“அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு”
ஓய்வு ஓர் அழகிய ஆடை, ஆனால் அதையே தினமும் அணிந்தால் அதுவும் வெறுக்கத்தான் செய்யும்.” அனாமதேய எழுத்தாளர் ஒருவர் ஓய்வின் மதிப்பை இவ்வாறு ஒப்பிடுவது பொருத்தமே. இருப்பினும், பலன்தரும் பணியுடன் இது சமநிலைப்படுத்தப்பட வேண்டும் என அவர் காட்டுகிறார்.
இதே விஷயத்தை ஏவப்பட்ட பைபிள் எழுத்தாளராகிய சாலொமோனும் குறிப்பிட்டுள்ளார். தவிர்க்க வேண்டிய இரண்டு உச்ச வரம்புகளை இந்த ஞானி அடையாளம் காட்டினார். முதலில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்: “மூடன் தன் கைகளைக் கட்டிக்கொண்டு, தன் சதையையே தின்கிறான்.” (பிரசங்கி 4:5) ஆம், சோம்பேறித்தனம் ஒருவனுக்கு வறுமையைத்தான் வருவிக்கும். வறுமையோ சோம்பேறியின் ஆரோக்கியத்தையும் வாழ்க்கையையும்கூட வாரிக்கொண்டு போகும். மறுபட்சத்தில், சிலர் கடின உழைப்புக்கே அனைத்தையும் அர்ப்பணம் செய்துவிடுகின்றனர். அவர்களுடைய ஓய்வொழிச்சல் இல்லாத கடின வேலையை சாலொமோன் இவ்வாறு விவரித்தார்: “இது வீண் செயல்; காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பாகும்.”—பிரசங்கி [சபை உரையாளர்] 4:4, பொ.மொ.
நல்ல காரணத்தோடுதான் சாலொமோன் சமநிலையை சிபாரிசு செய்தார்: “காற்றைப் பிடிக்க முயல்வது போன்ற பயனற்ற உழைப்பு இரு கை நிறைய இருப்பதைவிட மன அமைதி ஒரு கையளவு இருப்பதே மேல்.” (பிரசங்கி 4:6, பொ.மொ.) ஓர் ஆள் ‘தம் உழைப்பால் வரும் இன்பத்தைத் துய்க்க’ வேண்டும், அதாவது அவன் சம்பாதித்தவற்றை சந்தோஷமாக அனுபவிக்க அவ்வப்போது நேரத்தை செலவழிக்க வேண்டும். (பிரசங்கி 2:24 பொ.மொ.) இவ்வுலகிற்குரிய வேலையைத் தவிர வாழ்க்கையில் மற்ற காரியங்களும் உள்ளன. குடும்பத்திற்கும் நம்முடைய நேரத்தை கொஞ்சம் ஒதுக்க வேண்டியுள்ளது. நம்முடைய பிரதான வேலை இவ்வுலக வேலையல்ல, ஆனால் கடவுளை சேவிப்பதே என சாலொமோன் வலியுறுத்திக் காட்டுகிறார். (பிரசங்கி 12:13) நீங்கள் வேலை விஷயத்தில் சமநிலையான நோக்குடையவரா?