இணைந்த கைகள்
“என் விரலைப் பாருங்க, ஏதாவது வித்தியாசம் தெரியுதா?” ஒரு நபர் யெகோவாவின் சாட்சியாகிய ஒரு சகோதரியிடம் தன் கையை நீட்டி இவ்வாறு கேட்டார். அவருடைய விரலை அந்த சாட்சி உற்று பார்க்க, திருமண மோதிரம் ‘மிஸ்ஸிங்.’ அவர் இனிமேலும் தன்னுடைய மனைவியுடன் காலந்தள்ள முடியாது, ஆகவே டைவர்ஸ் செய்யப்போவதாகச் சொன்னார். ஆனால் இந்தச் சாட்சியோ “அவசரப்பட்டு தீர்மானம் எடுப்பதற்கு முன்பு கொஞ்சம் இந்தப் புத்தகத்தை வாசித்துப் பாருங்கள். இது உங்கள் திருமண வாழ்க்கைக்கு புத்துணர்ச்சியளிக்கும்” என சொன்னார். நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு a என்ற பைபிள் அடிப்படையிலான புத்தகத்தை அவருக்கு கொடுத்தார்.
சில நாட்களுக்குப் பின், அதே நபர் முகத்தில் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டோட அந்தச் சாட்சியிடம் தன் கையை காட்டினார். அவர் விரலில் திருமண மோதிரம் பளிச்சென தெரிந்தது. அவரும் அவருடைய மனைவியும் அறிவு புத்தகத்தை வாசித்தபின் இப்போது அவர்கள் மண வாழ்க்கையில் அளவில்லா ஆனந்தத்தை அனுபவிப்பதாக சொன்னார். அந்தப் புத்தகம் புகட்டிய அறிவு சொல்லர்த்தமாகவே அவர்கள் விரலில் திருமண மோதிரத்தைத் திரும்ப மாட்டியது.
கணவன், மனைவி ஒருவருக்கொருவர் உண்மையான அன்பை காண்பிப்பதற்கு பைபிளின் ஆலோசனை உதவுகிறது. இதற்கு காரணம் என்ன தெரியுமா? நம்மை சிருஷ்டித்தவரே பைபிளை எழுதியிருக்கிறார் என்பதுதான். அவர் இவ்வாறு கூறுகிறார்: “பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் [யெகோவா] நானே.”—ஏசாயா 48:17.
[அடிக்குறிப்புகள்]
a உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்டது.