‘நாமனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்’
சமீபஆண்டுகளில் மத தப்பெண்ணமும் இன வேறுபாட்டுணர்ச்சியும் பூமி முழுவதிலுமாக பரவியிருக்கின்றன. கொலைகள், சித்தரவதைகள், மற்ற இழிவான கொடுமைகள் ஆகியவற்றை இன வேற்றுமைகள் தூண்டியிருக்கின்றன. அம்னெஸ்டி இண்டர்நேஷனல் கொடுத்த அறிக்கையின்படி, மனித உரிமை மீறுதல்கள் 1994-ல் உலகமுழுவதிலுமாக 2.3 கோடிக்கும் மேலான மக்கள் தங்களுடைய வீடுகளைவிட்டு ஓடும்படியான கட்டாயத்திற்குள்ளாக்கின.
ருவாண்டாவில் மட்டுமே, ஏறக்குறைய 5,00,000 மக்கள் கொலைசெய்யப்பட்டிருக்கிறார்கள், 20,00,000-க்கு மேற்பட்டவர்கள் டூட்ஸி மற்றும் ஹூட்டூ இனத்தவருக்கிடையே கொதித்தெழுந்த வன்முறைக்குப் பிறகு அகதிகளாக ஆனார்கள். “முக்கியமாக யெகோவாவின் சாட்சிகள் ஆயுதங்களை ஏந்த மறுத்ததற்காக துன்புறுத்தப்பட்டார்கள்” என்பதாக லீ ஸ்வார் என்ற பெல்ஜிய நாட்டு செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. யெகோவாவின் சாட்சிகள் போராயுதங்களை ஏந்தி சண்டைகளில் ஈடுபடுவதில்லை. என்றபோதிலும், அவர்களில் நூற்றுக்கணக்கானோர் வன்முறையில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இயேசு தம்முடைய சீஷர்களுக்கு சொன்ன வார்த்தைகளை இது நினைவுபடுத்துகிறது: “நீங்கள் உலகத்தின் பாகமாயிராதபடியினா[ல்] . . . உலகம் உங்களைப் பகைக்கிறது.”—யோவான் 15:19.
யூஷான் நட்டாப்னானா, அவருடைய மனைவி, இரண்டு பிள்ளைகள் ஆகியோர் அடங்கிய ஒரு சாட்சி குடும்பத்தினர் தலைநகராகிய கிகாலியில் வசித்துவந்தனர். யூஷான் தன்னுடைய அண்டை வீட்டாருக்கு கிறிஸ்தவ நடுநிலைமையை விளக்கிக் காண்பிக்கும்போது, மிதவெப்ப சீதோஷ்ணங்களில் நன்கு செழித்து வளரக்கூடிய பூகெயின்வில்லியா என்ற படரும் திராட்சக்கொடியைப் பற்றி அவர் அடிக்கடி பேசினார்.—மத்தேயு 22:21.
“இங்கு கிகாலியில், பூகெயின்வில்லியா சிவப்பு நிறத்திலும், இளஞ்சிவப்பு நிறத்திலும், சிலசமயங்களில் வெள்ளை நிறத்திலும் பூக்களைப் பூக்கச் செய்கிறது. இருந்தாலும், அவையனைத்தும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவை. அதைப்போலவேதான் மனிதர்களும். நாம் வித்தியாசமான இனத்தவராக, தோல் நிறத்தவராக, அல்லது இனப் பின்னணியை உடைவர்களாக இருந்தாலும், நாமனைவரும் மனித இன குடும்பமாகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்,” என்று யூஷான் விளக்குவார்.
துக்ககரமாக, அவர்களுடைய அமைதலான குணம் மற்றும் நடுநிலைமை வகிப்பின் மத்தியிலும், இரத்தவெறிபிடித்த கும்பலால் நட்டாப்னானா குடும்பத்தினர் கொலைசெய்யப்பட்டார்கள். இருந்தபோதிலும், உண்மையுள்ளவர்களாக அவர்கள் மரித்தார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு யெகோவா தேவன் தம்முடைய வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்பதில் நாம் நிச்சயமுள்ளவர்களாக இருக்கலாம், இனிமேலும் தப்பெண்ணம் இல்லாத ஒரு உலகை சுதந்தரித்துக்கொள்வதற்கு அவர்கள் உயிர்த்தெழுப்பப்படுவார்கள். (அப்போஸ்தலர் 24:15) பின்பு, நட்டாப்னானா குடும்பத்தினர், மற்றவர்களோடுகூட, “மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.”—சங்கீதம் 37:11.