வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை பற்றிய கடவுளுடைய சட்டத்தை மீறும்படியான எண்ணத்தை ஏதேன் தோட்டத்தில் ஏவாளிடம் சர்ப்பம் எப்படி தெரிவித்தது?
ஆதியாகமம் 3:1 இவ்வாறு சொல்கிறது: “தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப் பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது. அது ஸ்திரீயை நோக்கி: நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்க வேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ என்றது.” சர்ப்பம் எப்படி ஏவாளிடம் பேசியிருக்கலாம் என்பதைக் குறித்து பல்வேறு கருத்துக்கள் இருந்து வந்திருக்கின்றன. உடல் அசைவுகள் அல்லது சைகைகள் மூலம் தெரிவித்திருக்கலாம் என்பது ஒரு கருத்து. உதாரணமாக, ஆங்கிலேய மதகுரு ஜோசஃப் பென்சன் இவ்வாறு கூறினார்: “ஏதோவொரு சைகையால் தெரிவித்திருக்கலாம் என்பதே பெரும்பாலும் சாத்தியமாய் இருக்கிறது. சொல்லப்போனால், யோசிக்கும் திறனும் பேசும் திறமையும் அப்போது சர்ப்பங்களுக்கு இருந்ததாக சிலர் நம்பியிருக்கின்றனர். . . . இருந்தாலும் இதற்கு எந்த ஆதாரமுமில்லை.”
ஆனால் விலக்கப்பட்ட கனியைப் புசித்தால், எது நன்மை எது தீமை என்பதை தீர்மானிக்கும் திறமையைப் பெற்று கடவுளை போலவே ஏவாள் ஆகிவிடுவாள் என்பதையெல்லாம் எப்படி வெறும் உடல் அசைவுகள் மூலமாக சர்ப்பம் தெரிவித்திருக்க முடியும்? அது மட்டுமல்லாமல், சர்ப்பத்தின் கேள்விக்கு பதிலளித்து உரையாடலில் ஏவாளும் பங்கெடுத்திருக்கிறாள். (ஆதியாகமம் 3:2-5) சைகைகள் அல்லது அசைவுகளின் மூலமாக மாத்திரமே சர்ப்பம் பேசியது என்று சொன்னால், ஏவாளும் சைகைகளில் பதிலளித்தாள் என்ற முடிவுக்கே வரவேண்டியிருக்கும், ஆனால் ஏவாள் பேசினாள் என்று பைபிள் சொல்கிறது.
இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டு அப்போஸ்தலன் பவுல் உடன் கிறிஸ்தவர்களை இவ்வாறு எச்சரித்தார்: ‘சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்தது போல, உங்கள் மனதும் கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன்.’ பவுல் இங்கே ‘கள்ள அப்போஸ்தலர்கள், கபடமுள்ள வேலையாட்கள்’ ஆகியோரிடமிருந்து வரும் ஆபத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார். இப்படிப்பட்ட ‘மகா பிரதான அப்போஸ்தலர்களிடமிருந்து’ வந்த ஆபத்து வெறும் உடல் அசைவுகளாக அல்லது சைகைகளாக இல்லை. அது அவர்களுடைய பேச்சை, அதாவது மற்றவர்களை தவறாக வழிநடத்துவதற்காக அவர்கள் பேசிய நயவஞ்சகமான வார்த்தைகளை உட்படுத்தியது.—2 கொரிந்தியர் 11:3-5, 13.
ஆகவே ஏதேன் தோட்டத்தில் ஏவாளை தவறாக வழிநடத்த பேச்சே பயன்படுத்தப்பட்டிருந்தாலும், சொல்லர்த்தமான சர்ப்பத்துக்கு குரல் நாண்கள் இருந்தது என்று சொல்வதற்கு ஆதாரம் எதுவுமில்லை. அதற்கு அது தேவையில்லை. கடவுளுடைய தூதன் ஒரு கழுதையின் மூலமாக பிலேயாமிடம் பேசியபோது மனிதனுக்கு இருப்பதைப் போலவே சிக்கலான குரல்வளை அதற்கு தேவையாக இருக்கவில்லை. (எண்ணாகமம் 22:26-31) ஆகவே “பேசாத மிருகம் மனுஷர் பேச்சைப் பேசி”யபோது இதைச் செய்வதற்குரிய வல்லமை ஆவி மண்டலத்திலிருந்து வந்தது.—2 பேதுரு 2:16.
சர்ப்பத்திற்குப் பின்னால் இருந்துகொண்டு ஏவாளிடம் பேசிய ஆவி சிருஷ்டி “பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம்” என்று பைபிள் அடையாளம் காட்டுகிறது. (வெளிப்படுத்துதல் 12:9) ஏவாள் காதால் கேட்ட அந்த வார்த்தைகளுக்கு காரணமாக இருந்தவன் “ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்”ளும் சாத்தானே.—2 கொரிந்தியர் 11:14.
[பக்கம் 27-ன் படங்கள்]
“நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள்”