதோவொன்று என்பது சரியான புரிந்துகொள்ளுதல் என்பதை சூழமைவை சிந்தித்துப் பார்ப்பது காண்பிக்கிறது. எதிர்காலத்தில் உருவாகப்போகும் சம்பவங்களைப் பற்றிய இயேசுவினுடைய தீர்க்கதரிசனத்தின் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதற்கு இது உதவியாயிருக்கிறது.
இருப்பினும், இந்த விவரப்பதிவுகளில் காணப்படும் டோட்டே கண்டிப்பாக காலப்போக்கில் ஒன்றையொன்று பின்தொடருபவற்றைத்தான் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற முடிவுக்கு நாம் வரவேண்டியதில்லை. உதாரணமாக, மத்தேயு 24:7, 8-ல், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யம் எழும்பும் என்றும் பஞ்சங்களும் பூமியதிர்ச்சிகளும் உண்டாகும் என்றும் இயேசு முன்னறிவித்ததை நாம் வாசிக்கிறோம். வசனம் 9 தொடருகிறது: “அப்பொழுது உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள்; என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள்.” (நேரெழுத்துக்கள் எங்களுடையவை.) முன்னறிவிக்கப்பட்ட யுத்தங்கள், பஞ்சங்கள், பூமியதிர்ச்சிகள் ஆகிய அனைத்தும் துன்புறுத்துதல் ஆரம்பிப்பதற்கு முன்பே நடைபெற்று ஒருவேளை முடிவுக்கு வந்துவிடும் என்று புரிந்துகொள்வது நியாயமாக இருக்குமா?
அது நியாயமானதாய் இல்லை, முதல் நூற்றாண்டு நிறைவேற்றத்தைக் குறித்து நாம் அறிந்திருக்கும் விஷயங்களிலிருந்தும் அது புலனாவதில்லை. புதிய கிறிஸ்தவ சபையின் அங்கத்தினர்கள் பிரசங்கிக்க ஆரம்பித்தவுடனேயே அவர்கள் கடும் எதிர்ப்பை அனுபவித்தனர் என்று அப்போஸ்தலர் புத்தகத்தில் உள்ள பதிவு வெளிப்படுத்திக் காண்பிக்கிறது. (அப்போஸ்தலர் 4:5-21; 5:17-40) இயேசு குறிப்பிட்ட எல்லா யுத்தங்களும் பஞ்சங்களும் பூமியதிர்ச்சிகளும் அந்த ஆரம்பகால துன்புறுத்துதலுக்கு முன் நிகழ்ந்தது என்று நாம் நிச்சயமாகவே சொல்ல முடியாது. அதற்கு மாறாக, முன்னறிவிக்கப்பட்ட மற்ற காரியங்களில் அநேகம் நடப்பதற்கு “முன்னே” எதிர்ப்பு வந்தது, அது லூக்கா விஷயங்களை எழுதிய விதத்திற்கு இசைவாய் உள்ளது: “இவைகளெல்லாம் நடப்பதற்கு முன்னே அவர்கள் உங்களைப் பிடித்து துன்பப்படுத்துவார்கள்.” (லூக்கா 21:12) மத்தேயு 24:9-ல் டோட்டே என்ற சொல் “அப்பொழுது” என்ற அர்த்தத்தில் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை அது குறிப்பிடும். யுத்தங்கள், பஞ்சங்கள், பூமியதிர்ச்சிகள் ஆகியவை நிகழும் காலப்பகுதியின்போது அல்லது அப்பொழுது இயேசுவைப் பின்பற்றுகிறவர்கள் துன்புறுத்தப்படுவார்கள்.
[அடிக்குறிப்பு]
a மத்தேயு, மாற்கு, லூக்காவில் உள்ள இதற்கு இணையான பதிவுகள், காவற்கோபுரம், பிப்ரவரி 15, 1994, பக்கங்கள் 14 மற்றும் 15-ல் தனிப்பகுதியாக கொடுக்கப்பட்டிருந்தது. “அப்பொழுது” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் டோட்டே தடித்த எழுத்துக்களில் போடப்பட்டிருக்கிறது.