நியூ யார்க்கில் என்னால் மறக்க முடியாதது
இந்தப் படத்தில் தெரிகிற வாசகம், நியூ யார்க், புரூக்ளினில் உள்ள உவாட்ச் டவர் சொஸைட்டியின் தொழிற்சாலை கட்டிடங்கள் ஒன்றில் தெளிவாக தெரியும் வண்ணம் பொறிக்கப்பட்டுள்ளது. 1950 முதல் அவ்வழியே கடந்து செல்லும் பிரயாணிகளையும் சுற்றுலா செல்பவர்களையும் மற்றவர்களையும் தினம்தினம் பைபிள் வாசிக்கும்படி அந்த வாசகம் நினைப்பூட்டுகிறது. ஓர் இளம் சாட்சியிடமிருந்து கிடைத்த பின்வரும் கடிதம், அந்த நினைப்பூட்டுதலின் வலிமையை காட்டுகிறது.
“உயர்நிலை பள்ளிப் படிப்பை முடித்தப்பின் நான் என்ன செய்யப் போகிறேன் என்பதைப் பற்றி என் வகுப்புத் தோழியிடம் பேசிக்கொண்டிருந்தேன். நான் பெத்தேலைப் பற்றியும் யெகோவாவின் சாட்சிகளுடைய தலைமை அலுவலகத்தைப் பற்றியும் பேச ஆரம்பித்தபோது அவள் அதிக ஆர்வமடைந்தாள். அவள் இவ்வளவு காலமாகவே நியூ யார்க் நகரத்தில்தான் வாழ்ந்து வந்ததாக கூறினாள். அவளுடைய குடும்பத்தார் அதிக மதப்பற்றுள்ளவர்களாக இல்லாதபோதிலும் ஒவ்வொரு நாள் காலையிலும் ஜன்னல் வழியாக ‘கடவுளுடைய வார்த்தையாகிய பரிசுத்த பைபிளை தினந்தோறும் வாசியுங்கள்’ என்ற வாசகத்தைப் பார்ப்பாள். ஆகவே ஒவ்வொரு நாளும் ஸ்கூலுக்கு போவதற்குமுன் பைபிள் வாசித்தாள்.
“அந்த நகரத்தைவிட்டு மாறிவந்த பிறகு காலையில் எழுந்தவுடன் பைபிள் வாசிப்பதற்காக நினைப்பூட்டும் நியூ யார்க் நகரின் அந்த வாசகத்தை நான் ரொம்ப ‘மிஸ்’ பண்றேன் என அவள் சொன்னாள். உவாட்ச்டவர் கட்டிடத்திலுள்ள அந்த வாசகம்தானே அவள் பைபிள் வாசிப்பதை பழக்கமாக்கிக்கொள்ள செய்தது. ஆகவே, அவள் தினமும் பைபிளை தொடர்ந்து வாசிக்கிறாள்!”
ஒரு நாளை பைபிள் வாசிப்போடு துவங்குவதைக் காட்டிலும் மிகச் சிறந்த வழி வேறொன்றுமில்லை. இவ்வாறு செய்வதன்மூலம் நீங்கள் அப்போஸ்தலன் பவுலின் பின்வரும் வார்த்தைகளை போற்றுவது உறுதி: ‘பரிசுத்த வேத எழுத்துக்கள்,’ “கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்[குகிறது].”—2 தீமோத்தேயு 3:15-17.