தேவையிலிருப்போருக்கு அன்பு காட்டுதல்
தேவையிலிருக்கும் தங்கள் சகோதர சகோதரிகளுக்கு அன்பு காண்பிக்க வேண்டிய கடமை, சிலாக்கியம் ஆகிய இரண்டுமே கிறிஸ்தவர்களுக்கு இருக்கிறது. (1 யோவான் 3:17, 18) அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம்.” (கலாத்தியர் 6:10) ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளாக யெகோவாவை சேவித்துவரும் ஒரு சகோதரர், சமீபத்தில் தன்னுடைய மனைவி நோய்வாய்ப்பட்டிருந்த சமயத்திலும் அதற்குப் பின் அவளுக்கு ஏற்பட்ட மரணத்தின்போதும் கிறிஸ்தவ சகோதரத்துவத்தின் அன்பை அனுபவித்திருக்கிறார். அவர் எழுதுகிறார்:
“என்னுடைய மனைவி நோயுற்றிருந்தபோது நான் அவளை கவனித்துக் கொண்டிருந்தபடியால், ஏறக்குறைய இரண்டு மாதங்களுக்கு என்னால் வேலைக்குப் போக முடியவில்லை. சபையிலுள்ள நண்பர்கள் முன்வந்து எங்களுக்கு உதவிசெய்தபோது எனக்கு எவ்வளவு நிம்மதியாக இருந்தது! ‘கூடுதலான செலவுகளுக்கு பணம்’ என்பதாக குறிப்பிட்டிருந்த கார்டுகளோடு சேர்த்து பலர் அனுப்பிய பணம் மாதாந்தர அடமான தொகைக்கும், மின்சாரம் தண்ணீர் போன்றவற்றிற்கும் மற்ற செலவுகளுக்கும் செலுத்தப்பட்டது.
“என்னுடைய மனைவி இறப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, எங்களுடைய வட்டாரக் கண்காணி எங்களைச் சந்தித்து உற்சாகமளித்தார். வார கடைசியில் சபையார் பார்க்கவிருந்த ஸ்லைடுகளையும்கூட எங்களுக்கு காட்டினார். வட்டாரக் கண்காணி நடத்திய வெளி ஊழியத்திற்கான கூட்டங்கள் உட்பட, கூட்டங்களில் நடைபெற்றதை எங்களால் தொலைபேசி மூலமாக கேட்கமுடிந்தது. இத்தகைய ஒரு கூட்டத்தில் வெளி ஊழியத்துக்கு வந்திருந்த அனைவரையும் ஒன்றாகச் சேர்ந்து என்னுடைய மனைவியிடமாக ‘ஹலோ’ சொல்லும்படியாக அவர் செய்தார். இதன் காரணமாக, சரீரப்பிரகாரமாக அவள் தொலைவில் இருந்தபோதிலும் ஒருபோதும் தனிமையாக உணரவில்லை.
“அவள் இறந்த ஒரு மணிநேரத்திற்குள், எல்லா மூப்பர்களும் என் வீட்டில் இருந்தார்கள். அந்த ஒரு நாளில் மட்டுமே நூற்றுக்கும் மேலான சகோதர சகோதரிகள் என் வீட்டுக்கு வந்தார்கள். அங்கிருந்த அனைவருக்கும் உணவு ‘அற்புதமாக’ மேசைக்கு வந்துசேர்ந்தது. பரிசுகள், அனுதாப வார்த்தைகள், ஆறுதலான வார்த்தைகள், எனக்காக செய்யப்பட்ட ஜெபங்கள் இவற்றையெல்லாம் விவரிக்க வார்த்தைகளே இல்லை. அவை எத்தனை பலமூட்டுபவையாக இருந்தன! நான் கடைசியாக உணவையும் வீட்டைச் சுத்தம் செய்வதற்கு கிடைத்த உதவியையும் நிறுத்திவிடுங்கள் என்று சகோதரரிகளிடம் கேட்டுக்கொள்ள வேண்டியதாயிற்று.
“யெகோவாவின் அமைப்பைத் தவிர வேறு எங்கே இப்படிப்பட்ட இரக்கமும் அக்கறையும் அன்பும், சுயநலமின்றி வெளிப்படுத்தப்படுவதை நாம் காணமுடியும்? இன்றுள்ள பெரும்பாலான ஆட்களால் அவர்களுக்கிருக்கும் உண்மையான நண்பர்களின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிடமுடியும். ஆவிக்குரிய சகோதர சகோதரிகள் அடங்கிய பெரும் விரிவான குடும்பத்தின்மூலம் யெகோவா நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்!”—மாற்கு 10:29, 30.