“நான் காண்பதென்ன கனவா?”
1995, கோடைக்காலத்தில் நடைபெற்ற “சந்தோஷமாய் துதிப்போர்” என்ற வரலாறு படைத்த யெகோவாவின் சாட்சிகளுடைய மாவட்ட மாநாடுகளில் ஒன்றைப் பற்றிய பின்வரும் அறிக்கை மலாவியிலிருந்து வருகிறது.
“பிரதான சாலை ஒன்றில், மலாவி ஏரியின் மேற்குக் கரைக்குக் கிட்டத்தட்ட பாதி வழியில், 29 வருடங்களில் முதல் முறையாக ஓர் அறிவிப்புப் பலகை நாட்டப்பட்டிருக்கிறது. ‘யெகோவாவின் சாட்சிகளுடைய மாவட்ட மாநாடு’ என்று அது அறிவிக்கிறது.
“அந்தப் பலகைக்குப் பக்கத்தில் பெரிய ட்ரக் ஒன்று வந்து நிற்கிறது, அதன் ஊர்திமனையிலிருந்து (trailer) ம்ஸூஸூ நகரத்திலிருந்து வந்திருந்த 200-க்கும் அதிகமான மாநாட்டு வருகையாளர்கள் வெளியே வருகிறார்கள். மற்ற இடங்களிலிருந்து வந்திருக்கும் தங்களுடைய சுமார் 3,000 சகோதரர்களுடனும் சகோதரிகளுடனும் சேர்ந்துகொள்வதற்காக, அவர்கள் துணி மூட்டைகளையும் போர்வைகளையும் பாத்திரங்களையும் வாளிகளையும் உணவையும் விறகுகளையும் மற்றும் பைபிள்களையும் கொண்டுவந்திருக்கிறார்கள்.
“ட்ரக்கிலிருந்து இறங்கிக்கொண்டிருந்த சகோதரர்களுக்கு நாங்கள் வாழ்த்து தெரிவித்துக்கொண்டிருக்கையில், இன்காட்டாகாட்டாவிலிருந்து இரண்டு நாட்களாக சைக்கிளை ஓட்டிவந்த, 63 வயது ஜார்ஜ் சிகாகா தன்னுடைய சைக்கிளை மணலில் தள்ளிக்கொண்டு வந்துசேருகிறார். பைபிள் நியமங்களை அவர் விட்டுக்கொடுக்க மறுத்ததன் விளைவாக நாளடைவில் சகோதரர் சிகாகா நான்குமுறை சிறைத்தண்டனையை அனுபவித்தார். அவரது தந்தைவழி உறவுக்காரர் சிறையிருப்பில் அடிவாங்கியே இறந்துபோனார். சகோதரர் சிகாகா கேட்கிறார், ‘நான் காண்பதென்ன கனவா? இந்த மாநாடு முழுமையான பகல் வெளிச்சத்தில் நடத்தப்படுகிறது, இந்த மக்கள் ராஜ்ய பாடல்களைச் சத்தமாகப் பாடுகிறார்களே! இவ்வளவு காலமாக, இரவின் இருளில் நாங்கள் சந்திக்கவேண்டியிருந்தது, ராஜ்ய பாடல்களைக் கிசுகிசுக்கவேண்டியிருந்தது, கைதட்டுவதற்கு எங்கள் கைகளைத் தேய்த்துக்கொள்ளவேண்டியிருந்தது. இப்போது நாங்கள் வெளிப்படையாகவே கூடிவருகிறோம்; நாங்கள் வெகுசிலரே உள்ளோம் என்று மக்கள் நினைத்துக்கொண்டிருந்தபோது, இத்தனை அநேகராய் நாங்கள் இருப்பதைப் பார்க்கையில் அவர்கள் ஆச்சரியமடைகிறார்கள்!’
“மாநாடு நடைபெறும் இடம், புல்லால் வேலியிடப்பட்டிருக்கிறது மற்றும் நிழல் தருவதற்காக நாணல்களால் கூரைவேயப்பட்டிருக்கிறது. மாநாட்டு வருகையாளர்கள் தங்குவதற்காகப் புல்லால் வேயப்பட்ட சிறிய குடிசைகளும், திறந்தவெளி படுக்கைக் கூடங்களும் கட்டப்பட்டன. துன்புறுத்தலின் பயத்தினால் இனியும் நெரிக்கப்படாத அழகிய இனிமையான குரல்களின் ஓசை இரவின் காற்றில் நிறைந்திருக்கிறது.
“அந்த மாநாடு ‘சந்தோஷமாய் துதிப்போர்’ என்ற தலைப்பைக் கொண்டிருப்பது எவ்வளவு பொருத்தம்!”
[படத்திற்கான நன்றி]
Mountain High Maps® Copyright © 1995 Digital Wisdom, Inc.