இரத்தமில்லா சிகிச்சை—“பெருகிவரும் மருத்துவ முறை”
கனடா முழுவதும் டாக்டர்கள் “புதிய தொழில்நுட்பத்தை முன்னேற்றுவித்து வந்திருக்கிறார்கள். அதனால் கடந்த ஐந்து வருடங்களில், இரத்தமில்லா அறுவை சிகிச்சை பெருகிவரும் மருத்துவ முறையாக மாறியிருக்கிறது” என “இரத்தமில்லா அறுவை சிகிச்சை” என்ற தலைப்பில் மெக்ளீன்ஸ் பத்திரிகை அறிவித்தது. அந்த டாக்டர்களில் வின்னிபெக் சுகாதார அறிவியல் மையத்தைச் சேர்ந்த மயக்கமருந்து மருத்துவராகிய பிரையன் மியூர்ஹெட் என்பவரும் ஒருவர். இரத்தமில்லா சிகிச்சை முறையை பின்பற்ற அவரை தூண்டியது எது?
70 வயதுடைய ஒருவருக்கு அல்ஸரால் இரத்தப்போக்கு ஏற்பட்டுக்கொண்டிருந்தது. இவருக்கு இரத்தம் ஏற்றாமலேயே அறுவை சிகிச்சை செய்யும் சவாலை 1986-ல் டாக்டர் மியூர்ஹெட் சந்தித்தார். அந்த முதியவர் யெகோவாவின் சாட்சி என்பதால் தன்னுடைய பைபிள் நம்பிக்கைகளின்படி இரத்தமேற்றாமல் அறுவை சிகிச்சை செய்ய டாக்டரை கேட்டுக்கொண்டார். (அப்போஸ்தலர் 15:28, 29) “நோயாளியின் இரத்த அழுத்தத்தை சரியான நிலையில் வைத்துக்கொள்வதற்கு சலைன் திரவத்தை ஏற்றும் அரிதான முறையை [டாக்டர் மியூர்ஹெட்] பயன்படுத்தினார்” என மெக்ளீன்ஸ் அறிவிக்கிறது. “இந்த முறை வெற்றிகண்டது, மேலும் ‘நாம் ஏகப்பட்ட இரத்தமேற்றுதல்கள் செய்கிறோம்’ என்ற மியூர்ஹெட்டின் கருத்தை வலுப்படுத்தியது. ‘மாற்று மருத்துவத்தை நாடுவதற்கு அதுதான் சமயம் என நான் நினைத்தேன்’ என அவர் சொல்கிறார்.”
இரத்தமில்லா அறுவை சிகிச்சை முறை பிரபலமாவதற்கு காரணம் என்ன? “இரத்த தானம் வருங்காலத்தில் போதுமான அளவு கிடைப்பதைக் குறித்த கவலையும், இரத்தம் ஏற்றுவதால் நோய் கிருமிகள் தொற்றும் என நோயாளிகள் பலருக்கு இருக்கும் பயமுமே.” புதுமையைப் புகுத்தும் மருத்துவர்களின் ஆராய்ச்சியால் யெகோவாவின் சாட்சிகள் மட்டுமல்ல, வேறு பலரும் பயனடைந்திருக்கின்றனர். “இரத்தமின்றி செய்யப்படும் அறுவை சிகிச்சை, பலருடைய விஷயத்தில் இரத்தம் ஏற்றுவதற்கான அவசியம் இல்லாமல் செய்வதோடு, அசுத்தமான இரத்தத்திலிருந்து நோய் தொற்றும் ஆபத்தையும்—அது எவ்வளவு சிறிய ஆபத்தாக இருந்தாலும்சரி—குறைக்கிறது” என மெக்ளீன்ஸ் கூறுகிறது. ஆனால் “சுத்தமான” இரத்தம்கூட, நோயாளிகளுடைய நோய் எதிர்ப்பு சக்தியை தற்காலிகமாக முறியடிப்பதன் மூலம் நோய் தொற்றும் ஆபத்தை ஏற்படுத்துகிறது.
இரத்தமில்லா மாற்று மருத்துவத்தைக் குறித்ததில் யெகோவாவின் சாட்சிகளுடைய உறுதியான நம்பிக்கைக்கு காரணம் என்ன? அதை அறிந்துகொள்ள உங்கள் உயிரை இரத்தம் எப்படிக் காப்பாற்ற முடியும்? என்ற சிற்றேட்டை வாசிக்க நீங்கள் விரும்பலாம். அதிலுள்ள விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் யெகோவாவின் சாட்சிகள் ஆவலாய் இருக்கிறார்கள்.