பேரீச்சை மரம் கற்பிக்கும் பாடம்
“அற்புத அழகின் வனப்புமிக்க வடிவம்.” பைபிள் கலைக்களஞ்சியம் ஒன்று பேரீச்சை மரத்தை இவ்வாறுதான் விவரிக்கிறது. பேரீச்சை மரங்கள் பைபிள் காலங்களில் மட்டுமல்ல இன்றும்கூட எகிப்தின் நைல் பள்ளத்தாக்கில் நிறைந்து காணப்படுகின்றன. நெகேப் பாலைவன சோலைகள் அருகில் அவை இதமான நிழலையும் தருகின்றன.
பனை வகையைச் சேர்ந்த மற்ற மரங்களைப் போலவே பேரீச்சை மரமும் நிமிர்ந்த, நேரான தோற்றத்தை உடையது. அம்மரங்களில் சில 30 மீட்டர் உயரம் வரை வளர்ந்து, 150 வருடங்களுக்கு பழங்களை தருகின்றன. பேரீச்சை மரம் கண்ணுக்கு அழகாக இருப்பதோடு மிகுந்த பலனையும் தருகிறது. அது ஒவ்வொரு வருடமும் எக்கச்சக்கமான பேரீச்சை குலைகளை தள்ளுகிறது. ஒரு குலையில் மட்டுமே 1,000-த்திற்கும் அதிகமான பேரீச்சம் பழங்கள் இருக்கலாம். பேரீச்சம் பழங்களைப் பற்றி ஓர் ஆசிரியர் இவ்வாறு எழுதினார்: “கடைகளில் கிடைக்கும் உலர்ந்த, பதனிட்ட பழங்களை மட்டுமே ருசித்திருப்பவர்களுக்கு அந்தப் பழத்தை நேரடியாக சாப்பிட்டால் எவ்வளவு ருசியாக இருக்கும் என்பதை கற்பனைக்கூட செய்து பார்க்க முடியாது.”
மனிதர்கள் சிலரை பேரீச்சை மரங்களுக்கு பைபிள் ஒப்பிடுவது பொருத்தமானதே. ஒருவர் கடவுளுடைய பார்வையில் அழகாக இருக்க, பலன் தரும் பேரீச்சை மரத்தைப் போல தார்மீகத்தில் நேர்மையுள்ளவராகவும், தொடர்ந்து நற்செயல்களை செய்கிறவராகவும் இருக்க வேண்டும். (மத்தேயு 7:17-20) இதன் காரணமாகத்தான், சாலொமோனின் ஆலயத்திலும் எசேக்கியேலின் தரிசன ஆலயத்திலும் பேரீச்சை மரங்களின் சித்திரங்கள் அழகூட்டுவதற்காக பயன்படுத்தப்பட்டன. (1 இராஜாக்கள் 6:29, 32, 35; எசேக்கியேல் 40:14-16, 20, 22) ஆகவே, ஒருவருடைய வணக்கத்தை கடவுள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றால் பேரீச்சை மரத்தின் அருமையான குணங்கள் அவரிடம் இருக்க வேண்டும். கடவுளுடைய வார்த்தை இவ்வாறு விளக்குகிறது: “நேர்மையாளர் பேரீச்சை மரமெனச் செழித்தோங்குவர்.”—சங். 92:12, தி.மொ.