மனிதன்—உயர்வகை விலங்கா?
“நாம் எப்படி தோன்றினோம் என்பது முக்கியமா?”
“மனிதன்—உயர்வகை விலங்கா?” என்ற தலைப்பில் பிரேஸில் நாட்டு 16 வயது பெண் சொற்பொழிவாற்றியபோது, பேச்சின் முகவுரையில் இந்தக் கேள்வியை கேட்டாள். இதே தலைப்பில் வெளிவந்த ஜூன் 22, 1998 விழித்தெழு! பத்திரிகையை அவள் தன் ஆசிரியைக்கு கொடுத்திருந்தாள். அதை படித்துப் பார்த்த ஆசிரியை அதையே தலைப்பாக வைத்து வகுப்பில் பேசும்படி அந்த மாணவியிடம் கேட்டுக்கொண்டார்.
இயற்கை தெரிவு (Natural selection) என்ற கோட்பாட்டின் மீது ஆதாரம் கொண்ட பரிணாம போதனை மாபெரும் தவறான போதனை என்பதை யெகோவாவின் சாட்சியான அந்தப் பெண் அக்குவேறு ஆணிவேராக பிரித்து காட்டினாள். உயிர் பிழைக்க எப்போதும் இயற்கையில் போராட்டம் இருக்கும் என்கிறது பரிணாமம். அதனால் பலர் பாஸிசம் நாஸிசம் போன்ற கொடுங்கோல் அரசுகள் தோன்ற காரணமாய் இருந்த போர்களைக்கூட இயற்கை என்று நினைக்கிறார்கள்.
“மனிதனுக்கு மட்டுமே ஆன்மீக பசி உள்ளது. அவன் மட்டுமே வாழ்க்கையின் லட்சியத்தைக் காண துடிக்கிறான். மரணத்தைக் கண்டு துயரப்படுகிறான், தனது ஜனனம் பற்றி அறிய ஆசைப்படுகிறான், மரணமே இல்லாமல் நித்தியமாக வாழ மாட்டோமா என்று ஏங்குகிறான். இவற்றை மிருகங்கள் செய்வதில்லையே! ஆகவே நாம் எப்படி தோன்றினோம் அல்லது ஜனித்தோம் என்பதை அறிய கொஞ்சம் ஆராய்வது அவசியம்!” என்று கூறி மனிதனுக்கும் விலங்குக்கும் உள்ள வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசத்தைப் போன்றது என்பதை அந்த மாணவி வெளிச்சம் போட்டு காட்டினாள்.
அந்த அருமையான சொற்பொழிவை ஆசிரியை பாராட்டினார். விழித்தெழு!, காவற்கோபுரம் போன்ற பைபிள் சார்ந்த பிரசுரங்களை அந்த இளம் சாட்சி ஆர்வமாக படித்து வந்தாள். அவ்வாறு படித்ததால்தான் அத்தனை அழகான பேச்சை தர முடிந்தது என்று அந்த மாணவியை ஆசிரியை புகழ்ந்தார்.
பரிணாம கொள்கை இளைஞர்களுடைய மனதையும் இதயத்தையும் பெரிதும் பாதித்திருப்பதை கண்டு, யெகோவாவின் சாட்சிகள் உண்மையில் கவலைப்படுகிறார்கள். அதனால் அந்த மாணவி செல்கிற சபையில், சக மாணவ மாணவிகளுக்கு ஜூன் 22, 1998 விழித்தெழு! பத்திரிகையை தரும்படி இளைஞர்களை ஊக்கமூட்டினார்கள். நகரிலுள்ள பல பள்ளிகளுக்கு சென்று சுமார் 230 பத்திரிகைகளை விநியோகித்தார்கள். ஒரு பள்ளியில், அறிவியல் துறைத் தலைவர் விழித்தெழு! பத்திரிகைக்கு சந்தா செய்தார்.
நாம் எப்படி தோன்றினோம் என்பது உண்மையில் முக்கியம்தான்! அந்த இளம் மாணவியும், அவளுடைய நண்பர்களும் படைப்பாளர் இருப்பதை நம்புவது முக்கியம் என்பதை தங்களது வாழ்க்கையில் காட்டியிருக்கிறார்கள்.