‘சிங்கத்தின் இருதயத்தை’ நீங்கள் கொண்டிருக்க முடியும்
சில நேரங்களில் பைபிள் தைரியத்திற்கும், நம்பிக்கைக்கும் ஓர் அடையாள சின்னமாக சிங்கத்தை உபயோகிக்கிறது. திடகாத்திரமான அல்லது தைரியமான ஆட்கள் ‘சிங்கத்தின் இருதயத்தை’ கொண்டிருப்பதாக விவரிக்கப்படுகிறார்கள்; நீதிமான்கள் “பாலசிங்கம்போல தைரியமாயிருப்பார்கள்” என்பதாக சொல்லப்படுகிறார்கள். (2 சாமுவேல் 17:10; நீதிமொழிகள் 28:1, தி.மொ.) விசேஷமாக எப்போது சவால்விடப்படுகிறதோ அப்போது சிங்கம் ‘மிருகங்களில் பராக்கிரம வீரன்’ என்ற தனது புகழுக்கு தான் தகுதியானது என்பதைக் காட்டுகிறது.—நீதிமொழிகள் 30:30, தி.மொ.
யெகோவா தேவன் தமது மக்களைப் பாதுகாப்பதற்கு எடுத்திருக்கும் திடதீர்மானத்தை சிங்கத்தின் பயமற்றத்தன்மையுடன் ஒப்பிடுகிறார். ஏசாயா 31:4, 5 குறிப்பிடுவதாவது: “சிங்கமும் பாலசிங்கமும் தங்கள் இரையைப் பிடித்திருக்கும்போது கெர்ச்சித்து, தங்களுக்கு விரோதமாய்க் கூப்பிடுகிற திரளான மேய்ப்பரின் சத்தத்தினாலே கலங்காமலும், அவர்கள் அமளியினாலே பணியாமலும் இருக்கிறதுபோல, சேனைகளின் கர்த்தர் சீயோன் மலைக்காகவும், அதின் மேட்டுக்காகவும் யுத்தம்பண்ண இறங்குவார். . . . அவர் அதைக் காத்துத் தப்பப்பண்ணுவார்; அவர் கடந்துவந்து அதை விடுவிப்பார்.” இவ்வாறாக யெகோவா தம்முடைய ஊழியர்களுக்கு, விசேஷமாக அவர்கள் இன்னலை எதிர்ப்படும்போது தாம் ஊக்கமான ஆதரவு தருவதை உறுதிப்படுத்துகிறார்.
மனிதவர்க்கத்தின் பரம எதிரி பிசாசாகிய சாத்தானை பைபிள், கெர்ச்சித்துக்கொண்டிருக்கும் பெரும் பசியுள்ள ஒரு சிங்கத்திற்கு ஒப்பிடுகிறது. அவனுக்கு இரையாவதைத் தவிர்ப்பதற்காக வேதாகமத்தில் இவ்வாறு நாம் சொல்லப்படுகிறோம்: “தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்.” (1 பேதுரு 5:8) இதைச் செய்வதற்கான ஒரு வழியானது மரணத்திற்கேதுவான ஆவிக்குரிய தூக்கத்தைத் தவிர்ப்பதாகும். இதன்பேரில் இயேசு கூறியதாவது: “உங்கள் இருதயங்கள் பெருந் தீனியினாலும் வெறியினாலும் லௌகீகக் கவலைகளினாலும் எப்போதாகிலும் பாரமடையாதபடி உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.” (லூக்கா 21:34-36, தி.மொ.) ஆம், இந்தக் “கடைசிநாட்களில்” ஆவிக்குரியவிதத்தில் விழிப்போடு இருப்பதானது ‘யெகோவாவில் நம்பிக்கைவைத்துத் திடனாய்’ இருக்கக்கூடிய ‘சிங்கத்தின் இருதயத்தை’ நமக்குக் கொடுக்கும்.—2 தீமோத்தேயு 3:1; சங்கீதம் 112:7, 8, தி.மொ.