சகாக்களின் தொல்லைகளை எப்படி சமாளிக்கிறார்கள்?
சகாக்கள் தங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஏக்கம் அநேகரை ஆட்டிப்படைக்கிறது, இது சகாக்களைப் போலவே சிந்திக்கவும் செயல்படவும் வைக்கிறது. போதைப்பொருள் துஷ்பிரயோகம், பாலின ஒழுக்கக்கேடு போன்ற தீய பழக்கவழக்கங்களில் ஈடுபட மறுப்பதற்கு முக்கியமாக இளைஞருக்கு மனவுறுதி தேவை. சகாக்களின் தொல்லைகளை அவர்கள் எப்படி சமாளிக்கலாம்?
போலந்திலுள்ள டீனேஜ் பெண்கள் இருவர் சமீபத்தில் இவ்வாறு எழுதினார்கள்: “எங்களுடைய சகாக்களில் நிறைய பேருக்கு உலகத்தின் ஆவி இருப்பது தெளிவாக தெரிகிறது. பரீட்சையில் ‘காப்பி’ அடிக்கிறார்கள், அசிங்கமான வார்த்தைகளைப் பேசுகிறார்கள். லேட்டஸ்ட் பாணி உடை, காட்டுத்தனமான, மோசமான இசை இதெல்லாம் அவர்களுக்கு ரொம்ப இஷ்டம். ஆனால், இளைஞருக்காக தயாரிக்கப்படும் கட்டுரைகள் எங்களுக்குக் கிடைப்பதாலும், திருப்தியில்லாத, கலகத்தனமான இள வட்டங்களின் செல்வாக்கிலிருந்து எங்களை இவை பாதுகாப்பதாலும் எங்களுக்கு அதிக சந்தோஷம்!
“காவற்கோபுர கட்டுரைகளுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. ஏனெனில், இளைஞர்களாகிய நாங்கள் ஒதுக்கப்பட்டவர்கள் அல்ல, முக்கியமானவர்களே என்ற கருத்து எங்கள் மனதை தொட்டது. நாங்கள் பெற்ற பைபிள் ஆலோசனை, யெகோவா தேவனுக்குப் பிரியமான முறையில் தொடர்ந்து நடந்துகொள்ள எங்களுக்கு உதவியிருக்கிறது. யெகோவாவுக்கு உண்மையுடன் சேவை செய்வதைத் தவிர மிகச் சிறந்த வழி எதுவுமில்லை என நாங்கள் நம்புகிறோம்.”
ஆம், சகாக்களின் தொல்லைகளை இளைஞர்களால் சமாளிக்க முடியும். கிறிஸ்தவ இளைஞர்கள் “பகுத்துணரும் திறமை”யை பயிற்றுவிப்பதன் மூலம் ஞானமாக தீர்மானங்கள் எடுக்க கற்றுக்கொள்கிறார்கள். இந்தத் தீர்மானங்கள், “உலகத்தின் ஆவியை” அல்ல, “தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியை” பிரதிபலிக்கின்றன.—எபிரெயர் 5:14, NW; 1 கொரிந்தியர் 2:12.