யெகோவாவுக்கு உத்தமத்தைக் காத்தல்
உத்தமம் என்பதே இன்று அரியதோர் விஷயம். மெய்க் கடவுளாகிய யெகோவாவின் ஊழியர்களை பிரத்தியேகமாக அடையாளப்படுத்தும் குணம் அது. உத்தமமான ஆட்கள், கடும் சோதனைகள் வந்தாலும் உறுதியாய் நிலைநிற்பர். எவ்வளவு காலம் கடந்தாலும் உறுதி மாறாமல் இருப்பர். நல்ல அரசனாகிய எசேக்கியாவை எடுத்துக்கொள்ளுங்கள். “அவனுக்குப் பின்னும் அவனுக்கு முன்னும் இருந்த யூதாவின் ராஜாக்களிலெல்லாம் அவனைப்போல் ஒருவனும் இருந்ததில்லை” என பைபிள் சொல்கிறது. எசேக்கியாவை இந்தளவு தனிச்சிறப்பு வாய்ந்தவராக்கியது எது? பொய்க் கடவுளாகிய மோளேகுவின் வணக்கத்தார் அவரை சூழ்ந்திருந்தனர். என்றாலும், அவர் “ஆண்டவர்மீது [“யெகோவாமீது,” NW] பற்றுக்கொண்டு” இருந்தார். ‘அவரிடமிருந்து [யெகோவா] விலகாமல், அவருடைய கட்டளைகளைப் பின்பற்றினார்.’—2 இராஜாக்கள் 18:1-6, பொ.மொ.
யெகோவாவுக்கு உத்தமத்தைக் காத்த மற்றொருவர் அப்போஸ்தலனாகிய பவுல். அவருடைய ஊழியத்தைப் பற்றிய பதிவை கிறிஸ்தவ கிரேக்க வேதாகமங்களில் காணலாம். பவுல் முழு ஆத்துமாவோடு தொடர்ந்து கடவுளுக்கு செய்த ஊழியத்திற்கு இதுவே பலமான அத்தாட்சி. எனவேதான், அவருடைய பூமிக்குரிய வாழ்க்கையின் முடிவில், பவுலால் இவ்வாறு சொல்ல முடிந்தது: “நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.”—2 தீமோத்தேயு 4:7.
எசேக்கியாவும் பவுலும் உத்தமத்தன்மைக்கு என்னே சிறந்த உதாரணங்கள்! நம் மகத்தான கடவுளாகிய யெகோவாவுக்கு உத்தமமாய் நிலைத்திருந்து, அவர்களுடைய விசுவாசத்தை நாம் பின்பற்றுவோமாக.—எபிரெயர் 13:7.