ஒரு அசாதாரணமான மாநாடு பாராட்டப்பட்டது
பெரு, லிமாவில் உள்ள ஒரு வானொலி அறிவிப்பாளருக்கு யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி பெரும் சந்தேகங்கள் இருந்தன. இருந்தாலும், அவர்களுடைய மாவட்ட மாநாடு ஒன்றுக்கு ஆஜரான பின்பு, அவருடைய மனநிலையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது. உண்மையில், வானொலி நேயர்களிடம் அவர்களைப் பற்றி மெச்சிப் பேசும் அளவுக்கு கவரப்பட்டார். அவர் சொன்னவற்றிலிருந்து சில பகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
“மாநாடு உண்மையிலேயே அசாதாரணமான ஒன்றாக இருந்தது. ஒரு சிறு துண்டு காகிதம்கூட தரையில் இல்லை, வியாபாரிகள் ஒருவர்கூட இல்லை. நெருக்கித் தள்ளும் கூட்டமும் இல்லை. ஐயாயிரத்து இருநூறு ஆட்கள் தங்கள் சொந்தச் செலவில் ஸ்டேடியத்திற்கு வந்தனர். ஒவ்வொருவரும் பக்கெட், கந்தைத் துணிகள், துடைக்கும் துணிகள், குப்பை அள்ளும் முறம், துடைப்பம், பிரஷ், கையுறைகள், அந்த இடத்தை சுரண்டித் தேய்த்து கழுவுவதற்கு தேவையான டிடர்ஜென்ட் ஆகியவற்றை எடுத்து வந்தனர். பெயின்ட் அடிக்க வேண்டிய இடங்களில் பெயின்ட் அடித்தனர். இதற்கெல்லாம் யார் பணம் கொடுத்தது? தாங்களே பணத்தை நன்கொடையாக கொடுத்தனர்! செய்யப்படவேண்டிய ஏதோவொன்று அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டால், அவர்கள் எல்லாரும் உடனடியாக தங்கள் பணத்தை கொடுக்கின்றனர். என்னைப் பொறுத்தவரை இப்படிப்பட்ட விஷயங்களில் கத்தோலிக்க சர்ச் தூங்கிக்கொண்டிருக்கிறது. யெகோவாவின் சாட்சிகளுக்கும் இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் பாராட்டு தெரிவிக்க விரும்புகிறேன். கடவுள் உங்களுக்கு உதவிசெய்து உங்களை ஆசீர்வதிப்பாராக என்று என் இருதயத்தின் ஆழத்திலிருந்து அவர்களிடம் சொல்ல விரும்புகிறேன்.”
இந்த வருடம் உலகமுழுவதிலுமுள்ள நகரங்களில் யெகோவாவின் சாட்சிகள் “கடவுள் காட்டும் வாழ்க்கைமுறை” மாவட்ட மாநாட்டை அனுபவித்து மகிழ்வர். நீங்கள் அதில் ஆஜராயிருப்பீர்களா?
[பக்கம் 32-ன் சிறு குறிப்பு]
ஒரு சிறு துண்டு காகிதம்கூட தரையில் இல்லை