கப்பலோட்டி கற்றுத்தரும் பாடம்
கரை காணா கடலிலே தன்னந்தனியே கப்பலை ஓட்டிச்செல்வது லேசுபட்ட காரியமல்ல. சிறிது நேரத்தில் உடம்பும்சரி மனசும்சரி சோர்ந்துவிடும். இந்த நிலையில் கப்பலோட்டி சமயோசிதமாக செயல்படவே முடியாது. தப்பும் தவறுமாய் கப்பலை செலுத்துவார். அப்படியானால் ஒரு கப்பலோட்டிக்கு நங்கூரம் மிகமிக அவசியமல்லவா? இந்த சமயத்தில்தான் நங்கூரத்தின் அருமை அவருக்கு தெரியும். சோர்ந்திருக்கும் அவர் சிறிது நேரம் ஓய்வெடுத்துக்கொள்ள முடியும். அதேசமயம், வழிவிலகி சென்று ஆபத்தில் மாட்டிக்கொள்ளாதபடியும் உதவும். காற்று, அலை அடிக்கும் திசைக்கு நேராக கப்பலின் முன்புறம் இருக்கவும் கப்பல் இப்படியும் அப்படியும் சாயாமல் நேராக இருக்கவும் நங்கூரம் உதவும்.
கடலில் செல்லும் மாலுமிகள் பல ஆபத்துக்களை சந்தித்தாக வேண்டும். அதுபோலவே, கிறிஸ்தவர்களும் இன்று அடுக்கடுக்காக நிறைய பிரச்சினைகளை எதிர்படுகின்றனர். இதிலிருந்து கொஞ்சமாவது விடுதலை கிடைக்குமா, கொஞ்ச நேரமாவது நிம்மதியாக இருக்க முடியுமா என்றும் ஏங்குகின்றனர். இதைத்தான், இயேசுவும் தம் சீஷர்களிடம் சொன்னார்: “தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள்” என்றார். (மாற்கு 6:31, பொது மொழிபெயர்ப்பு) இன்றும் சிலர் இதற்காகவே வேலையிலிருந்து விடுமுறை எடுத்துக்கொண்டு சில வாரங்கள் குடும்பமாக சுற்றுலா செல்கின்றனர் அல்லது சனி, ஞாயிற்றுக்கிழமைகளை குடும்பத்தோடு ஜாலியாக செலவழிக்கின்றனர். வேலையால் வரும் அலுப்பிலிருந்து விடுதலையும் புத்துணர்வையும் புதுப்பெலனையும் தர இது உதவும். இந்த சமயங்களில் ஆவிக்குரிய படுகுழிகள் எதிலும் நாம் எப்படி விழாதிருக்கலாம்? ஜீவ பாதையிலிருந்து வழிவிலகாமலிருக்க, எது நமக்கு ஆவிக்குரிய நங்கூரமாக இருக்கும்?
இதற்காகவே யெகோவா ஒரு பெரும் ஏற்பாட்டை நமக்காக செய்திருக்கிறார். அது என்ன? அவருடைய பரிசுத்த வார்த்தையாகிய பைபிளைத்தவிர வேறு என்னவாக இருக்க முடியும்! தினமும் அதை வாசிப்பதால், யெகோவாவுடன் ஒரு நெருங்கிய உறவை வளர்த்துக்கொள்ள முடியும். அதோடு, அவரிடமிருந்து விலகாமலும் இருப்போம். வாழ்க்கையில் தட்டுத்தடுமாறாமல் இருக்கவும் சாத்தானும் அவனுடைய உலகமும் தொடுக்கும் எல்லாக் கணைகளையும் எதிர்த்து சமாளிக்கவும் பைபிளின் புத்திமதிகள் உதவும். பைபிளை தவறாமல் வாசிக்க நேரத்தை ஒதுக்குங்கள். எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் பைபிள் வாசிப்பை தவறாமல் செய்தோமானால், அது நமக்கு ஆவிக்குரிய நங்கூரமாக இருக்கும்.—யோசுவா 1:7, 8; கொலோசெயர் 2:7.
“யெகோவாவுடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் சந்தோஷமுள்ளவன்” என சங்கீதக்காரர் நமக்கு நினைவூட்டுகிறார். (சங்கீதம் 1:1, 2, NW) கடவுளுடைய வார்த்தையை தினமும் படிப்பது, “சந்தோஷமான” பலன்களை அளிக்கும். உண்மையிலேயே புத்துணர்வையும் புதுத்தெம்பையும் தரும். கிறிஸ்தவ வாழ்க்கையில் தொடர்ந்து வீறு நடை போட உதவும்.