டாக்டர்களும் நீதிபதிகளும் யெகோவாவின் சாட்சிகளும்
கடந்த மார்ச் 1995-ல், யெகோவாவின் சாட்சிகள் பிரேஸிலில் இரண்டு கருத்தரங்குகளை நடத்தினர். என்ன நோக்கத்திற்காக? யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் ஆஸ்பத்திரியில் நோயாளியாக இருந்து, இரத்தமேற்றிக்கொள்ள மறுக்கையில், மருத்துவர்களின் மற்றும் சட்டத் துறையினரின் ஒத்துழைப்பை நாடுவதற்கே.—அப்போஸ்தலர் 15:28, 29
வருத்தகரமாக, சிலருடைய விஷயத்தில், சாட்சியாக இருக்கும் நோயாளியின் விருப்பத்தை மதிக்காமல் பலவந்தமாக இரத்தமேற்றுவதற்கு நீதிமன்ற ஆணைகளைப் பெற டாக்டர்கள் நாடினர். இத்தகைய சூழ்நிலைகளில், சாட்சிகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக கிடைக்கும் எந்தச் சட்ட உதவியையும் பயன்படுத்திக் கொண்டார்கள். இருந்தபோதிலும், அவர்கள் எதிர்ப்புக்குப் பதிலாக ஒத்துழைப்பையே விரும்பினர். இவ்வாறு, இரத்தமேற்றுதலுக்கு ஒத்த மாற்றுவகை சிகிச்சைமுறைகள் அநேகம் இருக்கின்றன என்றும் யெகோவாவின் சாட்சிகள் சந்தோஷமாக அவற்றை ஏற்றுக்கொள்வர் என்றும் இந்தக் கருத்தரங்கங்கள் வலியுறுத்தின. a
சாட்சிகளின் நிலையை, சாவோ பாலோவினுடைய பிராந்திய மருத்துவ அவையின் ஒரு கூட்டம் ஏற்கெனவே ஆதரித்திருந்தது. டாக்டர் பரிந்துரைக்கும் சிகிச்சைக்கு ஏதேனும் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகையில், சிகிச்சையை மறுப்பதற்கும் வேறொரு மருத்துவரை தெரிந்தெடுப்பதற்கும் நோயாளிக்கு உரிமை இருக்கிறது என்று அது ஜனவரி 1995-ல் தீர்மானித்தது.
பாராட்டத்தக்கவிதமாக, பிரேஸிலிலுள்ள மருத்துவ துறைக்குள்ளேயே இப்போது, நூற்றுக்கணக்கானவர்கள் தங்கள் நோயாளிகள் இரத்தமேற்றா சிகிச்சை முறையை விரும்புகையில் அத்தகைய சிகிச்சையளிக்க விருப்பமுள்ளவர்களாய் இருக்கின்றனர். மார்ச் 1995-ல் நடந்த கருத்தரங்குகள் முதற்கொண்டு, பிரேஸிலிலுள்ள டாக்டர்களுக்கும், நீதிபதிகளுக்கும், யெகோவாவின் சாட்சிகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பு குறிப்பிடத்தக்கவிதத்தில் முன்னேற்றமடைந்திருக்கிறது. 1997-ல், பிரேஸிலிய மருத்துவப் பத்திரிகையான அம்பிட்டூ ஆஸ்பிட்டாலார், இரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்சினையில் யெகோவாவின் சாட்சிகளுடைய உரிமையை மதிப்பதை வலியுறுத்தி ஒரு கட்டுரை வெளியிட்டது. ரியோ டி ஜனீரோ, சாவோ பாலோ ஆகிய மாகாணங்களின் பிராந்திய மருத்துவ அவைகள் குறிப்பிட்டிருந்தபடி, “நோயாளியின் உயிரைப் பாதுகாக்க வேண்டுமென்ற டாக்டரின் கடமை, சிகிச்சைக்கான நோயாளியின் உரிமையைப் பாதுகாக்க வேண்டுமென்ற அவருடைய கடமையின் எல்லையை மீறாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்” என்பது இப்போது விரிவாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
[அடிக்குறிப்பு]
a கூடுதலான தகவலுக்கு, உவாட்ச் டவர் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்டுள்ள உங்கள் உயிரை இரத்தம் எப்படிக் காப்பாற்ற முடியும்? என்ற சிற்றேட்டைக் காண்க.