சவால்களை சந்திக்கும் பெற்றோர்
இந்தக் கலத்தில் பிள்ளைகளை வளர்ப்பதென்பது, அதுவும் வாலிப பிள்ளைகளை வளர்ப்பதென்பது பெற்றோர்களுக்கு மிகப் பெரிய சவால். மதுவையும் போதை வஸ்துக்களையும் சுவைத்து விஷப் பரிட்சையில் இறங்குவதே “இளமைக்கு எடுத்துக்காட்டாக” மாறியிருப்பதாய் கனடா, மான்ட்ரீலின் செய்தித்தாள் த கஸட் அறிக்கை செய்கிறது. “[தங்கள்] வாலிப பிள்ளைகளின் நடத்தையில் ஏற்படும் மாற்றங்களைக் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டிய பொறுப்பு” பெற்றோர்களுக்கு இருப்பதை அது வலியுறுத்துகிறது.
பருவ வயதினருக்கே உரிய அத்தகைய பிரச்சினைகளை சுட்டிக்காட்டும் எவற்றை பெற்றோர்கள் கண்டுணர வேண்டும்? உடல் ரீதியில், உணர்ச்சி ரீதியில், சமூக ரீதியில் உண்டகும் எச்சரிப்பு அறிகுறிகள் சிலவற்றை பிள்ளைகள் மற்றும் பருவ வயதினருக்கான உளநூல் மருத்துவ அமெரிக்கன் அகெடமி கண்டுபிடித்ததை குறிப்பிடுகிறது. அவற்றில் தீராத மனசோர்வு, ஆள்தன்மையிலும் உணர்ச்சிப் போக்கிலும் மாற்றம், படுக்கையே கதியென மணிக்கணக்காக அடைந்துகிடப்பது, சண்டை போடும் சுபாவம், சட்டத்தின் பிடியில் சிக்கும் பிரச்சினைகளில் மாட்டிக்கொள்ளுதல் போன்றவையும் உள்ளன.
பங்கம் விளைவிக்கும் இத்தகைய விஷப் பரிட்சையில் இருந்தும் அதற்கு “கைமாறாக” அது வாரி வழங்கும் மோசமான விளைவுகளிலிருந்தும் தங்கள் பிள்ளைச் செல்வங்களைப் பெற்றோர்கள் எப்படி காக்க முடியும்? ஆரம்ப நாட்களிலிருந்தே, மனந்திறந்த பேச்சுப் பரிமாற்றமும் பரஸ்பர மதிப்பும் மரியாதையும் பிள்ளைகளில் ஊட்டி வளர்த்தால் பின்னான நாட்களில் பிரச்சினைகள் குறையலாம் என மெக்கில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஜெஃப்ரீ எல். டாரவென்ஸ்கீ நம்புகிறார். வளரிளமைப் பருவத்தில் சுதந்திரப் பறவையாய் சுற்றித்திரியும் ஆசை தலைதூக்கினாலும் இளைஞர்களுக்குத் தொடர்ந்து “பெற்றோரின் வழிநடத்துதல், ஆதரவு, திட்டவட்டமான செயல்முறை, அன்பு ஆகியவை தேவை” என்றும் சொல்கிறது த கஸட். இத்தகைய கூர்ந்த கவனிப்பு பைபிள் பழமொழியையே எதிரொலிக்கிறது; அது சொல்கிறதாவது: “பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.” (நீதிமொழிகள் 22:6) முன்மாதிரி வைப்பவர்களாய், தோழமை காட்டுபவர்களாய், பரஸ்பரம் பேசிப் பழகுபவர்களாய், ஆசிரியர்களாய் பெற்றோர் இருக்கும்படி கடவுள் புத்தி சொல்கிறார்.—உபாகமம் 6:6, 7.