கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது யார்?
“உலகத்தை ஆளுவது யார்?” இந்தக் கேள்வியை யாராவது உங்களிடம் கேட்டால், நீங்கள் எவ்வாறு பதில் சொல்வீர்கள்? “கடவுள்” அல்லது “இயேசு” என்பதாக மதப்பற்றுள்ள பலர் அநேகமாக சொல்வார்கள். தி பிரிஃபோர்ட் நியூஸ் என்ற பஹாமா செய்தித்தாளில் வெளிவந்த ஒரு கட்டுரை ஒரு பதிலை தந்தது: அந்தப் பதிலை வெகுசிலரே எதிர்பார்த்திருக்க முடியும்.
அந்தக் கட்டுரையை எழுதியவர் இவ்வாறு ஆரம்பிக்கிறார்: “என் வாசற்படியில் ஒரு துண்டுப்பிரதி இருந்ததைப் பார்த்தேன். நான் பொதுவாகவே அப்படிப்பட்ட விஷயங்களை படிப்பதில்லை; ஆனால் இந்தத் தடவை படித்துப்பார்க்க முடிவுசெய்தேன். அதன் தலைப்பு ‘நிஜமாக உலகத்தை ஆளுவது யார்?’ என்ற கேள்வியைக் கேட்டது.” பைபிளை ஆதாரமாகக் கொண்ட அந்தத் துண்டுப்பிரதியை வாசித்ததன் மூலம், இந்த உலகை ஆளுவது கடவுளும் கிடையாது இயேசுவும் கிடையாது ஆனால் பிசாசாகிய சாத்தான்தான் ஆளுகிறான் என்று இந்தப் பெண் தெரிந்துகொண்டார்.—யோவான் 12:31; 14:30; 16:11; 1 யோவான் 5:19.
“இயல்புமீறியக் கொடூரமானச் செயல்கள் மனித உணர்ச்சியற்றத்தன்மையுடன் நிகழ்வதைச் சிந்தித்துப்பாருங்கள். விஷவாயுக் கூடங்கள், சித்திரவதை முகாம்கள், நெருப்பைக்கக்கும் கருவிகள், நாபம் எரிகுண்டுகள், மற்ற கடுங்கொடிய முறைகள் ஆகியவற்றை மனிதர்கள் இரக்கமற்ற விதத்தில் ஒருவரையொருவர் சித்திரவதைச் செய்வதற்கும் கொலை செய்வதற்கும் பயன்படுத்தியிருக்கின்றனர். . . . என்ன சக்திகள் இத்தகைய வெறுக்கத்தக்கச் செயல்களுக்கு மனிதர்களை உந்துவிக்கின்றன அல்லது அட்டூழியங்களைச் செய்வதற்கு கட்டாயப்படுத்துப்பட்டதாக உணருகிற நிலைமைகளுக்குள் அவர்களைத் திட்டமிட்டு இயக்குகின்றன? இப்படிப்பட்ட வன்முறைச் செயல்களைச் செய்வதற்கு ஏதோவொரு பொல்லாத, காணக்கூடாத சக்தி மக்களைச் செல்வாக்குச் செலுத்திவருகிறதா என்று நீங்கள் எப்பொழுதாவது சிந்தித்திருக்கிறீர்களா?” என்று அந்தத் துண்டுப்பிரதி விளக்குகிறது. சாத்தானை ‘இப்பிரபஞ்சத்தின் தேவன்’ என்று பைபிள் அழைப்பதில் ஆச்சரியம் ஏதேனும் இருக்கிறதா?—2 கொரிந்தியர் 4:4.
மகிழ்ச்சிகரமாகவே, சாத்தானும் அவனுடைய பேய்களும் ஒழிந்துபோகும் காலம் நெருங்கிவிட்டது. “உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படிசெய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.” (1 யோவான் 2:17) ஆம், கடவுளுடைய சித்தத்தை செய்பவர்கள் நீதியான புதிய உலகில் என்றென்றும் வாழ்வதற்கான நம்பிக்கையை கொண்டிருப்பார்கள் என்று பைபிள் வாக்களிக்கிறது. (சங்கீதம் 37:9-11; 2 பேதுரு 3:13; வெளிப்படுத்துதல் 21:3, 4) சாத்தானின் மற்றும் அவனுடைய பேய்களின் துஷ்ட செல்வாக்கு நீக்கப்படுகையில் அப்பாடா, எவ்வளவு நிம்மதியாக இருக்கும்!
தி பிரிஃபோர்ட் நியூஸில் கட்டுரை எழுதிய அந்த எழுத்தாளர் இந்தச் சிறிய துண்டுப்பிரதியில் அடங்கிய விஷயத்தை சுருக்கமாக விவரித்தப்பின், இவ்வாறு முடிக்கிறார்: “அந்தத் துண்டுப்பிரதியைப் படித்ததற்காக நான் உண்மையில் மகிழ்ச்சி அடைகிறேன். . . . ஏனென்றால் உலக நிலைமையைப் பற்றியும், கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது யாரென்பதைப் பற்றியும் நான்கூட கவலைப்பட்டுக்கொண்டிருந்தேன்.”