ஏன் மன்னிக்க வேண்டும்?
கனடாவிலுள்ள த டோரன்டோ ஸ்டார் இவ்வாறு அறிக்கை செய்கிறது: “உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக திகழ மன்னிக்கும் குணமே அருமருந்து என விஞ்ஞானிகள் புதிதாக கண்டுபிடித்திருக்கிறார்கள்.” ஆனால், “மன்னிப்பது என்றால் என்ன, மன்னிப்பது எப்படி என்பது அநேகருக்குத் தெரிவதில்லை” என குறிப்பிடுகிறார் அ.ஐ.மா., ஸ்டான்ட்போர்ட் யுனிவர்ஸிட்டியில் உள்ள ஸ்டான்ட்போர்ட் மன்னிப்புத் திட்டத்தின் தலைமை ஆய்வாளரான பேராசிரியர் கார்ல் தொரிஸன்.
மனப்பூர்வமாக மன்னிப்பது கிறிஸ்தவத்தின் முக்கிய அம்சம் என கருதப்படுகிறது. இதை த டோரன்டோ ஸ்டார் இவ்வாறு விளக்குகிறது: “உங்களுக்கு விரோதமாக தீங்கிழைக்கப்பட்டதை உணர்ந்து, குரோதத்தை முற்றிலுமாக விட்டொழித்து, தீங்கிழைத்தவரிடம் பரிவோடும் அன்போடும்கூட நடந்துகொள்வதாகும்.” தவறை பொருட்படுத்தாமல் விட்டுவிடுவது, புறக்கணித்துவிடுவது, மறந்துவிடுவது, புண்பட்டதை மறுப்பது போன்றவற்றிற்கும் மனப்பூர்வமாக மன்னிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. அதே சமயத்தில் குட்ட குட்ட குனிந்து கொண்டே இருக்க வேண்டுமென்றும் அர்த்தம் அல்ல. ஆகவே, மனப்பூர்வமாக மன்னிப்பதற்கு தேவைப்படுவதெல்லாம் “கோபத்தையும் எதிர்மறையான எண்ணங்களையும் விட்டொழிப்பதாகும்” என அந்த அறிக்கை கூறுகிறது.
மன்னிப்பதால் கிடைக்கும் உடல் ரீதியிலான நன்மைகளை கூடுதலாக ஆராய வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். அதேசமயம், மன ரீதியிலான நன்மைகளை அறிக்கை செய்கிறார்கள். உதாரணத்திற்கு, “மன உளைச்சல், கவலை, சோர்வு போன்றவற்றை குறைப்பதாக” சொல்கிறார்கள்.
மன்னிப்பதற்கு சிறந்த காரணம் எபேசியர் 4:32-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. அது சொல்கிறது: ‘ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல், நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.’ மற்ற விஷயங்களில் மட்டுமல்லாமல் மன்னிப்பதிலும் நாம் கடவுளை பின்பற்றுமாறு ஊக்குவிக்கப்படுகிறோம்.—எபேசியர் 5:1.
இரக்கம் காண்பிப்பதற்கான காரணம் இருந்தும் மற்றவர்களை மன்னிக்க மறுத்தால் கடவுளுடன் நமக்கிருக்கும் உறவு மிகவும் பாதிக்கப்படலாம். முதலில் நாம் ஒருவருக்கொருவர் மன்னிக்க வேண்டும் என யெகோவா எதிர்பார்க்கிறார். அதற்குப்பின் நம்முடைய தப்பிதங்களை மன்னிக்கும்படி நாம் ஜெபம் செய்யலாம்.—மத்தேயு 6:14; மாற்கு 11:25; 1 யோவான் 4:11.